மேகதாதுஅணை பிரச்சினை: (பகுதி -2)

0

தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் ஒன்றியஅரசு!

கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து வழிந்து வரக்கூடிய நீர், காவிரி ஆற்றுடன் சேரும் அர்க்காவதி ஆற்றின் நீர், வெள்ள காலத்திலும்கூட, ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்கு வந்து விடாதபடி தமிழகத்தின் எல்லையை ஒட்டி பிலிகுண்டுவிற்கும் மேலே, மேகதாதுவில் பிரம்மாண்டமான ஓர் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதை எதிர்த்து, பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமிழ்நாடு ஈடுபட்டுள்ளது. இந்த அணைக்கட்டு கட்டப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் வேளாண்மை முற்றிலுமாக நின்று போகும். காவிரி காய்ந்து போன ஓர் ஆற்றின் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
.

ஒன்றிய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாகவே இருக்கிறது!

இந்திய அரசு 1991 இல் வெளியான காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்வையும் நடைமுறைப்படுத்தவில்லை.அப்போது கர்நாடகத்தில் வெடித்த கலவரத்தை அடக்கவும் முயற்சிக்கவில்லை. 2007-இல் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தவில்லை. 2018 இல் வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு உத்தரவாதப்படுத்தவுமில்லை. அது எப்போதுமே கர்நாடகத்தின் சார்பாகவே செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2021 ஜூன் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போதும் தன் நியாய உணர்வை வெளிப்படுத்தவில்லை. இப்போது, ஜூலை 16ஆம் தேதி இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சிக் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சந்தித்தபோதும், அவர் தன் கர்நாடகச் சார்பை வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்திய ஒன்றிய அரசின் குரலை நாம் ஊன்றிப் பார்க்க வேண்டும். காவிரி நீர்வளம் என்பது 740 டிஎம்சி. (ஆயிரம் மில்லியன் கன அடி. அதாவது, நூறு கோடி கன அடி). பிலிகுண்டுவில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டியது 177.25 டிஎம்சி என்பதைக் குறிப்பிட்ட ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்: கர்நாடகா அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அணை கட்டுவதை நீங்கள் எப்படி தடுக்கிறீர்கள்? அவ்வாறெனில், பிரச்சனையை அவர் என்னவாகப் புரிந்திருக்கிறார். இவர்களிடம்தான் நாம் நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் முன்னமே கட்டப்பட்டிருக்கக்கூடிய அணைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டுதான், காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு? கர்நாடகத்தின் பங்கு எவ்வளவு? என்று நிர்ணயித்து தந்திருக்கின்றன. இந்நிலையில் மேலும் மேலும் புதிய அணைகளைக் கட்டி, காவிரி நீர் வளத்தின் பெரும் பங்கை கையகப்படுத்தக் கூடிய முயற்சியில் கர்நாடகா ஈடுபடக்கூடாது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு இடைப்பட்ட நீர்பிடிப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய நீர் தமிழகத்திற்கு தற்போது வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கக்கூடிய நீர்வளம் முழுவதும் தன் அணைகளுக்குள் அடைக்கப்பட வேண்டும் என்று கர்நாடகம் பேராசை கொண்டு செயல்படுகிறது.

ஜூலை 16-ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைத் தமிழக அனைத்து கட்சிக் குழுவினர் சந்தித்த அன்றே, டில்லியில் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது; அந்த அணையைக் கட்டுவோம்– என்று தெரிவித்திருக்கிறார். நரேந்திர மோடியைச் சந்தித்த பிறகு, கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என்று எடியூரப்பா அறிவித்திருக்கிறார். “அணை கட்ட கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளது. கர்நாடகத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தமிழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழ்நாடு தொடர்ந்து எதிர்க்கிறது. குழப்பம் வேண்டாம். மேகதாது அணை திட்டம் 100% நடைமுறைப்படுத்தப்படும்” என்று எடியூரப்பா அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நரேந்திர மோடியை சந்திக்க முயற்சித்தபோது சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. எடியூரப்பாவும் துரைமுருகனும் தங்கள் கோரிக்கை வெற்றி பெற்றுவிட்டதாக ஊடகங்களுக்கு செய்தி அளிக்கிறார்கள். ஒரு குழப்பமான சூழ்நிலையில் பிரச்சினைகளை வைத்திருக்க இந்திய ஒன்றிய அரசு விரும்புகிறது.

காவிரிப் பிரச்சினையின் தன்மை என்ன?

காவிரி நீர் உரிமையை ஆங்கிலேயர்கள் பாதுகாத்தார்கள். இந்திய ஒன்றிய அரசு காவிரி உரிமையை தமிழகத்திடமிருந்து பறிமுதல் செய்தது! ஆங்கிலேயர் ஆட்சியில் பத்திரமாக இருந்த காவிரி நீர் உரிமை இந்திய விடுதலைக்குப் பிறகு பிடுங்கப்பட்டு விட்டது!

காவிரி நீர் பிரச்சினை சர்வதேச பிரச்சனை அல்ல. இந்தியாவில் இருக்கக்கூடிய நான்கு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைதான். ஆனால் அது முடிவுக்கு வரவில்லை.கர்நாடகாவும் தமிழ்நாடும் தனித்தனி தேசங்களாக இருந்திருக்குமானால் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு இப்பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். உண்மையில் இரண்டு தேசங்களாக இருந்தும், இந்தியாவுக்குள் மாநிலங்களாக அடைக்கப்பட்டு இருப்பதால் இப்பிரச்சனை இன்றுவரை தீராமல் இருக்கிறது.

