தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பல வரவேற்கத்தக்க திட்டங்கள் உள்ள போதிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கும் தொழில்துறையை மேம்படுத்துவதற்குமான புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து பொருளாதாரம் இன்னும் மீட்சி பெறவில்லை. “வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான,பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (demand shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்”என்பதை நிதியமைச்சரே குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நிலையில் அரசு முன்வந்து கூடுதலாக மூலதன செலவுகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் மூலதன செலவினங்களுக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் 13.46 சதவிதம் மட்டுமே கூடுதலாக 43043.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆண்டிற்கான வருவாய் செலவினங்கள் 2021-22ஐக் காட்டிலும் 9.6 சதவிதம் மட்டுமே அதிகமாக 284188.45 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ல் அரசின் வரிவருவாய் 17% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் குறைய உள்ளது என்றும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது என்றும் சிறந்த நிதி நிர்வாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்ததன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 13000 கோடி ரூபாய் இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும் என்றும் கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிற்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை நடவடிக்கைகளால் தமிழ்நாடு பாதிக்கப்படுவது குறித்து பின்வருமாறு நிதியமைச்சர் கூறுகிறார். “நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு ஏறத்தாழ 10 சதவீத பங்களிப்பு அளிக்கிறது. ஆனால் இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. 15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) மத்திய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” சென்ற ஆண்டு உணவு மானியத்துக்கு திருத்த நிதிநிலை அறிக்கையில் 8437.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதைவிட 937.57 கோடி ரூபாய் குறைவாக 7500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை பிரச்சினை அதிகரித்து மக்களின் வருவாயும், நுகர்வும், வாங்கும் திறனும் சரிவடைந்துள்ளது. எகிறும் பணவீக்கத்தால் மக்கள் நலிவடைந்துள்ளனர். விலைவாசிக் கட்டுப்பாட்டிற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ளவில்லை, மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. வேலையின்மையை குறைத்து மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும் விதமாக நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவும், நகர்புறங்களில் அறிமுகப்படுத்தவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ளாதது கவலை அளிக்கிறது. சென்ற ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஊதிய செலவிற்கு 6825 கோடி ரூபாயும், பொருட்செலவிற்கு 3,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அதை விடக் குறைவாக ரூ.2800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23ல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவிட் தாக்கத்தால் இந்தியா முழுவதும் 54 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மூடப்பட்ட லட்சக் கணக்கான சிறு, குறு, நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க சிறு, குறு, அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் படி தமிழ்நாட்டைச் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு ரூ.50 கோடியை வளர்ந்து வரும் தொழில்களுக்கான தொடக்க நிதிக்கு (seed funding) அரசு வழங்கவுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) கிளை மையங்கள் ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் மண்டல அளவில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான பொருட்களை ரூ.50 லட்சம் வரை அரசுத் துறைகளும், நிறுவனங்களும் நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) ரூ.30 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்முதல்களில், ஐந்து சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை அரசே உருவாக்கித்தர வேண்டும். வேலை இல்லாத அனைவராலும் தொழில்முனைவோராக முடியுமா, புத்தொழில் நிறுவனங்களை தொடங்கமுடியுமா? மூலதனம் இல்லாது வேலைவாய்ப்பும் இல்லாது தவிக்கும் மனிதவளத்திற்கு வேலை உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் அளிப்பதன் மூலமே சமூக நீதியின் அடிப்படையில் உள்ளடக்கிய நீடித்தப் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும்.
