பத்திரிக்கைச் செய்தி
நாள் 12-5-2022
தமிழகத்தின் அமைதியை கெடுக்கும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்ப பெறு,
ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை ரத்து செய்!
மே 17 காலை கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை!
தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம் .
மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல், மதவிவகாரம் அல்ல !
பல்லக்கு நிகழ்வை தடை செய்!
மே 22 மயிலாடுதுறையில் போராட்டம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் அரசியல் சட்டத்தில் தனக்கு உள்ள பொறுப்பின் வரம்பை மதிக்காமல் அத்து மீறி செயல்பட்டு வருகிறார்.
கவர்னர் மாளிகையை சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்விற்கு பயன்படுத்தி அயோத்தி வழக்கில் வாதாடிய வக்கீலுக்கு விருது கொடுத்துள்ளார். மாநில வளர்ச்சி தேவையில்லை என மாநில உரிமைக்கு எதிராக பேசுகிறார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மிக அபாயகரமானது என்று பொதுவெளியில் பேசி வெறுப்பை வளர்க்கிறார். தமிழக ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் மதவாத வெறி பரப்புகிறார். இதை அனுமதிக்க முடியாது.
இந்தியாவிலேயே பகுத்தறிவாளர்களும் கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்பது உலகறிந்த உண்மை. அதற்கு மாறாக தொடர்பே இல்லாமல் மீன்வள கருத்தரங்கில் தமிழகம் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என பேசி இருக்கிறார். இதற்கு முன் ராமராஜ்யம் அமைக்க வேண்டும் என பேசினார். தமிழகத்தில் திராவிட, கம்யூனிச இயக்கங்களின் கடும் எதிர்ப்பால் பல பத்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்ட மதத்தலைவர்கள் பல்லக்கு ஊர்வலத்தை மீண்டும் நடத்தத் தூண்டிவிட்டு அதனை ஆதரிக்கும் சாக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை, மன்னார்குடி ஜீயர், மதுரை ஆதீனம் போன்றோரை வன்முறையைத்தூண்டும் விதமாகப் பேசவிட்டு சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துகிறார். தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டியதுடன் அதற்கு எந்த தொடர்பும் அற்ற ஆர்எஸ்எஸ் புரோக்கர் ஸ்ரீதர் வேம்பு என்பவரைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்தார்.
ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர், தன்னிச்சையாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும் அதனைச் சற்றும் மதிக்காமல் செயல்படுகிறார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு பொது ஊழியர் (பப்ளிக் சர்வன்ட்) தான் ஆளுநர்..அரசியல் சட்டப்படி நடப்பேன் என உறுதிமொழி எடுத்துவிட்டு மதவாத வெறுப்பரசியலை பேசவும் மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படவும் எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை.
ஜனநாயகத்தில் மக்களுக்கு மேலான அதிகாரம் எவருக்குமில்லை. ஆளுநரின் செயல் பாடுகள் போட்டி அரசாங்கத்தை நடத்துவதாகவே உள்ளது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் முடக்கி வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கே முட்டுகட்டை போடுவது போன்றது. இது தமிழக அரசின் பிரச்சினை மட்டுமல்ல தமிழக மக்களின் அரசியல் ஜனநாயக, இறையான்மைக்கான ஆபத்து. எனவே ஆளுநர் ரவியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச ஒற்றை ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்லும் ஆபத்தான நிலையில் ஆளுநர் பதவி முழுமையாக அகற்றுவதற்கு மக்கள் போராட வேண்டும்.
