“நில ஜிகாத்” (Land jihad) என்ற சொல்லை வைத்து நடக்கும் வட இந்திய தொலைக் காட்சிகளின் முதன்மை நேர விவாதங்கள், செய்தி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடக இடுகைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ததில், பிரதான ஊடகங்கள் இந்துத்துவ வெறியர்களின் போலிப் பிரச்சாரங்களையே ஒளிபரப்புகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தகைய ஊடகங்களின் தீவிர ஆதரவோடு தங்களது “சதிக்கோட்பாடுகளை” (முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை) கட்டமைக்க இந்து தீவிரவாதிகள் மற்றும் பிஜேபி தலைவர்கள் முயல்கின்றனர். ஜனவரி – 2, 2023 அன்று செய்தி நிகழ்ச்சிகளில் “கடவுளின் தேசத்தில் நிலம் ஜிகாத்” மற்றும் “புல்டோசர் நடவடிக்கைகளுக்கான நேரம் இது” என்ற தலைப்புகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.
உத்தரகாண்டில் பாஜக அரசாங்கத்தால் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக டெல்லியின் ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் நவ பாரத், பாஜக ஆளும் மாநிலத்தில் 4365 வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றும் நடவடிக்கைகளை தடுக்க ,ஜிகாதி கும்பல் போராட்டம் நடத்துகிறது என ஊளையிடுகிறார்.

ஜனவரி 29, 2023 அன்று தீவிர இந்துத்துவ அமைப்பான சகால் இந்து சமாஜ் சார்பில் மும்பையில் நில ஜிகாத் மற்றும் லவ் ஜிகாத் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிஜேபி தலைவர்கள் உள்ளிட்ட வலதுசாரிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில், முஸ்லிம்களுக்கு எதிரான,’ கும்பல் வன்முறைக்கு ‘பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. கையில் இருந்த பதாகைகளில் “மும்பை மாநகராட்சியே, எச்சரிக்கை! நில ஜிகாத்துக்கு முற்றுப்புள்ளி வை” என்ற வாசகங்கள் இருந்தன. சட்டவிரோத மசூதிகளும், கல்லறைகளும் நில ஜிஹாத்தின் அடையாளங்கள் என்ற கோஷங்கள் எதிரொலித்தன.
அன்றைய தினம் ஆஜ் தக் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியில் களத்தில் இருந்த நிருபர், இந்தப் பேரணியை மதமாற்றம், பசுவதை, லவ் மற்றும் நில ஜிஹாத்துக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடு என வர்ணித்தார். முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோஷங்கள் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. மேலும் பேரணியில் சென்றவர்களை அந்த நிருபர் பேட்டி கண்டார். அதில் லவ் ஜிகாத் என்பது காதலில் மட்டுமல்ல, மதமாற்றமும் நடக்கிறது. இந்து வேடம் அணிந்து பெண்களை திருமணம் செய்துவிட்டு பிறகு மதம் மாற்றுகின்றனர். அதே இந்து வேடம் அணிந்து கொண்டு நம் மக்களையும் அவர்கள் கொல்கிறார்கள் என்றெல்லாம் கூச்சமே இல்லாமல் புளுகுகிறார்கள். அந்த நிருபர் இந்த அபத்தமான கருத்துகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதை விட்டுவிட்டு “அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்து, அடையாளச் சான்றுகளை காட்டாமல், பெயர்களையும் மாற்றிக் கொண்டு வாழ்கிறார்களா?” என கேள்வி கேட்கிறார். அதற்கு பேரணியில் வந்த சங்கியும் “ஆமாம்” என்கிறது.
இந்தப் பேரணி குறித்து இந்தியா டிவி செய்தி சேனலின் தலைப்பாக “மும்பையில் கோபத்தின் வெள்ளம்” என்றும் “மும்பையின் சாலைகளில் இந்துக்கள் வெள்ளமென திரண்டு வந்துள்ளனர்” என்றும், இந்த மக்கள்; சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத், நில ஜிகாத் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக வந்துள்ளனர் என்றும் அறிவித்தது.
லவ் ஜிகாத் பிரச்சாரத்தை அடுத்து இப்போது நில ஜிகாத்!
