பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும் சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது. ஆனால் எதார்த்த நிலைமையோ பல்லிளிக்கிறது.

துவக்கத்தில் வீட்டில் அண்ணன், தங்கை இருவரையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வரிசையாக சொல்கிறார்கள். அண்ணன் படித்த புத்தகம் தான், அடுத்த ஆண்டு தங்கைக்கு வருகிறது. அண்ணனின் சட்டையை, அவளுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றி தைத்து தருகிறார்கள். கல்லூரி படிக்கும் பொழுது பிஎஸ்சி மானுடவியல் படிக்கவேண்டும் என்பது விருப்பம். ஆனால், கல்லூரி தூரமாய் இருப்பதால்… உள்ளூரிலேயே பிஏ மலையாளம் படிக்க அனுமதிக்கிறார்கள்.

நாயகி கல்லூரியில் படிக்கிறார். ஒரு வாத்தியார் முற்போக்காக பேச… அவரை விரும்புகிறாள். பின்பு அவரும் பிற்போக்காக நடந்துகொள்ள, காதல் விவகாரம் வீட்டிலும் தெரியவர…படிப்பை நிறுத்தி விட்டு, உடனே வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். திருமணம் நடக்கிறது. கணவன் சரியான முன்கோபியாக இருக்கிறான். அவனுக்கு இடியாப்பம் என்றால் பெருவிருப்பம். ஒருநாள் மாற்றினாலும், கடும்கோபம் கொள்கிறான். பிறகு சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் மனைவியை அடிக்க ஆரம்பிக்கிறான். பிறந்த வீட்டில் தெரிவித்தால், குடும்பத்தில் அது ஒரு சகஜமான ஒன்று என்பது என கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். இனி நம்மை நாமே தான் காக்கவேண்டும் என முடிவு செய்து … ஒரு கராத்தே உதை கொடுக்கிறாள். ஏழு அடி தள்ளிவிழுகிறான். பொறி கலங்கிவிடுகிறான். பிரச்சனை பெரிதாகிவிடுகிறது.

இனி சேர்ந்து வாழமுடியாது என கணவன் சொல்கிறான். அவனின் உறவுக்காரன் ”இந்த விசயம் உலகுக்கு தெரியவந்தால் உனக்குத் தான் அசிங்கம். ஆகையால், அவளுக்கு இரண்டு பிள்ளைகளை கொடுத்துவிட்டால், உன்னை விட்டு போகமாட்டாள். அதற்கு பிறகு உன் ராஜ்யம் தான்” என சதி ஆலோசனை சொல்கிறான். இவனும் ஒத்துக்கொள்கிறான்.

பிறகு என்ன ஆனது என்பதை பல்வேறு கலாட்டாகளுடன் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும் சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது. ஆனால் எதார்த்த நிலைமையோ பல்லிளிக்கிறது.

குடும்ப வன்முறை என்றால்?

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம்.

குடும்ப வன்முறை வழக்குகளின் பட்டியல்

குடும்ப வன்முறை வழக்குகளை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) என்கிற பட்டியல் நீண்டு செல்கிறது. உத்திரபிரதேச கணக்கை கொஞ்சம் உடைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு 180 பேர். ஒரு மணி நேரத்திற்கு 8 பேர்.

பொதுவாக குடும்ப பிரச்சனைகளை தெருவுக்கு கொண்டுவரக்கூடாது என்ற நிலவுடைமை கட்டுப்பெட்டித்தனத்தால், பெண்கள் சகித்துக்கொண்டு போகிறார்கள். இதன் அடுத்தநிலை இந்தப் படத்தில் வருவது போல உறவுக்காரர்கள் வந்து பஞ்சாயத்து செய்வதில் கொஞ்சத்தை வடிக்கட்டுவார்கள். கொஞ்சம் கை மீறி, பெரிய அடிதடி, வன்முறை என போகும் பொழுது தான் போலீஸ் ஸ்டேசன் வந்து பதிவு செய்வார்கள். மேலே சொல்லப்பட்ட பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என எடுத்துக்கொண்டால், பதிவு செய்யப்படாத வழக்குகள் எவ்வளவு என உங்களுடைய ஊகத்திற்கே முடிவு செய்துகொள்ளலாம்.

இதியும் படியுங்கள்: நாரதன்  திரைப்பார்வை.

இந்த வழக்குகளில் அதன் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு, கொஞ்சம் விழிப்புணர்வுக்கு தக்கவாறு, அந்த பெண்ணுக்கு இருக்கும் ஆதரவுக்கு தகுந்த மாதிரி சில வழக்குகள் விவாகரத்துக்கு செல்லும். மாற்று வழி தெரியாதவர்கள் தற்கொலையில் மாண்டுப்போகிறார்கள். சில கொலைகள் வரைக்கும் கொண்டுபோய் விடுகின்றன. தற்கொலைகள் எவ்வளவு? கொலைகள் எவ்வளவு? என்பதற்கும் ஒரு நீளப் பட்டியல் இருக்கிறது. கட்டுரை நீண்டு போவதால், உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

குடும்ப வன்முறைக்கு தீர்வு என்ன?

தனியார்மயம்-தாராளமயம் பெண்களைச் சந்தைப் பொருளாக மாற்றியிருக்கும் பாலியல் வக்கிரம் ஒருபுறம்; ஏற்கெனவே நிலவிவரும் சாதி-மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு சமூகத்தின் அடக்குமுறை மறுபுறம் என்ற இரட்டை நுகத்தடியைப் பெண்ணினத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

ஒரு புறம் பாலியல் சுதந்திரம் என்ற வரம்பற்ற பாலியல் உறவு; இன்னொருபுறம் கற்பு நெறி தவறாமை, குடும்ப விளக்காகப் பெண்கள் திகழ வேண்டிய ஆணாதிக்கப் பண்பாடு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி பெண்களை நோக்கி நிறுத்தப்படுகிறது. உலகமயம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் காணாத அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

பெண் கல்வி, வேலைவாய்ப்பு எல்லாம் சில மாற்றங்களை உருவாக்கித் தந்தாலும், பெண் விடுதலையை முழுமையாகப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நுகத்தடிகளும் அடித்து நொறுக்கப்படுவதுதான் இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக இருக்கும். இந்த இரண்டு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்குவது சாதாரணமானதல்ல. அதற்கு இச்சமூகத்தையே புரட்டிப் போடக் கூடிய போராட்டங்களை, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரக்கூடிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டம் இந்த இரண்டு நுகத்தடிகளையும் காத்து வருகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்பதாக இருக்கவேண்டும்.

குடும்ப வன்முறை என்ற ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு, சீரியசாக கொண்டு செல்லாமல், மாத்திரைக்கு இனிப்பு தடவி தருவது போல, நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளிவந்த ”தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தொடர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம்.

படத்தில் நடித்த தர்ஷனா, பசில் ஜோசப் என பலரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். விபின் தாஸ் இயக்கியுள்ளார். அனைவருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இப்பொழுது கேரளத்திலும், தமிழகத்திலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here