எங்கே அந்த அண்ணாமலை? – திருமூலன்

0

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு முகம் கொடுக்க முடியாமல் கோபம் தலைக்கேறி, கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து அண்ணா அறிவாலயத்தில் இருந்து 200 கிடைச்சிருச்சும்ணா, முன்னூறு கிடைச்சிருச்சும்ணா என்று ஏலம் விட்டது ஊடகவியலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 30-5-2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பத்திரிகையாளர்கள் ஒருமித்த குரலாக அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன் “ நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்கின்ற வரை அவர்கள் சந்திப்புகளை புறக்கணிப்போம்” என்ற போராட்ட அழைப்பு விடுத்தனர். அண்ணாமலை மன்னிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் தமிழகமெங்கும் எல்லா இடங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அறிவித்தனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து ஆர்ப்பாட்டத்திற்கு சென்றோம். மன்றத்துக்கு செல்லும் சிறிய சாலையின் தொடக்கத்திலேயே போலீஸ் தடுப்புகள் சுமார் 150 போலீஸ் தடுப்புகளை வைத்து, வரிசையாக இரண்டு இடங்களில் போட்டி வீடியோகிராப் செய்து ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டது போல யாரோ தீவிரவாதிகளை பிடிக்க போவதை போல முஸ்தீபு காட்டினர்.

பத்திரிகையாளர் மன்ற வாயிலில் பத்திரிக்கையாளர்கள் சார்பாக 20-25 ஸ்டாண்ட் கேமராக்கள், 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் – மூத்த பத்திரிகையாளர்கள் மணி, சபீர் கார்ட்டூனிஸ்ட் பாலா, லட்சுமி சுப்ரமணியன், மாணிக்கம், சகாயராஜ், ராஜதுரை, ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் சிங்காரவேலன், அருள் எழிலன் , அசீப், மதி – பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். பத்திரிக்கையாளர்கள் பேச்சில் தார்மீகக் கோபம் கலந்து இருந்தது.

“வட இந்தியாவில் பத்திரிகைகளை அவற்றின் முதலாளிகளின் பக்க பலத்தோடு ஊடகக்காரர்களை அடக்கி விட்டார்கள்; இங்கே அந்த பாச்சா பலிக்காது என்றும், அரசியலுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகியும் தான் போலீஸ் அதிகாரி என்பதை அவர் மறக்கவில்லை, அப்படித்தான் நடந்து கொள்கிறார். அண்ணாமலை அரசியலில் எல்கேஜி. இதற்கு முன் பாஜக தலைவர்கள் இருந்தார்கள் தமிழிசை சௌந்தரராஜன் அக்கா இருந்தாங்க அவங்க கிட்ட இருந்து கத்துக்கணும். அண்ணாமலை இப்ப தலைவராக இருக்கலாம் அவங்க தலைமை கொஞ்ச நாள் கழிச்சி மாற்றி விடலாம். ஆனால் பத்திரிகையாளரான நாங்க வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம் ஆனால் நாங்க சாகும்வரை பத்திரிகையாளர் தான். டெல்லியில் புல்டோசர் போட்டு மக்கள் வாழ்விடங்களை அழிச்சாங்க. அப்ப புல்டோசர் மேலே நின்னுகிட்டு இதோ இதுதான் இடிக்ககப்படும் முதல் வீடு என்று போஸ் கொடுத்து வடக்கில் உள்ள பத்திரிகையாளர்கள். அவங்கதான் விலைக்கு போனவங்க. மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாங்க அப்படி விலைபோகிறவர்கள் இல்லை. எங்களுடைய பாரம்பரியம் அப்படிப்படட்டதல்ல.எங்கள் ஒரே இலக்கு அண்ணாமலை நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒன்றுபடுவோம். இன்று ஒன்றுபட்டு நிற்கிறோம். இதுதான் தமிழக பத்திரிக்கையாளர்கள் மரபு” என சவால் விட்டுப் பேசினார் அசீப்.

“எட்டு மாதமாக நாம் பார்க்கிற அண்ணாமலை இப்படித்தான் திமிராக பேசி வருகிறார். இப்போது நம்மை ஏலம் விடுகிறார். தீபாவளிக்கு பாஜக இனிப்பு கொடுத்தார்கள். உள்ளே சாம்சங் செல்போன் வைத்துக் கொடுத்தார்கள். இது லஞ்சம், ஊழல் இல்லையா” என்று ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

ராஜதுரை பேசும்போது “அண்ணாமலை அநாகரிகமாக பேசுறாரு, காவல்துறையை வைத்து ஓடுக்கலாம் என நினைக்கிறார். நாங்கள் அஞ்ச மாட்டோம். அடித்தால் பதிலடி கொடுப்போம்” என்று அடிப்போம் என்று அண்ணாமலை சொன்னதற்கு எதிராக சூடாக திருப்பிக் கொடுத்தார்.

“அண்ணாமலை பேசுகிற இடத்திலெல்லாம் போராடுவோம். பாஜக கமலாலயம் முன்னால் நடத்துவோம்; கரூரில் அவர் வீட்டு முன்னால் நடத்துவோம்” என்றார் அருள் எழிலன்.

“அண்ணாமலை தொடர்ந்து குற்றம் புரியும் இயல்புடையவராக (Habitual Offender ) மாறி விட்டார். நமக்குள் ஆயிரம் கருத்து – கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால் அண்ணாமலை ஏலம் விடுமளவு எல்லை கடந்து விட்டார். அப்படி அவர் நடந்துகிட்ட அன்றே எழுந்து எதிர்ப்பு தெரிவிச்சிருக்கனும், ஒருத்தராவது வெளியேறி இருக்க வேண்டும்.போனது போகட்டும்.இனி தயாராக இருக்கனும்.. அண்ணாமலை நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பேசினார் மூத்த பத்திரிகையாளர் மணி.

இது தான் உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டம்.

ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்தது போல, அதன் உள்ளடக்கம் வலுவாக நிற்க வேண்டுமானால் ஒன்றுபட்ட போராட்டங்கள் அவசியம். பொதுவான போராட்டம் அல்ல, இன்றுள்ள அரசியல் சூழலில் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து சக்திகளோடும் இணைந்து ஜனநாயகத்துக்கான போராட்டம் வளர வேண்டும்; களத்திலே நிற்கும் போது ‘வரம்புகள் இருக்கிறது’ என்று சொல்லாத தார்மீக நிலைக்குப் பெருகி பேராற்றலாக செயல்பட வேண்டும்.

திருமூலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here