முஸ்லிம்கள், இந்துப் பெண்களை குறி வைத்து திருமணம் செய்து இந்துக்களின் எண்ணிக்கையை குறைக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு இப்போது நில ஜிகாத் (நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதாக) எனும் பொய்ப் பிரச்சாரம் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்ய இந்து மதவெறியர்கள் முயற்சிக்கிறார்கள். முன்னணி ஊடகங்களும் முஸ்லிம்கள், இந்துக்களை துன்புறுத்தி அவர்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரித்து அந்த இடங்களில் இருந்து துரத்தி விடுவதாக பரப்பப்படும் இத்தகைய உண்மைக்கு புறம்பான, முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து ஆதரிக்கின்றன. பிஜேபி ஆளும் மாநிலங்களில், முறையான அறிவிப்பின்றி முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை நியாயப்படுத்த நில ஜிகாத் எனும் இந்த போலிப் பிரச்சாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் பயன்படுத்துகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை கட்டமைப்பு!
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஷாருக் ஆலம், “செய்தி நிகழ்ச்சிகளையோ, அல்லது கிராபிக் விளக்கப் படத்தையோ வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக் கதைகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள். இவை பெரிய வன்முறை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்” என்கிறார். மேலும் “முஸ்லிம்களை கொள்ளையர்கள் என்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் பெண்களை வேட்டையாடுபவர்கள் என்பது போலவும் ஒரு முறையான கதையை உருவாக்குகின்றனர்” என்றும் கூறினார். சர்வதேச விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்த பிரவீன் தொகாடியா, ஆகஸ்ட் 2015 – ல், “முஸ்லிம்களின் திட்டமிட்ட வளர்ச்சியால், இந்துக்கள் இந்த நாட்டில் ஒரு நாள் அழிந்து போவார்கள். இதுதான் மக்கள் தொகை ஜிகாத்” என்றார். இதில் உண்மை உள்ளதா?
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான குரேஷி, அவரது “மக்கள் தொகை கட்டுக்கதை – இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் அரசியல்” என்ற புத்தகத்தை பற்றி பேசுகையில், முஸ்லிம்கள் 45.3% அளவில்தான் குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். அவர்களின் கருவுறுதலின் விகிதம் 2.61 ஆகும். அதே வேளையில் இந்துக்கள் ஒன்றும் பின்தங்கி இருக்கவில்லை. அவர்களின் குடும்ப கட்டுப்பாடு விகிதம் 54.4% கருவுறுதலின் விகிதம் 2.13. இவர்கள் இரண்டாவது இடத்தில் மிக நெருங்கித்தான் உள்ளனர்” என்றார். Scroll இணைய இதழின் 2014 ஆய்வு, தற்போதைய மக்கள் தொகை போக்கு தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துக்களுக்கு சமமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வருவதற்கு இன்னும் 220 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தது.
ஊடகங்களில் நில ஜிகாத் என்ற கதையின் பின்னணி குறித்து கூறிய NDTV (ஹிந்தி) சேனலின் முன்னாள் ஆசிரியர் ரஷீத் குமார், “ஜிகாத் எனும் கதையை நிரூபிக்க ஊடகங்கள் முதலில் மதமாற்றத்தை பயன்படுத்தின. இப்போது நிலத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த நிலத்தில் உள்ள அவர்களின் உரிமையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற சமூக மற்றும் அரசியல் சிந்தனையே நில ஜிகாத் கதைக்குப் பின் உள்ளது. அவர்கள் எங்கு சென்று தங்கினாலும் சட்ட விரோத குடியேறிகளாகத்தான் நடத்தப்படுவார்கள். சில நேரங்களில் அவர்களை காகிதங்களைக் (ஆதாரங்களை) காட்டச் சொல்வார்கள். சில சமயங்களில் அவர்களது வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும்” என்றார்.
நில ஜிகாத் எனும் சொல் வலுப்பெறுகிறது!
