திமுக மீது நமக்கு அனுசரணையாகப் பேசும் வகையிலான மயக்கம் ஏதும் இல்லை. விமர்சித்துக் கூறுவதற்கு ஏராளம் உள்ளன. அவ்வாறு கடந்த காலங்களில் திமுகவின் பல்வேறு விதமான குறைபாடுகளுக்கு எதிராக நிரம்பவே விமர்சித்திருக்கிறோம். போராடியிருக்கிறோம். ஆனாலும்…சில…இங்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
உண்மையான திராவிட இயக்கம் – 1916-ல் தொடங்கப்பட்டது. 110 ஆண்டுகளுக்கு முன்பே, சர் பி.டி.தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் (The Non-Brahmin Movement) துவங்கப் பெற்றது. தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் இருந்த பார்ப்பன மேலாதிக்கம், சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாடு முதலிய காரணங்களால் 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமை நீங்கிய சமத்துவம், பெண்களுக்கு சொத்துரிமை, சமதர்மக் கொள்கைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான புதியதோர் பகுத்தறிவுச் சிந்தனை என பல்வேறு முற்போக்கு அம்சங்களைக் கொண்டு அந்த இயக்கத்தைக் கூர்மையாக முன்னெடுத்தார். அக்காலக் கட்டத்தில் கம்யூனிச இயக்கமே இந்தியாவில் வேர்விடவில்லை. தந்தை பெரியாரின் வெளிநாட்டுப் பயணங்களில், சோவியத் ரஷ்யாவில் மட்டும் தமது குழுவினருடன் மூன்று மாதங்கள் தங்கி நிரம்பவே கற்றுக் கொண்டு வந்து சமதர்மம் பரப்பினார்; “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்; ‘தோழர்’ என்ற வார்த்தையை முதன் முதலில் இந்தியாவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்; ஈரோட்டுத் திட்டம் என்ற புகழ் பெற்ற மா.சிங்காரவேலர் தயாரித்த திட்டத்தினை மையமாகக் கொண்டு 1932 ஈரோட்டு பொதுக்குழு கூட்டத்தில் அதனை “ஈரோட்டுத் திட்டம்” என்று பெயர் சூட்டி அதன்படி தமிழ்நாடு முழுவதும் 145 சமதர்மச் சங்கங்களை உருவாக்கினார்.
பழைய நீதிக்கட்சி அரசியலில் சந்தித்த தேர்தல் தோல்வி காரணமாகவும் பதவி அரசியல் உள்ளடி வேலைகளாலும் 1937-இல் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் ‘நீதிக்கட்சி என்ற திராவிட இயக்கத்தை 500 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்து விட்டோம்’ என்று ஆர்ப்பரித்தனர்.
1944-ல் நீதி கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பண்பாடு, கலை, கல்வி மற்றும் சமூகப் புரட்சிக் கொள்கைகள், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், பகுத்தறிவு கோட்பாடுகளை உள்ளடக்கி சேலத்தில் 1944-ல் “திராவிடர் கழகம்” – என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே பெரியார் பெயரிட்டு ஒரு புத்தெழுச்சியுடனான புது முறுக்குடன் சமூக இயக்கம் கண்டார். 1949-ல் பெரியாருடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக தி.க.-வை விட்டு தமது தோழர்களுடன் வெளியேறி “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பினை அண்ணா உருவாக்கினார்.
ஆனாலும் தி.க.-வும், தி.மு.க.-வும் இரட்டைக் குழல் துப்பாக்கியே என்று அண்ணா அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அதன் பின் 1967 இல் அண்ணா தலைமையில் ஆட்சியும் அமைந்து விட்டது. இந்த ஆட்சியை தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்வதாக அண்ணா அறிவித்தார்.
படிக்க:
♦ திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!
♦ பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!
அதுமட்டுமல்ல; தேர்தலில் வெற்றி பெற்றதும் தமது தோழர்களுடன் நேரடியாக திருச்சி பெரியார் மாளிகை சென்று தந்தை பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றார் அண்ணா. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே என்றென்றும் நீடிக்கும் என்று சட்டம் இயற்றினார். சுயமரியாதை திருமணம் செல்லுபடி ஆகும் என்று சட்டம் இயற்றினார். இன்னும் பல முன்னோடி திட்டங்களுக்கு தமது ஓராண்டு கால ஆட்சியில் முன் வடிவம் கொடுத்தார். அதற்குள் கொடிய வியாதியால் 1969-ல் மறைந்தும் போனார்.