1892-ஆம் ஆண்டு ஒப்பந்தம், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆசிய வை மைசூர் தர்பாருக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையில் முடிவு செய்யப்பட்டு சுமுகமாக காவிரிநீர்ப் பகிர்வு நடந்தது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும்வரை சென்னை மாகாணத்துக்கு கிடைத்து வந்த காவிரி நீர் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மறுக்கப்படுகிறது. 1947இல் இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிவினை ஏற்பட்ட பிறகும் கூட, சிந்து ஆற்றுநீர் தடையில்லாமல் பாகிஸ்தானுக்குச் செல்லுகிறது. ஜீலம், செனாப், ராவி, ஆறுகள் முடக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கிடையில் நதிநீர் பிரச்சனை எளிதாக தீர்க்கப்பட்டிருக்கிறது. உலகில் எந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர்பிரச்சினைகளும் சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் டான்யூப் ஆற்று நீர் பங்கீட்டு பிரச்சனையும் ஆப்பிரிக்காவில் நதிநீர் பங்கீட்டு பிரச்சினையும் எளிதாக தீர்க்கப்பட்டு விட்டன. ஆனால் எந்த விதிமுறையின் படியும் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், என்ன பொருள்?

கடந்தகாலத்தில் நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்பு நடத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனில்லாமல் போய் இருக்கின்றன. 1990 இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தன் தீர்ப்பை 2007-இல் வழங்கியது. தீர்ப்பு வந்தது. அதுவும் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்காமல் உச்சநீதிமன்றத்துக்கு கர்நாடகமும், தமிழ்நாடும் சென்ற நிலையில், 2018 இல் உச்சநீதிமன்றம் கர்நாடகத்துக்குக் கூடுதல் சாதகமான தீர்ப்பை வழங்கி விட்டது. அதிலும் பிரச்சனை தீரவில்லை. காவிரி நீர்ப் பகிர்வுப் பிரச்சினை இன்றளவும் தொடர்கிறது என்றால், என்ன பொருள்? நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியதை கர்நாடகம் ஏற்காதது வியப்பில்லை. இந்திய அரசும் ஏற்க மறுக்கிறது என்றால் என்ன பொருள்? ஒரு நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு நாட்டின் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசு சட்ட விரோதமானது அல்லாமல் வேறென்ன?

தமிழகத்துக்கு வரக்கூடிய ஆறுகளை அண்டை மாநிலங்கள் மடக்குவதை இந்திய அரசு வரவேற்கிறது. அந்த மாநிலங்களைத் தட்டிக்கேட்க இந்திய ஒன்றியஅரசு தயாரில்லை. மாறாக, தமிழகத்துக்கான தண்ணீரை முடக்குவதை அது ஊக்குவிக்கிறது.

மார்க்கண்டேய ஆறு பறிமுதலானது!இன்று மாண்கண்டேய ஆறு! நாளை காவிரி?

2010- ஆம் ஆண்டு கர்நாடகம் யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது. அதற்காக 87 கோடி நிதி ஒதுக்கி பணியையும் நடத்தியது. 2013- இல் தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. மார்க்கண்டேய நதி தென்பெண்ணை ஆற்றின் துணை நதி. தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு குடிநீரையும், 10 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு நீரையும் மார்கண்டேய நதிதான் வழங்கி வந்தது. இப்போது அந்த ஆற்று நீரை கர்நாடகம் முடக்கிவிட்டது. இந்திய ஒன்றிய அரசும் கேட்கவில்லை. உச்சநீதிமன்றமும் கேட்கவில்லை. அணை கட்ட தடை இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ரெண்டே என் நதியின் குறுக்கே இப்போது 40 மீட்டர் உயரமும் 414 மீட்டர் நீளமும் கொண்ட அடை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 5 மாவட்டங்களுக்கு குடிநீர் இனி கிடைக்காது 10 இலட்சம் ஏக்கர் பாசனம் இன்றி வறண்ட பகுதியாக மாறும்.

நீதித்துறையின்தெளிவற்ற பார்வை!

ஆற்றுநீர் சிக்கல் பற்றிய தெளிவான பார்வை இந்திய நீதித்துறைக்கு இல்லை. ஆறுகள் இந்தியாவுக்குள்தானே ஓடுகின்றன என்று அது கருதுகிறது. ஒரு மாநிலம் தன் நிலப்பரப்பில் ஓர் அணையைக் கட்டிக் கொள்வதை ஏன் தடுக்க வேண்டும் என்று இந்திய நீதித்துறை கருதுகிறது.

கடந்த காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வற்புறுத்தியபோது, உச்சநீதிமன்றம் ‘இப்போது வறட்சி , இப்போது ஏன் அமைக்க . வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பிரச்சனை இல்லாமல் குறைந்தபோது, ‘அதுதான் தண்ணீர் கிடைக்கிறதே, இப்போது ஏன் அமைக்க வேண்டும்?’ என்றது. அதிகம் அறியாத ஒரு சாமானிய மனிதனின் பார்வையை ஒத்ததாக உச்சநீதிமன்றத்தின் பார்வை இருக்கிறது. 2018 தன்னுடைய தீர்ப்பை வழங்கிய போது ஆண்டாண்டு காலமாக காவிரிப் படுகை மக்களுக்குச் சொந்தமாக இருந்த காவிரி ஆற்றை தேசியச் சொத்து அதாவது இந்தியாவிற்கு ச்சொந்தமான சொத்து என்று தீர்ப்பில் கூறியது.
நீதிபதிகளின் புரிதலை நினைத்து பார்த்தால் மயக்கம் வருகிறது!

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் போக்கு!

முன்னமே மேகதாது அணை கட்டுவதற்காகப் பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு குவிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரித்து முறையாக அனுமதி பெறாமலும் வனவிலங்குகள் சரணாலயம் பாதுகாப்பு பகுதியில் 5252 காட்டுப்பகுதியில் நீரில் மூழ்கி வகையில் மேகதாது அணையை கட்ட கர்நாடகம் முயற்சித்து வரும் நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது மத்திய அரசும் தமிழக அரசும் கர்நாடக அரசும் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டது மேகதாது அணை கட்டப்படுகிறது சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் அமைத்தது ஆனால் இதை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின்நடவடிக்கையை இரத்து செய்தது. ஆய்வுக்குழு கலைக்கப்பட்டது.

