
ஈரான் நாட்டின் மீது ஒரு புதிய போரை தொடங்கி நடத்தி வருகிறது உலக மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்கா. போரின் பரப்பெல்லையானது வளைகுடா நாடுகளைக் கடந்து இந்தியப் பெருங்கடல் வரை நீள்கிறது.
மனிதகுலத்துக்கு எதிரான அநீதியான ஆக்கிரமிப்புப் போர்களைத் திணிக்கும் ஏகாதிபத்தியங்களைக் கண்டித்து, அமெரிக்காவைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவையும், அதன் பொருட்களையும் புறக்கணியுங்கள்! என்று உலகம் முழுவதும் பிரச்சாரங்களும், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தை நாம் பாராட்ட வேண்டிய சூழல் வந்துள்ளது. அந்த அளவிற்கு அது என்ன செய்து விட்டது என்பதை பார்ப்போம்.
“டிரம்ப்புக்கு பணிய மறுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனர்கள்”!
போர்க்களத்தில் ’கிளாட்’ AI ஐ சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் அமெரிக்க ராணுவம்! என்ற தலைப்பில் தீக்கதிரில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அந்தக் கட்டுரையானது நாம் எடுத்துள்ள தலைப்பு குறித்து சுருக்கமாக விளக்குகிறது.
தொண்டையில் சிக்கிய முள்!
“அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள் அனைவரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பிடிக்குள் வந்துவிட்ட சூழலில், ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தின் நிறுவனர்கள் மட்டும் அவரது அதிரடி உத்தரவுகளுக்குப் பணிய மறுத்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

“ ‘கிளாட்’ (Claude) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய இந்த நிறுவனம், தனது தொழில்நுட்பத்தைப் போர்க் குற்றங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது.” என்று விவரிக்கிறது.
ஏகாதிபத்தியங்கள் தமது நாட்டின் கார்ப்பரேட்டுகள் உலகை சூறையாடுவதற்கும் – இயற்கை & கனிம வளங்கள், மனித வளம், சந்தை உள்ளிட்டவற்றுக்காகவும் மேலாதிக்க வெறி கொண்டு உலக நாடுகளின் மீது பாய்கிறார்கள்.
அமெரிக்காவானது தான் திணிக்கும் திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் ஏற்க மறுப்பவர்களையும் தனக்கு எதிராக கூட்டணி கட்டிக்கொண்டு டாலருக்கு சவால் விடுபவர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பகிரங்க ஆக்கிரமிப்புப் போரையும் நடத்தி வருகிறது. அமெரிக்க முதலாளிகளோ தமது நலனுக்காக நடத்தப்படும் இப்போரை ஆதரித்து அதிபர் ட்ரம்புக்கு துணை நிற்கிறார்கள்.
ஆனால் இந்த பட்டியலில் சேர மறுத்து, ரத்தம் குடிக்கும் ஓநாயான ட்ரம்ப்பின் அரசை அம்பலப்படுத்தும் வகையில் தனித்து நிற்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனமான ”ஆந்த்ரோபிக்”.
யானைக்கும் அடிசறுக்கும்!
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் ஓபன்ஏஐ-ன் சாம் ஆல்ட்மேன் போன்ற உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரும் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கு இணங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei), பென்டகனின் சில நிபந்தனையற்ற கோரிக்கைகளை நிராகரித்து ஜனாதிபதியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
குறிப்பாக, ”அமெரிக்கக் குடிமக்களைப் பெரிய அளவில் உளவு பார்ப்பதற்கோ (Mass surveillance) அல்லது மனிதக் கட்டுப்பாடற்றத் தன்னாட்சி ஆயுதங்களாகவோ (Autonomous weapons) தனது மென்பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமோடி பிடிவாதமாக உள்ளார். இந்தத் துணிச்சலான முடிவு காரணமாகவே, தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) ”கிளாட்” மென்பொருள் முதலிடத்தைப் பிடித்துள்ளது” என விவரிக்கிறது தீக்கதிரின் கட்டுரை.
