2021-ஆம் ஆண்டிலேயே மலையாள மொழியில் வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் எனினும் தற்போது தான் தமிழில் பார்க்க முடிந்தது. இந்திய ’சமையலறை கைதிகளின்’ ஜாமினுக்கு விண்ணப்பித்துள்ள படம். இந்த படத்திற்கு  தி கிரேட் இந்தியன் உமென் ( The great indian women ) என்று தலைப்பிட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

காடு, மலை நதி, கடல், லாங் சாட், ஒய்டு ஷாட், டுரோன் ஷாட் என தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒளிப்பதிவு கேமராக்களும் போட்டி போட்டு பல புதிய சாதனைகளை படைத்து வருகின்ற ஒரு யுகத்தில், ஒரு சமையற்கட்டில் கேமராவை வைத்து ஒரு சமூகத்தின் மனநிலையை, அதன் இயக்கத்தை, பாலின சுரண்டலை காட்சிப்படுத்த முடியும் என சாதித்திருக்கிறது இப்படம்.

எப்போதும் படத்தின் நாயகனின் பக்கம் நின்று, அல்லது நம்மை கதாநாயகனாக வைத்து தான் நாம் படங்களை ரசிப்போம். இந்த படத்திலும் அப்படிதான். 99 சதவீத இந்திய ஆண்கள், நாயகியின் கணவனின் மனநிலையிலிருந்து இந்த படத்தை பார்க்க வேண்டி இருந்திருக்கும். ஏனெனில் அந்த கதாபாத்திரம் தான் ஆணாதிக்கமிக்க இந்திய சமூகத்தின் மனசாட்சியாய் திரையில் பேசியது.

கழிவறை இருக்கை என்ற நூலில், அதன் ஆசிரியர் லதா குறிப்பிடுவதைப் போல, தன் இயற்கை தேவைகளுக்கான வடிகாலாக படுத்துவிட்டு எழுந்து போவதாக பெண்ணுடல் இருக்கிறதே ஒழிய, அவளை சக மனுசியாக, ஒரு உயிரினமாகக் கூட கருதாத வக்கிர புத்தி கொண்ட ஆண்களாகவே நாம் இருந்து வருகிறோம் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

டபுள் எம் ஏ படித்த மாமியார் ஆனாலும், நடன கலைமாமணி மருமகளாக இருந்தாலும், குடும்ப ஆண்களின் தாளத்துக்கு ஏற்ப ஆட மட்டுமே, அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எத்தனை வித்தகர்களாக பெண்கள் இருந்தாலும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஒரே நாளில் அவளுக்கு வேசி பட்டம் கட்ட, அவளை அடித்து துன்புறுத்த அல்லது கொலையே செய்வதற்கும் சூடு குறைவாக தரப்படும் ஒரு குவளை தேநீரோ, உப்பு அதிகமாக போடப்பட்ட ஒருவேளை பொரியலோ போதுமானது.

இதையும் படியுங்கள்: 

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (2022) மலையாளம்

 ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை

தன் மாமியாரிடத்தில் தான் அனுபவித்த அத்தனை கொடுமைகளையும் கால வரிசைக்கிரமமாக தனது மருமகளும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணி மருமகளை சித்திரவதைப்படுத்துவதன் மூலம் தனது கடந்த கால காயங்களுக்கு மருந்து போட்டுக் கொள்ளும் மாமியார்களுக்கு மத்தியில், நாயகியினுடைய மாமியாரின் கதாப்பாத்திரம் பாராட்டுக்குரியது.

சாமி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் அடுத்த வேலை சோறு இருக்கும் வரை தான் என வீட்டு வேலைகள் செய்யும் செல்வி அக்கா உணர்த்தும் தருணம் ஆழமானது. நாயகிக்கும், செல்வி அக்காவுக்குமான உரையாடலில் எல்லாம் ஆச்சாரத்தின் புனிதம் மீது மாதவிடாய் உதிரம் பட்டு தெறிக்கிறது.

