ந்திய சமூக அமைப்பை நீண்ட காலமாக கவ்வியிருக்கும் சாதி, பார்ப்பன (இந்து) மதத்தின் கொடிய நோய்களில் ஒன்று. இந்த சாதி எப்படி தோன்றியது, உற்பத்தி முறைக்கும் அதற்கும் உள்ள உறவு என்ன என்பதை பற்றி தமிழகத்தில் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து எழுதி வந்துள்ளது. இந்திய அரசியலைத் தீர்மானிப்பதில் சாதி முக்கியமான பங்காற்றி வருகிறது என்பதை சமீபத்திய  2024 நாடாளுமன்ற தேர்தலும் நிரூபித்துள்ளது.

பார்ப்பன மற்றும் மேல் சாதிகள், பிற்படுத்தப்பட்ட மேல் சாதிகள் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய சமூக அமைப்பை பல்வேறு கூறுகளாக சிதைத்து, வர்க்க ஒற்றுமையை ஒழித்துக் கட்டிய பாசிச பாஜகவை தேர்தலில் ஆதரித்திருக்கிறார்கள் என்பது பல்வேறு தரவுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சொல்லிக் கொள்ளப்படும் பெரும்பான்மை சாதியினரை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டதன் மூலம்தான் பாசிச பாஜக தேர்தலில் இந்த அளவாவது  வெற்றி பெற்றுள்ளது.

நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்கள் வாழ்க்கைக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்கும், வெறியாட்டத்திற்கும் துணை போன பாசிச பாஜகவுக்கு அதே பாணியில் தனது அரசியலை கொண்டு செல்வதற்கு தேர்தலில் முடிவுகள் அதற்கு நம்பிக்கையூட்டி உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் பெரும்பான்மையினராக உள்ள வன்னியர்கள் மத்தியில் உருவான பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சாதிய, பிழைப்புவாத கும்பல் பாசிச பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது.

இந்தியாவின் ’ஜனநாயகம்’ என்பதே தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் தன்மை, அவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்களா இல்லையா, அவர்களின் வர்க்க பின்னணி அவர்கள் வெற்றி பெற்றால் யாருக்கு சேவை செய்வார்கள் என்பதை பற்றிய விவாதங்கள் போன்ற எதுவும் நடப்பதில்லை. வெறும் சின்னங்களை வைத்து வாக்குகளை பெறுவது என்ற அளவிலேயே ஜனநாயகம் கேடுகெட்ட வகையில் சீரழிந்துள்ளது.

வாக்காளர்களின் ஜனநாயகம் குறித்த இந்த அறியாமையை மூலதனமாக்கிக் கொண்டுள்ள தேர்தல் அரசியல் கட்சிகளில் பிரதானமான கட்சியான, ஜனநாயகத்தை துளியளவும் ஏற்றுக் கொள்ளாத, பாசிச வழிமுறையில் நாட்டை ஆள்வதற்கு துடித்துக் கொண்டிருக்கும் பாஜக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலமாக கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகம் வாக்குகளை பெற்று சுமார் 11.3% வாக்குகளை பெற்றுள்ளதாக ஊடகங்களின் மூலம் பீற்றிக் கொண்டுள்ளது.

தர்மபுரி போன்ற தொகுதிகளில் மக்களுக்கு சிறிதும் பரிச்சயமில்லாத, வாரிசு அரசியலின் முகமாக, ’சின்னவரின்’ மனைவியான சௌமியா அன்புமணி முன்னிறுத்தப்பட்டார் என்பதும் அவர் 4,08,173 வாக்குகளை பெற்றுள்ளார் என்பதும் சாதிய உணர்வுகளுக்கும், அரசியலுக்கும் உள்ள உறவை துலக்கமாக நமக்கு வெளிப்படுத்துகிறது.

பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றோம் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மேல்சாதியினர் தங்களை நிறுவனமயமாக்கிக் கொள்வதும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தங்களது பிரதிநிதிகளை முன்னிறுத்தி அரசியல் நடத்துவதும், அந்த சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் உள்ள சாதிய, பிழைப்புவாத கண்ணோட்டத்தை தூண்டிவிட்டும் குளிர்காய்ந்து வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் ராஜபுத்திரர்கள், கர்நாடகத்தில் லிங்காயத்துகள், அரியானா மற்றும் பஞ்சாபில் ஜாட் சாதியினர், மேற்கு வங்கத்தில் பட்டாச்சாரியா போன்ற சாதியினர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ராவ், நாயுடு, ரெட்டி போன்ற சாதிகள் தமிழகத்தில் கொங்கு கவுண்டர்கள், நாடார்கள், பார்ப்பனர்கள் போன்ற சாதிகளை திட்டமிட்டு ஊக்குவித்ததன் அடிப்படையில் பாஜக தனது அடித்தளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சித்தது.