எனவே வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அதுபோல் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் அவரை சுமந்து சென்று வீதி உலா செல்லும் பட்டணப்பிரவேச நிகழ்விற்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். உடனே மதுரை ஆதீனம் “உயிரைக் கொடுத்தாவது பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்திய தீருவோம்! ஆங்கிலேயர்களே ஆதரவு தெரிவித்த இந்த நிகழ்வுக்கு அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் ஒரு அமைச்சரும் தெருவில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் எதிர்ப்பை தெரிவித்தார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை “ ஆதினத்தை அமர வைத்து பல்லக்கை நானே தோளில் சுமப்பேன் என்றார். எச்.ராஜா நான் அங்கு நிற்பேன் என சொல்கிறார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மான் கொண்டு வந்தார்.
இம்மிரட்டலுக்குப் பணிந்து தமிழக அரசு பல்லக்கு தூக்குவதற்கு விதித்த தடையை நீக்கியுள்ளது. மரபு பழக்க வழக்கம் என்ற பெயரில் ஆன்மீக உலகில் நிகழ்த்தப்பட்ட பார்ப்பனீய கொடுங்கோன்மைகளான பல மூட நம்பிக்கைகளை ,உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், தேவதாசி முறை, பலதாரமணம், கோவில் நுழைவுத்தீண்டாமை, கருவறை தீண்டாமை பெண்கள் மாதவிடாய் தீட்டு, என பல காட்டு மிராண்டித்தனங்களை முற்போக்கு இயக்கங்கள் போராடித்தான் ஒழித்துள்ளன. பல்லக்கு விவகாரத்தில் மனிதனை மனிதன் சுமப்பது மத விவகாரம் அல்ல. அது மனித உரிமை மீறல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மனித கண்னியத்திற்கு எதிரானது.. சட்டப்படி குற்றம்.
2010-ல் திருச்சி திருவரங்கம் கோவில் பிரம்மரதம் என்ற பல்லக்கு தூக்கும் பட்டண பிரதேச விவகாரத்தில் பொது மக்கள் எதிர்ப்பு மற்றும் இயக்கங்களின் போராட்டத்தால் இந்துசமய அறநிலையதுறை இணை ஆணையர் தடை உத்திரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக நரசிம்ம பட்டர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து தடை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது தருமபுரம் ஆதீனத்திற்கும் பொருந்தும். பா.ஜ.க திட்டமிடும் ஆன்மீக மதவெறி சாதி வெறி அரசியலுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்க கூடாது. அதற்குப் பல்லக்கு நிகழ்வுவைத் தடை செய்ய அனைவரும் போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மே 22 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் மயிலாடுதுறையில் நடக்கும். போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அறிவியல் உருவாக்கியிருக்கும் எல்லா நவீன வசதிகளையும் கூச்சமின்றி அனுபவிக்கும் இவர்கள் நின்று போன பல்லக்கை மீட்பது தீய உள்நோக்கம் கொண்டது. தமிழை வளர்ப்பதற்காகவே இருப்பதாகக் கூறும் இம்மடாதிபதிகள் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், தமிழ் குடமுழுக்கு ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் உட்பட எந்த ஆதீனமும் ஆதரிப்பதில்லை. கிருபானந்த வாரியாரின் உறவினர் சத்தியவேல் முருகனார் அவர்கள் தமிழில் குடமுழக்கு செய்யகூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்திரவு பெற்றறவர்தான் இந்த தருமபுர ஆதீனம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்,பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இவற்றை ஆண்டு அனுபவிக்கும் தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் எதிராகவே செயல்படுகின்றனர்.
ஆதீனங்கள், மடாலயங்களுக்கு சொந்தமான நிலங்களை நிலமற்ற கூலி விவசாயிகளுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நிரந்தரமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். மதத்தின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் எல்லா மூடத்தனங்களும் இழிவுகளும் தடைசெய்யப்பட வேண்டும். சாதி வர்ணாசிரம கொடுமைகளை ஆதரிப்பவர்கள்தான் மனிதனை மனிதன் சுமக்கும் இழிவை ஆதரிக்கிறார்கள். இதற்கு எதிராக பெரியார் இருந்தால் இன்று என்ன செய்திருப்பாரோ அதை நாம் செய்ய வேண்டும்.
தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்