பாசிச பாஜக ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் பல வினோதமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து வருகின்றன. அதில் பல வினோதமான தீர்ப்புகளையும், கருத்துகளையும் கூறி தெறிக்கவிடுகிறார்கள் நீதியரசர்கள். அவையெல்லாம் அகண்ட பாரதத்தின் மாதாவின் கழுத்தில் மணிகளாக ஜொலிக்கின்றன. அதில் மேலும் ஒரு மணியை சமீபத்தில் கோர்த்துவிட்டிருக்கிறார் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ரோஹித்ரஞ்சன்.
உத்திரபிரதேசத்தில் அம்ரித்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கைலாஷ் என்பவர் அவ்வூரிலுள்ள மக்களைத் திரட்டி டெல்லி அழைத்துப்போய் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றிவிட்டார் என்ற ஒரு வழக்கு விசாரணையில்தான் “மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். அரசமைப்பு பிரிவு 25 மதமாற்றம் செய்ய அனுமதி வழங்கவில்லை. SC/ST சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்களை பணத்தாசை காட்டி மதமாற்றும் செயல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-சின் கருத்தைத் தனது கருத்தாகப் பதிவுசெய்திருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்றுமுன்னர் தான் ஜூன் 28 அன்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 30 முஸ்லிம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். சனாதன இந்துமதத்தின் சாதிய படிநிலைக்குக் கீழாக பஞ்சமர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு ஒரு மனிதப்பிறவியாகக்கூட அங்கீகாரமில்லாத SC/ST மக்களை பணத்துக்கு ஆசைப்படுபவர்கள் என்றும் அரிசிக்கும், ரொட்டித்துண்டுக்கும் மதம் மாறுபவர்கள் என்றும் இழித்துரைக்கும் சங்கிகள், மனிதர்களுக்குள் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை விதியாகும் சனாதனத்தை ஒழித்துவிட்டு அனைவரையும் சமமாக நடத்தத் தயாரா என்றுகேட்டால் “ஸ்லீப்பிங் மோடுக்குப்” போய்விடுகிறார்கள்.
பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்டெடுக்க சரியான சித்தாந்தவழி போராட்டமே தீர்வு என்பதையும், கடவுள்களையும், வழிபாட்டு முறைகளையும் மட்டும் மாற்றிக்கொள்வது தீர்வாகாது என்று நாம் சொன்னாலும், மனிதப்பிறவியாக மதிக்காக ஒரு மதத்தில் தீண்டத்தகாதவனாக, உரிமைகள் அற்ற அடிமையாக உழல்வதைவிட சகமனிதனாக மதிக்கும் மதங்களுக்கு மாறிச்செல்வது ஒன்றும் கொலைக்குற்றம் இல்லையென்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். இதை ஏற்றுக்கொள்ளாதவர் யார், சனாதனம் என்னும் தமது அடிமை விலங்கை உடைத்தெறிவதால் குமுறும் பார்ப்பனர்களும், அம்மக்களை காலம்காலமாக சுரண்டிக்கொழுத்த ஆண்டபரம்பரைகள் என்று பேசித்திரியும் சூத்திர முண்டங்களும்தான். அப்படிதான் இந்த நீதிபதியும் வன்மத்தைக் கக்கியிருக்கிறார்.
எப்போதும் ஆட்சி அதிகாரத்தின் தாழ்வாரங்களில் ஒட்டிக்கொள்ளும் பார்ப்பனர்கள், முஸ்லிம்களான முகலாயர்கள், கிறிஸ்துவர்களான போர்த்துகீசர்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலங்களில் தங்களின் சுயநலத்துக்காகவும், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், உயர்கல்விக்காகவும், பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் மதம் மாறிக்கொண்டனர். மேற்கண்ட காரணங்களுக்காகவே குறிப்பிட்ட அளவில் இடைநிலை சாதிகளும் மதம் மாறினர். ஆனால் அதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு சனாதன இந்துமதத்தின் கொடுங்கரங்களிலிருந்து தப்புவதற்காக மதம்மாறும் SC/ST மக்களை மட்டும் அரிசிப்பைகளுக்காகவும், ரொட்டித்துண்டுக்காகவும், பணத்துக்காகவும் மதம் மாறுகிறார்கள் என்று கரித்துக்கொட்டுகின்றனர் சனாதனிகளும், சூத்திர சாதி பார்ப்பனிய அடிமைகளும்.
