2026 ஆண்டுக்கான ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டின் ஏமாற்று வார்த்தை ஜாலங்களைப் புரிந்து கொள்ள கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததையும் நடைமுறையில் செய்ததையும் ஒப்பீட்டால் எளிதாக இருக்கும்.

நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்றவற்றிற்காக ஒன்றிய அரசால் செலவு செய்யப்படும் தொகையை பாசிச மோடி அரசு  சென்ற ஆண்டு மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டது. இந்த இனங்களுக்கான செலவுகளுக்கு என்று பட்ஜெட்டில்  ஒரு தொகையை அறிவித்துவிட்டு பிறகு அந்த தொகையை திருத்திய மதிப்பீடு என்ற பெயரில் மிகவும் குறைத்து விடுகிறார்கள் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

சுகாதாரத்திற்கு என 98,311 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கி விட்டு பிறகு அதை  94,651 கோடியாக குறைத்து விட்டார்கள்.ஊரக வளர்ச்சிக் என்று சென்ற ஆண்டு பட்ஜெட்டில் 2,65,817 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டு பிறகு அதை 2,12,750 கோடி ரூபாய் என்று அளவிற்கு  குறைத்து விட்டார்கள்.

பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக என்று உள்ள ஏகலைவா பள்ளிக்கு சென்ற ஆண்டு பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டு அதை ஆண்டின் இடையில் (திருத்திய மதிப்பீடு என்ற பெயரில்) வெறும் 5 கோடி ரூபாயாக குறைத்து விட்டார்கள். அதே போல, நாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் என்று கூறப்படும் ஜல் ஜீவன் திட்டத்திற்காக சென்ற ஆண்டு பட்ஜெட்டில் 67,000 கோடி ரூபாயை ஒதுக்கி விட்டு பிறகு அதை 17,000 கோடி ரூபாயாக குறைத்து விட்டார்கள்.

பாசிச பாஜக அரசு கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, ஜல்ஜீவன் (குடிநீர் திட்டம்) போன்றவற்றிற்கு அதாவது மக்கள் நலத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் “அவ்வளவு செலவு செய்ய உள்ளோம் இவ்வளவு செலவு செய்ய உள்ளோம்” என்று என்ன சொன்னாலும் அந்த அளவிற்கு செலவு செய்ய மாட்டார்கள் என்பதற்கு கடந்த ஆண்டு இவர்கள் செய்தது ஒரு எடுத்துக்காட்டு.

நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை கொடுப்பதற்கான நிதியை பாசிச பாஜக அரசு கடந்த ஆண்டு பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டது. பாசிச பாஜகவின் இந்த அலட்சியத்தால் கடந்த டிசம்பர் 2025 ல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததன் காரணமாக 25 பேர் இறந்துள்ளனர். மேலும் பல பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் அதாவது ஜனவரி 2026 இல் மேலும் 22 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மத்தியிலும் மத்திய பிரதேச மாநிலத்திலும் பாசிச பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. அதாவது “டபுள் இன்ஜின்” சர்க்கார் தான் அங்கு உள்ளது. அப்படி இருந்தும் அம்மாநில மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கூட கிடைக்காத நிலைதான் உள்ளது.

கிராமப்புற ஏழை மக்களுக்கு  முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை விபி – ஜி ராம் ஜி திட்டம் என்று மாற்றி இனி  வருடத்திற்கு 125 நாள் வேலை கொடுக்கப் போவதாக பாசிச  பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால் இந்தத் திட்டத்திற்கு என்று இந்த பட்ஜெட்டில் வெறும் 95,000 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தில், கடந்த ஆண்டுகளில், பாசிச பாஜக அரசு ஒரு ஆண்டிற்கு நூறு நாள் வேலையை கொடுத்ததே இல்லை.  இனிவரும் ஆண்டுகளில் இந்தத் திட்டத்தையே விபி – ஜி ராம் ஜி  திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்காகத்தான் பாசிச பாஜக அரசு வேலை செய்து கொண்டிருப்பதையே இந்தத் திட்டத்திற்கான இப்போதைய நிதி ஒதுக்கீடு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

படிக்க:

♦   ஒன்றிய அரசின் பட்ஜெட்: விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்!   

