இந்திய ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிகின்ற திருவாளர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்களில் நடந்து வருகிறது என்ற போதிலும் டெல்லி நகரில் நடக்கின்ற போர்க்குணமிக்க போராட்டங்கள் இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம் எல்) ஆகிய கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் போராடுகின்றனர் இவர்களில் சிபிஐ (எம்.எல்) கட்சியைச் சார்ந்த தோழர் நேஹா போரா (Neha Bora) முன்னோடியான போராட்ட வீராங்கனையாக அறிமுகமாகி வருகிறார்.
போலீசு, ராணுவத்தை எதிர்கொள்வதிலும் சரி! அரசியல் பிரமுகர்களை எதிர்கொள்வதும் சரி! ஊடகங்களை எதிர்கொள்வதிலும் சரி! சித்தாந்த ரீதியாக தெளிவான பார்வையுடன் ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது மிகப் பெரிய போராட்ட மரபை அதாவது ஆரிய பார்ப்பன சித்தாந்தத்திற்கு எதிராகவும், அதன் கொடூரமான நடைமுறைகளுக்கு எதிராகவும் போராடிய மரபு பெருமை கொண்ட தமிழ்நாட்டில் நேஹா போரா – க்கள் உருவாகாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாகவே பொதுவுடமை இயக்கங்களில் தனிப்பட்ட நபர்களை முன்னிறுத்தி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில்லை. அதன் முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் கூட்டுத்துவ தலைமையின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பொறுப்புகளை மாற்றி தந்து விடுகின்றனர் என்பதால் ஒரு சில தனிநபர்கள் நீண்ட காலம் தலைமையாக இருப்பது அல்லது குறுகிய காலமாக இருந்தாலும் அடையாளப்படுத்திக் கொள்வது போன்றவை அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை.
வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரத்தை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மறுத்ததில்லை என்ற போதிலும் கூட்டுத்துவ தலைமை, கூட்டுத்துவ பொறுப்பு என்ற முறையில் தனி நபர்களை முன்னிறுத்தி அவர்களை நட்சத்திரங்களாகவும் நட்சத்திர பேச்சாளர்களாகவும் மாற்றுவதில்லை.
படிக்க: உழைக்கும் மகளிர் தினம்: பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவுக் கட்டுவோம்!
தமிழ் சமூக சூழலில் நேஹா போரா –க்கள் உருவாகாமல் இருப்பதற்கு புறநிலையில் மேற்குறிப்பிட்ட காரணங்கள் இருந்தாலும் அகநிலையில் பல்வேறு காரணங்கள் ஆழ அகலங்களுடன் நீடிக்கின்றன.
விதிவிலக்காக சிலரை முன்னிலைப்படுத்தி வளர்க்கும் போது அவர்களிடம் உள்ள பழைய வர்க்கத் தன்மை காரணமாக, அதாவது குட்டி முதலாளித்துவ வர்க்க பிரிவிலிருந்து வந்தவர்களாக இருந்தால் அந்த வர்க்கத்தின் சிந்தனைப் போக்கான தன்னை முன்னிறுத்திக் கொள்வது ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. இதனை சில வகை மாதிரிகளாக குறிப்பிடலாம்.
தன்னை முன்னிறுத்தும் பண்புகளின் காரணமாக தன்னைத் தவிர பிறரது படைப்புகளையோ அல்லது பேச்சையோ, எழுத்தையோ மதிக்காமல் பின்னுக்கு தள்ளுவது, அதற்கு தரமான படைப்புகளாக ஏற்கும் வகையில் இல்லை என்று சப்பை கட்டுவது என்பது நடக்கின்றது.
“பிறருக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தனது மேன்மையை நிலை நாட்டிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்” என்று இந்திய சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலாதிக்கம் பெற்றதை பற்றி சுட்டி காட்டினார் காரல் மார்க்ஸ். அது போலவே பிறருக்கு பேசுவதற்கு எழுதுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வாய்ப்புகளை மறுப்பதன் மூலமாகவே தன்னை தலைவர்களாக்கிக் கொண்டவர்கள் தான் இவ்வாறு முன்னிலைக்கு வருகின்றனர்.