மேகதாது அணை என்பதன் பொருள் தமிழ்நாட்டுக்கு இனி தண்ணீர் கிடையாது என்பது தான்!

மேகதாது அணை என்பது ஏதோ ஓர் அணை; அதைக் கட்டுவதால் கூடுதலாகத் தண்ணீரை கர்நாடகம் பிடித்து வைத்துக்கொள்ளும் என்று மட்டுமே மொக்கையாகப் புரிந்துகொள்வது ஆபத்தானது. கடந்த காலத்தில் காவிரியின் குறுக்கே ஏமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, யாக்காட்சி போன்ற அணைகளை 1970 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் அனுமதியும் பெறாமல், இந்திய ஒன்றிய அரசிடம் தெரிவித்து அதன் அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாகக் கர்நாடகம் கட்டிக் கொண்டதால்தான் காவிரி நீர் பிரச்சினை என்ற புதுப்பிரச்சினை தோன்றியது. இன்றுவரை தண்ணீருக்காகத் தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது, கடுமையாக வெள்ளம் ஏற்படும்போது, கர்நாடகாவின் இந்த அணைகள் மட்டுமின்றி, கபினி கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளிலும், 20 டிஎம்சி தண்ணீரை தேக்குவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஏரிகள் உள்ளிட்டவற்றிலும் நிரம்பியது போக, வெள்ளப்பெருக்கின்போது தேக்கி வைக்க வழியில்லாமல் 50 டிஎம்சி வரை வழிந்தோடும் வாய்ப்பு உள்ளது. அணை உடைந்தால் என்ன செய்வது என்ற நிலையில் கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது. அது அணையின் பாதுகாப்புக்காகத் திறந்து விடக்கூடிய வெள்ளநீர், அந்த நீர் தான் தமிழகத்துக்கு வருகிறது. அதாவது தேக்க முடியாமல் வழிந்தோடக் கூடிய வெள்ளநீர் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்து வருகிறது. இப்போது தமிழகத்தினுடைய எல்லையில் மேகதாது அணையைக் கட்டி விட்டால், வெள்ள நீராக வெளியேறக் கூடிய 50 டிஎம்சி நீரும் புதிய அணைக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிடும். ஏனெனில், புதிய அணையின் கொள்ளளவு 67.16 டிஎம்சி ஆகும். தமிழ்நாட்டிற்கு இனி தண்ணீரே கிடையாது என்பதைக் குறிக்கும்சொல்தான் மேகதாது அணை என்பது.

அணையைக் கட்டி விட்டு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவார்களா?

அணையைக் கட்டி விட்டு தமிழ்நாட்டிற்கு உரிய பங்கைத் தருவோம் என்று கர்நாடக அரசு கூறுவது பொய். இதையே, இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கர்நாடகமும் தமிழ்நாடும் நன்மை பெறும் வகையில் இதைத் தீர்மானிப்போம் என்று கூறுகிறார். இதன் பொருள், கர்நாடகம் மகிழுமாறு அணையைக் கட்டி விடுவோம்; தமிழ்நாட்டிற்கு அதன் பங்கு குறையாமல் நீரை வாங்கித் தருவோம் என்பதுதான். இது ஒரு காலத்திலும் நடக்காது

தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை நீதிமன்றமும் வழங்க முடியாது!

தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று இந்திய அரசு நினைக்காது; உச்சநீதிமன்றம் நினைத்தாலும் அது நடக்காது. கர்நாடகம் கலவரத்தை உருவாக்கி உச்சநீதிமன்றத்தையே அச்சுறுத்தும்.
சான்றாக, 2016இல் நடந்ததை நினைவு கொள்ளலாம், நடுவர் மன்றத் தீர்ப்பு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீரைத் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறியிருந்தாலும், அதன்படி இன்றுவரை கர்நாடகம் அளித்ததே இல்லை. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாட்டின் பங்கை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் பத்து நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இது வெறும் 13 டிஎம்சி தான் வரும் நிலையில், அதைத் தருவதற்கு கர்நாடகம் மறுத்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் மதிக்கவில்லை, இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தன் கருத்தை மாற்றிக்கொண்டு, வினாடிக்கு 12,000 கன அடி வீதம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை தண்ணீர் விடுமாறு உத்தரவிட்டது. அதையும் கர்நாடகம் ஏற்கவில்லை. தமிழகத்தில் மிகவும் வறட்சியான காலகட்டம் அது. ஐந்து ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடக்கவில்லை. 2016இல் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை. இந்நிலையில் அணைகளில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு ஏன் அதைத் தர வேண்டும் என்று கருதி தண்ணீர் தர கன்னடர்கள் மறுத்தார்கள். காவிரி தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, சராசரி மழைப்பொழிவு காலத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் 94 டிஎம்சி வழங்கவேண்டும். அதே காலகட்டத்தில் மழை பொழிவு குறைவாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு 68 டிஎம்சி வழங்கலாம். கர்நாடகம் இக்காலகட்டத்தில், தான் முன்னமே அளித்து விட்டதாக கூறிய நீரின் அளவு 33 டிஎம்சி. அவ்வாறெனில், இன்னமும் தரவேண்டியது 35 டிஎம்சி இருந்தது, இதைத்தான் தமிழகம் கேட்டது. உச்சநீதிமன்றம் இந்த 35 டிஎம்சி யையும் தரச் சொல்லவில்லை. அது தரக்கூறியது வெறும் 13 டிஎம்சி தான். கர்நாடகாவில் அது மழை குறைவான காலம் இல்லை. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் மாதம் வரை 448 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. இது வழக்கத்தைவிட 10 மில்லி மீட்டர் மட்டுமே குறைவு. அதுமட்டுமின்றி, கர்நாடகாவின் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் கூறியபடி அணைகளில் 80 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால் உண்மையில் இதைவிட மிக அதிகம் நீர் தேக்கப்பட்டிருந்தது. கர்நாடக காவிரி நீராவாரி நிகம் என்ற திட்டத்தின் கீழ், 430 ஏரிகளை உருவாக்கி நீரால் நிரப்பி இருந்தது. கபினி அருகே கடலைப் போல பெரிய ஏரியில் 20 டிஎம்சி வரை நீரைத் தேக்கி இருந்தது. இவ்வளவு இருந்தும், கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தது. இந்திய ஒன்றிய அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கன்னடர்கள் கொதித்து எழுந்தார்கள். கலவரம் செய்தார்கள்.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சங்கர் தலைமையிலான கண்காணிப்புக்குழு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை பெற்றுத் தருவதற்கு பதிலாக அவர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தையே ஒத்திவைத்தார். அது மட்டுமின்றி, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்க, கடந்த 21 ஆண்டுகளில் பெய்த மழை, 4 மாநிலங்களும் பெற்ற நீரின் அளவு, அதனை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்ற விபரம், முறைகேடாக நீர் எடுத்து இருந்தால் அது பற்றிய விபரம்– ஆகியவற்றையெல்லாம் பரிசீலித்து தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார். காவிரி நீர் வரத்து அளவு என்ன என்பதைத் திரட்ட ஒரு வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் என்று கூறினார், அதாவது இப்போது தண்ணீர் தருவதற்கு கண்காணிப்புக்குழு எதுவும் செய்யாது என்பது இதன்பொருள். நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்பதுதான் கண்காணிப்புக்குழுத் தலைவர் (மத்திய நீர் வளத்துறை செயலாளர்) சசி சங்கர் கூறியது ஆகும். மத்திய அரசின் யோக்கியதை இப்படித்தான் இருந்தது.

