கடந்த மார்ச் 21 ஆம் தேதி zomatoவின் CEO தீபேந்தர் கோயல் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி அடுத்த மாதம் குர்கானில் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
Announcement: 10 minute food delivery is coming soon on Zomato.
Food quality – 10/10
Delivery partner safety – 10/10
Delivery time – 10 minutesHere’s how Zomato Instant will achieve the impossible while ensuring delivery partner safety – https://t.co/oKs3UylPHh pic.twitter.com/JYCNFgMRQz
— Deepinder Goyal (@deepigoyal) March 21, 2022
இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்த zomato நிறுவனம் சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை என கூறியுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு சில நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 30 நிமிடங்களில் டெலிவரி செய்யும் முறை இருந்து வருகிறது. இது மெதுவாக உள்ளதாக நிறுவனம் கருதுகிறது. மேலும் போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும், அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் 10 நிமிட டெலிவரி என்பதை அறிவித்துள்ளது.
லட்சக்கணக்கில் வங்கிகளில் கல்விக் கடன் பெற்று படித்து எப்படியாவது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற கனவில் படித்து முடித்து விட்டு நகரத்திற்க்கு வருகிறார்கள் இளைஞர்கள். பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலை கிடைக்காமல் விரக்தியின் மனநிலைக்கு செல்கிறார்கள். ஊர் திரும்பினால் சொந்த பந்தங்களின் ஏளனத்திற்க்கும், கல்விக்கடனை அடைக்க முடியாத நிலைக்கு ஆளாவோம் என கருதி தொடர்ந்து வேலைக்கு முயற்சிக்கிறார்கள்.
இவர்களை போன்ற இளைஞர்களை தான் குறி வைக்கிறது zomato போன்ற e-commerce நிறுவனங்கள். சொந்தமாக ஸ்மார்ட்போன், பைக், லைசென்சு இருந்தால் வேலையில் சேர்ந்துவிடலாம். நிறுவனம் zomato T-shirt கொடுக்கும் அதற்கும் 250 ரூபாய் தொழிலாளர்களிடமே கறந்து விடும். இந்த வரிசையில் Ola, Uber, Rabido, போன்றவையும் அடங்கும்.
படிக்க:
♦ முகம் காட்டாத முதலாளிகளின் கொடூர சுரண்டல் வடிவமே கிக் பொருளாதாரம்!
இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களான பகுதி நேர ஊழியர்களும், மாதம் 10,000 சம்பளம் பெறும் தொழிலாளர்கள் ஊதியம் தனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் வேலையை முடித்து விட்டு பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்ய செல்கின்றனர்.
வேலை பாதுகாப்பின்மை, மாறக்கூடிய ஊதியம், குறைந்த அடிப்படை ஊதியம், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், ஊக்கத்தொகையில் முரண்பாடு இந்த காரணத்திற்காக கடந்த மாதம் கிக் (GIG) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நிறுவனம் உணவகத்திலிருந்து விற்பனை தொகையில் 30% மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.25 முதல் ரூ.45 வரை சேவைக் கட்டணமாக பெறுகிறது. ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொற்ப தொகையே வழங்குகிறது.
குஜராத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில்: “அவர்கள் எங்களை டெலிவரி பார்ட்னர்கள் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்களை அப்படி நடத்தவில்லை. நாங்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்” என்கிறார். இவர் zomato மற்றும் swiggy இரண்டிலும் பணிபுரிகிறார்.
பெயர் குறிப்பிட விரும்பாத கிக் தொழிலாளி, எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். BE படித்துள்ளேன். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி தொழிலாளியாக வேலைப்பார்த்தேன். சரியாக ஒரு வருடம் முடிந்தவுடன் துரத்தி விட்டுவிட்டார்கள் கடந்த 6 மாதமாக இங்கு வேலைப் பார்க்கிறேன். ஒரு தொழிலாளி 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ.700லிருந்து ரூ.1000வரை சம்பாதிக்கலாம். ஆனால் இன்று பெட்ரோல் விற்க்கும் விலைக்கு சம்பாதித்ததில் 300 ரூபாய் மிஞ்சினாலே பெரிது என்கிறார் அவர். இது இன்றைய zomato தொழிலாளர்களின் நிலைமை.
ஏற்கனவே பெரும் சுரண்டலை அனுபவிக்கும் தொழிலாளர்களை மேலும் சுரண்டும் வேலையில் தான் zomato நிர்வாகம் ஈடுபடுகிறது. 10 நிமிட டெலிவரி என்பது தொழிலாளர்களை தனது லாபவெறிக்கு பலி கொடுக்கும் செயல். சென்னையில் இந்த திட்டம் சில நாட்கள் தொடங்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒருநாள் தொடங்கப்படும். இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இந்த கொடும் செயலை தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டு மொத்த கிக் தொழிலாளர்களுக்கும் பெரும் ஆபத்தாய் முடியும்.
இந்தியாவிலும் கிக் தொழிலாளர்களுக்கு முறையான பணி பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின் வரைவுகளில் கிக் தொழிலாளர்களை அரசாங்கம் சேர்த்திருந்தாலும், அவர்கள் ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகள் தொடர்பான விதிகளில் சேர்க்கப்படவில்லை.
சட்டங்கள் இருக்கும் போதே முழுக் கார்ப்பரேட் சேவையை செய்யும் பாசிச மோடி அரசிடம் கருணையை எதிர்ப்பார்க்கலாமா?
நாளை zomato போன்று மற்ற e-commerce நிறுவனங்களும் தொழில் போட்டிக்காகவும், லாபவெறிக்காவும் அதிவேக டெலிவரி சேவைகளை அமல்படுத்தும் முன்னரே கிக் தொழிலாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். அனைத்து கிக் தொழிலாளர்களையும் இணைத்து அமைப்பாக்க வேண்டும். அப்பொழுது தான் தனது அடிப்படை உரிமைகளுக்காகவும், சுரண்டலை எதிர்த்தும் போராட முடியும்.
- நந்தன்