ஆமாம். அரிசிப்பைகளுக்காகவும், ரொட்டித்துண்டுக்காகவும், பணத்துக்காகவும் SC/ST மக்கள் மதம்மாறுகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அவர்களை அரிசிக்கும், ரொட்டித்துண்டுக்கும், பணத்துக்கும் வக்கில்லாமல் வைத்திருப்பது யார் என்பதை சனாதனிகளும், ஆண்டபரம்பரை சூத்திரர்களும் சொல்வார்களா? ஒருபோதும் சொல்லாத துணியமாட்டார்கள். அதனால்தான் சென்னையில் நடைபெற்ற “சனாதன ஒழிப்பு மாநாட்டில்” திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி பேசியவற்றை விட்டுவிட்டு அவற்றை வழிமொழிந்த உதயநிதியைப் பிடித்துத்தொங்கிக்கொண்டிருந்தனர். சனாதனம் என்றால் என்னவென்பதை சொல்லாமலேயே சனாதன தர்மம் புனிதமானது, அதனை உயிரைக்கொடுத்தும் காப்போம் என்றெல்லாம் கூவிக்கொண்டிருந்தனர்.
படிக்க: மதம் மாறும் உரிமையை மறுக்கும் பாசிச மோடி அரசு!
உயிரோடிருப்பதே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் இந்துக்களை மதம்மாற்றுவது தற்போது எப்போதாவது, எங்கேயாவது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் உள்ளது. ஆனால் இந்துமதக்காவலர்களால் SC/ST மக்கள் மதம்மாறுவதுதான் அதிக எண்ணிக்கையில் நடந்துவருகிறது. குஜராத்தில் உனா மாவட்டத்தில் மாடு உரித்தார்கள் என்று தலித் 6 இளைஞர்களை ரோட்டு மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததன் மூலம் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரை புத்த மதத்துக்கு மாற்றிவிட்டனர் பசுக்குண்டர்கள். கர்நாடகாவில் கோவிலில் ஒரு தலித் சிறுவன் தண்ணீர் குடித்ததற்காக அவனுடைய குடும்பத்துக்கு அபராதம் விதித்ததன்மூலம் அக்குடும்பத்தை புத்த மதத்துக்கு மாற்றினர். இப்படி உயர்சாதியினரின் அடக்குமுறைகளைத் தாங்கமுடியாத SC/ST மக்கள் நாடுமுழுவதும் புத்த மதத்துக்கு மாறியிருக்கின்றனர் என்பதை பல்வேறு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாசிச பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபின்னர் தலித்/பழங்குடியினர் மக்கள் மதம் மாறுவது அதிகரித்திருக்கிறது.
இதையெல்லாம் தொகுத்துப்பார்க்கும் போது இந்துமதத்தின் அழிவுக்கு முற்றுமுழு காரணமாக இருக்கப்போவது சனாதனிகளும், ஆண்டபரம்பரை சூத்திரர்களும்தான் என்பது தெளிவு. சமதர்மத்தை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை நீக்கிவிட்டு மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துராஜ்ஜியத்தை அமைக்க முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- சும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களும், சாதிவெறி பைத்தியங்களும்தான் உண்மையான இந்துவிரோதிகள் என்பது விளங்கும்.
பாசிஸ்டுகள் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்தான் கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. அதைத்தான் சமீபத்தில் ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன்தாஸ், நீதிபதி பதவியை ராஜினாமா செய்து பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அபிஜித் கங்கோபாத்யாய், இன்னும் பாஜகவுக்கு விசுவாசம் காட்டி பதவிகள் பெற்ற முன்னாள் நீதிபதிகளும் உணர்த்துகின்றனர். “நாம் கஷ்டப்பட்டு படித்து வக்கீல் ஆனால், பார்ப்பான் நீதிபதியாக உட்கார்திருப்பான்” என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
– ஜூலியஸ்