காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் கர்நாடக அரசு, அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
காவிரி நீர் சிக்கலால் தமிழகத்தின் டெல்டா பாசன பகுதிகளில் முப்போகம் விளைகின்ற நிலைமை படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு தற்போது ஒரு போக விளைச்சல் என்ற அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 47.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதல் சுமார் 40 % காவிரி டெல்டா மாவட்டங்களில் தான் நெல் உற்பத்தியாகிறது. ஜூன் முதலான குறுவை சாகுபடி சுமார் 3.20 லட்சம் ஏக்கரும், ஆகஸ்டு முதலான சம்பா சாகுபடி 11.5 லட்சம் ஏக்கரிலும்,செப்டம்பர் முதலான தாளடி சாகுபடி சுமார் 3 லட்சம் ஏக்கரும் பயிடப்படுகிறது.
டெல்டா பாசன பகுதிகளில் காவிரி நீரை நம்பி விவசாயம் நடத்தினால் சுத்தமாக ஒழிந்து போவோம் என்ற அச்சத்தில் பம்பு செட் மூலம் விவசாயம் அதிகரிக்கத் துவங்கி சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே ஒரளவு உத்திரவாதமான விவசாயம் நடைபெற்று வருகிறது.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போராட்டம் கடைசியாக ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் 177,25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு இந்திய ஒன்றிய அரசு அதனை ஒரு வழியாக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. பேப்பரில், ’சர்க்கரை என்று எழுதி வைத்து நக்கிய கதையாக’ காவிரி நதிநீர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வரவில்லை. இது குறித்து ஏப்ரல்-2018, புதிய ஜனநாயகம் இதழிலேயே விரிவான கட்டுரை எழுதியுள்ளோம். இன்றுவரை காவிரியின் தலை மடைப்பகுதியான கர்நாடகா தங்களுக்கு தண்ணீர் போதுமான அளவிற்கு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ஆம்தேதி முதல் தற்போதுவரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.
இதனை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆய்வு செய்து தமிழகத்திற்கு தேவையான நீரை ஒரு தினத்திற்கு ஒரு டிஎம்சி என்ற கணக்கு வைத்து ஜூலை 31 வரை 18 நாட்களுக்கு 18 டி எம் சி தண்ணீர் தருமாறு வழிகாட்டியது. ஆனால் கர்நாடகா காங்கிரஸ் அரசு இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவது அடாவடித்தனமானது மட்டுமின்றி காங்கிரசின், ’இந்திய தேசியத்தின்’ மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையது.
14.7.2024 அன்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலை நிராகரிப்பதாகவும், காவிரியில் போதுமான நீர் இல்லை என்பதால் கர்நாடகாவின் தேவைகளுக்கே சிக்கலாகிறது, இந்த விவகாரத்தை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கொண்டு செல்லப் போவதாக சித்தராமையா கூறியுள்ளார்.
பாசிச பாஜகவிற்கு எதிராக அவர்களை தோற்கடிப்பதற்கும், இந்திய ஒன்றிய ஆட்சியில் இருந்து விரட்டுவதற்கும் இந்தியா கூட்டணி மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் காங்கிரஸ் தலைமை சக்தியாகவும், தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் முக்கியமான சக்தியாகவும் உள்ளது.
படிக்க: வரம்புள்ள செயல்தந்திரம் : ஐக்கிய முன்னணிகள் கட்டியமைப்பது குறித்து
பாசிச பாஜகவின் தேசிய இனங்களுக்கு மத்தியில் மோதல்களை உருவாக்குகின்ற சதி திட்டத்திற்கு எதிராக குறைந்தபட்சம் காங்கிரஸ் மற்றும் திமுக இரண்டும் பேசி காவிரி நீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும். அது மட்டுமல்ல இந்தியா கூட்டணி மக்கள் பிரச்சனைகளில் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கையையும் உருவாக்க முடியும். ஆனால் இது பற்றியெல்லாம் காங்கிரசிற்கோ, திமுகவிற்கும் கவலையில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முயலாக திமுகவின் பல்வேறு அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் அதிகார வர்க்கம் துணை நின்று சுழன்றடித்தது. இதன் விளைவாக இடைத்தேர்தலில் திமுக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
படிக்க: காவிரியில் தமிழகத்தின் உரிமைப்படி நீரைப் பெற போராடுவோம்!
இப்படிப்பட்ட தேர்தல் வெற்றிகளை பாசிச பாஜகவிற்கு எதிரான இந்தியா கூட்டணியின் வெற்றியாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால் இதனால் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளுக்கும், குறிப்பாக காவிரி டெல்டா பாசன பரப்பிற்கும் என்ன நன்மை என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுகவிற்கு உள்ளது.
காவிரி நதி நீர் சிக்கலை பற்றி தொடர்ந்து டெல்டா பாசன பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்களும், காவிரி மீது அக்கறைக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் தங்க.ஜெயராமன், வெ ஜீவகுமார் போன்றவர்களும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள், போராடி வருகிறார்கள்.
கடந்த இரு நூற்றாண்டு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு, தனது அரசிதழில் வெளியிட்ட பிறகும் அதன்படி தண்ணீர் வருவதற்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையிலேயே விவசாயிகள் போராடுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டு மாற்று வேலைகளில் இறங்க துவங்கியுள்ளனர்.
எனவே, விவசாயிகள் எங்கு போராடுகிறார்கள் என்று பிரச்சினையை சுருக்கிப் பார்ப்பதோ, காங்கிரசுக்கு எதிராக பேசுவதோ எழுதுவதோ பாசிச பாஜகவிற்கு எதிரான ஒற்றுமையை குலைத்து விடும் என்று கருதுவதோ அடிப்படையற்ற மூடத்தனமாகும்.
தற்போதைய சூழலில் தமிழக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களை ஒன்றிணைத்து கொண்டு செல்வோம். கர்நாடக காங்கிரஸ் அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்டுவோம்.
தமிழ்நாடு இந்திய தேசிய ஒன்றியத்திற்குள் இருக்கிறது. இங்கு விருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழுகின்ற ஒன்றியங்களின் யூனியனாகவே இந்தியா அறிவிக்கப்பட்டது என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை முன்வைத்து தன்னுரிமை கேட்டால் தண்ணீர் தானாக வரும்.
- மருது பாண்டியன்.