தமிழகத்துக்கான நீரை வழங்க அடாவடியாக மறுத்தது கர்நாடகம், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு 2016இல் உச்சநீதிமன்றம் சென்றது, அந்த விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இப்படி அந்த வழக்கு விசாரணை ஒத்திப் போடப்பட்ட நிலையில், அணை கட்ட 5000 கோடியை ஒதுக்குவதாக கர்நாடக அரசு அறிவித்தது. அப்படிச் செய்யக்கூடாது; நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்என்று ஒன்றிய அரசு கூறியிருக்க வேண்டும் ஆனால் ஒன்றிய அரசு வாயைத் திறக்கவில்லை.

2016 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு மிகச் சிறிய அளவிற்கு தண்ணீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்வினையாக கன்னட அமைப்புகள் களமிறங்கி கலவரம் செய்தன. வன்முறையின் உச்சத்தை கர்நாடகம் கண்டது. 40 பேருந்துகள், ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன. பெங்களூரில் 30 லாரிகள், 40 பேருந்துகள், தமிழர்களுக்கு சொந்தமான உணவகங்கள், தொழில்நிறுவனங்கள், அழிக்கப்பட்டன. பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை உச்சத்தை எட்டியது. பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள துவாரகநாத் நகர் பகுதியில் 40 தனியார் பேருந்துகள் உட்பட 65 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன, மைசூர் சாலையில் இருந்த அடையாறு ஆனந்த பவன் மற்றும் இட்லி கடைகள் கூட விட்டு வைக்கப்படவில்லை. திரைப்பட நடிகர் விக்ரம் நடித்த இருமுகன் தெலுங்கு டப்பிங் படம் ஓடிய திரையரங்கு முற்றுகையிடப்பட்டது. யாதகிரியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தாக்கப்பட்டது. செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 15,000 போலீசார் களமிறக்கப்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகள் வினியோகம் நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காவிரிப் பிரச்சினையை 1990 முதல் 2007 வரை, 17 ஆண்டுகள் ஆய்வு செய்துஅளிக்கப்பட்ட நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய தண்ணீரில் ஒரு சிறிய அளவிற்கு வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இவ்வளவு கலவரங்கள் நடந்தன என்றால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீர் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

இந்திய நீதித்துறை தமிழகத்துக்கு நீதி வழங்காது. அப்படியே நீதி வழங்க முற்பட்டாலும், கர்நாடகம் அதை ஏற்காது; கலவரம் செய்யும்; நீதித்துறையையே அச்சுறுத்தும். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த படவேண்டிய இந்திய ஒன்றிய அரசு பார்வையாளராகவே இருக்கும், இது தான் இந்தியா!

ஜூலை 13 அன்று, பெங்களூரில் இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இரு மாநிலங்களுக்கும் நன்மை தரும் வகையில் முடிவெடுப்போம் என்றார். அணையைக் கட்டி காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வைப்பது பற்றிசெய்திகளை இதழ்கள் பேசுகின்றன (The Hindu, 11.07.2019). அணை கட்டுவது என்பது நடக்கும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு நீர் கொடுப்பது என்பது நடக்காது.

விரிவான திட்ட அறிக்கையை இந்திய நீர்வளத்துறை வாங்கியதன் நோக்கம் என்ன?

விரிவான திட்ட அறிக்கையை நீர்வளத் துறையிடம் கர்நாடகம் வழங்கியிருக்கிறது (2018). தமிழ்நாடு தன்னுடைய ஒப்புதலை இப்போது அளிக்காவிட்டாலும் கூட, எதிர்காலத்தில் தண்ணீர் மறுக்கப்பட்டு அந்த நெருக்கடியால் வேறுவழியின்றி, தண்ணீரைப் பெறுவதற்காக மேகதாது அணையை கட்டிக்கொள்ள தமிழ்நாடு தன் ஒப்புதலை வழங்கும் என்ற எண்ணத்தில், விரிவான திட்ட அறிக்கையைத் திருப்பி அளிக்காமல், இந்திய ஒன்றிய நீர்வளத்துறை தன் கையிலேயே வைத்திருக்கிறது.

