“சங்கி” என்ற சொல் 2014 – ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது மத்திய அரசாங்கத்தில் மோடி-ஷா பாஜக அரசு பதிவியை கைப்பற்றியவுடன் அதிகமாக பேசப்படும் ஒரு அரசியல் சொல்லாகும். 2014- க்கு பிறகு நாடெங்கும் பல்வேறு வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்கள் நடந்தவண்ணம் இருப்பதை நம்மில் பலரும் அறிவோம்.அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தாக்கப்பட்டார்கள். சாதியின் பெயராலும்,மதத்தின் பெயராலும் கலவரங்கள் நடந்தவண்ணம் இருந்தபோதே அறிவுசார் தளத்தில் செயல்பட்டு வந்த கோவிந்த் பன்சாரே தொடங்கி கௌரி லங்கேஷ் வரை சங் பரிவாரத்தால் பலரும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்தச் சூழலில் இந்திய மக்களிடம் இந்துத்துவ சங்பரிவார கும்பலை அடையாளம் காட்ட அவர்களை குறிப்பிட்ட சொல்லின் மூலம் விளிக்க வேண்டிய தேவை அதிக முக்கியத்துவம் பெற்றது. எனவே “சங்கி” என்று அவர்களை குறிப்பிட்டு, சமூகத்தில் இருந்து தனியாக அடையாளம் காட்டும் போக்கு முன்னணிக்கு வந்தது. இந்த நிலையில் மற்றைய ஜனநாயக முற்போக்கு அரசியல் பேசக்கூடிய நபர்கள் சமூக வலைதளத்தில் சங்கி என்ற சொல்லின் அரசியல் முக்கியத்துவத்தை உணராமல் எல்லோரையும் சகட்டுமேனிக்கு சங்கி என்று முத்திரை குத்த ஆரம்பித்து “கருப்பு சங்கி,நீல சங்கி,சிவப்பு சங்கி,பச்சை சங்கி,வெள்ளை சங்கி”என்று விளிக்கத் தொடங்கினர். இந்தப்போக்கு சங் பரிவார் கும்பலுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற அரசியல் பிரக்ஞை அற்று எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிற இன்றைய சூழலில் தோழர் லத்தீஸ் அவர்களின் இந்தக் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி தமிழ்மார்க்ஸ் மின்னிதழில் வெளியிடுகிறோம்.. படியுங்கள் பரப்புங்கள்..ஆசிரியர் குழு..

சங்கி எனப்படுவோர்..

சங்கி… சங்கி… சங்கி, இந்த வார்த்தை ஏதோ கடவுளின் நாமாவளி போல உச்சரிக்கப்பட்டு வருகிறது. யாரவது ஒரு நபர் அவர் தன் கருத்தை சபையிலோ, சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு தளங்களிலோ முன்வைக்கும் பொழுது, அதற்கு எதிர்வாத கருத்துக்கள் வருவது இயல்பு. இங்கு பல வகையான கருத்துக்கள் உள்ளன, ஒருவொரு நபருக்கும் ஒரு தலைவரின் மேலும், ஒரு இயக்கத்தின் மேலும், ஒரு கட்சியின் மேலும் ஒரு சித்தாந்தத்தின் மேலும் அல்லது ஏதோ ஒரு விடையத்தின் மேலும் அரசியல் கருத்தீர்ப்பு உண்டாகும். அரசியல், அரசியல்படுத்துவது என்று வந்துவிட்டால், முரண்கள் இல்லாமல் இங்கு ஓர் அரசியல் இயங்க இயலாது. அப்படி அரசியல் முரண்களின் காரணமாக, பல தரப்பட்ட குழுக்களுக்கு இடையே பல தரப்பட்ட கருத்து மோதல்கள் ஏற்படும். இந்த கருத்து மோதல்களில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் சின்னத்தையோ அல்லது அடையாளத்தையோ,நிறத்தையோ முன்வைத்து, அதற்கு பின் “சங்கி” என்ற மிக மோசமான சொல்லை சேர்த்து திட்டுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். ஏதோ நீல சங்கியாம், வெள்ளை சங்கியாம், பச்சை சங்கியாம், சிவப்பு சங்கியாம், கருப்பு சங்கியாம்… இன்னும் நிறைய உள்ளன. இது அரசியல் நாகரிகமற்ற போக்காகவே நாம் அனைவரும் கருத வேண்டும். “சங்கி” எனும் வார்த்தை காரணத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் போதும், அது ஏன் அரசியல் நாகரிகமற்றது அல்லது தனி மனித நாகரிகமற்றது என்பது புரிந்துவிடும்.

