கும்பல் படுகொலை என்றால் என்ன?| சிந்தன் EP

“ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் தினமும் மாடு வெட்டி தின்னுட்டே இருப்பாங்க” “நம்ம குலதெய்வத்தை வெட்டி தின்பது நம்ம தாயை வெட்டி தின்பது போல” போன்ற செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

கும்பல் படுகொலை என்றால் என்ன?
(ஒரு விரிவான கட்டுரை)

இக்கட்டுரையைத் துவங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய பட்டியலைப் பார்த்துவிடுவோம்.

ஜூன் 2021, காஷ்மீர், Aijaz Dar
ஜூன் 2021, இராஜஸ்தான், Babu Bheel
ஜூன் 2021, அசாம், Sarat Moran
ஜூன் 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shera
மே 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shakir
ஜூன் 2020, கர்நாடகா, Mohammed Hanif
செப்டம்பர் 2019, மேற்குவங்கம், Kabir Sheikh
ஜூலை 2019, மேற்குவங்கம், Faiz
ஜூன் 2019, ஜார்கண்ட், Tabrez Ansari
டிசம்பர் 2018, பீகார், Mohammed Kabul
அக்டோபர் 2018, பீகார், Zainul Ansari
செப்டம்பர் 2018, ராஜஸ்தான், Azhar Khan
செப்டம்பர் 2018, மணிப்பூர், Mohammed Farooque Ahmad
ஆகஸ்ட் 2018, உத்தரப்பிரதேசம், Shahrukh Khan
ஜூலை 2018, ஆந்திரப்பிரதேசம், Farooq Sheik Hussein
ஜூலை 2018, ராஜஸ்தான், Akbar Khan
ஜூலை 2018, கர்நாடகம், Mohammad Azam
ஜூலை 2018, பீகார், Mohammad Riyaz
ஜூன் 2018, திரிபுரா, Zahir Khan
ஜூன் 2018, உத்தரப்பிரதேசம், Mohammad Qasim
ஜூன் 2018, ஜார்கண்ட், Murtaza Ansari
ஜூன் 2018, ஜார்கண்ட், Sirabuddin Ansari
மே 2018, மத்தியப் பிரதேசம், Siraj
டிசம்பர் 2017, ராஜஸ்தான், Mohammad Afrazul Khan
நவம்பர் 2017, ராஜஸ்தான், Ummar Khan
செப்டம்பர் 2017, ராஜஸ்தான், Amad Khan
ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Hafizul Sheikh
ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Anwar Hussain
ஜூன் 2017, ஜார்கண்ட், Asgar Ali aka Alimuddin Ansari
ஜூன் 2017, மேற்குவங்கம், Md Nasir
ஜூன் 2017, மேற்குவங்கம், Mohammad Samiruddin
ஜூன் 2017, மேற்குவங்கம், Nasirul Haque
ஜூன் 2017, ஹரியானா, Hafiz Junaid
ஜூன் 2017, ராஜஸ்தான், Zafar Khan
மே 2017, ஜார்கண்ட், Sheikh Siraj
மே 2017, ஜார்கண்ட், Sheikh Naim
ஏப்ரல் 2017, அசாம், Riazuddin Ali
ஏப்ரல் 2017, அசாம், Abu Hanifa
ஏப்ரல் 2017, ராஜஸ்தான், Pehlu Khan
செப்டம்பர் 2016, குஜராத், Mohammad Ayyub Mev
மார்ச் 2016, ஜார்கண்ட், Inayatullah Khan
மார்ச் 2016, ஜார்கண்ட், Mohammad Majloom
ஜனவரி 2016, மத்தியப் பிரதேசம், Mohammed Hussain
அக்டோபர் 2015, ஹிமாச்சல் பிரதேசம், Noman
அக்டோபர் 2015, ஜம்மு, Zahid Ahmad Bhat
செப்டம்பர் 2015, உத்தரப்பிரதே சம், Mohammad Akhlaq
ஜூன் 2014, மகாராஷ்டிரா, Mohsin Shaikh
இங்கே மேலே குறிப்பிட்ட பட்டியல் ஏதோவொரு ஊரின் வாக்காளர் பட்டியல் கிடையாது. இதில் உள்ளவர்களுக்கெல்லாம் சில பொதுத்தன்மை இருக்கிறது.
