அதிகரிக்கும் தக்காளி விலை: என்ன செய்கின்றன ஒன்றிய, மாநில அரசுகள்?


கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 🍅 மொத்த விற்பனை 1கிலோ ரூபாய் 70 க்கும், சில்லறை விற்பனை ரூ.80 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 85முதல்  90 ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஏன் இந்த விலை உயர்வு?

தக்காளி மட்டுமல்ல, அனைத்தும் விலைஉயர்ந்து வருகிறது. காய்கறிகளைப் போலவே அனைத்து மளிகை பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்வதாக புலம்புகின்றனர் இல்லத்தரசிகள். அதிகரிக்கும் விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல் சம்பளம் உயர்வு இல்லை. இதனால் வயிற்றை சுருக்கிக்கொண்டு வாழ்வதற்கு பழகிக் கொள்கின்றனர்.

பொதுவாக விளைச்சல் குறைந்தால் சந்தைக்கான வரத்து குறையும். தற்சமயம் பெய்துவரும் கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து சுமார் 2,000 டன் வரை குறைந்துள்ளதாக கோயம்பேடு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி வரத்து குறைவால் அதிகரிக்கும் விலை உயர்வின் பலன் யாருக்கு போய் சேருகிறது? நிச்சயமாக உழுது காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு அல்ல! முன்பு இடைத்தரகர்களாக இருந்த கமிஷன்   மண்டிகள் ஒழிக்கப்பட்டு தற்போது கார்ப்பரேட்டுகளின் பிடியில் சென்றுள்ளது.

ஆதிக்கம் செய்யும் கார்ப்பரேட் சூதாடிகள் :

விளைச்சல் நன்றாக இருந்து, சந்தைக்கான வரத்து அதிகரிக்கும் போது , கொள்முதல் விலையை மிக மிக குறைவாக தீர்மானித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் வேளாண் கார்ப்பரேட்கள். 12 கிலோ தக்காளியை 400-500 ரூபாய்க்கே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. போக்குவரத்து, சுமை கூலி, ஏஜெண்டுகள் கமிஷன், tollgate கட்டணம் என பல மடங்காக விலையை ஏற்றுகின்றனர்.

இப்படித்தான் 1 கிலோ வெறும் 40 ரூபாய் மதிப்புள்ள தக்காளியானது  சில்லறை விற்பனை ரூபாய் 75 முதல் அதிகபட்சம் ரூபாய் 90 வரை இரு மடங்கு விலை வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்திலும் லாபம் பார்க்கும் கார்ப்பரேட்டுகள் :

உற்பத்தி குறையும் போதும் சொற்ப அளவில் மட்டும் விலையை உயர்த்தி தந்துவிட்டு தனது விருப்பம்போல் சந்தை விலையை தீர்மானிக்கின்றன பெரும் வணிக கார்ப்பரேட்டுகள் . அதேநேரம் தான் உற்பத்தி செய்யும் விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், களைக்கொல்லிகள் என அனைத்துக்கும் தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டே போய் உத்தரவாதமான லாபத்தை அள்ளவும் செய்கின்றன பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்.

இப்படி வரத்து அதிகரித்தாலும், குறைந்தாலும் மொத்தமாக கொள்முதல் செய்து சட்டபூர்வமாகவே பல ஆயிரம் டன்களை பதுக்கும் பெரும் வர்த்தக  சூதாடிகளுக்குத்தான் விலைவாசி உயர்வின் முழு ஆதாயம் போய் சேருகிறது .

விலையேற்றத்தின் சுமை மக்களுக்கு :

முடிவில் இந்த விலை உயர்வின் சுமை முழுவதும் நாட்டு மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது . இதை முறைப்படுத்த மத்திய மாநில அரசுகளிடம் எவ்வித முன் தயாரிப்பும், திட்டமும் இல்லை. உழவர் சந்தையில் உட்கார்ந்து விற்று  பணம் ஆக்குவது சிறு விவசாயிகளுக்கு சாத்தியமற்ற ஒன்று.

படிக்க:

இந்தியப் பொருளாதாரம்: விலைவாசி உயர்வு / பணவீக்கம்: பகுதி – 4

எச்சரிக்கை – விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல!

கொரோனா காலத்தில் செய்ததை போல அரசே மொத்தமாக கொள்முதல் செய்து 100 ரூபாய் பேக்கேஜ் 200 ரூபாய் பேக்கேஜ் என்று தெருத்தெருவாக விற்பனை செய்யலாம். உள்ளூர் மளிகை கடைகளுக்கு, தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நியாயமான விலைக்கு மொத்தமாகவும் தரலாம். இதன் மூலம் மாநில தலைநகரில் மற்றும் பெருநகரங்களில் தாறுமாறாக உயர்த்தப்படும் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

கோடிக்கணக்கான மக்கள் சிதறிக் கிடக்கும் கிராமங்களுக்கு அரசே காய்கறிகளை கொண்டு சேர்ப்பது, அல்லது ரேஷன் கடைகள் மூலம் நியாயமாக விற்பது சாத்தியமானது தான். இதுமட்டுமின்றி  வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்து மீட்க பொருத்தமான வழிமுறைகளை ஆராய வேண்டிய தருணம் இதுதான் .

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here