அதுபோல அவதூறுகள், வசவுகள், புழக்கடையில் பேசுகின்ற பேச்சுகள் ஆகியவற்றின் மூலம் கட்சியில் தீவிரமாக பணியாற்றுகின்ற அல்லது தொடர்ச்சியாக பணியாற்றுகின்றவர்களை குறி வைத்து தாக்குகிறது இந்த குட்டி முதலாளித்துவ கும்பல். எளிய பின்னணியில் இருந்து வருபவர்கள் உழைப்பை மதிக்காமல் அவர்கள் முன்னிலைக்கு வருவதை விரும்பாமல் தடுக்கிறது இத்தகைய போக்குகள்.
அதுபோலவே அமைப்பின் தொடர்புகளை பயன்படுத்திக் கொண்டு தனது சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதும், தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும், தனது காரியம் முடிந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனர். இதனால் அமைப்புகளின் மீது அவநம்பிக்கையை உருவாக்குகின்றனர் இதன் காரணமாக நட்சத்திரங்கள் உருவாவதை தடுக்கின்றனர்.
பதவி வெறி பிடித்த ஒரு சிறு கும்பல் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை பல்வேறு காரணங்கள் சொல்லி நைச்சியமாக தன் வசப்படுத்துவது, பிறகு அவர்களை உறவாடி கெடுப்பது அவர்களின் செயல்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்பு தியாகங்களை ஆழ குழி தோண்டி புதைப்பது என்ற வகையில் செயல்படுகின்றனர்.
இத்தகைய நயவஞ்சகத்தனமான, கம்யூனிச விரோத பண்புகளும், நரியையே மிஞ்சுகின்ற பதவி வெறி கொள்கையும் முன்னிலையில் இருந்தவர்கள் நட்சத்திரங்களாக உருவாவதற்கு முன்பே எரிக்கப்பட்டு விடுகின்றனர்.
“காட்டில் வளரும் மூங்கில் எவ்வளவுதான் பலமாக இருந்தாலும் புயல் காற்று வீசும் போது அவை முறிந்து விடும். ஆனால் சுவற்றில் படர்கின்ற நாணல் எவ்வளவு தான் பலவீனமாக இருந்தாலும் எப்பேர்பட்ட காற்று வந்தாலும் தன்னை சாய்த்து தலைவணங்கி பிறகு நிமிர்ந்து விடும்” என்ற இயற்கை எடுத்துக்காட்டில் இருந்து ஒரு கம்யூனிஸ்ட் வாழ வேண்டிய வழிமுறையை சுட்டிக் காட்டினார் தோழர் மாவோ.
படிக்க:
♦ நூல் அறிமுகம்: மாவோவின் மூன்று சொற்பொழிவுகள்
♦ மக்களுக்கு தொண்டு செய்க! – தோழர் மாவோ.
ஆனால், கூட்டுத்துவ தலைமையின் நேர்மறையான அம்சங்களை புறக்கணித்துவிட்டு அதில் தனிநபர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி பார்க்கின்ற போக்குகள் கம்யூனிச இயக்கத்தின் மீது முதலாளித்துவத்தின் தாக்குதலாக வெளிப்படுகிறது.
கம்யூனிச இயக்கத்தின் உள்ளே வருகின்ற பலரும் தனது தொழிலின் காரணமாகவும், உழைப்பின் காரணமாகவும் பல்வேறு வர்க்க வாழ்க்கையில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வருகின்றனர். அவ்வாறு வந்த பிறகு தனது வர்க்க வாழ்க்கையை பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்த வகையில் மாற்றிக் கொள்வதில் படாத பாடுபடுகின்றனர்.
ஒருவேளை அரைபட்டாளியாக இருந்தால் தன்னை பாட்டாளி வர்க்கமாக உயர்த்திக் கொள்வதும், அதுவே குட்டி முதலாளித்துவ பிரிவினராக இருந்தால் அதாவது வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றவர்கள் வர்க்க இறக்கம் செய்து கொண்டு ஒரு தொழிலாளியை போல தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தயாராக வேண்டும்.
இந்த இரண்டு எதிர் எதிர் போக்குகளுமே கம்யூனிச இயக்கத்திற்கு வருபவர்களுக்கு மிகப்பெரும் சோதனைக்களமாக இருக்கின்றது. இத்தகைய சோதனைக்களம் உழைப்பாளி வர்க்கத்திலிருந்து வருபவர்களை காட்டிலும் குட்டி முதலாளித்துவ வர்க்க பிரிவிலிருந்து வருபவர்களுக்கு மிகவும் நெருக்கடியை தந்து விடுகிறது. இயல்பாக அவர்களிடம் உள்ள சில தனித்தன்மைகள் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றனர் அல்லது முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர்.