மேலும் படிக்க:
♦ ஈரான் மீதான போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது மென்பொருளை பயன்படுத்தும் அனைத்து நாடுகளிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து தரவுகளை திருடி அமெரிக்காவிற்கு தருகிறது என்று அம்பலப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கடற்படையில் மைக்ரோசாப்ட் மென்பொருளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலியா உத்தரவு போட்டதும் நடந்தது. அந்த அளவு அமெரிக்க கார்ப்பரேட்டுகள் தனது நலனுக்காக செயல்படும் அமெரிக்க அரசுக்கு உறுதுணையாகவே செயல்பட்டு வந்துள்ளனர். செயல்பட்டும் வருகின்றனர்.
பில்கேட்ஸ் உள்ளிட்டவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குத் துரோகம் செய்து உளவு பார்க்கும் போது, பில்கேட்ஸ்களின் பிரதிநிதிகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பாசிஸ்ட்டான ட்ரம்ப் நேர்மையான வழிமுறைகளைத்தான் கையாளுவார் என்று நம்புவது சிறுபிள்ளைத்தனமானது.
தடையை மீறித் தொடரும் ராணுவப் பயன்பாடு!
ஆந்த்ரோபிக் நிறுவனம் டிரம்பின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், அந்த நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் வைத்த டிரம்ப் நிர்வாகம், அனைத்து அரசு நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள் கிளாட் மென்பொருள் பயன்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், இந்தத் தடை என்பது ஒரு கண்துடைப்பு மட்டுமே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
“நான் சொல்வதை நானே கேட்க மாட்டேன்!”
தன்னால் தடை விதிக்கப்பட்டு, கருப்பு பட்டியில் சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்தை அமெரிக்க அரசு மட்டும் பயன்படுத்தலாமா? ”அது வேற வாய்! இது நாற வாய்!” என்பது தான் நடக்கிறது.
பாசிஸ்டுகள் எப்பொழுது சொன்னதை செய்திருக்கிறார்கள்? ஈரான் மீதான போரில், அமெரிக்க ராணுவம் ‘பாலன்டிர்’ (Palantir) நிறுவனத்தின் மென்பொருள் வழியாகக் கிளாட் ஏஐ தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஈரான் போரின் முதல் நாளிலேயே, 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தேர்வு செய்ய இந்த கிளாட் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. “எதிரிகளைக் குறி வைப்பதற்காக எந்தத் தொழில்நுட்பத் தடையையும் மீறுவோம்” என்று ராணுவ உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் அரசின் தடையை ராணுவம் தன்னிச்சையாக மீறுகிறதா? அல்லது மீறச்சொல்லி அரசாங்கமே வழிகாட்டுகிறதா?
உக்ரேன் போரின் போது ரஷ்ய ஐரோப்பிய முரண்பாட்டில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை – அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கச்சா எண்ணெய், எரிவாயு விற்பனையை ரஷ்யா – நிறுத்தியது.
அதே நேரம் இந்தியாவை விட்டு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க வைத்து, சுத்திகரிக்க வைத்து, அதை ஐரோப்பிய நாடுகள் தேவையான அளவு இறக்குமதி செய்து கொண்டன. தடையை போடுவது போல் போட்டுவிட்டு கொல்லைப்புற வழியில் அதை மீறிக் கொண்டனர். அதே போல் தான் தலையைச் சுற்றி காதை தொடும் தந்திரத்தை பென்டகனின் போர் வெறியர்களும் செய்கிறார்கள்.
இப்படி குறுக்கு வழிகளிலும் கூட கிளவுட் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றையெல்லாம் பயன்படுத்திதான் தாக்குதல் தொடுக்க வேண்டும் எனும் போது, இத்தகைய தாக்குதல்கள் சரியாகத்தான் நடக்கின்றனவா? செயற்கை நுண்ணறிவு சரியாகத்தான் இலக்குகளை தீர்மானிக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.
தவறிழைக்கும் செயற்கை நுண்ணறிவு!