அடிக்கட்டுமானத்தை எழுப்பிய நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், திட்டங்களை தமது அரசியல் இலக்குகளாக ஆக்கிக் கொண்டு அண்ணா முன்னெடுத்த பணிகளை அவரது மறைவிற்குப் பின்னால் முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அவர்கள் கொள்கை வடிவத்திலிருந்து தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்ட பாடுபட்டதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது; சனாதன வேத பார்ப்பனியத்திற்கு எதிராக அனைத்து கோவில்களிலும் தகுதி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கலாம் என்ற சட்டம் இயற்றியது அவரது சாதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து முன்னணிப் பாத்திரம் வகித்தது மற்றும் ஏழை எளிய மக்களுக்கான தற்காலிக சில்லறை சலுகைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவை குறிப்பிடத் தகுந்ததாகும். இடைப்பட்ட பல்வேறு காலங்களில் அதிமுக சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா(அப்பட்டமான பாசிஸ்டுகளாக வலம் வந்தவர்கள்), எடப்பாடி போன்றோர் முதலமைச்சர்களாகப் பதவியேற்று இருந்தாலும் அவர்களை திராவிட இயக்க வழித் தோன்றல்கள் என்று கூறுவதற்கு இடம் இல்லாத அளவிற்குப் படுபிற்போக்காளர்களாக ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடியின் 4 ½ ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்தமாகவே தமிழ்நாட்டை காவிக் கும்பல் காலடியில் வீழ்ந்திடச் செய்தார். பெயருக்கு திராவிடம், அண்ணா என்ற பெயரை கட்சியில் தாங்கிக் கொண்டு அவர்களின் கொள்கைகளுக்கு முற்றான எதிர்வினையாற்றினர்.
படிக்க:
♦ திமுகவுக்கு முருகன் மாநாடு! CPI(M) க்கு ஐயப்ப மாநாடு! மார்க்ஸ், பெரியார் சிந்தனைகளுக்கு சவக்குழி!
♦ திமுக அரசாங்கம் முன் வைக்கும் போலீசு ராஜ்ஜியம்! அடிபணியாதே! போராடு!
அதன்பின் 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆனபின் – உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனபின் மற்ற முதலாளித்துவக் கட்சிகளை விட ஓரளவு பெயர் சொல்லக் கூடிய அளவிற்குத் தமிழ்நாட்டில் பல்வேறு அம்சங்களில் பெரியாருடைய கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி காரியம் ஆற்றினர்.
திமுகவின் தொடர் ஓட்டத்தில் சனாதனப் பார்ப்பனக் கொடுமைகளால், அடிமைகளாய் மிதிபட்டுக் கிடந்த சூத்திர பஞ்சம மக்களை பல்வேறு அம்சங்களில் மேல் தூக்கி விட சாதனைகள் பலவற்றை – சீர்திருத்தங்கள் பலவற்றை செய்தனர் என்பதை மறைப்பதற்கில்லை. திமுகவில் உட்புகுந்த சில பிழைப்புவாதிகள் கட்சியின் பெயரை நாளது தேதி வரை தொடர்ந்து கெடுத்துக் கொண்டிருக்கக் கூடிய விவரங்களையும் நாம் அறிவோம்.
