மோடி அரசின் பட்ஜெட்:
கார்ப்பரேட்டுக்களுக்கு கறி விருந்து!
உழைக்கும் மக்களின் கோவணத்துக்கும் ஆப்பு!


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்று அரசுக்கான இலக்கணத்தை இரண்டே வரிகளில் கூறினார் வள்ளுவர். ஆனால், நேற்று 91 நிமிடங்களில் இரண்டாயிரம் வரிகள் படித்த பிறகும், அரசுக்கான இலக்கணம் ஏதுமின்றி பட்ஜெட் தாக்கல் செய்தார் நமது நாட்டின் நிதி அமைச்சர். இந்த பட்ஜெட்டால் நாடு தலைகீழாக மாறப் போகிறது. மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டு அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது என டாம்பீகமாக அறிவிக்கப்பட்டு ஊதிப் பெருக்கப்பட்ட பட்ஜெட், மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை ஏமாற்றமாக்கி விட்டு, வழக்கம் போல கார்ப்பரேட் முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் பட்ஜெட்டாகவே இருந்தது

2020-21 கொரோனா பேரிடர் காலத்தில் தொழில்கள் முடங்கிய சூழலிலும், வேலைவாய்ப்புக்களின்றி மக்கள் வறுமை – பட்டினியில் உழன்று கொண்டிருந்த நேரத்திலும், மக்கள் பிணங்கள் சுடுகாடுகளில் எரியூட்ட வரிசைகட்டி நின்ற சூழலிலும் இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39% உயர்ந்து 142 பேராக அதிகரித்தனர். அந்த ஆண்டில் அவர்களது சொத்து மதிப்பு மட்டும் 53 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்தது. இதில் 98 கோடீஸ்வரர்கள் நாட்டில் உள்ள 55.5 கோடி மக்களின் சொத்துக்கு இணையான சொத்துக்களை வைத்துள்ளனர் என்கிறது ஸ்காட்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை.

அதே காலத்தில் நமது நாட்டில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் தொகை 13.4 கோடியிலிருந்து 18 கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 53 சதமாகும். அதாவது உலகம் முழுதும் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டோரில் பாதிப்பேருக்கும் மேல் இந்தியர்கள். இப்படி நாட்டின் உழைக்கும் மக்கள் பஞ்சைப் பராரிகளாக வாழும் நாட்டில் போடப்பட்ட பட்ஜெட்டில் அவர்களைக் கைதூக்கி விடுவதற்கான உருப்படியான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

நாடாளுமன்றத்தில் ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் வாசிப்பில், நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 5,25,166.15 கோடி – நுகர்வோர் நலத்துறைக்கு 2,17,684.46 கோடி – சாலைப்போக்குவரத்து துறைக்கு 1,99,107.71 கோடி – உள்துறைக்கு 1,85,776.71  கோடி, – ரயில்வே துறைக்கு 1,40,376.13 கோடி, – ஊரக வளர்ச்சித் துறைக்கு 1,38,203.63 கோடி – விவசாயம் நல்வாழ்வுத் துறைக்கு 1,32,513.62 கோடி – ரசாயனம் மற்றும் உரத்திற்கு 1,07,715.38 கோடி – தொலை தொடர்புத் துறைக்கு 1,05,406.82 கோடி என பல்வேறு அறிவிப்புக்கள் வந்த வண்ணம் இருந்தது.