பாஜக 2019-ல் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, நில ஜிகாத் எனும் சொல் மேலதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்களும் இந்த சொல்லை பயன்படுத்துகின்றனர். அமித்ஷா 2021 அசாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் பல சட்டங்களைக் கொண்டு வர இருக்கிறோம். அவற்றில் முக்கியமானது லவ் ஜிகாத் மற்றும் நில ஜிகாத் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவதாகும்” என்றார். அஸ்ஸாமின் பாஜக துணைத் தலைவர் மற்றும் உத்தரகாண்ட் எம்எல்ஏ அஜேந்திர அஜய் போன்றோர் “முஸ்லிம்கள், இந்துக்களை விரட்டியடித்துவிட்டு அந்த இடங்களை கைப்பற்றுகின்றனர்” என பேசுகின்றனர்.
2018 – ல் ஹரியானாவின் குருகிராமில், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திய போது அங்கு வந்த சங் பரிவார் கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டபடி அவர்களை வெளியேறச் சொன்னது. தீவிரவாதியான யதி நரசிங்கானந், அவர்கள் மீது நில ஜிகாத் குற்றம் சாட்டினான். பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறின. சில ஊடகங்கள் இத்தகைய செயல்களை கண்டித்தன. ஆனால் மூன்றாண்டுகளுக்கு பிறகு 2021 – ல் இதே குருகுராமில் தொழுகைக்கு எதிரான போராட்டங்களை இந்து வெறியர்கள் நடத்திய போது ஊடகங்களும் அதை ஆதரித்தன. முஸ்லிம்கள் பொது இடங்களை ஆக்கிரமிப்பதாக குற்றம் சாட்டின. ஜீ நியூஸ் சேனலின் சுதீர் சௌத்ரியின் நிகழ்ச்சியில் “இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் வெள்ளிக்கிழமைகளில் நமாஸ் நடத்துவதற்காக, பூங்காக்களும் சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், பல தருணங்களில் ரயில், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளில் கூட, இவை பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடத்தப்படுகிறது” எனவும் எந்த ஆதாரமும், ஆய்வும் இல்லாமல் குற்றம் சாட்டினார்.

அவரது நிகழ்ச்சி முழுவதும் “பிரார்த்தனை என்ற பெயரில் சாலைகள் அடைக்கப்படுவது ஏன்?” “இஸ்லாத்தின் உண்மையான அர்த்தத்தில் இருந்து முஸ்லிம்கள் விலகி விட்டார்களா?” என்ற கேள்விகள் தொடர்ந்தன. முஸ்லிம்கள் பொது இடங்களில் தொழுகை நடத்தும் பல வீடியோக்கள் வைரலாக பரப்பப்பட்டு, போலீஸ் நடவடிக்கையையும் அவை கோரின. இதையடுத்து, லக்னோவில் உ.பி போலீசார் ஏழு பேரை கைது செய்தனர். வேறு சில இடங்களில் வழக்குப் பதிந்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
ஊடகங்கள் உருவாக்கும் சொற்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன!
“ஜீ” தொலைக்காட்சியின் சௌத்ரி, மார்ச் 2020 – ல் நடந்த DNA நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஜம்முவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றங்களை அனுமதித்துள்ளது. அதில் 90% மக்கள் முஸ்லிம்கள்தான் என்றார். ஆனால் உண்மையில் அப்படி குடியேறிய மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான் என்பது பிறகு கண்டறியப்பட்டது. இதற்கு முன்பும் இப்படி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார் அவர்.
மேலும் இந்தியாவில் பல்வேறு வகையான ஜிகாத்துகள் நடப்பதாக விளக்கப்படம் ஒன்றைக் காட்டி, இவற்றில் “கடுமையான ஜிகாத்” மற்றும் “மென்மையான ஜிகாத்” என இருவகை போக்குகள் உள்ளதாகவும் விளக்கினார். 2014 நவம்பர் முதல் பேஸ்புக்கில் வைரலான பதிவுகளின் அடிப்படையில், கடுமையான ஜிகாத்தில் மக்கள் தொகை ஜிகாத், லவ் ஜிகாத், நில ஜிகாத், கல்வி ஜிகாத் மற்றும் நேரடி ஜிகாத் ஆகியவை அடங்குவதாகவும், மென்மையான ஜிகாத்தில் பொருளாதார ஜிகாத், வரலாற்று ஜிகாத், ஊடக ஜிகாத், திரைப்படம் மற்றும் பாடல் ஜிகாத், மதச்சார்பற்ற ஜிகாத் ஆகியவை அடங்கியதாகவும் விளக்கினார். “முஸ்லிம்கள் குறித்த சதிக் கோட்பாடுகளை பரப்ப, பிரதான தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் முழுப் பங்களிப்பை செலுத்துகின்றன” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆலம்.

