மோடி கேஸ் விலையை 200 குறைத்துவிட்டார் என தலைப்பு செய்திகளில் வாந்தி எடுத்திருக்கும் பாசிச ஆதரவு பத்திரிக்கைகளும், செய்தி ஊடகங்களும் கடந்த வருடங்களில் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு குறித்து வாய் திறக்கவில்லை.

எண்ணெய், காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் அன்றாடம் உழைக்கக் கூடிய மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் தக்காளியின் விலை 200-ஐ தொட்டது.

தமிழ்நாடு போன்ற ஓரளவு வளர்ந்த மாநிலங்களிலேயே மக்கள் அவதியுறும் போது வட மாநிலங்களின் நிலை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அடுத்து வெங்காயம் விலையும் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் பணவீக்கம்

இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. ஒருவரின் வாங்கும் சக்தியை தீர்மானிக்க பணம் முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணவீக்கம் என்பது சரக்கு மற்றும் சேவைகள் இரண்டின் விலை உயருவதனால் ஒருவர் பொருள் வாங்குவதற்கு செய்யும் செலவு அதிகமாகிறது.

பணவீக்கத்தை புரிந்துக் கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம். உதாரணமாக, கடந்த மாதம் நீங்கள் உப்பு, புளி, மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரூபாய் 1000 செலவழித்தீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த மாதம் அதே பட்டியலில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்க 1100 ரூபாய் செலவழிக்க நேரிடும். அல்லது உங்கள் மளிகை பொருட்கள் பட்டியலில் இருந்து 100 ரூபாய் மதிப்பிலான பொருட்களை குறைத்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படலாம். இல்லை அத்தனை பொருட்களும் வாங்க வேண்டும் என்றால் கூடுதலாக 100 செலுத்தி வாங்க வேண்டும்.

எனவே சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரும் போதும் அல்லது நிலையற்ற தன்மை நீடிக்கும் போதும் அது பணவீக்கத்திற்கு வழி வகுக்கிறது. பணவீக்கத்தினால் பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்று முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் பணவீக்கம் உயர்வதினால் பொருளாதாரம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கிறது.

வாங்கும் சக்தி குறைகிறது.

பணவீக்கத்தினால் பொருட்களின் விலை அதிகரிப்பதினால் இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பொருட்கள் வாங்குவதினை குறைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஆலையில் உற்பத்தி குறைகிறது. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 3 ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, நாடு மோசமான நிலையில் இருப்பதாக பார்லி-ஜி நிறுவனம் 2000 ஆயிரம் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியது நினைவில் இருக்கலாம். அதாவது 3 ரூபாய் பிஸ்கட் வாங்க முடியாத அளவுக்கு மக்கள் வறுமையில் உள்ளார்கள்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் தலையில் மேலும் சுமை!

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அதாவது பணவீக்கத்தை குறைக்க கடந்த மே 2022 ஒன்றிய அரசு பெட்ரோல் பொருட்களின் மீதான கலால் வரியை குறைத்தது. மற்றொரு வழிமுறையாக ரிசர்வ் வங்கி மூலம் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியிருக்கும் சாமானியர்களின் தலையில் சுமையை வைத்து மேலும் அழுத்தியது.

ஆனால் அரசு எதிர்பார்த்தது போல் விலைவாசி குறையவில்லை. வாங்கும் சக்தி அதிகரிக்க வாங்குபவருக்கு பணம் தேவை. அதற்கு நல்ல வேலை தேவை. ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. காரணம் கார்ப்பரேட்டுகள் கஷ்டப்படக் கூடாது என்ற ‘நல்ல’ எண்ணம். மக்கள் எக்கேடுக் கெட்டுப் போனால் என்ன?

கடந்த ஒரு வருடத்தில் விலைவாசி உயர்வு!

ஜூலை 2022 முதல் ஜூலை 2023 ஓராண்டு இடைவெளிக்குள் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை ‘பிஸினஸ்லைன்’ ஆய்வு செய்து செய்தி வெளியிட்டது. அது மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் மாத மளிகை கட்டணம் உயர்ந்துள்ளது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்தும் ஆய்வு செய்தது.

மாதாந்திர மளிகை கட்டணம் 2022-ஐ விட 2023ல் அதிகரித்திருக்கிறது என்றும், உணவு பொருட்களின் பணவீக்கம் 10.57 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் இந்த பணவீக்கமானது மெட்ரோ நகரங்களில் அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கமானது தேசிய அளவில் 12.45 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் டெல்லியை பொறுத்தவரை இது 18 சதவீதமாக உள்ளது. இந்த உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு நடுத்தர குடும்பங்களையே பெரிதும் பாதித்துள்ளது.

இதையும் படியுங்கள்:

சதமடித்துள்ள தக்காளி, மிளகாய் விலை: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
இந்தியப் பொருளாதாரம்: விலைவாசி உயர்வு / பணவீக்கம்:

வருடத்திற்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. வருகிற செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர இருக்கிறது. இதனால் மக்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்படும். ஒரு பக்கம் கொடுப்பது போல் மறுபக்கம் சுரண்டுகிறது. எது செய்தாலும் கார்ப்பரேட்டுகளை பாதிக்காத அளவு செய்கிறது.

இது தான் இந்தியாவின் தற்போதைய நிலை. ஆனால் மோடி ஜால்ராக்களோ 200 விலை குறைத்து விட்டதை தலைப்பு செய்தியாக போட்டுவிட்டு சுயதம்பட்டம் அடிக்கிறார்கள். சமையல் கேஸ் விலையே மோடிக்கு முன் மோடிக்கு பின் என்று பட்டியலிட்டால் 410 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக அதிகரித்திருக்கிறார். இதில் தான் 200 ரூபாய் குறைக்கிறார். அதுவும் 2024 தேர்தல் பயத்தில்.

சதுரங்க வேட்டையில் வரும் வசனம் போல் ‘ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்’ இதைத்தான் மோடி செய்கிறார். மக்கள் ஏமாந்து மோடி தேர்தலில் மீண்டும் வென்றால் வாழவே தகுதியில்லாத நாடாக இந்தியா மாறும். அன்று மக்கள் கேள்விக் கேட்கவே முடியாத பாசிச அடக்குமுறைக்கு உள்ளாக்கபடலாம். அந்த நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் அனைவரும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். பாசிச பாஜக கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்த வேண்டும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here