”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” சாத்தியமா?  உண்மையில் நம் ஊரில் பெண்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளார்களா?


ந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதுதான். இதை உறுதி செய்வதாகத்தான் தினம்தோறும் நம் நாட்டில், மாநிலத்தில்,மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றி வரும் செய்திகள் இருக்கின்றன; பெற்றோர்களை அச்சுறுத்துகின்றன. சென்னையில் இரவில் பெண்கள் பயணிப்பதே ஆபத்தானதாகி விட்டதோ? இது பற்றி அலசுவோம்.

தமிழகத்தில் போதை ஒழிப்புக்காக மாணவர்கள் 30 லட்சம்பேர் உறுதிமொழி எடுத்து கின்னஸ் சாதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகியவற்றை இணைத்து அமலாக்கப்பணியகம் – குற்றப் புலனாய்வுத்துறை என்ற தனிப்பிரிவை தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நிகழ்காலத்தை நினைத்தே கலங்குகிறார்களா?

ஆம். பள்ளியிலிருந்தே ஆண், பெண் வித்தியாசமின்றி போதைப்பழக்கம் புது கலாச்சாரமாகி விட்டது. ஒயின், பீரில் தொடங்கி, கல்லூரி வரும்போது அனைத்துக்கும் தயாராகிறார்கள். அதற்கேற்ப பிறந்தநாள் கொண்டாட்டம் கட்டாயமாகிவிட்டது. இதனால் தன் பிள்ளை உருப்படுவானா குடிகாரனாவானா, போதை ஊசிக்கு அடிமையாவானா என்று பெற்றோர்கள் பயப்பட ஆரம்பித்து, தூக்கம் நிம்மதியை தொலைத்து பல வருடங்களாகி விட்டது. தற்போது இவை பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கும் பொருந்தும் நிலைக்கு வந்துவிட்டது.

கஞ்சா, அபின், ஹெராயின் வர்க்கத்துக்கேற்ற தரமான போதை!

பெரும்பாலான அரசு பள்ளி, கல்லூரிகளை சுற்றி ஏழைகளுக்கு ஏற்ற விலையில் 100, 200 க்கு கஞ்சா கிடைக்கிறது. அதுவே இஞ்சினியரிங், மருத்துவம் என மேட்டுக்குடியின் குலக்கொழுந்துகள் படிக்கும் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களை சுற்றி அவர்கள் தரத்தில் அபின், ஹெராயின் என பலவித சரக்குகள் அவர்களுக்கு ஆயிரத்தில் தொடங்கி, பார்ட்டிகளுக்கு லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

மும்பையின் வழியில் போதையின் தலைநகராகும் சென்னை!

சென்னையின் நிலையை புரிந்துகொள்ள சில விவரங்களை பரிசீலிப்போம். பள்ளியில் யார் யாரைப்பார்த்து பயப்படுவார்கள்? ஒதுங்கி செல்வார்கள்? மாணவர்கள்தான் ஆசிரியர்களை பார்த்து மரியாதையுடன் ஒதுங்கி நிற்பார்கள் என நினைப்பவர்கள் பள்ளிகளுக்கு சென்று சோதிக்கவும்.

ஆசிரியர்கள் மாணவன் நிதானத்தில்தான் இருக்கிறானா என தெரியாமல் தன் கடமையை நின்ற இடத்திலேயே முடித்துவிட்டு செல்வதுதான் பாதுகாப்பானது! உயர்நிலைப்பள்ளிகளிலேயே குறுக்கும் நெடுக்குமாக செல்வது, படிப்பதை, எழுதுவதை சோதிப்பது, கண்டிப்பது எல்லாம் மலையேறிவிட்டது. கல்லூரிகளில் சொல்லவே தேவையில்லை! மீறி உரிமையுடன் தலையிட முயன்றால் ஆசிரியர்களுக்கே ஆபத்தானதாக முடியும் வாய்ப்பும், ஒரு சில போதைக்கு அடிமையானவர்களால் உயிரிழப்பே ஏற்படவும்கூட வாய்ப்பு உண்டு.


இதையும் படியுங்கள்: லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!


மாதா, பிதா, குரு, தெய்வம் ஒருவருக்கும் கட்டுபடாது போதை. பேராசிரியர்கள் நமக்கேன் வம்பு என்று மவுனமாகி விடுகின்றனர். பிள்ளைகளுக்காக உழைத்து களைத்து நள்ளிரவு வீடு திரும்பும் நமக்கும் உண்மை தெரிவதில்லை. பிள்ளைகள் கேட்கும் பணத்தை தண்டல் வாங்கியாவது தருவதோடு சரி!

செல்லில் எதை நள்ளிரவு தாண்டியும் பார்க்கின்றனர்?