 மோடி அரசின் பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்களுக்கு கறி விருந்து! உழைக்கும் மக்களின் கோவணத்துக்கும் ஆப்பு!

நாட்டின் இயற்கை செல்வங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு பாசிச பாஜக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். அந்த வகையில், இப்பொழுது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள கனிம வனங்களை கார்ப்பரேட்டுகள் அள்ளிச் சென்று கொள்ளை இலாபம் அடிப்பதற்காக பிரத்தியேகமாக அறிய தாதுமண் பெருவழித்தடங்களை (Tamil Nadu–Odisha Mineral/Rare Earth Corridor) அமைக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு 7,280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சுமார் 80,000 கோடி ரூபாய் அளவிற்கான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று செலவு செய்ய உள்ளதாக பாசிச மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்து அவர்களின் சொத்து மதிப்பை பாசிச பாஜக உயர்த்த உள்ளது.

இந்தியாவில் ஓடும் ரயில்களில் ஏராளமான ஏசி பெட்டிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும் உள்ள நிலையில் வெறும் நான்கு, ஐந்து பெட்டிகள் மட்டுமே முன் பதிவு செய்யாத பெட்டிகள் உள்ளன. இதன் காரணமாக ரயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில்  ஆடு மாடுகளை போல நெருக்கியடித்துக் கொண்டு மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாத மோடி அரசு பணக்காரர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் வந்தே பாரத் ரயில் போன்ற ரயில்களை விடுவதில் அக்கறை காட்டி வருகிறது.

இப்பொழுது புதிதாக 7 வழித்தடத்தில் புல்லட் ரயிலை விடப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் விடுவதற்கான பணிகள் 2017 ஆம்  ஆண்டு தொடங்கப்பட்டு  நடைபெற்று வரும் நிலையில் இன்னும் அந்த புல்லட் ரயில் விடப்படவே இல்லை. 2029 ஆம் ஆண்டு தான் அந்த புல்லட் ரயில் ஓடும் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், “4000 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏழு அதிவேக ரயில் தடத்தை அமைக்க உள்ளதாகவும். அதில் சென்னை – பெங்களூர்; சென்னை – ஹைதராபாத் வழித்தடமும் உண்டு” என்றும்  “தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான் இரண்டு புல்லட் ட்ரெயின்களை மோடி கொடுத்திருக்கிறார்” என்றும் சங்கிகள் மோடியின் புகழ்பாடிக்  கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுப்பதாக அறிவித்த மோடி இன்னும் அதை செய்து முடிக்காமல் இழுத்தடித்து வருவதை நினைவில் வைத்திருக்கும் தமிழர்கள் எவரும் இந்த புல்லட் ரயில் கதையை நம்ப மாட்டார்கள் என்பது உறுதி.

பொதுவாக கதை சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதை “கரடி விடுவது” என்று மக்கள் கூறுவார்கள். அதேபோல இப்பொழுது மக்களை ஏமாற்றுவதற்காக சங்கிகள் இப்பொழுது புல்லட் ரயில் கதையை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக – அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினரருக்கு இந்த பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதே சமயத்தில் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானத்தை, சொத்து மதிப்பை பெருக்குவதற்கான  திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய அரசிற்கு வரும் மொத்த வருவாயை 100 % என்று எடுத்துக் கொள்வோம். அதில் ஜி எஸ் டி மற்றும் பிற வரிகள் மூலமாக மட்டும் 15% வருமானத்தை ஒன்றிய அரசு பிழிந்து எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த நாட்டையே கொள்ளை அடித்து உலக பணக்காரர்கள் வரிசையில் இருந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளிடம்  இருந்து இந்திய அரசு தனது மொத்த வருமானத்தில் வசூலிக்கப் போகும் தொகை வெறும் 18% என்ற அளவிற்கு மட்டுமே இருக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய அரசு 100 ரூபாய் வருமானம் ஈட்ட இருக்கிறது என்றால் அதில் 15 ரூபாயை சாதாரண ஏழை நடுத்தர மக்களிடமிருந்து வசூலிக்கையில் நாட்டை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகள் இடம் இருந்து வெறும் 18 ரூபாய் மட்டுமே வசூலிக்க போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க:

 ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.