அந்நிய முதலீடுகளை மட்டுமே பெருமளவில் நம்பியிருக்கும் நிலையை உலகெங்கும் புதுத்தாரளியம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இச்சார்பு நிலை ஆபத்தானது. அந்நிய முதலீடுகள் இன்று வரும், நாளை போகுமே தவிர நிரந்தரம் கிடையாது. உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் கொள்கைகளை அரசு உருவாக்கவேண்டும். கோவிட் பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்தியப் பங்குச் சந்தையில் கோடிக் கணக்கானோர் முதலீட்டுக் கணக்குகளைத் தொடங்கி புதிய நிதிமுதலீட்டாளர்களாக பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அதானி, அம்பானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களே பெரும் பங்குதாரர்களாக முதலீடு செய்துள்ளனர். அந்நிறுவனங்களில் அதானி, அம்பானியின் சொந்த முதலீடுகள் ஒரு சிறுமத்தொகையே ஆகும். அரசும், பொதுமக்களும் பங்குதாரர்களாக இருக்கும் கூட்டுறவு அடிப்படையிலான புதிய நிறுவனங்களை அரசு உருவாக்கவேண்டும். கூட்டுறவு உற்பத்தி அமைப்புகள், கூட்டுறவு விற்பனை அமைப்புகள், கூட்டுறவு நிதி அமைப்புகளை உருவாக்கவேண்டும். உள்நாட்டு முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சேமிப்புகள், நிதி முதலீடுகளை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஈர்த்து மடைமாற்ற அரசு பெருமுயற்சிகளை செய்யவேண்டும். நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதிலாக அதை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி அரசே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி ஆட்சியைப் பிடிக்க எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்கிறது, தொண்டர்களை இரவு பகலாக உழைக்கவைக்கிறது.
அத்தகைய செயல்வேகத்தை ஆட்சிப் பொறுப்பேற்ற கட்சி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதிலும் காட்டவேண்டும். கூட்டுறவு அடிப்படையிலான திட்டங்களின் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும், பொருளாதாரத் தற்சார்பையும் அடையமுடியும். இதற்கான திட்டமிடலுக்கு அமெரிக்காவிலிருந்து அபிஜித் பானர்ஜியையும், எஸ்தர் டுஃப்ளோவையும் அழைக்கவேண்டியதில்லை, உள்நாட்டிலே சிறந்த பொருளாதார வல்லுனர்கள் உள்ளனர் அவர்களின் வழிகாட்டுதலுடன் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.
பள்ளிக்கல்வித் துறைக்கு 2021ல் 32,599 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022ல் அதை விட 13% கூடுதலாக .36,895.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டில், மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையை முற்றிலும் பொதுமயப்படுத்தி இலவசக் கல்வி அளிப்பதன் மூலமே அனைவரும் கல்வி பெறும் வாய்ப்புகளை உருவாக்கமுடியும். ஒரு சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து சில முன்மாதிரிப் பள்ளிகளை உருவாக்குவதுடன் நிறுத்திவிட்டால் போதுமா. சமூகநீதி காக்க அனைத்து அரசு பள்ளிகளையும் முன் மாதிரி பள்ளிகளாக்க வேண்டும்.
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிட ஐந்து கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கட்டமைப்பு வசதிகள் அதிகமுள்ள பகுதிகளில் தளப்பரப்பு குறியீட்டை உயர்த்துவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறை ஊக்குவிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வானிலையைத் துல்லியமாகக் கணிக்க அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்புடன் “பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை” மேம்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் சுற்றுலா துறை, சேவைத்துறைகளின் மூலம் மட்டும் நீடித்த வளர்ச்சியை பெறமுடியாது. உதாரணமாக சுற்றுலாத்துறையை நம்பியிருந்த இலங்கை கோவிட் பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு பணவீக்கம் கட்டுப்படுத்தமுடியாமல் உயர்ந்துள்ளது. சுற்றுலா துறையை வளர்ப்பதுடன் தொழில்துறையையும், உற்பத்தித்துறையையும் வளர்த்தெடுப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தொழில்துறையும், உற்பத்தித்துறையும் வளர்ச்சியடையும் போதே அதைச் சார்ந்த சேவைத்துறைகளும் வளர்ச்சியடையும்.
வெளி நாட்டு மூலதனங்களை மட்டும் பெரிதும் நம்பியிருப்பதன் மூலம் நீடித்த வளர்ச்சி பெறுவதையும், பொருளாதார தற்சார்பு நிலையை அடைவதற்கும் தடையாக அமையும்.
தி.மு.க தலைமையிலான அரசு பழைய ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் இவை நிறைவேற்றப்படாமல் உள்ளது; கல்விக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.
Samantha Ks