காவிகள் அரியாசனத்தில் வீற்றிருக்கும் கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை.
அதிலும் காவி கும்பல் ஆளும் மாநிலங்களில் நடந்த கொலைகள் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்தது. இதில் முதலிடத்தில் இருப்பது புல்டோசர் ஆட்சி நடத்தும் காவி மதவெறியன் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேசம். மாட்டுகறி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் படுகொலை. மாட்டுக்கறி கடத்தியதாக இஸ்லாமியர்கள் படுகொலை. தலித் பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை என்று இவர்களின் ‘சாதனையை’ அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவையனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இவர்கள் ஊட்டி வளர்த்த மதவெறியே!. இந்த மதவெறி கும்பல் கொஞ்சமும் இரக்கம் பாராமல் இஸ்லாமியர்களை படுகொலை செய்கிறது. மதவெறி சாமியார்களின் பேச்சை கேட்டு கொலை செய்வதை பெருமையாக கருதுகிறது.
இந்த காவி மதவெறி இன்று பள்ளிகளுக்குள்ளும் பரவியது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பள்ளி ஒன்றில் ஆசிரியர் இஸ்லாமிய மாணவன் ஒருவனை சக மாணவர்களிடம் சொல்லி கன்னத்தில் அறைய சொன்னது இந்தியா முழுவதும் சமூகவலைதளங்களில் வீடியோ பரவி அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் ஆசிரியர் அருகே மாணவன் நின்றுக் கொண்டிருக்கிறான். அவனை மற்ற மாணவர்களிடம் கூறி கன்னத்தில் அறைய உத்தரவிடுகிறார். ஏதுமறியாத மாணவர்களோ அந்த சிறுவனை கன்னத்திலும் , முதுகிலும் அடிக்கிறார்கள். தயக்கத்துடன் அறைந்த மாணவர்களை வேகமாக அடிக்க கூறுகிறார் அந்த ஆசிரியர்.
அந்த வகுப்பறையில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்த இஸ்லாமிய பெற்றோர்களை குழந்தைகளை விட்டுவிட்டு பள்ளியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறார் ஆசிரியர். அதில் ஒருவர் எடுத்த வீடியோவால் தான் இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது.
இதையும் படியுங்கள்:
♦ உத்திரப் பிரதேசம் விவசாயிகளின் மீது பாஜக குண்டர்களின் தாக்குதல்!!
♦ உத்தரப்பிரதேசமா? – யோகியின் கிரிமினல் கூடாரமா?
குறிப்பாக அந்த ஆசிரியர் ‘இஸ்லாமியர்களை தாக்க வேண்டும்’ என்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் தாக்க கூறிய ஆசிரியர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர் மட்டுமல்ல முதல்வரும் கூட.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த ஆசிரியர் எங்கள் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்களே அதிகம் படிக்கிறார்கள். பெற்றோர் குழந்தையை கண்டிக்க சொல்லியதாலும், நான் ஊனமுற்றிருப்பதால் மற்ற மாணவர்களை சொல்லி அடிக்க சொன்னேன் என்றும் இதற்காக நான் வருந்தவில்லை என்றும் கூரியுள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக அமைச்சர் அமித் மாளவியா மாணவர்களை சக மாணவனை கொண்டு தாக்கியது தவறு தான் என்றாலும் இதில் வகுப்புவாதம் இல்லை என்று கூறியுள்ளார். இஸ்லாமியர்களை தாக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறியது வகுப்புவாதம் இல்லையா? அல்லது அவரது காவிக் காதுகளில் அது விழவில்லையா?
இதையும் படியுங்கள்:
♦ ஹிந்து மதவெறிக்கு யோகி ஆதித்யநாத் ஒரு வகைமாதிரி !
♦ யதி நரசிங்கானந்த் மீண்டும் காவி வெறி பேச்சு! அவரின் முந்தைய பேச்சுகளுக்கே சிறையில் அடைக்காத நீதிமன்றமும் கூட்டுக் குற்றவாளி!
இதேபோல் மற்றொரு சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சுதந்திர தினத்தன்று பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களை பாராட்டுவது வழக்கம். அந்த வருடம் 10ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த அர்னாஸ்பானு என்ற மாணவி தனக்கு பாராட்டி பதக்கங்கள் கொடுப்பார்கள் என சென்றிருந்த போது அதிர்ச்சியே காத்திருந்தது. முதலிடம் பிடித்த மாணவிக்கு கொடுக்காமல் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. தான் ஒதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த மாணவி அழுதுக் கொண்டே வீட்டில் சென்று சொல்லியிருக்கிறார். அந்த மாணவிக்கு பாராட்டு அளிக்கப்படாததற்க்கு அவர் இஸ்லாமியர் என்பது மட்டுமே காரணம்.
வெளியில் வந்தது இந்த இரண்டு செய்தி தான். வெளியில் வராமல் மறைக்கப்படது எத்தனையோ? 8 வயதான குழந்தைக்கு இஸ்லாமியர்களை தாக்குங்கள் என்று ஆசிரியர் உத்தரவிடுகிறார் என்றால் அவர் எந்தளவுக்கு வகுப்புவாத சிந்தனையுடையவராக, மதவெறியராக இருந்திருப்பார். இவர் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தால் படித்து வெளியில் வருபவர்கள் மதவாத விசம் நிறைந்தவர்களாக தான் வெளியில் வருவார்கள்.
இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களை நிகழ்த்தி ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவிபாசிச கும்பல் பள்ளி மாணவர்களிடையேயும் மதவெறி நஞ்சை விதைக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மதவாதம் எடுபடாது என்பதால் மாணவர்களிடையே சாதி நஞ்சை விதைக்கிறது. இரண்டிற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது காவி பாசிசமே!
இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் எங்கோ நடக்கிறது என்று கண்டும் காணாமல் போக முடியாது. காவி கும்பல் மாணவர்களிடமும் மதவெறுப்பை விதைக்க ஆரம்பித்துள்ளது. இது பரவ ஆரம்பித்தால் மனித குலத்திற்கே பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து காவிபாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்.
- நலன்