மேகதாது அணை கட்ட காவிரி ஆணையத்தின் அனுமதியும் தேவை என்ற நிலையில்,மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் அளித்துள்ளது என்று இணை அமைச்சர் விஷ்வேஸ்வர் 2021 ஜூலை 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதாவது அணை கட்ட கர்நாடகம் தயார்; அதை அனுமதிக்க இந்திய அரசும் தயார்.

இன்றையச் சூழ்நிலையில், அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதலை வழங்காமல் இருப்பதும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தவிர வேறு எந்த தடையும் இல்லை. அணை கட்ட கர்நாடக அரசு எந்த அளவு விரும்புகிறதோ அதே அளவிற்கு இந்திய அரசும் ஆர்வமாக இருக்கிறது.

அணைக்குப் பின்னிருக்கும் அரசியல்: தேர்தல் அரசியலும் இனஅரசியலும்! ஒன்றிய அரசின் மூன்று நோக்கங்கள்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காமல் ஆறுகளை முற்றிலுமாகப் பறிமுதல் செய்து விடவேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் மறுப்பு என்பது இந்திய அரசுக்கு இலாபகரமானது. ஏனெனில் காவிரிப்படுகை பாலைவனமாக மாறும்போதுதான் பல மில்லியன் கோடிகளுக்கு எண்ணெய் -எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை தடையில்லாமல் சூறையாட முடியும். தமிழ்நாட்டின் விவசாயத்தை விட கனிம எடுப்பை இந்திய-பன்னாட்டு முதலாளிகளும், அவர்களுடைய முகவராக செயல்படும் இந்திய அரசும் முக்கியமானதாகக் கருதுகின்றன. இந்திய அரசின்போக்கு நயவஞ்சகமானது என்பதைத் தமிழ்நாடு உணரவேண்டும்.

இரண்டாவதாக, ஆறுகளை மாநிலங்களிடமிருந்து பறிமுதல் செய்து விட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது, இதில் காங்கிரஸ், பாஜக என்ற வேறுபாடே கிடையாது. தமிழ்நாடு எப்போதுமே போராட்ட குணத்தைக் கொண்டதாக கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது, கர்நாடகம் ஆரியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியது. தமிழ்நாடு ஆரியத்தை எதிர்க்கக் கூடியது. கர்நாடகம் – தமிழ்நாடு ஆகிய இரண்டில் கர்நாடகம் இந்திய த்திற்கு இணக்கமானது. இந்நிலையில்தான் இந்திய அரசு தன் பார்வையில் பாரபட்சத்தைக் கொண்டிருக்கிறது. கடந்தகால ஆரியருக்கும் தமிழருக்கும் இடையிலான இனப்போராட்டம் காவிரி நீர்ப் பிரச்சினையிலும் வெளிப்படுகிறது.
ஆரியம் எதையுமே மறக்கத் தயாரில்லை; ஆரியத்தின் அரசியல் வடிவமான இந்தியம் தமிழர்களை ஏற்காது. தமிழர்கள்தான் ஆரியத்தை உள்ளீடாகக் கொண்ட இந்தியத்தைக் கொண்டாடுகிறார்கள்.

காவிரி என்பது தமிழர்களை பொருத்தவரை நீர் பிரச்சனை, அது உயிர்ப் பிரச்சினை. ஆனால் ஆரிய இனச்சார்பாளர்களுக்கு, அது தங்கள் பாரம்பரிய எதிரிகளை ஒடுக்குவதற்கான இனஅழிப்பு வாய்ப்பு. தமிழர்களின் உரிமை நீர், வேளாண்மை, தொழில், உணவு, வாழ்விடம், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறித்தெடுப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. பிரச்சனையின் உள்ளீட்டைஉணர வேண்டியவர்கள் தமிழர்கள்தான், காவிரி பிரச்சனை என்பது தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்புப் பிரச்சனை என்பதை தமிழர்கள் உணர வேண்டும்

மூன்றாவதாக, கர்நாடகம் தங்கள் அரசியலுக்கான நிலைக்களன் என்று பாஜகவும், காங்கிரசும் கருதுகின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜக போன்ற இந்திய தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைப் பற்றி கனவுகூடக் காண முடியாது என்று அக்கட்சிகள் கருதுகின்றன. கர்நாடகத்தில் காங்கிரசும், பாஜகவும் அதிகாரத்தைக் கைப்பற்றக் களத்தில் நிற்கின்றன. கர்நாடகத்திற்கு எதிரான அல்லது கர்நாடகத்தை பாதிக்கக்கூடிய எந்த முடிவை எடுத்தாலும், அது காங்கிரஸ் அல்லது பாஜகவின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும். தமிழ்நாட்டில் அவர்கள் எந்த முடிவையும் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப் போவதில்லை.

மேகதாது அணை பிரச்சனையில் ஒளிந்து கொண்டிருக்கும் முக்கிய கூறு இன அரசியல்தான். கர்நாடகம் என்பது இந்திய தேசியத்தின் வாஞ்சைக்குரியது; அன்புக்குப் பாத்திரமானது. கன்னட மொழி சமஸ்கிருத மொழிக் கலப்பால் உருவானது. கன்னடப் பண்பாடு என்பது ஆரியப் பண்பாட்டின் கலப்பைக் கொண்டது. இந்திய தேசியத்தையும், பார்ப்பனியத்தையும், அதன் அரசியல் வடிவமான இந்திய தேசியத்தையும் கர்நாடகம் எதிர்க்கவில்லை; ஏற்கிறது.ஆனால், ஆரியப் பார்ப்பனியம், அதன் அரசியல் முகமாகிய இந்திய தேசியம் ஆகியவற்றை எதிர்த்த வரலாறைக் கொண்டது தமிழ்நாடு. ஆகவே இயல்பாகவே இந்திய தேசியக் கட்சிகளுக்கு கர்நாடகத்தின் மீது பேரன்பு இருக்கிறது. ஆரிய உணர்வு கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்புவதில் வியப்பில்லை. 1967-இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது. இன்று வரை அக்கட்சி மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவை தமிழர்கள் காலூன்ற விடவில்லை. தமிழர்களைப் பொருத்தவரை, காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதும், பாஜகவை நிராகரிப்பதும் ஆரியத்தை நிராகரிப்பதற்கு ஒப்பாகும். ஆரியத்தை ஏற்காத ஒரு தேசிய இனத்தை விட்டு வைக்க காங்கிரசும், பாஜகவும் தயாரில்லை. அவர்கள் பார்வையில்– தமிழர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்; தமிழ் மொழி அழிக்கப்பட வேண்டிய ஒன்று; தமிழ்நாடு சிதைக்கப்பட வேண்டிய ஒன்று; தமிழின அடையாளம் ஒழிக்கப்பட வேண்டியது, இதுதான் இந்திய தேசியத்தின் பார்வை!)))

