கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியல் தலைவனால் அரங்கேறும் ஆபாச அரசியல்! சுக்கு நூறாக உடைக்கப்படும் அடிமை அதிமுக!
தினம் தினம் அரங்கேறும் குற்றச்செயல்கள்!
‘சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; எங்கும் எதிலும் ஊழல்; பாட்டிலுக்குப் பத்து ரூபா; பெண்களுக்கு – சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் வெடித்துக் கிளம்பும் போராட்டங்கள்; மக்கள் எழுப்பும் குரல்கள் காதில் விழுகிறதா ஸ்டாலின் சார்…;’ இது போன்ற எண்ணற்ற வீர ‘வசனங்களை’ முன்னாள் முதல்வர் ஸ்டாலினை – திமுகவை நோக்கி ஆக்ரோஷமாகக் கர்ஜித்தார் நடிகர் விஜய்.
மக்களை நோக்கி, ‘மாற்றம் வேண்டும்! மாறுதல் வேண்டும்! உங்களுக்காகவே உச்சத்தில் இருந்த எனது தொழிலை தூக்கி எறிந்து விட்டு அண்ணன் ஓடோடி உழைக்க வந்திருக்கிறேன்; அண்ணன்மாரே, தம்பிமாரே, அப்பாமாரே, அம்மாமாரே, தாத்தா மாரே, பாட்டிமாரே, அக்காமாரே, தங்கைமாரே, நண்பா – நண்பீஸ் – குட்டீஸ்…இந்த விஜய்யை நம்புங்கள்; திமுக ஆட்சியின் அனைத்து அட்டூழியங்களையும் ஒழித்துக் கட்டி, புதிய மாற்றத்தை – புதிய தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுகிறேன்; ஒட்டுமொத்தமாக ‘விசில்’க்கு வாக்களியுங்கள்! வெற்றி அடையச் செய்யுங்கள்!’… என்று வழக்கமான திரைப்படப் பாணியில் ஏக வசனங்களை பல்வேறு வடிவங்களில் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டார் நடிகர் விஜய். ஆனால்…
அரங்கேறும் ஆபாசக் குதிரைப் பேர அரசியல்!
மோடி – அமித்ஷா – தேர்தல் ஆணையம் – SIR – EVM – விர்ச்சுவல் வாரியர் – ரூட் மாஃபியா, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், முகநூல்… இத்தியாதி…இத்தியாதி… தயவுகளினால் ஒரு வழியாக தொங்கு சட்டமன்றமாவது அமைந்தது! பல்வேறு குட்டிக்கரணங்களுக்கு மத்தியில், குதிரைப் பேரங்களுக்கு இடையில் மாற்றுக் கூட்டணியில் இருந்தவர்களை விதவிதமாக இழுத்துப் போட்டு பெரும்பான்மையைக் காண்பித்து ஆளுநரிடம் உக்கி போட்டு முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்டார் நடிகர் விஜய். அதற்குள்ளாகவே திக்கு முக்காடிப் போனார். ஊசலாட்டங்களுக்கு இரையானார். திமுக கூட்டணியிலிருந்து இழுத்துப் போட்டுக் கொண்ட காங்கிரஸ் மட்டுமே தவெக-வுடன் கூட்டணியில் இணைந்த சூழ்நிலையில், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் வெளியில் இருந்து ஆதரவு என்ற தயவினாலேயே விஜய்யால் பதவி ஏற்க முடிந்தது. பின்பு அந்த கும்பல் தூக்கமின்றி தவித்தது. வெளியிலிருந்து ஆதரவு தருவோர், திடீரென ஆதரவை வாபஸ் பெற்று விட்டால் என்ன செய்வது? என்று புலம்பத் துவங்கினர்.
அதனால் ஆதவ்வின் மாமியார் (அதிமுக – லால்குடி எம்எல்ஏ) லீமா ரோஸ்-சை வளைத்துப் போட்டு, குதிரைப் பேர அரசியல் மூலமாக அதிமுகவில் மூன்றில் இரண்டு மடங்கு எம்எல்ஏக்களை தவெக- விற்கு இழுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அதன் முதற்படியாக ஒரு ஷோபா, சிவி சண்முகம் வீட்டுக்குச் சென்றதும், பின்னாலேயே விஜய் சென்று அங்குள்ள போட்டி அதிமுகவினருக்குச் சால்வை அணிவித்ததும், அமைச்சர்கள் பதவி வழங்குவதாக வாக்களித்ததும், பல நூறு கோடிகள் புரண்டதும் ‘கண்கொள்ளா’க் குதிரை பேரக் காட்சிகளாக அரங்கேறிய வற்றைத் தமிழ்நாடு கண்டுகளித்தது! இதனால் எடப்பாடி Vs எஸ்.பி. வேலுமணி & கோ மோதல் உச்சத்திற்கு சென்றதும், விஜய் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் வேலுமணி வகையறா 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்ததும், இரண்டு கோஷ்டிகளும் அடித்துக் கொண்டு நாறியதும், சிலருக்கு ‘அமைச்சர் பதவிகள் கிடைத்துவிடும்’ என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு கிடந்ததும் நடந்து முடிந்த பழங்கதைகளாக நாறிக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் மாநில – இந்திய அளவிலான பாஜக சங் பரிவார் கும்பல் கண்டு ரசித்துக் கொண்டு இருந்தது. ஏனெனில் மாநிலத்தில் திமுக தோற்கடிக்கப்பட்டதும், தமது அடிவருடியான தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை தானே? இனி அடுத்த ஐந்தாண்டுகள் RSS – பாஜக ஆட்சி தானே என்ற மிதப்பில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது சரிதானே!