ஆனால், ஒதுக்கீடுகளுக்கு எல்லாம் எப்படி வருவாய் ஈட்டுவது பற்றிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை. இதில், இந்த ஆண்டின் மொத்த செலவு 39.45 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான வருவாய் வளங்கள், 22.84 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார், நிர்மலா சீத்தாராமன். இந்த வரவு மற்றும் செலவுகளுக்கு இடையில் உள்ள பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடன் வாங்கி ஈடுகட்டப்படும் என்கிறார். அதற்கான முன்னறிவிப்பாக எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பதாக பட்ஜெட் உரையிலேயே அறிவித்துள்ளார். இவற்றைச் செயல்படுத்த தேசிய பணமாக்கல் திட்டம் (NATIONAL MONEYTISATION PIPELINE – NMP) என்ற திட்டத்தையே உருவாக்கி செயல்படுத்தி வருகிறது மோடி கும்பல்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் சூழலில் கூட, ஐந்து ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக நாட்டை உயர்த்தப் போவதாக மோடி சொன்னது எல்லாம் வெற்றுச் சவடால் என்பது நிரூபணமாகிய நிலையில், இப்போதும் எந்த கூச்ச நாச்சமும் இன்றி இது அடுத்த 25 வருடத்திற்கான முன்னோடி பட்ஜெட் என்று பீற்றிக் கொள்கிறார் நிர்மலா சீத்தாராமன்.

ஆனால், இந்த ஆண்டுக்கான திட்டங்களைப் பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. கிராமங்களுக்கு இணைய வசதி, 25000 கி.மீ நெடுஞ்சாலை, 22,000 கி.மீ. ரயில் தடங்கள், 200 வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட ரயில்வே கட்டமைப்பு, கார்கோ டெர்மினல்கள் உள்ளிட்ட உள்கட்டுமானங்கள் அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அறிவிப்புக்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே பற்றாக்குறை இருக்கும் நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டமாக அறிவித்துள்ளது என்பதே மீண்டும் மக்களை ஏமாற்றும் மோசடி வேலை தான்.

அதே போல், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புக்களை உருவாக்கப் போவதாகச் சொல்லி பதவிக்கு வந்த மோடி கும்பல், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களால், 20 கோடி பேரை வேலையிலிருந்து விரட்டியுள்ளது. மேலும் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் காரணமாகவும், அடுத்தடுத்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், 2020 – 21 ஓராண்டு காலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5 கோடி பேர் வேலையின்மையால் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர் என்கிறது, இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் (The Centre for Monitoring Indian Economy – CMIE) என்கிற ஆய்வு நிறுவனம்.

இப்படி வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கான திட்டங்கள் பற்றியோ, வேலையற்றோரைப் பட்டினியிலிருந்து மீட்பதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை. அடித்தட்டு ஏழை மக்களுக்கு மட்டுமல்லாது, ஆண்டு தோறும் பட்ஜெட் அறிவிப்பை ஆவலாக எதிர்பார்க்கும் மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டது. 1.5 லட்சம் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பிலிருந்து வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் பணமாற்ற வசதியை ஏற்படுத்துவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களின் தபால் சேமிப்பையும் வங்கிகளுக்கு மடை மாற்றி களவாடுவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது மோடி கும்பல்.

பட்ஜெட்டில் ஓராண்டுக்கும் மேலாக போராடிய விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்திரவாதம் தரப்படாத சூழலில், கூலி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதமளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது. ஆண்டுக்கு 100 நாள் வேலைக்கு ஊதியமாக 2,64,000 கோடி தேவைப்படும் சூழலில், அதற்கான ஒதுக்கீட்டை 98,000 கோடியிலிருந்து 73000 கோடியாக குறைத்து ஏழை கூலி விவசாயிகள் வாழ்விலும் மண்ணைப் போட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் மானியங்கள் 35% வரை வெட்டி இடுப்பில் உள்ள கோவணத்தையும் உருவுகிறார் மோடி. மறுபுறம், இந்த பட்ஜெட் அறிவிப்பால் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலை உயரும். அதனால், விவசாயத்திற்கு ஆகும் செலவுகள் கூடும். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உத்திரவாதம் இல்லாத நிலையில் ஏற்கனவே கடனாளியாக இருக்கும் விவசாயிகள் மேலும் கடன் வாங்கி போண்டியாவார்கள். இப்படி ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாற்றப்படும் நிலையில் அவர்களிடமிருந்து ஒட்ட ஒட்ட உறிஞ்சப்படும் ஜி.எஸ்.டி, ஜனவரி மாதத்தில் 1,38,364 கோடி குவிந்துள்ளதாக குதூகலமாகக் கொண்டாடுகிறது பாசிச மோடி கும்பல்.

