இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இப்பொழுது அதற்கு இந்திய தேர்தல் ஆணையர்களின் வாயிலாகவே வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஞானேஷ்குமார் தலைமை தேர்தல் ஆணையராக உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக உள்ள சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோசி ஆகியோர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே மற்றும் அவர்களின் ஆட்சேபனைகளையும் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமுல்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அதாவது, இந்த இரு தேர்தல் ஆணையர்களுக்கும் தெரிவிக்காமலேயே பல முடிவுகள் எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று மற்ற இரு ஆணையர்களும் கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களது கடும் ஆட்சேபங்களை தெரிவித்து வந்துள்ளனர் என்ற செய்தி தற்பொழுது வெளியில் வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
எஸ் ஐ ஆர் -ன் போது வாக்காளர்கள் படிவம் 6ல் தங்களது அல்லது தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோர் கடந்த முறை நடத்தி முடித்து வெளியிடப்பட்ட எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தார்களா என்ற கேள்வி இணைக்கப்படுவதற்கு இந்த இரண்டு தேர்தல் ஆணையர்களும் உடன்படவில்லை.
இப்படி கேள்வி எழுப்புவது 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வாக்காளர் பதிவு விதிகளுக்கு எதிரானது என்றும் அந்த விதிகளை திருத்தாமல் இதை செய்ய முடியாது என்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களும் தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்து இருந்தனர்.
படிக்க: ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி
மூன்று பேர் உள்ள தேர்தல் ஆணையத்தில் இரண்டு பேர் இப்படி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இந்தக் கேள்வியை எஸ் ஐ ஆர் படிவத்தில் சேர்த்திருக்கக் கூடாது. அப்படி சேர்ப்பது சட்ட விரோதமானது. நிலைமை இப்படி இருக்க தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்ட விதிகளை மீறி இந்த கேள்வியை எஸ் ஐ ஆர் படிவத்தில் சேர்த்திருக்கிறார்.
பெரும்பான்மையான வாக்காளர்களால் நிறைவேற்ற முடியாத இப்படிப்பட்ட ஒரு விதியை புகுத்தியதால் தகுதியுள்ள வாக்காளர்கள் கோடிக்கணக்கான பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் அல்லது நீக்கும் அதிகாரம் அந்தந்த தொகுதி அளவில் உள்ள ERO களுக்கே (Electoral Registration Officer – Assembly Constituency) உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் இப்பொழுது டெல்லியில் உள்ள ஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதி அளவில் அல்லது மாவட்ட அளவில் வாக்காளர் திருத்தம் கோரி வரும் விண்ணப்பங்கள் நியாயமானவையாக இருந்தாலும் கூட அந்த மாவட்ட அளவிலான அதிகாரிகளால் டெல்லியில் உள்ள ஐடி பிரிவை தொடர்பு கொண்டு அந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடிவதில்லை.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தங்கள் இருவரின் ஒப்புதல் இன்றி தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு செய்தது (இப்படி ஞானேஷ்குமார் செயல்பட்டது) முற்றிலும் சட்ட விரோதமானது என்று சுக் பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோசி இருவரும் தனித்தனியாக கேபிநெட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இப்படி கடந்த 10 மாதங்களில் 14 ஆட்சேபங்களை இரண்டு தேர்தல் ஆணையர்களும் எழுப்பியுள்ள நிலையிலும் அதையெல்லாம் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் அவர்கள் தனது திருப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஞானேஷ் குமாரின் இந்த அளப்பரிய சேவை காரணமாக சுமார் 13 கோடி பேரின் வாக்களிக்கும் உரிமை பறிபோய் உள்ளது என்று கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதற்குக் காரணமான ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
படிக்க:
♦ ‘ஜனநாயக’த்தை மறுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் !
♦ பாஜகவின் “தேர்தல் பிரிவாக” செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!
ஞானேஷ் குமாரை மட்டுமின்றி மற்றுமுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களையும் மோடி அரசுதான் தேர்ந்தெடுத்து நியமித்தது. அப்படி மோடியால் தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்டவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் (தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின்) செயல்பாடுகள் அயோக்கியத்தனமாக அமைந்துள்ளன என்பதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
எஸ் ஐ ஆர் என்பது பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவும் பாஜகவின் ஆதரவாளர்களின் பெயர்களை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காகவும் தான் நடத்தப்படுகிறது என்பது ஏற்கனவே ராகுல் காந்தியால் ஆதாரத்துடன் பொதுவெளியில் விளக்கப்பட்டுள்ளது.
அதை இந்த இரு தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்துவதாக உள்ளன. இந்த நிலையில் எஸ் ஐ ஆர் க்கு முந்தைய வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எஸ் ஐ ஆர் –க்குப் பிந்தய வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தப்பட்ட தமிழ்நாடு மகாராஷ்டிரா மேற்கு வங்க தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாசிச பாஜகவை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதாக உள்ளன என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் இதை முறியடிப்பதற்கு நீதிமன்றம் தவிர்த்து வேறு போராட்ட வழிமுறைகளைப் பற்றி எதிர்க்கட்சிகள் சிந்திப்பது கூட இல்லை என்ற நடைமுறைதான் உள்ளது.
உண்மையிலேயே பாசிசத்தை வீழ்த்தி மக்கள் உரிமையை காக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஐனநாயக ஐக்கிய முன்னணியை ஏற்படுத்தி கொண்டு மக்களை அணி திரட்டி வீதியில் இறங்கி போராட வேண்டும். இதன் மூலமாக பாஜகவை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசை நிறுவ வேண்டும். . இதன் மூலம் தான் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை முற்று முழுதாக இந்திய மண்ணில் இருந்து துடைத்தெறிய முடியும்.
– குமரன்







தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்ட விரோதமாக முடிவெடுத்து எஸ் ஐ ஆர் திருத்தத்தினால் 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது
பாஜக மதவாதிகளை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தவில்லை என்றால் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற அலங்கோலங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கும்.