வஃக்பு சட்ட நிறைவேற்றம்: இந்தியாவின் கருப்பு தினங்களின் எண்ணிக்கை கூடுகிறது!

ஜெர்மனியில் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்த கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், ஜனநாயக வாதிகள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து ஒழித்துக் கட்டப்பட்டு ஹிட்லரின் தூய ஆரிய இன பாசிச ஆட்சி நிறுவப்பட்டது.

1

வஃக்பு சட்ட நிறைவேற்றம்:  இந்தியாவின் கருப்பு தினங்களின் எண்ணிக்கை கூடுகிறது!ந்தியாவை இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறும் போது நடந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களாக நீடிக்கின்றது.

இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற பேதமின்றி ‘இந்துஸ்தானத்தின் கீழ்’ வாழ்ந்து வந்த மக்கள் புதிதாக சுதந்திரம் என்று கொடுக்கப்பட்ட போது நடந்த பிரிவினை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னது இன்னுயிரை இழந்தனர்.

அதற்கடுத்து பல்வேறு காலகட்டங்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தாலும் அயோத்தியில் கட்டப்பட்டு இருந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று ராமனின் பெயரால் இடிக்கப்பட்ட போது இந்தியாவின் ஒட்டுமொத்த புரட்சிகர ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவர்கள், மத நல்லிணக்கம் கொண்டவர்கள் அனைவரின்  மனம் பதை பதைக்க கருப்பு தினமாக மாறியது.

அதுபோலவே நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வஃக்பு சட்ட திருத்தம் மீண்டும் ஒரு கருப்பு தினமாக உருவெடுத்துள்ளது.

இந்த நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் ஆகியவற்றின் மீது வெறும் பத்து மணி நேர விவாதத்தின் முடிவில் கல்லறை கட்டப்பட்டது.

இந்தியாவில் இன்னமும் மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இன்னமும் சட்டத்தின் ஆட்சிதான்   நடந்து கொண்டிருக்கிறது  என்று கருதுகின்ற ‘அப்பாவிகள்’ முகத்தில் கரியை பூசியுள்ளது இந்தச் சட்டம்.

படிக்க:

  நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொண்டே அரங்கேறும் காவிப் பாசிசம்! வக்ஃப் சட்டத்திருத்தம் – மேலும் ஒரு எடுத்துக்காட்டு!
  வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜெர்மனியில் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்த கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், ஜனநாயக வாதிகள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து ஒழித்துக் கட்டப்பட்டு ஹிட்லரின் தூய ஆரிய இன பாசிச ஆட்சி நிறுவப்பட்டது.

அதேபோல இன்று இஸ்லாமியர்களுக்கு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல் என்று புரிந்து கொள்பவர்கள், அடுத்து தங்களது தலைகளும் கொய்யப்பட காத்திருக்கிறது என்பதை அறியாத அல்லது அறிந்தே மௌனம் காக்கின்ற குற்றவாளிகள்.

சமகாலத்தில் நடக்கின்ற இந்த பாசிச பயங்கரவாத தாக்குதல் நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கிறது. இந்த நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காக இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் மத வழிபாட்டு உரிமைகள்  கொடூரமாக கழுத்தறுத்து, கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்படுவதை கண்டும் அமைதி காக்கும் சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களின் மனசாட்சியின் மீது காறித்துப்பச் சொல்கிறது.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட தருணத்தில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் முன்வைத்ததை கேலி செய்த அரசியலற்ற அரைவேக்காடுகள், லும்பன்கள் போன்றவர்களின் அரசியல் ஞானத்தையும் கண்டு வியக்கின்றோம்.

கருப்பு நாட்கள் என்று வரையறுப்பது வேடிக்கையான அம்சம் அல்ல. நெஞ்சத்தை குத்திக்கிழித்து, ரத்தம் வடிய வடிய, கை கால்களையும் உடைத்துப் போட்டு, தண்ணீருக்கு விக்கித்து தடுமாறுகின்ற நிலையில் சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை ஜனநாயகம் தவிக்கின்ற காட்சியை தான் கருப்பு தினம் என்று வரையறுக்கின்றோம்..

வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களையும், கருப்பு நாட்களையும் முடிவுக்கு கொண்டு வர இருளை திரை கிழித்து வெளிச்சம் வருவதைப் போல் சிவப்பு புரட்சியை முன்னெடுத்து செல்வதை தவிர வேறு எந்த குறுக்கு வழியும் இல்லை.

“என்னால் முடியாது என்பதால் யாராலும் முடியாது” என்று அவநம்பிக்கை கிளப்புகின்ற சமரச வாதிகளையும், துரோகிகளையும் முறியடித்து நாட்டின் பொது எதிரியாக மாறியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு எதிராக சிவப்பு புரட்சியில் முன்னேறுவோம்.

  • கணேசன்

1 COMMENT

  1. கட்டுரையை எழுதிய கணேசன் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் CAA போன்ற சட்டங்கள் கொண்டு வரும்போது இஸ்லாமியர்கள் கொதித்து எழுந்தார்கள் குடும்பம் குடும்பமாக நாடு முழுக்க ஒரு போராட்டம் களமாக இருந்தது என்று இஸ்லாமியர்களுடைய வக்ஃப்பு வாரிய சொத்துக்களை சட்டமாக்கி இஸ்லாமியர்களை ஏதுமற்றவர்களாக ஆக்குவதில் பிஜேபி முனைப்பு காட்டி வருகிறது இஸ்லாமியர்கள் வீதிக்கு வரவில்லை கிறிஸ்தவர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் உள்ளார்கள் இந்து மதம் ஜெயின் மதம் புத்த மதம் போன்ற மதம் சார்ந்தவர்களும் சார்பற்றவர்களும் இன்னும் வீழ்ச்சியான ஒரு பெருந்திரள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை இதுவே பாசிசத்திற்கு சாதகமான அம்சமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here