காதலியுடன் பேசுபவர்கள் ஒரு வகை. அதிலும் ஒரு மாற்று பெஸ்டியுடன் பேசுவது. அதை தனியாக பின்னர் வேறு கட்டுரையில் பார்ப்போம். பெரும்பாலோர் இரவு கண்விழித்து செல்லில் நோண்டுவது நிச்சயமாக உருப்படியான எதையும் அல்ல. பெரும்பாலும் ஆபாச வக்கிரங்கள், வெறியேற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களைத்தான். இதில் நாம் குறுக்கிட்டு படுக்க சொன்னால் மூர்க்கமாகிறார்கள். நம்முடன் பேசுவதையும் குறைக்கிறார்கள். இரவில் தாமதமாகவே வீடு திரும்புகின்றனர். விலை உயர்ந்த பைக்தான் வேண்டும் என அடம்பிடித்து இரவு நேர ரேசில் இறங்குகின்றனர். வீலிங்கில் தொடங்கும் சாகசம் அநியாயமாக ரோட்டில் அடிபட்டுவிழுவதில் – சாவதில் முடிகிறது. இதற்கும் போதைக்கும், நுகர்வுவெறிக்கும் தொடர்பில்லையா? பைக்கில் வித்தை காட்டிய ”வலிமை” அஜீத் பதில் சொல்வாரா?

சென்னை உட்பட நள்ளிரவுகளில் பலாத்கார குற்றங்கள் பெருக எது அடிப்படை?

அப்பட்டமாக கோடீசுவரர்களின் பிள்ளைகளுக்காவும், IT மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கஸ்டமர்களின் பிசினஸ் பார்ட்டிகளுக்காவும் ECR ரோட்டிலுள்ள ரிசார்ட்கள் சனி, ஞாயிறு புக் செய்யப்படுகிறது. இவர்களின் தேவைக்காக மும்பை போன்ற ஊர்களிலிருந்து கூட விமானங்களில் வந்து சனி, ஞாயிறுகளில் தொழில் செய்து திரும்புகிறார்கள் கலைஞர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள். களைகட்டுகிறது இரவுக் கொண்டாட்டங்கள். இது சென்னையின் இளைஞர்களுக்கும் நன்றாக தெரியும்.

அதில் கலந்துகொள்ளும் வசதி, வேலை, தகுதி இல்லை என்று ஒதுக்கப்படுபவர்கள் எப்படி சிந்திக்கின்றனர்? 

இதில் கூத்தடிக்கும் சினிமா ஹீரோக்களின் குலக்கொழுந்துகளால் அதிகாலையில் சொகுசு காரால் நடக்கும் விபத்துகளும் நமக்கு தெரியும்தானே! எத்தனை ரிசாட்டுகளின் வாசலில் போலீசார் டிரைவர் வாயை ஊது என்று கடமையை செய்கின்றனர். இருப்பவன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நடைமுறையில் அரசுதான் கற்பிக்கிறது.

அப்பனின் அரசியல், அதிகார செல்வாக்கும், பரப்பப்படும் நுகர்வு வெறியும் எதுவும் தப்பில்லை என்று வரம்பு மீற தூண்டுகிறது. ஏற்றியிருக்கும் போதை பயத்தை விரட்டி துணிச்சலை தருகிறது. இதன் விளைவுதான் பொள்ளாச்சி வகையறாக்களின் வளர்ச்சிக்கு அடிப்படை! எனவே நாமும் வரம்பை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை மீறுவோம் என திசை மாற்றப்படுகின்றனர்.

இருப்பவர்கள் விதவிதமாக அனுபவிக்கிறார்கள்- நாம் எங்கே போவது என ஒரு கும்பல் சிந்தித்தால்?

வாழ்க்கையை மேட்டுக்குடி குலக்கொழுந்துகள்போல் அனுபவிக்கும் வாய்ப்பற்ற உதிரித்தொழிலாளிகளின் பிள்ளைகளும் நுகர்வு வெறிக்கு பலியானவர்களே. கோடீசுவரனுக்கு பிறக்காத போதைக்கு அடிமையான இளைஞர்கள்குழு, ஆபாச வக்கிரத்தையும் பார்த்து, கஞ்சாவையும் அடித்துவிட்டு தெருவுக்கு – ரோட்டுக்கு வருகிறது. இரவு பயணிக்கும் பெண்களில் கிடைத்தவர்களை கொண்டுபோய் சீரழிக்கிறது. தனது வாழ்க்கையையும் சேர்த்தே தொலைத்து அக்யூஸ்ட்டாக வளர்ச்சி பெறுகிறது.

சிறையிலாவது திருந்துவார்களா?