தலைமைகளிடமும்கூட தவறுகள் இல்லாமல் இல்லை. என்றாலும், இன்று இந்தியாவில் நிலவக்கூடிய கார்ப்பரேட் – காவிப் பாசிசம், சனாதனப் பார்ப்பனிய எதிர்ப்பு, இரு மொழிக் கொள்கையில் உறுதியாய் இருத்தல், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி தருவோம் என்று சண்டப் பிரசண்டம் செய்த ஒன்றிய காவி அரசுக்கு அடிபணியாமல் துணிச்சலாக எதிர்த்து நின்று, இருக்கும் நிதிச் சூழலைப் பயன்படுத்தி நிர்வாகத்தை மேற்கொண்டது; இந்தியை நுழையவிடாமல் தடுத்தது; நீட் ஒழிப்புக்காகத் தொடர்ந்து போராடியது, இந்தி – சமஸ்கிருத திணிப்பை ஏற்க மறுத்தல், தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்தல், வாலாட்டும் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுதல், அமைச்சரவை தயாரித்து அளிக்கும் உரையில் ஆளுநர் சிலவற்றை நீக்கியும் சிலவற்றை சேர்த்தும் வாசித்த பொழுது சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல அமைச்சரவை எழுதிக் கொடுத்ததையே சட்டமன்ற ஆவணங்களில் பதியச் செய்து நடைமுறைப்படுத்தல், சட்டமன்றத்திலேயே ஆளுநரை புறமுதுகு காட்டி ஓடச் செய்தல், மாநில சுய உரிமைகளுக்காக இயன்ற மட்டும் போராடுதல், எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டு உரிமைகளை தர மறுக்கும் மோடி அமித்ஷா கும்பலை தயவு தாட்சண்யமின்றி துணிந்து எதிர்த்து நிற்றல், மதவெறிப் பாசிச பாஜகவிற்கு எதிராக அகில இந்திய அளவில் INDIA கூட்டணி என்ற அமைப்பு உருவாகுவதற்கு பெரும் பங்கு வகித்தல்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுதல் பிரச்சனையில் 1921-களின் லண்டன் பிரிவ்யூ கவுன்சில் (அன்றைய பிரிட்டிஷ்-இந்திய உச்ச நீதிமன்றம்) அளித்த தீர்ப்புக்கு மாறாக மதவெறி சார்ந்த தன்மையில் அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பிற்கு இசைவு தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடச் செய்ய எத்தனித்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சதிகாரர்களின் வஞ்சகத்தைத் தடுத்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டி மதுரை பகுதியில் அமைதியை உருவாக்கல்… இவை தவிர்த்து வாக்கு வங்கி கட்சிகளுக்கே உரித்தான மக்கள் ‘நலன்’ சார்ந்த சலுகைத் திட்டங்களை மற்ற ஓட்டு கட்சிகளை விடவும் கூடுதலாக செய்தல் என்ற வகையில் திராவிட இயக்க தொடர் ஓட்டத்தில் திமுக-வின் ஸ்டாலின்- உதயநிதி பங்கினை (விமர்சனங்கள் பல இருந்தாலும்) ஓரளவு நாம் பாராட்டலாம்.
படிக்க:
♦ தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!
♦ உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!
மேலே விவரிக்கப்பட்ட திராவிட இயக்க வரலாற்றுச் சம்பவங்கள் எதுவும் நடிகர் விஜய்க்கு தெரியாது; அப்படிப்பட்ட அரசியலை கற்றுக் கொண்டவரும் அவர் இல்லை; அவர் அரசியல்வாதியும் இல்லை; அவர் சினிமாவில் எம்ஜிஆர் போன்று மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக வேடம் கட்டி நடித்தார்; ஆடினார்; சண்டையிட்டார்; குத்தாட்டம் போட்டார்; கலாச்சார சீரழிவைப் பரப்பினார்; கவர்ச்சி மோக பொறுக்கி தற்குறி அரசியலை பாஜக பின்புலத்தில் முன்னெடுத்தார்! இதைத் தவிர அரசியலில் அவர் ஒரு ஏதிலி! நாம் ஏற்கனவே விளக்கியதைப் போல தமிழ்நாட்டில் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா போன்ற முன்னோடிகளின் பெயர்களை உச்சரிக்காமல் காவிச் சாயத்துடன் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ காவிக் கும்பல் விஜய்யை நன்றாகவே பயன்படுத்தி மேற்கண்ட முன்னோடிகளின் படங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவும் செய்தது. விஜய்யும் விலை போக எந்தக் கொள்கைகளை முன்னிறுத்துவது?
