நாடாளுமன்றத்தில் சென்ற மாதம் (மார்ச் 25) தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு திருத்தச் சட்டம் (FCRA) – 2026, இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மத்தியில், குறிப்பாக கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களின் நிலங்களை அபகரிக்கத் திட்டமிட்டது போல, இப்போது கிறித்தவ நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப் படுகிறது. ஏனெனில் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளால் இங்கு நடத்தப்படுகின்றன.

FCRA சட்டம் என்பது என்ன?

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1976 இல் எமர்ஜென்சி காலத்தில் தான் இந்த சட்டம் முதன்முதலாக அமலுக்கு வந்தது. உள்நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை தடுக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதில் திருத்தங்களை செய்த மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு இச்சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் இருந்து FCRA பதிவுச் சான்றிதழை பெறாத எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ வெளிநாட்டு நிதியைப் பெற முடியாது என்றும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டியதையும் கட்டாயமாக்கியது.

அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாசிச பாஜக 2016, 2018 ஆம் ஆண்டுகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அடுத்து 2020-ல் வெளிநாட்டு நிதி உதவிகள் அனைத்தும் டெல்லியில் உள்ள SBI வங்கிக் கணக்குகள் சிலவற்றின் மூலமாகத்தான் நடைபெற வேண்டும் என்ற விதிமுறை புகுத்தப்பட்டது. நிதி உள்ளிட்ட பல்வேறு சுதந்திரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலையிட்டு வந்த ஒன்றிய அரசின் அதிகாரம், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தின் மூலம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை வரை கொடூரமானதாக மாறியுள்ளது.

புதிய சட்டத்திருத்த மசோதாவில் உள்ள ஆபத்துகள்!

மக்களவையில் அண்மையில் பாசிச பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்த மசோதாவின் படி, பதிவுகள் ரத்து செய்யப்பட்ட அல்லது சான்றிதழை புதுப்பிக்காத அரசு சாரா நிறுவனங்களின் (NGO) வசம் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதுதான் மிகப்பெரிய அபாயகரமானதாக பார்க்க வேண்டியுள்ளது. இந்த சொத்துக்களை மேற்பார்வையிடவும், நிர்வகிக்கவும் தனியாக ஒரு அதிகார அமைப்பை உருவாக்கப் போகிறார்கள்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

அதன் தலைவராக தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை போலத் தனது கையாள் ஒருவரை அமர்த்துவார்கள். இந்த அமைப்பானது முறையான சட்ட நடைமுறை, நீதித்துறையின் மேற்பார்வை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி வரம்பற்ற அதிகாரத்துடன் செயல்படப் போகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும்  இழப்பீடு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

தொண்டு நிறுவனப் பதிவை ரத்து செய்யும் ஒரு சாதாரண உத்தரவு, சொத்துக்களின் மீதான அரசு சாரா நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டை இழக்கச் செய்துவிடும். எனவே இது சட்டத்தின் ஆட்சி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளின் ஆணி வேரையே அசைக்கப் போகிறது.

படிக்க:

 வஃக்பு சட்ட நிறைவேற்றம்: இந்தியாவின் கருப்பு தினங்களின் எண்ணிக்கை கூடுகிறது!

 நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொண்டே அரங்கேறும் காவிப் பாசிசம்! வக்ஃப் சட்டத்திருத்தம் – மேலும் ஒரு எடுத்துக்காட்டு!

பாசிச மோடி அரசின் ‘நேர்மை’, ‘நியாயம்’ போன்ற அற உணர்வுகள் குறித்து நமக்கு நன்றாகத் தெரியும். ஏதேனும் ஒரு சொத்தைக் காரணத்தைச் சொல்லி சான்றிதழை ரத்து செய்து விட்டால் போதும், பல ஆண்டுகளாக அறப்பணிகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை ஒன்றிய அரசு பறிமுதல் செய்ய முடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்த 1976க்கு பிறகு ஒருமுறை நிதி உதவி பெற்றவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ்க் கொண்டு வரப்படுவார்களாம்.

