மோடியின் ஏழரை ஆண்டு கால ஆட்சி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஓட்டாண்டியாக்கி அலைய வைத்திருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. எனத் தொடங்கி, உழைக்கும் மக்கள் பிரிவினரின் ஒவ்வொரு பிரிவு மக்களின் வாழ்க்கையையும், அவர்களது உயிர் வாழும் உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக பறித்து வருகிறது. மோடியின் இந்த கேடுகெட்ட ஆட்சிக்கு எதிராகப் போராடும் மக்களை நாட்டின் விரோதிகள், ’நகர்ப்புற நக்சல்கள்’ என்று அவதூறு செய்து சிறையில் அடைத்தும் NSA, UAPA மூலமும் ஒடுக்கி வருகிறது.
தனது நாடாளுமன்ற பெரும்பான்மை மிருக பலத்தைக் கொண்டு, தொடர்ச்சியாகவும் விவாதங்கள் ஏதுமின்றியும் பல்வேறு மக்கள் விரோத கொடுஞ்சட்டங்களை இயற்றி வருகிறது. ஆகஸ்ட் 13 வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மருத்துவம், மின்சாரம், தொழில்நுட்பம், மீன்வளம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவை தொடர்பான 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களும், 5 அவசரச் சட்டங்களும் நிறைவேற்றப்பட இருந்தன. இதில், மீன்வளம் தொடர்பான, இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021 -ம் நிறைவேற்றப்பட இருந்தது. விவாதங்கள் இன்றி மசோதாக்கள் அனைத்தையும் நிறைவேற்றும் திட்டத்தில் இரண்டு நாட்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை முடக்கியதால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாட்டிலுள்ள பெருமளவிலான பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிடும் நிலையை உருவாகும் வகையில் பல்வேறு கொடுமையான அம்சங்கள் நிறைந்ததாகும்.
ஏற்கனவே நாட்டின் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய சட்டங்கள் செல்லுபடியாகாத அன்னியப் பிரதேசங்களாக உருவாகியுள்ளது. அதே போல், கடற்கரையோர பகுதிகளும், கடல் வளமும் மூன்றாக கூறுபோடப்படுகிறது இம்மசோதா. கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரை பிராந்திய கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என வரையறுக்கிறது.

இதில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்திய பகுதியான 12 கடல் மைல் தொலைவு வரையில் மட்டுமே நாட்டுப் படகு, விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும். 12 முதல் 200 கடல் மைல் வரையிலான கடற்பகுதியில், மத்திய அரசின் கடற்படை அதிகாரிகளிடம் கட்டணம் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெற வணிகக் கப்பல் சட்டம் 1958-இன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். உரிமம் பெற்ற ஓட்டுநர் ஒருவரும் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் மீன்பிடிக் கலத்தில் இருந்தால் மட்டுமே பதிவுக்கு விண்ணப்பிக்க முடியும் என நீள்கிறது விதிமுறைகள். ஒவ்வொரு முறையின் போதும் புதிதாக உரிமம் கோர வேண்டும் என்கிறது ஒரு விதி. மேலும், மீன் பிடிக்கும் கடற்பரப்பை மட்டுமல்ல, மீன் பிடிக்கும் அளவினையும் நிர்ணயம் செய்கிறது மற்றொரு விதி. மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடி நேரம் நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளுக்கு மாற்றுகிறது இம்மசோதா.
இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலோ, மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தாலோ ரூ. 5 லட்சம் வரை அபராதம், சிறைத் தண்டனை மற்றும் மீன்பிடிக்க வாழ்நாள் தடை விதிப்பு என மீனவர்களைக் குற்றவாளியாக்குகிறது. இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுடன், மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ள சிறிய துறைமுகங்களையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மசோதாவும் நிறைவேற்றப்படுவதன் மூலம் கடல்சார் தொழில் முழுவதும் மத்திய அரசின் கைக்கு சென்றுவிடும்.
அதாவது, மீன்பிடி தொழிலை ஒட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது மோடி அரசு. பெரிய பெரிய நிறுவனங்களது வணிகக் கப்பல்களுடன் போட்டி போட்டு தான் இத்தொழிலில் நிற்க முடியும் என்பதால், ஒவ்வொரு விதியும் பாரம்பரிய மீனவர்களது மீன் பிடி உரிமையையே மறுக்கிறது. அதனால், அதை எதிர்த்துப் போராடுபவர்களை கடலில் இருந்தே அப்புறப்படுத்தும் வகையில் வாழ்நாள் தடையை விதித்து தண்டனையாக்குகிறது இம்மசோதா.

இந்தியா அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல் என முப்பகுதிகளிலும் கடலால் சூழப்பட்ட ஓர் தீபகற்பம். இந்தியாவின் கடற்கரை (Coastline) சுமார் 7,517 கி.மீ நீளமுடையது. 1,382 தீவுகளை உள்ளடக்கியிருக்கிறது. மேலும், இந்தியக் கடலில் 23 லட்சம் சதுர கி.மீ (2,305,143 sq.km) பரப்பளவு, சிறப்பு பொருளாதார மண்டலமாக (Exclusive Economic Zone (EEZ)) குறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்களில் 30% சதவிகிதம் பேர் கடலோரத்தில்தான் வாழ்கின்றனர். இந்தியாவிலுள்ள ஒன்பது கடலோர மாநிலங்களில், சுமார் 3,827 மீனவ கிராமங்கள் உள்ளன.