மேகதாது அணை: தமிழக வேளாண்மை ஒட்டுமொத்த அழிப்புத் திட்டம்!

மேகதாது அணைத் திட்டம் முன்னமே பேசப்பட்டிருந்தாலும், 2014 – இல் முழுமையாக அறியப்பட்டது. மேகதாதுவில் 2 புதிய அணைகள் கட்ட கன்னடர்கள் திட்டமிட்டார்கள். அதுமட்டுமின்றி, கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு அருகே 4 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டது. மற்றும் அர்க்காவதி போன்ற சில துணை ஆறுகள் காவிரி ஆற்றுடன் சேர்கின்றன. அந்த நீரும் தமிழகத்திற்கு வந்து சேராதபடி, அதற்கும் கீழே மேகதாது அணை கட்டத் திட்டமிடப்பட்டது.

இரண்டு அணைகளிலும் நீர் மின் நிலையம் அமைத்து மின் உற்பத்தி செய்வது; பெங்களூரு மற்றும் மைசூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வழங்குவது; மாண்டியா மாவட்ட கரும்பு சாகுபடிக்கு நீர் வழங்குவது ஆகியவைதான் மேகதாது அணைத் திட்டத்தின் நோக்கங்கள். இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டது அல்ல. 2007-இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான போது அது கர்நாடகத்துக்கு பாதகமானது என்று கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டுவது, மேகதாது அணை திட்டம் ஆகியவை முடுக்கிவிடப்பட்டன. இதற்கென இரண்டு உயர் அதிகாரிகள், இருபத்தைந்து நீர்வளத்துறை அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டு, 56 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 30 இடங்களில் அணை கட்டலாம் என்று தேர்வு செய்யப்பட்டு, அந்த அறிக்கை 2012இல் கர்நாடக அரசிடம் வழங்கப்பட்டது.
. கர்நாடகத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு மீண்டும் ஆய்வு செய்து இரண்டு இடங்களைத் தெரிவு செய்தது. 4,500 ஏக்கர் நிலத்தில் 50 டிஎம்சி நீரைத் தேக்கத் திட்டமிட்டார்கள். இப்போது அணையின் கொள்ளளவு 67.16 டிஎம்சி ஆக கணக்கிடப்பட்டிருக்கிறது. 5, 252 ஹெக்டேர் காடுகள் அணைக்காக எடுக்கப்படுகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் அதுதான் மிகப் பெரிய அணையாக இருக்கும். கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 49 டிஎம்சி ; ஹாரங்கி, கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளின் மொத்த கொள்ளளவு 30 டிஎம்சி. ஆனால் மேகதாது அணையின் கொள்ளளவு 67.16 டிஎம்சி. அணையைக் கட்ட 14 நாடுகளிலிருந்து நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கின, நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா 2014 அக்டோபர் மாதம் டெல்லி சென்று கர்நாடக சட்ட ஆலோசகர் ஃபாலி எஸ் நாரிமனைச் சந்தித்து பேசினர். இந்த திட்டத்தை தமிழக அரசால் தடுக்கமுடியாது. ஆகவே, புதிய அணைகளைக் கட்டலாம் என்று ஆலோசனை வழங்கினார். இரண்டு அணிகளுக்கான திட்டவரைவு, நிபுணர் குழுவின் ஒப்புதல், சட்ட நிபுணர்களின் ஒப்புதல், 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டன. திட்டவரைவு செய்யப்பட்டதும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற முடிவு எடுக்கப்பட்டது. 2007 -நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் நீர்மின் நிலையம் அமைக்க ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், இந்த அணையைக் கட்டியே தீருவது என்று கர்நாடகம் முடிவெடுத்தது. இங்கு கட்டப்படும் அணைகளின் மூலம் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என நிபுணர் குழு அறிக்கை அளித்தது. இப்போது 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். மேகதாது திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மைசூர், மாண்டியா, ராம்நகர், மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகள் அருகே 4 தடுப்பணைகள் கட்டுவது என்று திட்டமிடப்பட்டது. இந்த தடுப்பணைகள் மழைக்காலத்தில் கிடைக்கக்கூடிய வெள்ளநீரை சேமிக்க உதவும் என்றும், இதன் மூலம் கர்நாடகத்தில் மைசூர், மாண்டியா, ராம்நகர் மாவட்டங்களில் முப்போகமும் நெல்லும், கரும்பும் விளைவிக்க முடியும் என்றும், முதலில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்துவது என்றும் மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு முடிவு செய்தது.

மேகதாது அணை கட்டுவதில் இப்போது கர்நாடக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது மேகதாது அணை திட்டத்தின் மதிப்பு 9 ஆயிரம் கோடி ஆகும். கர்நாடக முதல்வர் எடியூரப்பா அணையைக் கட்டியே தீருவேன் என்கிறார். குமாரசாமி முதல்வராக இருந்தபோது கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு அறிக்கையும் அளித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு உதவக்கூடிய மனநிலையில்தான் இந்திய ஒன்றியத்தின் ஜல்சக்தி துறையும், அதன் தலைவரே பொறுப்பு தலைவராக இருக்கக்கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும் விரும்புகின்றன. இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தனியாக ஒரு தலைவரை மோடி அரசு நியமனம் செய்யவில்லை, ஜல் சக்தி துறை அமைச்சரே காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கட்டுப்படுத்துகிறார். மேகதாது அணையை தடுத்து நிறுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல .

கடந்த காலத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவே ஒன்றிய அரசு நீர்வளத் துறையும் இருந்துள்ளது என்பது ஓர் உண்மையாகும். 2018- இல்குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்ற 5,912 கோடி செலவில் மேகதாது அணையைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இது காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்பது அதற்குத் தெரியும். மேகதாது அணை கட்ட முதற்கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தது, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதே அணையை கட்ட அடுத்த முயற்சியை கர்நாடகம் செய்தது. அதற்கு மத்திய நீர்வளத்துறை ஒத்துழைத்தது. அணை கட்ட அனுமதி கோரும் கர்நாடகத்தின் விண்ணப்பத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஒவ்வொருமுறையும் மேகதாது அணை பற்றிய விவாதத்தைக் கொண்டுவர ஆணையம் விரும்புகிறது. கர்நாடகம் தொடர்ந்து முயற்சிக்கிறது அத்தகைய விவாதம் வர விடாதபடி தமிழ்நாடு சமாளித்து வருகிறது ஆகவே இந்திய அரசும் மத்திய நீர்வளத் துறையின் தற்போதைய அமைச்சரின் பொறுப்பில் இயங்கும் காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி நீரைத் தேக்கி வைக்க தமிழ்நாடு பெற்றிருக்கும் ஒரே அணை மேட்டூர் அணைதான். அதன் கொள்ளளவு 97 டிஎம்சி . ஆனால் வண்டல் படிந்து அதன் உண்மைக் கொள்ளளவு 70 டிஎம்சி ஆகக் குறைந்துவிட்டது. அதற்குச் சமமான அணையை கட்டுகிறது கர்நாடகா. மேகதாதுவின் கொள்ளளவு 67.16 டிஎம்சி.
அதாவது மேட்டூருக்கு எவ்வளவு நீர் செல்லுமோ அவ்வளவு நீரையும் மேகதாது அணையில் தேக்கி விடமுடியும் என்று கர்நாடக நம்புகிறது.

வரலாறு நம்மை பார்த்து சிரிக்கிறது!

கர்நாடகா என்ற மாநிலமும் தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாத காலத்தில், காவிரி நீர் தடையின்றி வந்தது, ஆனால் இன்று இந்திய ஒன்றிய அரசுக்கு உட்பட்ட மாநிலங்களாக இவை உருவெடுத்த பிறகு, காவிரி நீர் பெறுவதில் சிக்கல் எழுகிறது; காவிரி நீர் மறுக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலமாக இருந்திருந்தால், 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் காலம் முடிந்துவிட்டது, தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் பேசி இருக்காது. இந்திய ஒன்றிய அரசு அப்படிப் பேச அனுமதிப்பது போல், அந்நிய ஆங்கிலேய அரசு அனுமதிக்காது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் அந்நியர்களாக இருந்தாலும், தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு அவர்களுக்குக் கிடையாது. இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் அந்நியர்கள் என்பது மட்டுமின்றி, தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உட்கரு,

அலட்சியப்படுத்தும் நீதித்துறை!

இந்திய அரசு மட்டுமல்ல, இந்தியாவின் உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை அலட்சியம் காட்டுகிறது, காவிரிப் பிரச்சினையில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு 2007 இல் வெளியானது. அது கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மனநிறைவு அளிக்கவில்லை என்ற நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. 2017 செப்டம்பர் 20 அன்று வாதத்தை முடித்துக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2018 பிப்ரவரி 16 அன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அமர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தது. ஆண்டுதோறும் 376 டிஎம்சி தண்ணீரை காலாகாலமாக பெற்றுவந்த தமிழகத்துக்கு, நடுவர் மன்றம் கர்நாடகம் அளிக்க வேண்டியது 192 டிஎம்சி தான் என்று குறைத்தது. இப்போது அதை உச்ச நீதிமன்றம் 177. 25 டிஎம்சி ஆக மேலும் குறைத்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது, இரு மாநில நதிகளை தேசியச் சொத்துக்கள் என்றும், எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது என்றும் கூறியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த தீர்ப்பை வரவேற்றார். காவிரிப்படுகை மற்றும் கர்நாடக மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்று அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு வழக்கறிஞர் ஷேகர் நெபதே மத்திய அரசுக்கு காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையிலேயே விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார். 2007 இல் வெளியான நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது இந்திய அரசு. மத்திய அரசை நாங்கள் சார்ந்திருக்க முடியாது; நீதித்துறை சார்ந்த உத்தரவை வெளியிடுங்கள் என்று அவர் பேசினார். இந்திய ஒன்றிய அரசு காவிரிப் பிரச்சினையில் எவ்வளவு நயவஞ்சகமாக நடந்திருக்கிறது என்பதை உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வைத்த வாதத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

நீதித்துறை எங்கே தமிழ்நாட்டுக்கு நீதி வழங்கி விடுமோ என்று மத்திய அரசு அஞ்சி, அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் கூட உச்சநீதிமன்றத்திற்குக் கிடையாது என்று பேச ஆரம்பித்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 1956-ஆம் ஆண்டின் நதிநீர் தாவா சட்டப்படி, நாடாளுமன்றம்தான் இதில் முடிவெடுக்க வேண்டும்; நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றார்.

உச்ச நீதிமன்றம் இந்திய அரசு நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாதற்குக் கண்டனம் தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பியது. அப்போது, மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருப்பதாகக் கூறியது! எவ்வளவு வஞ்சகமான வார்த்தைகள்!