1. அவர்களின் பெயர்களை வைத்தே கண்டுபிடித்துவிடுவீர்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்
2. 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதிலும் பாசிச இந்துத்துவத்தால் “கும்பல் படுகொலை” செய்யப்பட்டவர்கள்
3. அவங்க அனைவரும் எந்த அமைப்பிலோ தத்துவத்தின்
பின்னாலோ இல்லாதவர்கள்
4. கொல்லப்பட்ட யாருக்குமே இதுவரையிலும் சரியான நீதி கிடைக்கவில்லை
அதென்ன கும்பல் படுகொலை?
கும்பலாகப் போய் கொலை செய்வதுதான் கும்பல் படுகொலையா? என்கிற கேள்வி நமக்கு வரும். கிட்டத்தட்ட உண்மை தான். ஆனால் அதற்கு மேலும் கொஞ்சம் விளக்கம் சொல்லலாம். இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை(?) இந்துத்துவ பாசிசத்தைத் தான் சேரும். கும்பல் படுகொலைக்கு முன்னோர்கள் யாரெல்லாம் என்று பாத்தால், இஸ்ரேலும் அமெரிக்க வெள்ளையின வெறியர்களும் தான்.
இயல்பாகவே ஒவ்வொரு மனிதரிடமும் ஏராளமான அடையாளங்கள் இருக்கும். ஒரேயொரு அடையாளம் கொண்ட மனிதர் என்று எவருமே இருக்கவே முடியாது.
நம்மையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழில் எழுதவும் பேசவும் செய்கிறோம் என்பதால் மொழிவழியாகப் பார்த்தால் நாம் தமிழர்கள் என்கிற அடையாளம் கிடைக்கலாம். அதுவே தேசம் என்று பார்த்தால், இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்தியக் குடியுரிமையை வைத்திருப்பதால், இந்தியர் என்கிற அடையாளம் இருக்கலாம். பிறப்பால் பெண்ணாக இருப்பவர்கள், பாலினரீதியாக பெண் என்கிற அடையாளத்துடனும், ஆணாகப் பிறக்கிறவர்கள் ஆண் என்கிற அடையாளத்துடன் இருக்கலாம். பெற்றோரின் மதத்தை நமக்கும் அளித்து ஒரு மத அடையாளமும் வந்துவிடுகிறது. நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நம்முடைய பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் ஒரு சாதியைச் சூட்டி நமக்கு ஒரு அடையாளம் கொடுக்கிறது. நாம் செய்யும் வேலையின் காரணமாக வேலை தொடர்பான அடையாளம் இருக்கலாம். வேலையைத் தாண்டி வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கோ திறமையோ இருந்து அதில் கவனம் செலுத்துவோருக்கு அந்த அடையாளம் இருக்கலாம். ஒருவர் கிரிக்கெட் விளையாடுபவராக இருந்தால், கிரிக்கெட்டர் என்கிற அடையாளம் வருமல்லவா, அதுபோல.
ஆக, எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் ஒற்றை அடையாளம் என்பது இருக்கவே இருக்காது. இடத்திற்கும் சூழலுக்கும் நேரத்திற்கும் தகுந்தவாறு எவரொருவருக்கும் ஏராளமான அடையாளங்கள் நிச்சயமாக இருக்கும்.