சங்கி என்றால் யார்?

ஜெர்மனியில் ஹிட்லர் என்றொருவர், யூதர்களை கொன்று குவித்தார். எதற்காக கொன்று குவித்தார்? அவர்கள் யூதர்கள் என்பதாலேயே கொன்று குவித்தார். சரி எதன் போர்வையில் அவர் கொன்று குவித்தார்? நாசி எனும் போர்வையில் கொன்று குவித்தார். நாம் இதை இப்படியே இந்திய சூழலில் பொருத்திப் பார்போம்.

சங்கப் பரிவார் என்ற ஒரு அமைப்பு (இந்து தேசியவாத கொள்கைகள் கொண்ட அமைப்புகளின் குடும்பம்) இசுலாமியர்களை கொன்று குவிக்கிறது, எதற்காக கொன்று குவிக்கிறது? அவர்கள் இசுலாமியர்கள் என்பதாலேயே கொன்று குவிக்கிறது. தாங்கள் இருக்கும் நிலப்பரப்பானது இந்துகளுக்கு மட்டுமே சொந்தமானது, இந்துக்கள் மட்டும்தான் இங்கு இருக்க வேண்டும், மற்றவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டும் அல்லது தங்கள் சர்வதிகார கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் அவர்கள் யாராயினும் கொல்லப்பட வேண்டும் என்ற கொள்கையை கொண்டது சங்கப் பரிவார். வரலாற்று பக்கங்களை திருப்பி பாருங்கள், ஹிட்லர் செய்ததற்கும் இந்த சங்கப் பரிவார் அமைப்பு செய்ததற்கும் வித்தியாசம் இருக்காது. நாசிகள் செய்ததைதான் இவர்களும் செய்கிறார்கள், அதனால்தான் அந்த சங்கப் பரிவார் அமைப்பை “சங்கி” என்று அழைக்கிறோம். செருமானிய நாசிகளின் இந்திய வடிவமே சங்கப் பரிவாரான சங்கி.

ஆக எவனொருவன் தான் பின்பற்றும் கருத்திற்கோ கொள்கைக்கோ எதிராக பேசும் அல்லது எதிர்வாதம் செய்யும் நபரையோ நபர்களையோ கொன்று விட வேண்டும் என நினைத்து செயற்படுகிறானோ “அவனே சங்கி.”

இந்த இந்திய நாட்டில் அல்லது அவர்கள் கூறும் பாரத நாட்டில் பிற மதத்தினவர்கள் வாழட்டும், அவர்களும் மனிதர்கள்தான், ஏன் இப்படி மத வெறுப்பை கக்குகிறீர்கள் மத பிரிவினையை பேசுகிறீர்கள்… என்று மனிதாபிமான அடிப்படையில் சங்கப் பரிவாரிடம் இப்படிப்பட்ட கருத்துகளை முன் வைத்து பாருங்கள், உயிரோடு இருப்பீர்களா என்பதற்கு என்னால் உறுதி தர இயலாது. அப்படி உறுதி தர இயலாமல் போவதற்கான காரணம், இங்கு சங்கப் பரிவாரால் கொலை செய்யப்பட்ட இசுலாமியர்களின் மரணம்.

தவறான போக்கில் சங்கி என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்…

ஒருவர் தன் மதத்தை வைத்து இந்த சமூகத்தில் பிற்போக்கான கருத்துக்களை கொள்கைகளை சொல்கிறார் என்றால், அவர் “நிறம்” சங்கி அல்ல, அவர் மத அடிப்படைவாதியே.  மேலே சொன்னது போல… இந்த மத அடிப்படைவாதி அவர் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பவர்களை கொல்ல நினப்பதில்லை, அதனால் அவரை “நிறம்” சங்கி என அழைப்பது அநாகரீகமான செயல். ஒரு வேளை அவர் கொல்ல நினைத்தால் “அவர் சங்கியே,” ஆனால் “நிறம்” சங்கியல்ல.