வழக்கை தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படி விசாரிக்கவே உச்சநீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று வழக்காடியது. காவிரி வழக்கை ஒதுக்கிவைத்துவிட்டு, உச்சநீதிமன்றத்திற்கு விசாரிக்கும் உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் ஆராயத் தொடங்கியது. பிறகு அந்த உரிமை உச்ச நீதி மன்றத்துக்கு உள்ளது என்று அறிவித்தது. அதன் பிறகு காவிரி வழக்கு விசாரணையைத் தொடர்ந்தது. 2017 -இல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு 2018 – இல் வழங்கப்பட்டது.

இவ்வளவுக்குப் பிறகும், இந்தியா என்றால் என்ன? இந்திய அரசு என்பது என்ன? அது யாருக்கானது? என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், தமிழினம் அழிந்து போவதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது!

இந்திய நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறது. இதனால், நாட்டை ஆளுவதில் தமிழர்களும் பங்கேற்பதாகத் தோன்றுகிறது. தமிழர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் போய் அமர்ந்து என்ன சாதித்து கொண்டார்கள்? இந்திய நாட்டாண்மைகாரர் நமக்களித்த நியாயம்தான் என்ன?

இந்தியத்தின் நயவஞ்சகத்தை முதலில் நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்,
இந்தியாவை நிரந்தரமாக மேலாளுகை செய்கின்ற இந்துத்துவ- பார்ப்பனிய- பணியா- மார்வாடி இந்திய தேசியர்களால், தமிழர்களை, தமிழ்நாட்டை, தமிழர் பண்பாட்டை, தமிழ் மொழியை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. தமிழ்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று, பாலைநிலம் ஆக்கிவிட வேண்டும்; தமிழர்களின் வாழ்நிலப் பகுதியிலிருந்து தமிழர்களை விரட்டியடித்து பிற இனங்களுக்குள் கரைத்துவிட வேண்டும்; தமிழ் மொழிப் பயன்பாட்டை முடித்துவிடவேண்டும்; தமிழின அடையாளம் என்ற ஒன்று தனித்து இருக்கக் கூடாது– என்பதுதான் இந்திய அரசின் நோக்கம். அது காங்கிரஸ் அரசு ஆனாலும் சரி, பாஜக அரசு ஆனாலும் சரி, இந்தியம் என்பதன் சாரம் இதுதான்!

இதுவாழ்வாசாவா பிரச்சினை!

இந்நிலையில்தான் இப்பிரச்சனையை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை ஆலோசிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கில் தமிழகம் வெற்றி பெற்றாக வேண்டும்.

காவிரி ஆணையமும், ஜல் சக்தித் துறையும் கர்நாடகத்துக்கு மேகதாது அணை கட்ட உரிமையை வழங்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்திய நீர்வளத்துறை கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்கச் செய்யவேண்டும்.

கடுமையான போராட்டம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமான ஒன்று அல்ல. இந்திய ஒன்றிய அரசு அச்சம் கொள்ளும் அளவிற்கு தமிழர்களின் போராட்ட வீச்சு அமையவேண்டும்.

தமிழர்களும் போராடக் கூடியவர்கள்தான். இது விவசாயிகளின் பிரச்சனை அல்ல; ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரச்சனை! பிரச்சனையின் பரிமாணத்தை உணர்ந்து, அனைத்துத் தமிழர்களும் களம் இறங்கிப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களை அவ்வளவு எளிதாகத் தாக்கி விட முடியாது. கர்நாடக மாநிலத்தவரின் சொத்துகள் தமிழகத்தில் பத்திரமாக இருக்க வேண்டுமானால், கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது கர்நாடக அரசுக்கும், கன்னடர்களுக்கும் புரிய வைக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின் ஒரு வடிவமாக இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை இட வேண்டும்; அவை முடக்கப்பட வேண்டும். பேரெழுச்சியுடன் தமிழர்கள் களத்தில் இறங்கினால், இந்திய அரசு நம் மீது பாய்ந்து கடித்துக் குதறி விடமுடியாது.

விரைவில் இந்திய அரசமைப்புச் சட்டம் தேசிய இனங்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக் கூடியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஒரு ஆற்றின் கீழ்ப் பாசன பகுதியின் (Lower Riparian) உரிமை தெளிவான வரையறுப்புகளுடன் உத்தரவாதப்படுத்தப் படவேண்டும்.

சர்வதேச அளவில் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஆற்றுநீர் சிக்கல் தீர்த்து வைக்கப்படுகிறதோ, அதே விதிமுறைகள் முழுமையாக இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர் சிக்கலை தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகின் பிற கண்டங்களில் உள்ள சுதந்திர நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களும் சமமானவைதான் என்பதை உணர்த்தவேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தின் மாநிலங்கள் ஐரோப்பாவில் இருந்தால் அவை தனித்தனி இறையாண்மையுள்ள தேசங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் ஆற்று நீர் பயன்பாட்டு உரிமை என்பது ஓர் இனத்தின் பிறப்புரிமை! ஓர் ஆறு எங்கு தோன்றுகிறதோ அந்த நாடு அல்லது அந்த மாநிலத்தின் கருணையின் அடிப்படையில் அந்த ஆறு பாயும் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. காவிரி நீரை தமிழ்நாடு பெறுவது என்பது அதன் உரிமையின்பாற் பட்டது; கர்நாடகத்தின் கருணையின் பாற்பட்டது அல்ல!

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை என்பது கன்னடர்கள் மற்றும் தமிழர்களின் பிறப்புரிமை . அது நம் இன உரிமை. அதை மறுக்க கர்நாடகத்துக்கு உரிமையில்லை. இந்திய ஒன்றியத்துக்கும் அதிகாரம் இல்லை. காவிரி நீர் உரிமை என்பது இன உரிமை என்பதை தமிழ் மக்களுக்கு கற்பிக்க வேண்டும். சிக்கலுக்கான தீர்வு அதில்தான் இருக்கிறது!

   முகநூல் பக்கத்திலிருந்து

   நன்றி

பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here