அப்படி இருக்கிற பல அடையாளங்களில் தனக்கு வசதியாக இருக்கிற ஒரேயொரு அடையாளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதே அடையாளத்திற்குள் வருவதாக அவர்கள் கணக்கிடப்படுபவர்கள் அனைவரையும் “நாம்” என்று சொல்லிக்கொண்டும், அந்த அடையாளத்தில் வராதவர்களை எல்லாம் “அவர்கள்” என்று எதிர்தரப்பில் நிற்கவைத்தும் வகைப்படுத்துவதற்குப் பெயர்தான் பாசிசம். பாசிசம் பற்றி பெரிய பெரிய விளக்கங்கள், தத்துவங்கள், கொள்கைகள் எல்லாம் இருக்கு. அதை அறிவில் பெரியவர்கள் விளக்குவார்கள். ஆனால் ரொம்ப ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், “நாம்” யாரென்றும், நாமல்லாத “அவர்கள்” யாரென்றும் தீர்மானித்துவிட்டு, “நாம்” வெர்சஸ் “அவர்கள்” என்ற முடிவுக்கு வருவது தான் பாசிசம்.
ஹிட்லர் காலத்தில் “ஆரியர்கள் தான் நாம்” என்று ஹிட்லர் முடிவுசெய்து, “கம்யூனிஸ்ட்டுகளையும் யூதர்களையும் அவர்கள்” என்று முடிவு செய்து இனவழிப்பையும் போரையும் படுகொலைகளையும் நிகழ்த்திய நாஜியிசம் தான் அன்றைய பாசிசம்.
இன்றோ அது உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளையும் முஸ்லிம்களையும் முற்போக்காளர்களையும் எதிர்க்குரல் எழுப்புபவர்களையும் “அவர்கள்” என்று முடிவுசெய்துவிட்டு, அந்தந்த நாட்டுக்கு ஏற்ப “நாம்” என்பதை நவீன பாசிஸ்ட்டுகள் முடிவெடுத்து விடுகிறார்கள். ஐரோப்பாவைப் பொறுத்தவரை வெள்ளைக் கிருத்துவர்கள் “நாம்” ஆகவும், முஸ்லிம்களும் அகதிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் “அவர்கள்” ஆகவும் இன்றைக்கு இருக்கிறார்கள். அப்படியே அமெரிக்கா போனால், அங்கே வெள்ளையின அமெரிக்கர்கள் “நாம்” ஆகவும், தென்னமெரிக்கர்களையும் முஸ்லிம்களையும் பூர்வகுடி செவ்விந்தியர்களையும் “அவர்கள்” ஆகவும் நிர்ணயித்திருக்கிறது அமெரிக்க பாசிசம். இந்தியாவிற்கு வந்தால், முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் தலித்துகளையும் கம்யூனிஸ்ட்டுகளையும் “அவர்கள்” ஆக நிர்ணயித்துவிட்டு, “நாம்” யாரென்பதை மட்டும் நேரத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு மாநிலத்திற்குத் தகுந்தவாறும் மாற்றிக்கொள்கிறது இந்தியாவின் இந்துத்துவ பாசிசம்.
படிக்க:
ஹிட்லர் காலத்தில் ஹிட்லர் மட்டுமே சர்வாதிகாரத்துடன் இத்தனை கோடி யூதர்களைக் கொன்றிருக்க முடியாது. “நாம்” வெர்சஸ் “அவர்கள்” என்பதை எளிய மனிதர்களின் மனதில் ஆழமாக வேரூன்றவைத்ததன் மூலமாகத் தான் செய்ய முடிந்தது. இன்றைக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊழியர்களா நாடு முழுவதும் அலைந்து திரிந்து அப்பாவி முஸ்லிம்களை கும்பல் படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்? நிச்சயமாக இல்லை. அதற்கு பதிலாக முஸ்லிம்கள் யாருமே “நம்முடைய கூட்டத்தில் கிடையாது” என்று ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டு, கொலைகள் செய்யும் பொறுப்பை மக்களிடமே கொடுத்துவிடுகிறார்கள்.
அக்லக் கொலை – சொல்லமறந்தவை:
நம்ம எல்லாருக்கும் அக்லக் கொலை குறித்து நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன். அக்லக்கிற்கு நடந்த அநியாயத்தில் நாம் கவனிக்காமல் தவறவிட்ட சில சின்னஞ்சிறிய செய்திகளை இணைத்து சொல்ல விரும்புகிறேன்.