தேர்தலுக்கு முன்பாக தமிழக பார்ப்பனர் சங்கம் பாஜகவை ஆதரிக்க வேண்டும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே தனது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. பிற சாதிகளிலும் ரகசிய கூட்டங்களின் மூலமாக பாஜகவிற்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

இத்தகைய ஆதிக்க சாதிகளின், பார்ப்பன, மேல் சாதிகளின் அடித்தளத்தில் நின்று கொண்டு தான் காவி பாசிசத்தை ஏவுவதற்கு பாஜக துணிச்சலாக செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதே சமயத்தில் அதிமுக தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், பாசிச பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று விடுமா, அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்வது ஏன் என்றெல்லாம் விவாதங்களை துவக்கி விட்டன ஊடக விபச்சார கும்பல்.

90களில் உருவாக்கப்பட்ட அடையாள அரசியல் முக்கியமாக பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஆதிக்க சாதி கட்சிகளை உருவாக்கியது என்பது மட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலிலும் பிற கட்சிகளின் மீது குதிரை சவாரி செய்வது, ஓட்டு பெறுவதற்காக அவர்களுடன் கூட்டு சேர்வது, தனது சாதியை காட்டி ஓட்டு வங்கியை முன்னிறுத்தி தனது சொந்த லாபத்திற்காக சொந்த சாதியினரையே பலியிடுவது, தான்மட்டும் சுகபோகமாக, உல்லாச ஊதாரி வாழ்க்கையில் திளைப்பது போன்றவற்றை தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வழிமுறையாகவே கையாண்டு வருகிறது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடார்களின் சார்பில் வாக்கு வங்கிகளை பெறுவதற்கு அலைந்து கொண்டிருந்த சினிமா நடிகர் திருவாளர் சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை பாசிச பாஜகவில் இணைத்துக் கொண்டு செட்டிலானதைப் போல பாட்டாளி மக்கள் கட்சி அவ்வளவு சீக்கிரத்தில் செட்டில் ஆகாது. ஏனென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் பச்சோந்திகளைப் போல மாம்பழ சின்னத்தை முன்வைத்து ஓட்டுக்களை பொறுக்குவதும் அதையே மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் கல்லா கட்டுவதையே தொழிலாக கொண்டு செயல்படுகிறது ’திண்டிவனம் மருத்துவர்’ குடும்பம்.

படிக்க:

♦ தலித் குடும்பத்தின் பணத்தை ஏமாற்றிப்பறித்த மோடி-அதானி கொள்ளைக் கும்பல்!

♦ பாசிச மோடியை மீண்டும் பதவியில் அமர்த்தத்துடிப்பவர் யார்?

தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு குதித்துக் கொண்டுள்ள இந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் முடிந்த பிறகு மக்களை சந்திப்பது மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதோ கிடையாது! அப்படி மக்கள் பிரச்சனைகள் என்று அவர்கள் கருதுவது எதையென்றால் ஆதிக்க சாதியினரின் பிற்போக்குத்தனமான ஒடுக்கு முறைகளை ஆதரிப்பது, பட்டியலின மக்களின் கோவில் வழிபாட்டு உரிமைகளை தடுப்பது, சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதியினரை ஆணவ படுகொலைகளுக்கு உட்படுத்துவது போன்ற கேடுகெட்ட அரசியலை நடத்துவது தான்.

இந்தப் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கடைந்தெடுத்த பிழைப்புவாத, சாதிய கும்பலை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள் முன்னிலையில் நின்றார்கள் என்பதும், வாழ்நாள் முழுவதும் சாதிய, பிழைப்புவாத கண்ணோட்டத்தில் இருந்து விலகி புரட்சியாளராக வாழ்ந்து மடிவது என்ற அற்புதமான வாழ்க்கையில் இருந்து விலகி, வயதான காலகட்டத்தில் சாதிய கண்ணோட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்ற மாஜி புரட்சியாளர்கள் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான சாதிய பிழைப்புவாதிகளுக்கு ஊக்க மருந்தாகவும், ஊன்று கோலாகவும் இருக்கிறார்கள் என்பது தான் இந்திய சமூகத்தின் கேடுகெட்ட அவல நிலைமை.

சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற ஆதிக்க சாதி அமைப்புகள், சாதி வெறி கட்சிகள் ஆகியவற்றை தடை செய்ய கோரி போராடுவதும், இவர்களின் பின்புலத்திலிருந்து பாசிச பயங்கரவாதத்தை குறிப்பாக காவி பாசிசத்தை இந்தியாவின் மீது திணிப்பதற்கு வெறித்தனமாக அலைந்து கொண்டிருக்கும் பாசிச பாஜகவை முறியடிப்பதற்கு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here