உத்தரகாண்டின் நியூஸ் 18 செய்திச் சேனல், ஜூன் 10, 2022 அன்று “தேவ பூமியில் நில ஜிகாத் – மாபெரும் அம்பலப்படுத்தல்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பேசிய, நொய்டாவில் இயங்கும் சுதர்சன் நியூஸின் தலைமை ஆசிரியரான சுரேஷ் சாவன்கே, “நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் மார்ச் 2019 ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 49 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி அமைப்பால் இது நடத்தப்பட்டது. காரணம் முஸ்லிம்களின் லேண்ட் ஜிகாத் மற்றும் லவ் ஜிகாத் போன்றவற்றால் வெறுப்புற்ற மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்” என்றார்.
இப்படிப் பேசிய இதே நபர் செப்டம்பர் 2020 – ல் “யுபிஎஸ்சி ஜிகாத்” எனும் நிகழ்ச்சி நடத்தியதற்காக உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் இந்திய அதிகாரத்துவத்தை கைப்பற்ற முஸ்லிம்கள் ரகசியமாக வேலை செய்கிறார்கள் என சித்தரித்தார். இந்த வழக்கில் வாதாடிய ஆலம், இந்த சேனல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவா இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகின்றன? அவர்கள் எத்தகைய தலைப்புகளை பயன்படுத்துகிறார்கள் எனப் பாருங்கள். ஒவ்வொரு அம்சமும் சட்டப்படி பரிசீலிக்கப்பட வேண்டும்” என்றார். “முன்பெல்லாம் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் அசாம் மற்றும் வங்காள எல்லைகளில் பரப்பப்பட்டது. ஆனால் இப்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் நடக்கிறது. நில ஜிகாத் என்னும் சதிக் கோட்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது” என்றார் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ரூடபே ஷாகித்.
பாஜக எம்.எல்.ஏக்கள் நடத்தும் பிரச்சாரம்!
உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ அஜேந்திர அஜயும், ஹரித்துவார் தரம் சன்சாத் என்ற இந்து தீவிரவாத துறவிகளின் அமைப்பும் டிசம்பர் 2021- ல் மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நில ஜிகாத்தில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டிருந்தனர். அஜய் இதற்குமுன் 2018ல் கேதார்நாத் திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறது என குற்றம் சாட்டி நடத்திய போராட்டத்தால், அந்தப் படம் அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டது. ஜூன் 10 2022 – ல் நியூஸ்- 18 உத்தரகாண்ட் நடத்திய லவ் ஜிகாத் நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ திலீப் சிங் “உத்தரகாண்டில் தற்போது பெரிய சதி நடக்கிறது. மஜார் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்வேறு இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்துகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்துக்கள் விழித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என அச்சுறுத்தினார். குஜராத் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி ஊடகங்களிடம் கூறுகையில், “நில ஜிகாத் என்ற பெயரில் மிகப்பெரிய சதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சதியை முறியடிப்போம் என அரசின் சார்பில் உறுதி அளிக்கிறேன்” என்றார்.
ரேடியோ ருவாண்டா மூலம் அரங்கேறிய இனப்படுகொலை!
நில ஜிகாத் பிரச்சாரத்துக்கு எதிர் வினையாற்றிய மூத்த பத்திரிகையாளரான பிரசாந்த் டாண்டன், இந்திய ஊடகங்களை ரேடியோ ருவாண்டாவுடன் ஒப்பிட்டு, அதன் நோக்கம் இனப்படுகொலைதான் என்றார். மார்ச் 1992 ல் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை ரேடியோ மூலம் ஒலிபரப்பியதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட ஒரு இனப்படுகொலை ஆப்பிரிக்காவில் அரங்கேறியது.