ஒரு கட்சியோ இயக்கமோ உள்ளது, அதன் தொண்டர்களும் அனுதாபிகளும் அக்கட்சி அல்லது இயக்க கொள்கைகளை சித்தாதங்களை பற்றி பேசுகிறார்கள் விவாதிக்கிறார்கள். அதில் சிலர் அக்கட்சி அல்லது இயக்க கொள்கைகளை சித்தாதங்களை காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொல்லாமல், அதன் அடிப்படை விசயங்களிலே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பதற்காக அவர்களை “நிறம் அல்லது கட்சி அல்லது இயக்கம்” சங்கி என்று நாம் அழைப்பது தவறு. ஏனென்றால் அவர்கள் மீது  வேறொருவர் எதிர் கருத்து வைக்கும் பொழுது அவர்கள் எதிர் கருத்து வைத்தவரை கொல்ல முற்படுவதில்லை, ஒரு வேளை கொல்ல முற்பட்டால் அந்த ஒரு தனி நபரை அல்லது அம்மிரட்டல் கூட்டத்தை “சங்கி மாறி நடக்காதே, சங்கி பயலே” என்று சொல்லலாமே ஒழிய, அதை காரணக்காட்டி ஒட்டு மொத்த கட்சியின் பெயரையோ இயக்கத்தின் பெயரையோ முன்வைத்து அதற்கு பின் சங்கி எனும் சொல்லை சேர்த்து பொதுமைப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய செயல்.

“———” சங்கி என்று போட்டு, பலத்தரப்பட்ட கொள்கைகளை கருத்துக்களை சித்தாந்தங்களை உடைய தனி மனிதன், கட்சி, இயக்கம், மதம், போன்றவற்றை விமர்சிப்பது வேண்டாத வேலை, அநாகரீகமான செயல். சங்கி என்பதற்கான பொருள் “தனக்கு எதிர் கருத்து வைப்பவர்கள் உயிரோடு இருக்க கூடாது என நினைப்பதே.” நாம் முன்பு சங்கிக்கான வார்த்தையை “சங்கப் பரிவார்” என்ற அமைப்பின் செயல்களிலிருந்து எடுத்தோம், ஆனால் அதற்காக அந்த சங்கப் பரிவார் அமைப்பில் இருப்பவர்கள் எல்லாம் சங்கியல்ல, ஏனென்றால் அந்த அமைப்பில் சேருபவர்கள் ‘இந்து மத அடிப்படை’ கொள்கைகளை கடைப்பிடுக்கும் ‘மத அடிப்படைவாதி’களாக உள்ளார்கள், ஒரு அடிப்படை மதவாதியாக அவர்கள் யாரையும் கொல்ல நினைக்காமல் இருப்பார்களேயானால் அவர்கள் “சங்கி” அல்ல. இருப்பினும் எப்பொழுது இந்த “சங்கப் பரிவார்” எனும் அமைப்பு, ஹிந்து மதமல்லாத பிற மதங்களின் மேல் வெறுப்பை காட்டாமல் மாறாக அன்பை காட்டுகிறதோ, கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்கிறதோ… அன்று முற்றிலும் இந்த “சங்கி” எனும் சொல் நிகழ்கால பயன்பாட்டில் நீர்த்துப் போய்விடும். எனவே “சங்கி” என்ற சொல்லை கடவுளுக்கு சொல்லும் நாமாவளி போல செல்லுமிடமெல்லாம் சொல்லாமல், அந்த சொல்லின் தேவை எங்கு தேவைப்படும் என அறிந்து செயல்படுங்கள்.

கருத்தாக்கம். தோழர். லதீஷ்

எழுத்தாக்கம் -சே பெயின்

நன்றி: https://tamilmarx.org/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here