பிரச்சனைகள் குறித்து மட்டும் பேசிவிட்டு கடந்து செல்லும் இந்த காலத்தில், கேந்திரமான பிரச்சனை உருவாவதற்கான காரணத்தையும் கிளைமாக்சில் வைத்திருப்பது சிறப்பு. நாயகியின் தம்பி குடிப்பதற்கு தண்ணீர் கேட்க நாயகியின் அம்மா அவனின் தங்கையை விரட்ட, தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் டம்ளரை வீசி அடித்து “உன்னால தண்ணி கூட எடுத்து குடிக்க முடியாதா?” என்று கோபம் கொப்பளிக்க நாயகி கேட்கும் அந்த ஒரு கேள்வி, குடும்பங்களில் ஆண் குழந்தைகள் வளர்க்கப்படும் முறைதான் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு பிரதான காரணமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

தி கிரேட் இண்டியன் கிச்சன்- மலையாளம்

படம் முடிந்த கையோடு கிச்சன் சிங்க்-க்கு சென்று பாத்திரம் கழுவ வேண்டும் என்கிற அரைவேக்காட்டு மனநிலையை விடவும், படம் குறித்த மேட்டிமைத்தனமான திரை விமரிசனம் எழுதுவதை காட்டிலும், படம் நமக்குள் உண்டாக்கியுள்ள தாக்கம் குறித்த சுய பரிசீலனை முக்கியமானது. இது கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

நான் என் மனைவியுடன் தான் படம் பார்த்தேன்.படம் ஒன்னரை மணி நேரத்தில் முடிந்தது. ஆனால் அதன் மீதான உரையாடல் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்டிருந்தது. இந்த 10 வருட மணவாழ்க்கையில் நான் எவ்வளவு புரிதலின்றி இருந்திருக்கிறேன் என்பதை அந்த நாலு மணி நேரம் எனக்கு உணர்த்தியது. என் காலம் முடியுமட்டும் என்னால் மறந்துவிட முடியாததாக இருக்கப்போகிறது அந்த உரையாடல்.

நம் முன்னோர்களை மாற்றுவதோ, இது தவறென்று புரிய வைப்பதோ சாத்தியமில்லை. நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மாற்றிக்கொள்ள போராடுகிறோம். ஆனால் நிச்சயம் நம் வருங்கால சந்ததிக்கு இதை புரிய வைத்து விட முடியும். அவர்களை ஆணாதிக்க சிந்தனையற்றவர்களாய் வளர்க்க முடியும் என்பதாய் முடிவுற்ற உரையாடல் அது.

சமூக வளர்ச்சியை நோக்கிய இந்த பயணத்தை இடைநிறுத்தி பின்னுக்கு இழுக்கும் பேரபாயமாக காவி பாசிஸ்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். சூத்திரர்களை விட கீழானவர்களாக பெண்களை நடத்த வேண்டும் என்கிற மனுநீதி காவலர்களால் தான் இச்சமூகம் ஆணாதிக்க சிந்தனையை தன் தலைமேல் சுமந்து கிடக்கிறது. உடன்கட்டை உபயதாரர்களான காவி பாசிஸ்டுகள், அத்தனை அதிகார நிறுவனங்களிலும் அமர்ந்து கொண்டு இன்னமும் இச்சமூகத்தை பின்னுக்கிழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அதிகாரத்தை பறித்து, இந்த நச்சுக் கொடுக்குகளை வெட்டி எறியாதவரை பெண் முன்னேற்றம் எந்த துறையிலும் சாத்தியமில்லை.

ஆண்டாண்டு காலமாய் கற்பிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஆணாதிக்க சிந்தனை ஒழிய, பெண்களை சக பாலினமாக நடத்த, ஆண் குழந்தைகளை சமூகப் பொறுப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதை தாண்டி வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை. அதை திரை வழியே மக்களுக்கு கொண்டு சேர்க்க எடுத்த முயற்சிக்கு, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here