50, 60 ஆண்டுகளாக வெளிநாட்டு நிதி உதவி ஏதுமின்றி செயல்பட்ட நிறுவனம், இறுதியில் ஒரு ஆண்டு மட்டும் வெளிநாட்டு நிதியைப் பெற்றிருந்தால் கூட இந்தச் சட்டம் பொருந்தும். அதேபோல ஆரம்பத்தில் ஓரிரு ஆண்டுகள் நிதி உதவி பெற்று, அது நிறுத்தப்பட்ட  பிறகும் தொடர்ந்து உள்நாட்டு உதவியுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களும் கூட இவ்விதியின் கீழ் பறிமுதல் செய்யப்படும். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று பாருங்கள்.

கிறித்தவ தொண்டு நிறுவனங்களின் சேவைகளை முடக்குவதே நோக்கம்!

வெளிநாட்டு நிதி உதவியுடன் ஏழைகளுக்கு சேவையாற்றும் ஏராளமான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இங்குள்ள ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இத்தகைய நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. அரசை நிர்பந்தித்து செயல்பட வைப்பதற்கு பதிலாக, அரசு சாரா நிறுவனங்களின் இத்தகைய செயலை ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக நாம் கருதலாம்.

வெளிநாட்டில் இருக்கும் தனி நபர்களோ அல்லது பிற நிறுவனங்களோ பழங்குடியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் நலன்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது போன்ற குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்தியாவில் செயல்படும் ஏதேனும் ஒரு அமைப்புக்கு நன்கொடைகளை வழங்குகின்றனர்.

அரசால் நிறைவேற்ற முடியாத பல விஷயங்களை இது போன்ற அரசு சாரா நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதுபோன்ற சேவைகளை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முடக்குவது என்பதே புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சட்டத் திருத்தத்தின் நோக்கமாக உள்ளது.

நன்கொடைகளை நிறுத்துவதுடன், சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற செயல்களால் தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை சந்திக்க போகின்றன. ஒரு நிறுவனத்தின் சான்றிதழ் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் (கவர்னர், குடியரசு தலைவர் வைத்திருப்பதை போல) நிலுவையில் வைத்திருந்து, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து காலாவதி ஆனதும் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

படிக்க: 

 மதமாற்றங்கள்: பெரும்பான்மை சிறுபான்மை ஆகிவிடுவார்களாம்! அப்படீங்களா ஜட்ஜ் ஐயா?

 பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை வகுப்பினர் மற்றும் பெண்களை நீதிபதியாக்கு கர்நாடகத்தில் உரிமை முழக்கம்.

சமீப நாட்களில் பல்வேறு புகழ்வாய்ந்த நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் “கள விசாரணையில் நிறுவனத்துக்கு எதிரான பாதகமான தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன” என்று ஒற்றை வரி காரணத்துடன் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த ‘பாதகமான தகவல்கள்’ என்ன? என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிய போது, தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை வெளியிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்து உள்ளது. இனி இப்படித்தான் நடக்கும்.

சட்டத் திருத்தத்திற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்புகள்!

இந்த சட்டத் திருத்தம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை கடுமையாக பாதிக்கும். இது போன்ற நிறுவனங்களில் சொத்து மேலாண்மையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் போன்றவை வெளிநாட்டு நிதியை பெற முடியாமல் முடங்கும் அபாயம் ஏற்படும்.

இந்துத்துவ சனாதனம் பெருவாரியான மக்களுக்கு கல்வியை மறுத்த காலத்தில், அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை வழங்கியதில் மிகப்பெரும் பங்காற்றியது கிறித்தவக் கல்வி நிறுவனங்கள்தான். இவற்றை முடக்கும் விதமாகக் கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை உள்ளிட்ட கிறித்தவ நிறுவனங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “ஒன்றிய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க, முழுக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும்,  தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல்” என தனது  கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திமுக-வின் எம்.பி யாக இருக்கும் வில்சன் “இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் உரிமம் இல்லை எனக் கூறி ஒன்றிய அரசே கையகப்படுத்த முடியும்” என்று எச்சரிக்கிறார்.  பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் , இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பாசிச பாஜக அரசு அனைத்து வழிகளிலும் மூர்க்கமாக முயற்சிக்கும். இதை நிறைவேற்றாமல் தடுக்கும் பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகள், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் கைகளில்தான் உள்ளது.

  • குரு

சமூக வலைதள பக்கங்களை FOLLOW செய்யுங்கள்

முகநூல் | வாட்சப் | டிவிட்டர் | யுடியூப் | டெலிகிராம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here