அக்லக் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் ஊரில் மனைவி, தம்பி, மகன்களுடன் வசித்து வந்தார். பக்ரித்தோ ரம்சானோ வந்துவிட்டாலே, “என்ன பாய், பிரியாணி இல்லையா?” என்று மற்ற மதத்தினர் கேட்கும் வழக்கம் நம் ஊரில் இருக்கிறது. அத்துடன் முஸ்லீமல்லாத குடும்பங்கள் வீட்டில் அன்றைக்கு பிரியாணி செய்திருக்க மாட்டார்கள் என்கிற காரணத்தினாலேயே அந்த பண்டிகை நாட்களில் அக்லக் வீட்டில் இருந்து அக்கம்பக்கத்து இந்துக் குடும்பங்களுக்கு பிரியாணி சென்று சேர்ந்துவிடும். இது இன்று நேற்றல்ல. அவருடைய குடும்பம் 5 தலைமுறைகளாகவும் 70 ஆண்டுகளுக்கு மேலாகவும் தாத்ரி பகுதியில் வசித்துவந்த காலகட்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருந்திருக்கிறது.
கொலை செய்யப்பட்ட அக்லக்
மோடி பிரதமராவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே மிகப்பெரிய இயக்கமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த பசு பாதுகாப்பு இயக்கங்கள் உத்தரபிரதேசத்தின் பல ஊர்களில் நுழைந்து வேலையைக் காட்டத் துவங்கின. அப்படித்தான் வேலை வெட்டியே இல்லாமலும் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டு ஊரில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த இந்து இளைஞர்களிடம் பசு பாதுகாப்பு என்கிற எண்ணம் ஊடுருவியது.
“ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் தினமும் மாடு வெட்டி தின்னுட்டே இருப்பாங்க”
“நம்ம குலதெய்வத்தை வெட்டி தின்பது நம்ம தாயை வெட்டி தின்பது போல”
போன்ற செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், முஸ்லிம்கள் என்றாலே தன் தாயைக் கொல்பவர்கள் என்பதான பிம்பம் அந்த இளைஞர்களின் மனதில் இறக்கிவிடப்பட்டுவிட்டது. அந்த சூழலில் ஒரு நாள் திடீரென்று தாத்ரியில் ஒரு மாடு காணாமல் போய்விட்டது என்கிற செய்தி பரவுகிறது. அது யாருடைய மாடு, அந்த மாட்டின் உரிமையாளர் யார், உண்மையிலேயே ஒரு மாடு காணாமல் போயிருக்கிறதா என்று எதுவுமே தெரியாமல், அந்தப் பகுதியில் வாழ்ந்த அக்லக்கிடம் போய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் விசாரித்திருக்கிறார்கள்.
“ஐயோ, எங்க பரம்பரையே மாடு சாப்பிட்டதே இல்லை. மாடு சாப்பிடும் பழக்கம் எங்க குடும்பத்துக்கே இல்லை” என்று அக்லக் சொல்லியதை யாரும் நம்பவில்லை. மாலை ஆனது, அந்த ஊர் கோவிலில் இருக்கிற மைக் செட்டில், அந்தக் கோவிலின் பூசாரி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.
அதாவது,
“அக்லக் தான் ஒரு பசு மாட்டைக் கடத்திக்கொண்டு போய் வெட்டி சாப்பிட்டுவிட்டார். இதற்கு ஒரு முடிவுகட்ட நம் ஊரில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மருக்கு அருகே இந்துக்கள் அனைவரும் உடனடியாக வரவேண்டும்” என்று பூசாரி அறிவித்தார்.
பூசாரியின் வார்த்தையைக் கேட்டும், பசு குண்டர்களின் ஒருங்கிணைப்பினாலும் பலரும் டிரான்ஸ்பார்மருக்கு அருகே ஒன்று கூடினர்.