படிக்க:
♦ ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை போராட்டம் ஓயாது! குண்டாந்தடிகளைக் கொண்டு நிறுத்த முடியாது!
குறிப்பிட்ட காலத்திற்கு கம்யூனிச இயக்கத்தில் இருந்து விட்டு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறி சென்ற பிறகு முன்னாள், அதற்கும் முன்னாள் என்று திருமண பத்திரிகைகளில் காலம் சென்ற அல்லது நலமுடன் என்று போடுவதைப் போல தனது முகநூல் பக்கங்களிலும் அடையாளங்களிலும் போட்டுக் கொண்டு பிழைப்பை நடத்துகின்றனர். இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்கள்.
“ஒருவர் கம்யூனிஸ்ட்டாக மாறுவது ஒன்றும் அற்புதமான விஷயம் இல்லை. வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட்டாக நீடிப்பது என்பதுதான் அற்புதமான விஷயம்” என்று சுட்டிக்காட்டினார் தோழர் மாவோ. இங்கோ கம்யூனிஸ்ட்டாக மாறுவதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு மாறுபவர்கள் குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு இயக்கத்திற்குள் ஏற்படுகின்ற தனிநபர் முரண்பாடுகள் அல்லது தன் மீது வரக்கூடிய விமர்சனங்கள் அல்லது தனது பழைய வர்க்க வாழ்க்கையை கைவிட முடியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு இரட்டை வேடம் போட்டு பார்ப்பது, மாட்டிக்கொண்ட பின்னர் அமைப்பின் மீது குற்றம் சுமத்தி விட்டு வெளியே ஓடுவது போன்றவற்றின் காரணமாக நட்சத்திரங்களாக உருவறதுக்கு முன்னரே எரி நட்சத்திரங்களாக மாறி எரிந்து போகின்றனர்.
அப்படி என்றால் வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரம் என்று ஒன்றுமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஆம் இருக்கிறார்கள்; விடுதலைப் போராட்ட காலத்தில் எத்தனையோ இளைஞர்கள் போராடியிருந்தாலும் இளம் வயதில் தூக்கில் தொங்கிய பகத்சிங் போன்றவர்கள் உதாரணமாக இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடிய எத்தனையோ பேர் இருந்தாலும் எதிரிகளுக்கு எதிராக அஞ்சாது போராடி போலீசின் நர வேட்டைக்கு பலியான அப்பு மற்றும் பாலன் போன்ற தோழர்கள் இன்றளவும் நம்பிக்கை நட்சத்திரமாகவே இருக்கிறார்கள்.
கண்ணெதிரே அநீதி நடக்கும் போது அதனை சகித்துக் கொள்ள முடியாமல் எதிர்த்துப் போராடி எதிரிகளுடன் மோதி களத்திலேயே உயிர் துறந்த கரூர் செல்வராஜ், தஞ்சை பீட்டர் போன்ற தோழர்களும் முன்னுதாரணமாக இருக்கத்தான் செய்தார்கள். இத்தகைய போராளிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக நீடிப்பதும், கம்யூனிச இயக்கத்தின் விதிகளுக்கு உட்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும், குறிப்பாக அமைப்பு வாழ்க்கையில் விமர்சனம், சுய விமர்சனத்தை நேர்மையாக கடைப்பிடிப்பது மற்றும் அமைப்பின் உயிராதாரமான கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்திற்கு கட்டுப்பட்டு இயங்குவது ஆகியவையும் சொந்த வாழ்க்கையில் சிறந்த கம்யூனிஸ்ட்டாக எளிய வாழ்க்கை, கடினமான போராட்டம் என்பதை இலக்கணமாக கொண்டு வாழ்வது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்கின்ற ஒருவரால் தான் நேஹா போரா போன்றவர்களை ஒத்த நட்சத்திரங்களாக உருவெடுக்க முடியும்.
- கணேசன்
புதிய ஜனநாயகம் தினசரி