3.5 million new enrolments under MGNREGA, as 'distressed' workers return to villages | Latest News India - Hindustan Times

மேலும், ஆன் லைன் வழிக்கல்வி திறன் மேம்பாட்டுப் பயிற்சி, 200 கல்வி தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வதோடு, ஆசிரியர் பணியையே ஒழிக்கவும் முயற்சிக்கிறது.

இப்படி, தொழில் துறையில், விவசாயத்தில், கல்வியில் என அனைத்து துறையிலும் மக்கள்  நலன்களுக்கு மாறாக பட்ஜெட் அறிவிப்புக்கள் இருக்கின்ற அதே வேளையில், நாடு முழுதும் சாலை வசதிகள் மற்றும் ரயில்வே கட்டமைப்புக்கள், சரக்கு முனையங்களை ஏற்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட்டுக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை வேகமாக எடுத்துச் செல்வதற்கான உள்கட்டுமானங்களை மக்கள் பணத்திலேயே செய்து கொடுக்கிறது

மக்கள் நலத் திட்டங்களுக்காக வருவாயைப் பெருக்குவது என்ற பெயரில் லாபத்தில் இயங்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறது மோடி அரசு. ஆனால், அந்த நிறுவனத்தை விற்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை மறு முதலீடு (CAPITAL EXPENDITURE) என்று பெயர் மாற்றி ஏய்க்கிறது. இதற்கு முன்னர் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடனை அவர்கள் கட்டமுடியாத நிலையில், அதை வாராக்கடன் என்று சொல்லாமல் செலவிடப்படாத சொத்து (NON PERFORMING ASSET) என்று  சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டது தனிக்கதை. இப்படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் பயன்பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி 12%-லிருந்து 7%-மாக குறைத்து கறி விருந்து படையல் வைத்துள்ளது மோடி கும்பல்.

இந்தியாவின் முதல் 10 இடத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் நாளொன்றுக்கு 8 கோடி செலவு செய்தால் கூட அவர்களின் சொத்து முழுவதையும் செலவு செய்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். அவர்களின் சொத்துக்கள் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில் செலவை 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளலாம். இந்தியாவின் கோடீஸ்வரர்களுக்கு 1% சொத்துவரி விதித்தால், அதன் மூலமே கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முதலீடு செய்திட முடியும்.

மொத்தத்தில் நாட்டில் பற்றி எறியும் பிரச்சினைகளுக்கு இந்த பட்ஜெட்டின் எந்த இடத்திலும் எந்த ஒரு தீர்வும் சொல்லப்படவில்லை. கார்ப்பரேட்டுக்களுக்கு மக்கள் சொத்தை விற்பது, அந்த சொத்தை வாங்க மக்கள் பணத்தையே கடனாக வழங்குவது, அதன் பிறகும், வாராக்கடனாக தள்ளுபடி செய்து அதையும் மக்கள் தலையிலேயே கட்டுவது என்பதைத் தான் வளர்ச்சி என்று கூப்பாடு போடுகிறது மோடி கும்பல்.

கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக வானரக் கூட்டத்திடம் நாடு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வானரத்தின் வாலில் தீப்பிடித்த கதையாக ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. நாட்டில் அது கால் பதித்த இடமெல்லாம் பற்றி எறிகிறது. இனியும் நாம் தாமதித்தோமானால், அந்தத் தீயில் நாமும் எரிந்து சாம்பலாக வேண்டியது தான். அதற்கு இந்த பட்ஜெட் ஒரு சிறந்த உதாரணம்.

வானரத்தின் வாலை அறுப்பதும், தீயிலிருந்து நாட்டைக் காப்பதும் மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

  • தயாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here