அங்குதான் தொழில்முறை கிரிமினலாக பயிற்சியே பெறுவார்கள். காசிருந்தால் கட்டிய பொண்டாட்டியை தவிர அனைத்தையும் சிறையில் கிரிமினல்கள் அனுபவிக்க முடியும். இதில் கஞ்சா மட்டும் விதிவிலக்கா என்ன? அங்குதான் முழு குற்றவாளிகளாக, பொருத்தமான குழுக்களின் கீழ் செயல்படுபவர்களாக வளர்கிறார்கள். கஞ்சாவும், பிறபோதைக்கும் அடிமையாகி, வெளியில் வந்தபின் அடியளாகி சீரழிவதும் தொடர்கிறது. இவர்கள் மேட்டுக்குடி, அரசியல், சினிமா, கார்ப்பரேட் துறையின் பெரும்புள்ளிகளின் அதிகாரபூர்வ அடியாட்களில் பத்தோடு பதினொன்றாக மாறுகின்றனர்.

போதையை தடுக்கவே முடியாதா?

மும்பையால் முடிந்ததா?, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் கற்றுத்தரும் ECR கலாச்சாரத்தை இந்த அரசால் தடுக்க முடியுமா? நாம் போதையிலிருந்து மீண்டால், நம் பிள்ளைகள் போதையில் ரோட்டில் அலைபவர்களாக இல்லாமல் வேலையின்மை பற்றி சிந்தித்தால், நாட்டை நாசப்படுத்தும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை – அதானி உலக அளவில் நான்காம் இடத்துக்கு ராக்கெட் வேகத்தில் போனதன் அடிப்படையை உணர்ந்தால் என்னவாகும்? எனவே நாம் சிந்திப்பதையும், போதையை தடுப்பதையும் ஆளும் வர்க்கம் விரும்பாது. இத்தொழிலில் கோடிகளை அள்ளும் அதிகார வர்க்கமும் விரும்பாது. அப்படியென்றால் அரசாங்கம் சொல்லி மாணவர்கள் எடுத்த உறுதிமொழியும் கின்னஸ் ரெக்கார்டும் காற்றோடுதான் போகுமா? காலம் பதில் சொல்லும்.

புதிய பிரிவால் வேலைக்காகுமா?

மேற்கு தொடர்ச்சி மலை, வடமாநிலங்கள் என சட்டபூர்வ / சட்டவிரோத கஞ்சா உற்பத்தியையும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அண்டை நாட்டில் உற்பத்தியாகி ராணுவத்துக்கு கப்பம் கட்டி வரும் அபினையும் அழிக்காமல் மாநிலங்களில் சில்லரை விற்பனையை மட்டும் தனித்து ஒழிக்க முடியாது! போதையை ஒழிப்பதற்கு மிகப்பெரும் வலைப்பின்னலை எதிர்க்கும் துணிவு வேண்டும். பல லட்சம்கோடி புழங்கும் உள்நாட்டு சந்தையையும், வட இந்தியாவில் இருந்து நமக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும், இலங்கைக்கும் செல்லும் வர்த்தகத்தை இடைமறிக்கும் துணிவு வேண்டும். அத்தகைய மக்கள் நல அரசு, நேர்மையான அதிகாரிகள், இந்த புதுப்பிரிவில் உள்ளனரா என்பதை முதல்வர்தான் நிரூபித்து காட்ட வேண்டும்.

அடிமையானவர்களை என்ன செய்யலாம்?

சிறையிலா போட முடியும்? அங்குதான் கஞ்சா கிடைக்குமே! போதையிலிருந்து மீட்பு, மறுவாழ்வு மையங்களில் வைத்து உரிய சிகிச்சையில்லாமல் இது சாத்தியமா? அரசே டாஸ்மாக்கில் போதையை சப்ளை செய்துகொண்டு கஞ்சா, பிரவுன்சுகர், அபினை மட்டும் தடுத்துவிட்டால் போதுமா? தமிழக அரசு இதை பரிசீலித்து உரிய மேல்நடவடிக்கை எடுக்கும்போது விடியல் வரும் என்பதை ஏற்கலாம். ஆனால் அரசு எப்படி நடந்துகொள்கிறது?

ஸ்ரீமதி வழக்கு எப்படி போகிறது?

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியின் போதை பார்ட்டி பற்றி பேச்சே இல்லை. ஒரு மாணவியின் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட மரணம் பற்றி கவலையும் இல்லை. காவிகளின் மாடலில் நடத்தப்பட்ட கலவரமும், தீவைப்பும் – பஸ்ஸும் சர்டிபிகேட்டும் எரிந்ததும்தான் முன்நிறுத்தப்படுகிறது. சட்டப்படி அங்கு இருந்தது பெண்கள் ஹாஸ்டலே அல்ல. போதை பார்ட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிறுமிகளின் தங்குமிடம் மட்டுமே. இந்த கோணத்தில் விசாரணை, கைது, தேடுதல் வேட்டையா நடக்கிறது? இதையெல்லாம் தட்டிக்கேட்கும் அமைப்புகளையே குற்றவாளியாக்கி வழக்கு போட்டு அச்சுருத்தும் வேலைதான் வெளிப்படுகிறது. இதில் போதையில்லா தமிழ்நாடு எப்படி சாத்தியம் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here