5லட்சம் கோடி மதிப்புள்ள 68,200 கிலோ போதை பொருள் பறிமுதல் ! இந்தியாவை போதையில் ஆழ்த்தி சுரண்டும் கார்ப்பரேட் காவி மோடி கும்பல்!


மிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பும் போதை மருந்தால் முன்னெப்போதையும் விட மிக மோசமாக சீரழிகிறார்கள்.  மற்ற மது போதையை விட இன்னும் ஆபத்தானவையாக இருக்கிறது போதைப் பொருட்கள்.  பள்ளிகளில், கல்லூரிகளில் சரளமாக கிடைக்கிறது.  போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மாணவர்களை வைத்தே மாணவர்களிடம் ரகசியமாக விற்பனை செய்கிறது.   காசுக்கேற்ப கஞ்சா துவங்கி ஹெராயின் வரை பல்வேறு போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது.

ஆகஸ்டு மாதம் போதைப் பொருட்கள் விற்பனையை, கடத்தலை தடுக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் அதிகாரிகளை அழைத்து மாநில அளவில் கூட்டம் நடத்தினார்.

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு''; முதலமைச்சர் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

இது தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சி, போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது? அரசின் நடவடிக்கைகள் என்ன ? என தேடும் பொழுது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன!  2020ல் 15,000 கிலோ போதை பொருட்களும், 2022ல் 50,000 கிலோ போதை பொருட்களும் என மொத்தம் 68,200 கிலோ போதைப் பொருட்களை தடுப்பு பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது.  இந்த செய்தி ஒன்றிய அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் தளத்திலேயே எந்தெந்த மாநிலங்களில், என்னென்ன வகை போதைப் பொருட்களை எவ்வளவு பிடித்தோம் என்கிற நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் மிகப்பெரிய அளவில் சிக்கிமில் பிடித்ததாக பட்டியலில் இருக்கிறது. சத்தியம் தொலைக்காட்சி சிக்கிமின் தலைமை செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வழியாக கேட்கும் பொழுது, அப்படி பெரிய அளவில் போதைப் பொருட்கள் எதுவும், சிக்கிம் மாநிலத்தில் பிடிபடவில்லை என பதில் தெரிவித்து இருக்கிறது.

ஆக, பிடிபட்ட போதைப் பொருட்களின் அளவு மிகப்பெரியதாக இருக்கிறது. அதை சோதிக்கும் பொழுது அதில் முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.  5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு இருக்கின்றன என்றால்,  இந்த செய்தி ஏன் தேசிய அளவில் ஊடகங்கள் பேசு பொருளாக்கவில்லை? நீதிமன்றங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை ?என சத்தியம் தொலைக்காட்சி கேள்வி கேட்கிறது.  இதில் உள்ள ”அமைதி” தான் போதைப் பொருட்களை விட மிக ஆபத்தானதாக இருக்கிறது.

கொடி கட்டிப் பறக்கும் உலக போதைப் பொருள் வர்த்தகம்! - Kungumam Tamil Weekly Magazine

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கைப்பற்றும் போலீசார். அதை முறையாக அழிக்காமல், சில போலீசார் நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள் என புகார் எழுப்பப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்கள்.  68,200 கிலோ போதைப் பொருட்களை இவர்கள் எப்படி அழித்திருப்பார்கள்?  அதிகாரிகள் விற்று காசு பார்த்திருக்க மாட்டார்களா? என கேள்வி எழுப்புகிறது சத்தியம் தொலைக்காட்சி. நியாயமான கேள்வி!

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த ’விக்ரம்” படத்தில்  காணாமல் போன ஒரு பெரிய அளவு போதைப் பொருளை ஒரு மாபியா கும்பல் வெறிகொண்டு தேடுவார்கள். ஓரிடத்தில் ”அந்த பொருள் மட்டும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றால், அவர்கள் இந்த அரசாங்கத்தை ஏன் மதிக்கப்போகிறார்கள்? அவர்களே ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்வார்கள்!” என வசனம் வரும்.  பிடிபட்டது இவ்வளவு என்றால், வெளியே சுற்றும் போதைப் பொருட்களின் மதிப்பையும், மாபியா கும்பலின் வளர்ச்சியையும், அதன் பாதிப்பையும் கணக்கிட்டால் பெரிய மலைப்பாய் இருக்கிறது. சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