ஒவ்வொரு ஆண்டும் தங்களது சேமிப்பையும் சொத்து மதிப்பை இழந்து வரும் ஏழைகள் இடமிருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக செலவு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

இதன் காரணமாகத்தான் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக உள்ள 10% பேரிடம்  இந்தியாவின் மொத்த வருவாயில் 58% செல்கிறது. ஆனால் இந்தியாவில் அடித்தட்டில் 50% உள்ள சாதாரண மக்கள் இந்தியாவின் வருமானத்தில் வெறும் 15% மட்டுமே பெறுகிறார்கள்.

இப்படி இந்திய மக்களின் உழைப்பை பெரும் பணக்காரர்கள் சுரண்டி கொழுப்பால் தான் வெறும் 10% ஆக  உள்ள இவர்கள் நாட்டின் உள்ள சொத்தில் 65% ஐ வாரிச் சுருட்டிக் கொண்டு விட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிகவும் உயர்நிலையில் உள்ள 1% பணக்காரர்கள் இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில் 40% ஐ கொள்ளையடித்து சேர்த்து இருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றி மேம்பட்ட நல அரசை உருவாக்க பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து‌ தூக்கியெறிய வேண்டும். புதிய தாராளமய கொள்கைகளுக்கு மாற்றான பொருளாதார கொள்கைகளைக் கொண்ட ஜனநாயகக் கூட்டரசை கட்டமைக்க வேண்டும்.

  •  குமரன்

2 COMMENTS

  1. மேலே செல்லப்பட்டுள்ள விவரம் பிழையாக உள்ளது…

    சென்ற ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு 1,28,650 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் அதை ஆண்டின் இடையில் (திருத்திய மதிப்பீடு) 1,29, 949 கோடி ரூபாயாக குறைத்து விட்டார்கள்…

    குறைத்து விட்டார்கள் என்று கூறிவிட்டு
    தொகையின் மதிப்பு உயர்த்தி காட்டப்பட்டுள்ளது..
    இதை சரிபார்க்கவும்

  2. 2026 பட்ஜெட் கரடி விடும் ஒன்றிய மோடி அரசு!

    இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மருத்துவ வசதி இலவச கல்வி ரயில் போக்குவரத்து ஏதுமின்றி வெற்று பட்ஜெட்டாக அமைந்துள்ளது குறிப்பாக கார்ப்பரேட் நலன் சார்ந்த பட்ஜெட் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று அந்த பணத்தை கார்ப்பரேட் நலன்களுக்காக செலவிடும் ஒரு பட்ஜெட் ஆகத்தான் இந்த பட்ஜெட் இருக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது ஒடிசா முதல் தமிழ்நாடு வரை நீண்ட கப்பல் வழித்தடம் அமைக்கும் 7 2 80 கோடியில் அமைக்கப்படும் நீர் போக்குவரத்து கப்பல் வழித்தடம் கார்ப்பரேட் முதலாளிகளின் சரக்குகளை மலிவாக ஏற்றிச் செல்ல இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது இந்தத் திட்டம் எள்ளளவும் ஏழைகளுக்கு பயன்படாது என புரிந்து கொள்ள முடிகிறது. 100 நாள் வேலை திட்டம் மோடி அரசு ஒழித்துக் கட்ட முயற்சித்து வருகிறது மேற்கண்ட விவரங்களை இந்த கட்டுரையில் புரிந்து கொள்ள முடிகிறது.
    கட்டுரை ஆசிரியர் குமரன் அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here