2003 – ல் ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் 3 ஊடக நிறுவனங்கள் இனப்படுகொலையை தூண்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டன. நீதிபதி நவநீதம் பிள்ளை தனது தீர்ப்பில் “சொற்களின் ஆற்றலைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருந்தீர்கள். மேலும் பரந்த அளவில் மக்களை சென்றடையும் ரேடியோவை பயன்படுத்தி வெறுப்பையும் வன்முறையையும் பரப்பியுள்ளீர்கள். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகங்களும் ரேடியோ ருவாண்டாவிற்கு இணையாக செயல் படுகின்றன. ஒட்டுண்ணிகள் மற்றும் ஜிகாதிகள் என ஒரு சமூகத்தை அழைப்பதன் மூலம் அந்த சமூகத்தின் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது. இனப்படுகொலையின் முதல்படி இதுதான் என்கிறார் டாண்டன்.
இந்தி ஊடகங்களின் பங்கு!
NDTV இந்தியின் முன்னாள் ஆசிரியர் குமார், “அனைத்தையும் ஜிகாத்துடன் தொடர்புபடுத்தும் இந்த ஊடகப் பிரச்சாரங்களின் நோக்கம், முஸ்லிம்களை அன்னியப் படுத்துவதாகும். முஸ்லிம்களுக்கு எதிராக சமூகத் தீண்டாமையின் புதிய வடிவம் உருவாக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உருவாக்க விரும்புகிறார்கள்” என்றார்.
இந்திச் சேனல்கள் முஸ்லிம்களை அரக்கத் தனமானவர்களாக காட்ட முயல்கின்றன. வெறுக்கத்தக்க வகையிலான கதைகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தச் சூழல் பெரிதாக வளர்ந்து வருகிறது. பகுத்தறியும் திறன் பெற்றவர்கள்தான் இந்த பிரச்சாரம் தவறு எனக் கண்டறிய முடியும். எனவே பெரும்பாலான மக்கள் இதில் வீழ்வதை தவிர்க்க முடியாது.
ஊடகங்களின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாதா?
சுய ஒழுங்குமுறை அமைப்பான செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிலைகள் ஆணையம் (NBDSA) பிப்ரவரி 28, 2023 – ல் நியூஸ் 18, டைம்ஸ் நவ் மற்றும் ஜீ நியூஸ் ஆகியவற்றால் ஒளிபரப்பப்பட்ட ஏழு நிகழ்ச்சிகள், நெறிமுறைகளையும் ஒளிபரப்புத் தர நிலைகளையும் மீறியதாக கண்டறிந்தது. அந்தச் சேனல்கள் அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் இருந்து அந்த நிகழ்ச்சிகளை நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் நியூஸ் 18 – ன் மூன்று நிகழ்ச்சிகளுக்காக 95,000 அபராதமும் விதித்தது. இதற்கு முன்பும் ஜூன் 2021 – ல் கன்னட நியூஸ் 18-க்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு கன்னட செய்தி சேனலான சுவர்ணா நியூசில் இன மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான வழிகாட்டலை மீறியதற்காக 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மார்ச் 2020 – ல் தப்லிக் ஜமாத் குறித்து அவதூறு பரப்பியதற்காக டைம்ஸ் நவ் சேனலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து டாண்டன் கூறுகையில், ” NBDSA – வினால் எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே அது பயனற்றது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களும் சிக்கலாக உள்ளன. எனவே அரசாங்கத்தால் இவை தவறாக பயன்படுத்தப் படுகின்றன” என்றார்.
காவி பாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் தொடங்கி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் பாஜக- வின் ஊதுகுழலாக மாற்றப்பட்டு விட்டன. எஞ்சியிருந்த சிலவற்றில் சமீபத்தில் NDTV சேனலையும், அதானி மூலம் அபரித்துக் கொண்டது ஆளும் கும்பல். தான் கட்டியமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது காவிப்படை. இதைத் தடுத்து நிறுத்த நாம் தயாராக வேண்டாமா?
செய்தி மூலம்:
தமிழில் ஆக்கம்: குரு