கடந்த வாரத்தில் அமைச்சர் பொன்முடி “தமிழகத்தில் மட்டும் போதைப் பொருட்களை தடை செய்தால் போதுமானது இல்லை. ஒன்றிய அரசு இதில் மெனக்கெடவேண்டும்.  குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் சிலமுறை பெரிய அளவில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  குஜராத்தில் ஒரு நீதிபதி துறைமுகத்தில் சோதனை செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தனியார் துறைமுகங்களை அனுமதிக்க கூடாது” என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். உண்மை தான்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  இரண்டு கண்டென்யினர்களில் 21,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் பிடிப்பட்டது நினைவிருக்கும். ”சோதனையிடுவதற்கும், பறிமுதல் செய்வதற்கும் எங்களுக்கு அதிகாரம் இல்லை” என அதானி நிர்வாகம் நழுவியது. அனுப்பியவர் தன் தேவைக்கு அருகில் உள்ள துறைமுகத்தை தேர்ந்தெடுக்காமல், ஏன் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தை தேர்ந்தெடுத்தார் என்பதையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஏற்கனவே விமானங்கள் அரசின் வசம் இல்லை.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விமானி போதைப் பொருட்களை கடத்தி வந்து, கைது செய்யப்பட்டார். அப்படி அவர் கொண்டு வந்தது முதல்முறை அல்ல! பெங்களூரில் ஆய்வகம் எல்லாம் வைத்து தொடர்ச்சியாக போதைப் பொருட்களை தயாரித்து, விநியோகித்துள்ளார்..

இப்பொழுது அரசின் வசம் விமானங்களும் இல்லை.  நேற்று  நாடு முழுவதும் உள்ள 65 விமான நிலையங்களில் இருந்து ”அவசியமற்ற” சில பணியிடங்களில் இருந்து அரசின் தொழிற்பாதுகாப்பு படைகளை 3049 பேரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த இடங்களில் தனியார் காவலர்களை நியமனம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். வரும் காலங்களில் மீதம் இருக்கும் அரசு படைகளை மெல்ல மெல்ல திரும்ப பெற்றுவிடுவார்கள். பிறகு தனியார் தரகு முதலாளிகளின் ராஜ்யம் தான்.

ஆளும் பா.ஜனதா கட்சியும் பொறுப்பான கட்சி இல்லை. மக்கள் விரோத கட்சி என்பதை அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மக்கள் கவனித்துவருகிறார்கள். போதைப் பொருள் விசயத்திலும் கூட, இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் பஞ்சாப் முதல் மாநிலம்.  2009-ம் ஆண்டு பஞ்சாபின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் சுமார் 67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7,500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது.


இதையும் படியுங்கள் : ”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” சாத்தியமா?  உண்மையில் நம் ஊரில் பெண்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளார்களா?


எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் போதைப் பொருட்களைக் கடத்தும் போது கைதாகியுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு முதன் முறையாக,” பாரதிய ஜனதா அகாலி தள கூட்டணி “அதிகாரத்தைக் கைப்பற்றியது. சுக்பீர் பாதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் உளவுத் துறை தலைவராக இருந்த சசி காந்த், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளைக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் நிழலுலக போதை மாபியா கும்பலைச் சேர்ந்த சுமார் 90 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பஞ்சாபின் போதைப் பிரச்சினை குறித்து பேட்டியளித்துள்ள சசி காந்த், தான் சமர்ப்பித்த அறிக்கையில் “குறிப்பிட்ட நபர்களில் சிலர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகவும் மந்திரிகளாகவும், போலீசு அதிகாரிகளாகவும் இருந்தார்கள்” என்பதை தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கை குறித்து சுமார் ஆறு மாத காலம் கழித்தே நடவடிக்கை எடுத்துள்ளது பாரதிய ஜனதா – அகாலி தளம் தலைமையிலான அரசு. அறிக்கை சமர்ப்பித்த சசி காந்தை பதவிலிருந்து நீக்கி பந்தாடியதே அந்த நடவடிக்கை. கேடி, கிரிமினல்களை எல்லாம் பொறுக்கி எடுத்து தன்னிடம் சேர்த்து வைத்திருக்கிற பாஜனதா கட்சியின் லட்சணம் இது தான்.

ஆக, போதைப் பொருட்களிலிருந்து கடுமையாக பாதிக்கப்படும் இளைய தலைமுறையை காக்கவேண்டும் என்றால், மக்கள் விரோத பா.ஜனதா கட்சியை ஒழித்துக்கட்டவேண்டும்.  கார்ப்பரேட் கும்பல்களிடம் இருந்து அரசின் பொதுச்சொத்துக்களான விமானங்கள், விமானநிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தையும் பறிக்கவேண்டும்.

சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here