செயற்கை நுண்ணறிவு மூலம் இலக்குகளைத் தீர்மானிப்பது போர்க்களத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கிறது. கடந்த மார்ச் 1 அன்று தெற்கு ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இத்தகைய அல்காரிதங்களின் பிழையால்தான் எனக் கூறப்படுகிறது. மனிதர்களின் நேரடி மேற்பார்வையின்றி மென்பொருள்கள் மூலமே இலக்குகளைத் தீர்மானிக்கும் போது, அது போர்க் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என யுனெஸ்கோ மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மேலும் படிக்க:
♦ மனித குலத்தை ஒழித்துக் கட்ட வந்துள்ள செயற்கை நுண்ணறிவு திறன்! (AI)
ஏகாதிபத்தியங்களுக்கு பிற உலக நாடுகளின் மக்கள் பலியாவதைக் கண்டு வருத்தமோ, கவலையோ இருப்பதற்கு சாத்தியம் இல்லை தான். பாசிஸ்ட்டுகள் தாம் அரங்கேற்றும் படுகொலைகளால் பெருமிதமும் கிளர்ச்சியும் அடைகிறார்கள் என்பதுதான் வரலாறு. குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த காவிப் பாசிஸ்ட்டான மோடி நெஞ்சை நிமித்திக்கொண்டு தான் சுற்றி வருகிறார். இருப்பினும், அனைத்தும் பாசிஸ்ட்டுகளின் விருப்பப்படியே நடப்பதில்லை தான்.
டிரம்பின் குதிகாலில் குத்திய முள்!
போர் குற்றங்களுக்குக் கிளவுட் தொழில்நுட்பத்தை தரமாட்டேன் என்று ஆந்த்ரோபிக்ஸ் அறிவித்தது தொண்டையில் சிக்கிய முள் என்றால், அதிபர் டிரம்ப்பின் குதிகாலிலும் சில முட்கள் குத்தவே செய்கின்றன.
சாம் ஆல்ட்மேனின் ‘ஓபன்ஏஐ’ நிறுவனம் எவ்வித நிபந்தனையுமின்றி பென்டகனுடன் கைகோர்த்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் “நாம் பிரிக்கப்படமாட்டோம்” (We Will Not Be Divided) என்ற பெயரில் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளனர். தொழில்நுட்பம் என்பது மனித குலத்தின் மேன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடாது என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் நிறுவனர்களும், மென்பொருள் நிறுவன ஊழியர்களும் காட்டும் இந்த எதிர்ப்பானது வரும் நாட்களில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்கும் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாம் அல்லது அமெரிக்க போர் வெறிக்கு எதிரான எதிர்ப்புகள் ஈவிரக்கமின்றி நசுக்கவும் படலாம். எனினும், அமெரிக்காவின் போர்வெறியை கண்டித்து போராடும் உலக மக்களுடன் துணிச்சலாக பாசிச ட்ரம்ப்பை எதிர்த்து நிற்கும் அமெரிக்காவின் நிறுவனங்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
- இளமாறன்







டிரம்பின் தொண்டையில் சிக்கிய முள்ளாக ஆந்த்ரோபிக் !
தீக்கதிர் கட்டுரையில் வந்த ஒரு சம்பவத்தை எடுத்து அதன் மீதான ஒரு கட்டுரையை உருவாக்கிய கட்டுரையாசிரியர் இளமாறன் அவர்களுக்கு நன்றி
மேலும் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனம் ஆந்த்ரோபிக் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களைக் காட்டிலும் முன்மாதிரியாக ட்ரம்பின் சட்டவிரோத செயல்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது ( கிளவுட்)
AI மென்பொருளை அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உறுதியாக நிற்கிறது என்பது பாராட்டுக்குரிய விஷயம்
கிளவுட் மென்பொருள் ஏ ஐ தொழில் பார்த்தால் ராணுவத்தில் துல்லியமாக இலக்குகளை தாக்க முடியும் என உருவாக்கப்பட்டதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கள்ளத்தனமாக பயன்படுத்தி ஈரான் மீது போடப்பட்ட ஏவுகணை தவறுதலாக பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்து 150-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பலியான விஷயம் அனைவரும் கண்டித்து வருகிறார்கள் என்ற செய்தியை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொண்டேன்