எனவே, மேற்கண்ட முன்னோடிகளின் படங்களை மட்டும் போலித்தனமாக தமக்குப் பின்னால் தொங்க விட்டுக் கொண்டு விட்டது. ஆனால் அவர்கள் கொள்கைகளுக்கு நேர் மாறான நடைமுறையை வகுத்துக் கொண்டு செயல்பட்டார் விஜய். அதுவும் தேர்தல் பரப்புரை நேரத்தில் மோடி பங்கேற்ற அதிமுக திருச்சி பொதுக் கூட்டத்தில் உருவாக்கிய மாபெரும் பந்தல் முகப்பின் வளைவில் முக்கியமாக மாட்டப்பட்டிருந்த பெரியார் படத்தை அகற்ற பாஜக உத்தரவிட அதனை சிரமேற் கொண்டு அகற்றிக் காண்பித்தார் எடப்பாடி. அந்தக் காவிக் கூட்டத்தோடு தான் சுயநலப் பிழைப்பு வாதக் காரிய வாதத்திற்காகச் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறார் விஜய். சொத்துக் குவிப்பு நாயகனும், பல்வேறு இனங்களில் வரி எய்ப்பு செய்தவரும், கரூர் சம்பவத்தில் 41 பேர் மரணத்திற்குக் காரணமான வழக்கில் சிபிஐ விசாரணையில் மாட்டிக் கொண்டிருப்பது… உட்பட பல்வேறு மிரட்டல் உருட்டல்களுக்குப் பயந்து சங்கிகள் விரித்த வலையில் சிக்கி, இன்று தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கும் இழி செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறார் விஜய். இப்பொழுது சொல்லுங்கள்…! ஒப்பீட்டளவில் ஸ்டாலின் பரவாயில்லையா? விஜய் பரவாயில்லையா?
என்னதான் இருந்தாலும்… மார்க்சிய-லெனினிய சிந்தனையை உள்வாங்கிக் கொண்டோர் திமுக போன்ற முதலாளித்துவக் கட்சிகளுக்கு ‘வால் பிடிக்கும்’ வகையில் கருத்துப் பதிவிடலாமா என சில ‘மேதாவிகள்’ கதைக்கக் கூடும். ஏன் கதைத்தார்கள்! ‘சில கோரிக்கைகளை முன்வைத்து திமுகவை நிர்பந்தித்தார்களாம்! ஆதரித்தார்களாம்!’ என்ற பாணியில் ஏகடியம் செய்தார்கள்.
ஆனாலும் இந்தியாவைக் கவ்வி இருக்கும் – ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று அறிவித்து இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’-வாக மாற்றிடத் துடிக்கும் – ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நிர்மாணிக்கத் துடிக்கும் ஒரு பிரதான பாசிஸ்ட் இயக்கத்தை எதிர்த்து நிற்க சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கின்ற தேவை எழுகின்ற பொழுது தமிழ்நாட்டைப் பொருத்தமட்டிலும் வாக்கு வங்கி அரசியல் கட்சிகளில் – ஏற்கனவே குறிப்பிட்டது போல் குறைபாடுகள் பல இருந்தாலும் – திமுகவை விடவும் மேலான கட்சி ஒன்றைக் காண முடியவில்லை என்பது மறுக்க இயலாதது. அதிலும் இவ்விடயத்தில் விஜய் மற்ற எல்லோரையும் விடவும் சூனியம் என்பதை அனைவரும் அறியக்கூடும். இவர்தான் பாசிசத்தையும் பாயாசத்தையும் குழப்பிக் கொண்டவர் ஆயிற்றே!
பாராளுமன்றவாத இடதுசாரிகள், மார்க்சிய – லெனினியப் புரட்சிகர இயக்கங்களின் தனித்த (ஐக்கிய முன்னணி) கூட்டணி என்பது அவ்வியக்கங்கள் வளர்ந்தோங்கி நிற்கும் காலக் கட்டம் உருவாகும் சூழலிலுக்கேற்ப செயல் தந்திரங்கள் மாறுபடவே செய்யும். அதுவரை விஜய் போன்ற கவர்ச்சி மோக பொறுக்கி அரசியலற்ற அரசியல்வாதியான மண்குதிரைக்கு – காவியில் கரைந்து போனவருக்கு வால் பிடிப்பது தற்கொலைக்கு ஒப்பானது; ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலை ஆதரிப்பதற்கு ஒப்பானது என அனைத்துத் தரப்பினரும் உணர்தல் வேண்டும். குறிப்பாக தவெக-விற்கு ‘முட்டுக் கொடுப்பவர்கள்’ உணர்ந்தாக வேண்டும்.
- எழில்மாறன்







கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை தாவு கொடுக்கும், இந்திய நாட்டை இந்து நாடாக மாற்றத் துடிக்கும் காவி பாசிச கும்பல்களை எதிர்த்து நிற்பதற்கு திராணியற்ற விஜய் என்பதை அப்பட்டமாக உணர்த்தி உள்ளீர்கள் நன்றி 👌👌💐💐💐💐🙏
கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய நாட்டை காவு கொடுக்கும்..