விசிக – ஐயூஎம்எல் சோரம் போன கதைகள்! அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் தவெகவில் தஞ்சம்!
இந்நெருக்கடிச் சூழலில், அதிமுக-வை தவெக கூட்டணியில் சேர்த்து அமைச்சரவையில் இடம் அளித்தால் ‘நாங்கள் ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என்று விசிக, இடதுசாரிகள், ஐ யூ எம் எல் அமைப்புகள் சதிராட்டம் போட்டனர். விஜய்-ஆதவ் அர்ஜூன் கும்பலோ, ‘அப்படியெனில், உங்கள் ஆதரவு எங்களுக்கு நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் பெற்றிட, எங்கள் அமைச்சரவையில் இடம்பெறுங்கள்’ என்று இன்னொரு வகையிலான குதிரை பேரம் நடைபெற்றது. அந்தக் குதிரை பேரத்திற்கு இடதுசாரிகள் தவிர்த்து, விசிக-வும், IMUL-ம் துளியும் வெட்கப்படாமல் இணக்கம் தெரிவித்தனர்.
படிக்க:
♦ விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் – கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்
♦ தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!
இப்படிப்பட்டதொரு இழிந்த முடிவு எடுக்க எவ்வளவு தான் வியாக்கியானங்களை தொல் திருமா அளித்தாலும், தமிழ்நாட்டில் நுண்ணறிவு கொண்ட அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், முற்போக்கு இயக்கங்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் தொல் திருமா நன்றாகவே அம்பலப்பட்டு நிற்கிறார். IUML குறித்து விளக்க வேண்டியதில்லை. தொல் திருமாவே அந்த அளவிற்கு கீழிறங்கிப் போன பின், மதம் சார்ந்த அமைப்பினரிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? எப்படியோ ஆளுக்கொரு அமைச்சர் பதவிக்காக இப்படியொரு கேவலமான அரசியல் முடிவு எடுத்திருப்பது அசிங்கமானதும், ஆபாசமானதுமாகும்.
இந்நிலையில், அதிமுகவின் எஸ் பி வேலுமணி & கோ அமைச்சர் பதவிகளுக்காக ‘வாடி இருந்த கொக்குகளாய்’ காத்திருந்து ஏமாற்றம் ஆனதும், உடனே அந்தர் பல்டி அடித்து எடப்பாடியிடம் ‘நல்லிணக்க உறவு’ காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ‘சுதாரித்து’க் கொண்ட SP வேலுமணி கும்பலிலிருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மூவரும் மற்றும் ஓர் குதிரை பேரத்திற்கு இரையாகி தத்தம் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ‘மாபெரும் தலைவர்’ கோடீஸ்வரன் ‘பச்சோந்தி’ ஆதவ் அர்ஜூனாவுக்கு சால்வை அணிவித்து தவெக-வில் தஞ்சம் புகுந்தனர்.
முதல்வர் விஜய்யையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சால்வை அணிவித்தனர். இந்த கூத்துகள் யாவும் தலைமைச் செயலகத்திலேயே நடைபெற்று உள்ளன. ஆக தலைமைச் செயலகம், தவெக-வின் தலைமையகமாக உருமாறி உள்ளது. இதுபோக, பல அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே விஜய் ராஜினாமா செய்திருந்த திருச்சி கிழக்கு, தற்போது காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை ஆக மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல்களை எதிர்நோக்கி உள்ளன. இவற்றில் எளிதாக வென்று விடலாம்; அதன் மூலம் நிரந்தரப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடலாம் என்ற மனக்கணக்கில் உள்ளது தவெக. ஆக மொத்தத்தில் அடிமை அதிமுக, சுக்கு நூறாக சிதைந்து நொறுங்கும் நாள் வெகு தூரம் இல்லை. இவை அனைத்திற்கும் பின்னால் சூத்திரதாரிகளாய் பாஜக-வின் மோடி-அமித்ஷா, தவெக-வின் விஜய்-ஆதவ் காரணமாய்த் திகழ்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
(தொடரும் விவரங்கள்…)
பதவியேற்ற 15 நாட்களில் எத்தனை எத்தனை கொலைகள்? பாலியல் வன்கொடுமைகள்?
குற்றச் செயல்கள்? நாறுகிறது தமிழகம்!
பாலியல் வன்கொடுமைகளுக்கான வேர் எங்கு உள்ளது? ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லையே ஏன்? தீர்வுக்கான வழி எது?
‘திரைப் பிம்பம் வேறு! நிஜ வாழ்க்கை வேறு!’
என்பதைப் பாமர மக்களை புரிய வைப்பது எப்படி?
வெடித்தெழும் தமிழகம் தழுவிய பல்வேறு போராட்டங்கள்…!
தமிழ்நாடு அரசு தீர்க்கவேண்டிய எண்ணற்ற மக்கள் பிரச்சனைகள்…!
- எழில்மாறன்