அக்லக்கின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, “மாட்டுக்கறி வைத்திருந்தார்” என்று சொல்லி அவரை அடித்தே கொன்றது அந்த கூட்டம். வெறுமனே அவரைக் கொன்றால் மட்டுமே போதும் என்கிற வகையிலான தாக்குதல் அல்ல அது. கொடூர வெறிகொண்டு தாக்கியிருக்கிறார்கள். அக்லக்கின் ஒரு காது முழுமையாக துண்டாக்கப்பட்டிருந்தது. இன்னொரு காது வெட்டப்பட்டிருந்தது. உதடுகள் இரண்டும் துண்டுகளாக இருந்தன. மூக்கில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வலது கண் அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை, கன்னத்தில் இருந்து முழுவதுமாக தோல் உரித்து எடுக்கப்பட்டிருந்தது. மண்டையின் ஓடு உடைந்திருந்தது. இடது கை உடைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்து எலும்பும் முதுகெலும்பும் கைவிரல்களும் முறிக்கப்பட்டிருந்தன. முட்டி உடைக்கப்பட்டிருந்தது. முட்டிக்குக் கீழே உள்ள கால்கள் ஹேங்கரில் தொங்க விடப்பட்டிருக்கிற சட்டை போல தொங்கிக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் செய்தவர்கள் யார்?
அதே ஊரில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகைக்கும் அக்லக் கொடுத்த பிரியாணியை உண்டவர்களில் சிலரும், அவர்களை ஊக்கப்படுத்திய பசு குண்டர்களும், அடுத்த வேளை உணவுக்கோ வேலைக்கோ கூட வழியில்லையென்றாலும், தன்னுடைய அடையாளமாக முன்னிறுத்தப்படும் இந்து என்கிற அடையாளத்தை நம்பிய இளைஞர்களும் தான்.
அதன்பின்னர் நடந்தவை எல்லாம் பல ஊடகங்கள் சொல்ல மறந்தவை. அக்லக்கின் ஒரு மகனான டேனிஷ் அக்லக்கும் மிகக்கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின்னர் இரண்டு முறை ஆப்பரேசன் செய்ய நேர்ந்தது. அதிர்ச்சியில் தான் இன்னமும் இருக்கிறார். இரவு 10.30க்கு காவல்துறை அங்கே வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கழித்து, சுமார் 1.30 க்கு தான் அக்லக்கின் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 2.5 கிலோ ஏதோவொரு இரைச்சியை எடுத்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.
மரண ஊர்வலத்தில் அந்த ஊரைச் சேர்ந்த இந்துக்களே வரமுடியாத சூழல் உருவாக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் அக்லக் மாட்டுக்கறி தின்னதால தான் பிரச்சனை. அக்லக் அதை சாப்பிடாம இருந்திருந்தா எதுவும் ஆயிருக்காது தான” என்று பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டது. அக்லக்கின் சொந்தக்காரர்களையே இறுதிச்சடங்கிற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த சற்று நேரத்தில் அந்த எம்பி தொகுதியான கௌதம் புத்தா நகரின் பாஜக எம்பி மகேஷ் ஷர்மா அங்கே வந்தார்.
“இது தெரியாமல் நடந்த ஒரு விபத்து தான். இதைப் போய் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.
ஒரு கொடூரமான கொலையைச் செய்துவிட்டு, ஒட்டுமொத்த மக்களும் அக்கொலையை நியாயப்படுத்தி பேசவைக்கும் செயலில் இறங்கினர். இதுதான் கலவரத்திற்கும் கும்பல் படுகொலைக்குமான மிகப்பெரிய வித்தியாசம். அடித்துக்கொன்றபின்னரும், செத்தவன் மேல்தான் தப்பு என்று பரப்புரை செய்யப்பட்டது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக்கின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால் மறுபுறம் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே கொண்டு வரப்பட்டனர். அதற்கு இந்துத்துவ வக்கீல்கள் சங்கத்தினர் களத்தில் இறங்கி வேலை செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அந்த கொலைகாரர்களுக்கு National Thermal Power Corporation நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தார் பாஜகவின் தாத்ரி நகர் எம்எல்ஏ தேஜ்பால் சிங்.
அக்லக்கின் இன்னொரு மகன் என்ன செய்கிறார் தெரியுமா? இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறார். இனி அவர் குடும்பத்தில் யாராவது இராணுவத்தில் சேர்வார்களா? இனி இந்தியா தன்னுடைய தேசம் என்கிற எண்ணம் அவர்களுக்கு வருமா?