இவ்வளவு பெரிய கடற்பரப்பில், தமிழகத்திலிருந்து குஜராத் மாநிலம் வரையிலும், கேரளத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வரையும் பரந்து விரிந்த கடற்பரப்பில் மீன் பிடித்தால் தான் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருவாயையே மீனவர்களால் ஈட்ட முடியும் என்ற நிலையில், கழிவுகளால் நிரம்பியிருக்கும் ஆழம் குறைந்த கடலின் தொடக்க – கரையையொட்டிய பகுதிகளில் மட்டுமே மீன் பிடி அனுமதி என்றால், ஏறி வரும் டீசல் விலைக்குக் கூட பணம் ஈட்ட முடியாத நிலை மட்டுமே உருவாகும் என்கிறார்கள் மீனவர்கள். இந்திய கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பல்கள் வந்து மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் என கண் துடைப்புக்காக போடப்பட்டுள்ள அம்சத்தை தவிர, பெரும்பாலான அம்சங்கள் மீனவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளன.
இந்தியா மீன் உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஜி.டி.பி-யில் 1.7% சதவிகிதப் பங்கு மீன்பிடித் தொழிலில் உள்ளது. ஒன்றரைக் கோடி இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மிகப்பெரிய துறையாக இது விளங்குகிறது. மீன், மீன் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் மட்டும் ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் (தோராயமாக) அந்நியச் செலாவணியை தனது உயிரை பணயம் வைத்து ஈட்டித்தருகிறார்கள் இந்திய மீனவர்கள்
இவ்வளவு பெரிய துறையில், “மீனவர்கள் யார் என்ற வரையறை கூட இல்லை. அதன் மூலம், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் உட்பட அனைவரையும் மீனவராக்குகிறது இச்சட்டம், அதனால், தனியார் நிறுவனங்களின் பெரிய கப்பல்கள் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் மீன்பிடிக்க எளிதாக அனுமதி பெறும் ஏற்கனவே அண்டை நாட்டு எல்லைக்குள் சென்றால் கைது, சிறை என்பது சகஜமாக நடைபெறும்.
தற்போது உள்நாட்டு கடற்பரப்பிலேயே நடக்கும். சாலை வாகனங்களுக்கு வசூலிப்பது போல், கடலிலும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறையும், அதற்கான அனுமதி உள்ளிட்ட நடைமுறைகளும் நாடு முழுவதும் உள்ள கடலோர கிராமங்களிலிருந்து படகுகள், சிறுசிறு கப்பல்கள் மூலம் கடலுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மீனவர்களை இத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விடும். பாரம்பரிய மீனவர்களை அப்புறப்படுத்தி விட்டு என்றென்றும் வற்றாத வளம் கொண்ட கடல்வளத்தையும், அதன் வருவாயையும் கார்ப்பரேட்டுக்களுக்குத் தாரை வார்க்கிறது மோடி அரசு.
”ரிஸ்க்” என்ற வார்த்தையை தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இயற்கையோடு போராடுவதன் மூலம், உலகிற்கு உணர்த்துபவர்கள் மீனவர்கள். மழை வந்தாலோ, வெயிலடித்தாலோ ஒதுங்கி நிற்க முடியாமல், கடலின் ஓட்டத்திற்கு மிதந்து. அதன் அசைவுக்கும் ஏற்றபடி, பேலன்ஸ் செய்யும் உயிருக்கு உத்திரவாதமில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, நிலத்தில் வாழும் மக்களுக்கு சத்தான உணவைக் கொடுத்து சமூக ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றனர்.
எனவே, கடல்வளத்தைக் கார்ப்பரேட்டுக்களிலிருந்து மீட்கும் போராட்டத்தில் மீனவர்களோடு நிற்க வேண்டியது மீன் வாங்கி உண்ணும் உழைக்கும் மக்கள் அனைவரின் கடமையாகும். இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்த்து முறியடிக்க வேண்டும். ஏற்கனவே, தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு எதிரான சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஐ.ஏ. உள்ளிட்ட சட்டங்கள் மூலம் வாழும் உரிமையையும், போராடும் உரிமைகளையும் தடுத்து மக்களை ஒடுக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தையும் மக்கள் விரோத கார்ப்பரேட் அடிமைத்தனத்தையும், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களை ஓராண்டுக்கும் மேலாக பிணையில் கூட விடாமல் சிறையிலேயே வைத்து சித்திரவதை செய்து கொன்று வருகிறது.
இதன் மூலம், தங்களுக்கு எதிராகப் போராடக் கூடாது என்ற பயபீதியை மக்கள் மத்தியில் உருவாக்க எத்தணிக்கிறது. இந்த மக்கள் விரோத கார்ப்பரேட்டு அடிமைத்தனத்திற்கு ஒத்திசைவான வகையிலும், அதற்கு பலம் சேர்க்கும் வகையிலும் தனது மதவெறி நடவடிக்கைகள் மூலம் தலித்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள், பெண்கள் மீது பாலியல் வல்லுறவு, கும்பல் வன்முறைகள் மூலம் அச்சமூட்டியும் வருகிறது.
எனவே, இந்த கார்ப்பரேட்டு விசுவாசமும், காவி சித்தாந்தமும் கலந்த கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க, கடலும் கரையும் ஒன்று கலக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று பட்ட மக்கள் போராட்டங்கள் மூலம் மட்டுமே கடல் வளத்தையும், நில வளங்களையும் காக்க முடியும்.
சமர்வீரன்