தாத்ரி நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்திவந்த அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இங்கு இஸ்லாமியர்கள் வாழ்வதற்கான அச்சத்தை திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
இப்படியாக அவர்கள் செய்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் உண்மையான கதைகள் நிறைய இருக்கின்றன.
படிக்க:
பாஜக தேர்தலில் வெல்லும் போதெல்லாம் “பாசிச ஹிட்லரையே தோற்கடித்த செங்கொடி எங்களுடையது. அதனால் நிச்சயமாக இந்துத்துவ பாசிசத்தையும் தோற்கடிப்போம்” என்று சொல்வோம். இது தளர்வடைந்திருக்கும் நம் மனதைத் தேற்றுவதற்கு உதவும் தான். இந்துத்துவாவை தோற்கடிப்பதற்கான கொள்கை வலு நம்மிடம் இருக்கிறது தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், ஹிட்லர் காலத்தில் ஹிட்லரை எதிர்த்தவர்களிடம் இருந்த பலம் இன்றைக்கு நம்மிடம் இல்லை என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு களத்தில் பணி செய்தால் தான் இந்த இந்துத்துவாவைத் தோறகடிப்பதற்கான பலத்தினைப் பெறமுடியும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹிட்லர் காலத்தில் ஹிட்லருடன் சரிசமமாக சண்டை போடுமளவுக்கு ஒரு சோவியத் யூனியன் இராணுவம் நம்மிடம் இருந்தது. அதற்கு துணையாக சிலப்பல நாடுகளின் இராணுவமும் அரசுகளும் இருந்தன. ஆனால் அப்படியான இராணுவமெல்லாம் நம்மிடம் இன்றைக்கு இல்லை. ஜெர்மனியில் அட்டூழியம் செய்த நாஜிக் கொடூரர்களைத் தேடிப்போய் ஒழிப்பதற்கு சோவியத் யூனியன் இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற இந்துத்துவ பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு வெளியில் இருந்தெல்லாம் வருவதற்கு யாருமில்லை.
இன்றைக்கு பாசிச சக்திகளாக இருக்கிற அரசுகள் உருவாக்கி வைத்திருக்கிற சட்டங்களுக்கு எதிராக செயல்படமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் நம் பழைய வரலாற்று வெற்றிகளை மட்டுமே பேசுவதோடு நிற்காமல், இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை மிகவிரிவாக ஆய்வு செய்து, அதனை வெல்வதற்கான திட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வகுக்கவேண்டும். நாம் காலம் தாழ்த்தினால் என்னவாகும் என்பதற்கு இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டினை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
இஸ்ரேலில் தொடர்ச்சியாக பரப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எதிரான யூத ஜீயோனிச அரசியலால், இன்னைக்கு என்ன ஆகியிருக்கிறது. அந்த அரசியலை எதிர்க்கிறவர்களே இஸ்ரேலிய அரசியல் சூழலில் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. முதலிரண்டு கட்சிகளில் ஒன்றாக இருந்த தொழிலாளர் கட்சி காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக, யார் மிகச்சிறந்த யூத இனவெறிக்கட்சி என்பதில் தான் இன்றைக்கு இஸ்ரேலில் இருக்கிற முதல் ஐந்து கட்சிகளிடையே இருக்கிற பலமான போட்டியே. இதை அப்படியே இந்தியாவுடன் இணைத்துப் பாருங்கள். இன்னும் ஒன்றிரண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால், “யார் சிறந்த இந்துத்துவக் கட்சி” என்கிற போட்டியில் தான் எல்லா முன்னணிக் கட்சிகளும் இறங்கிவிடும். அதற்கு சாத்தியமே இல்லை என்றெல்லாம் சொல்லவே முடியாது. பாஜகவைத் தவிர வேறு பல கட்சிகளும் கூட இன்றைக்கு இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
கும்பல் படுகொலையை நாம் அனைவரும் கும்பலாக ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும்.
நன்றி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here