தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி:வாட் ப்ரோ; வெரி ராங் ப்ரோ!
ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியை காட்டிலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஏதோ சொர்க்கபுரியை போல தமிழகத்தை மாற்றப் போவதாக கதை அளந்துக் கொண்டும், அதனை தனது ரூட் மாஃபியா கும்பல் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளரின் கையில் உள்ள செல்பேசிக்கும் தொடர்ந்து டிஜிட்டல் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் தற்போது அதே பாணியில் தான் தனது ஆட்சியை தொடர்கிறது. 

மிழ்நாட்டை ஆளுகின்ற பாசிசக் கோமாளியான நடிகர் விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக முன்வைத்த வாதங்கள்; கருத்தியல் பிரச்சாரங்கள் ஆகியவை அனைத்தும் ஒரு வார காலத்திற்குள்ளேயே அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது.

“திமுக, மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறக்கி விடப்பட்டது. மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை புறந்தள்ளிவிட்டு அதனை இரண்டாம் பட்சமாகவும், விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய ஊடகப் போராளிகள் மூலமாக ஊடகங்களின் மூலம் கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வேலையை முன்னிலைப்படுத்தியும் திட்டமிட்டு நடத்தினார்.

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்; சாதி ஆதிக்க வெறியாட்டங்கள் மற்றும் போலீஸ் லாக்கப் படுகொலைகள் ஆகியவை அனைத்தும் திமுகவினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பிரதானமாக்கப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு இல்லை; சார் சிஎம் சார்; என்றெல்லாம் மேடைகளில் முழங்கி வந்தது மட்டும் இன்றி விர்ச்சுவல் வாரியர்ஸ் மூலம் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டனர்.” என்று ஏற்கனவே புதிய ஜனநாயகம் தினசரியில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

கள்ள லாட்டரி மாஃபியா கும்பல் ஆதவ் அர்ஜுனா, ரூட் மாஃபியா கும்பலான ஜெகதீஷ் வகையறா மற்றும் பல்வேறு கிரிமினல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல் அடங்கிய மூக்கூட்டு தமிழ்நாட்டின் ஆட்சியில் அமர்ந்துள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 த.வெ.க எம்எல்ஏக்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. தவெகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 231 பேரில் 43 (19%) பேர், கிரிமினல் வழக்குகள் பதிய பெற்றவர்கள் என்பதை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ADR) வெளியிட்ட அறிக்கை அப்போதே அம்பலப்படுத்தியது. இந்த விவரங்கள் அனைத்தும் திருவாளர் விஜய் முன்வைப்பது போல, “தூய சக்தி ஆட்சி” என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பது அம்பலமாகிறது.

முதலமைச்சரான விஜய் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் அறிவித்துள்ள சொத்து பட்டியலின் படியே 624.73 கோடிக்கு அதிபதியாவார். அவரது அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்பு கொண்ட இரண்டாவது அமைச்சராக திருவாளர் ஆதவ் அர்ஜுனா 534 கோடிக்கு அதிபதியாக உள்ளார். அதன் பிறகு செங்கோட்டையன் 11.5 கோடிக்கும், பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்த் 7.5 கோடி ரூபாய்க்கும் அதிபதிகள் ஆவார்கள்.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்கு வெறும் காலுடன், கோமணம் கட்டிக்கொண்டு, ஆண்டியாக திரிந்தவர்கள் தான் தற்போது கோட்டையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுள்ளார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ரூட் மாஃபியா கும்பல் பரப்புகின்ற பொய் பிரச்சாரத்தின் முகத்திரையை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 எம்எல்ஏக்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 72 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று என்ற உண்மை விவரம் முகத்தில் அறைகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; சட்டமன்ற சீர்குலைந்துள்ளது என்று கூச்சலிட்டு கொண்டிருந்த திருவாளர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு மேல் ஆகவில்லை என்ற நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. முக்கியமாக நடந்துள்ள 30 கொலைகளில் 12-க்கும் மேற்பட்ட கொலைகள் கஞ்சா மற்றும் மதுபோதையினால் ஏற்பட்டுள்ளன. புதிய தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே சட்டம் – ஒழுங்கு இவ்வளவு மோசமடைந்திருப்பது, பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது என விஜய்யை புகழ்ந்த முதலாளித்துவ ஊடகங்களே திகிலூட்டுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மணல் கொள்ளை; கனிமவளக் கொள்ளை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆசி இருப்பதாகவும் இப்போதே சமூக செயல்பாட்டாளர்கள் அம்பலப்படுத்த துவங்கிவிட்டனர்.

அது போலவே பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட்ட எம்எல்ஏக்களில் தங்கள் பிரமாண பத்திரங்களில் முன்வைத்துள்ள கல்வி விவரங்கள் பொய்யானதாகவும், ஏமாற்று மோசடிகள் நிறைந்ததாகவும் உள்ளது என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

இது மட்டுமின்றி வெளிநாட்டில் குடியுரிமை பெற்று ரசிக போதையில் இங்கு வந்து ஓட்டு போட்டுவிட்டு அதையும் முட்டாள்தனமாக ரிலீஸ் எடுத்து பகிர்ந்த தற்குறி கூட்டம் தற்போது ஒவ்வொன்றாக கைதாகிக் கொண்டுள்ளனர்.

படிக்க:

 கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!

 திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், சென்னை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விரலில் தேர்தல் மை வைக்கப்பட்டிருந்த, போலி இந்திய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை, பிரிட்டிஷ் மற்றும் கனடா குடியுரிமை பெற்ற 25-க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களை (NRI/Foreign Passport holders) குடியுரிமை மற்றும் மாநில அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பாசிசக் கோமாளியான நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் தென்னிந்திய வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவை பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்பது மட்டுமின்றி சிறந்த ஆட்சியை வழங்குவார் என்றும் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“நாங்கள் நடத்திய சந்திப்புகளிலேயே இது மிகச் சிறந்த ஒன்றாகும்; கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் செலவிட்டோம். கருத்துக்களைக் கேட்க முதலமைச்சர் காட்டும் ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவரது தலைமை ஒரு தொலைநோக்குப் பார்வைக் கொண்டது,” என்று பான் ப்யூர் கெமிக்கல்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், CII MSME தேசிய மன்றம் மற்றும் EoDB மீதான தேசியப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான எம்.பொன்னுசாமி, X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் பாஜகவின் நிதி மூலதனப் புரவலரான திருவாளர் ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு விஜய்யின் ஆட்சியை தற்போது புகழத் தொடங்கி விட்டார்.

படிக்க:

 பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!

 தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!

மாற்று என்ற பெயரில் தற்போதுள்ள கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக ஒரு மண்ணாங்கட்டியும் கையில் இல்லாமல், கார்ப்பரேட் பொருளாதார கொள்கையை அப்படியே ஆதரிக்கின்ற, இன்னும் சொல்லப் போனால் எந்த சித்தாந்தமும், கொள்கையும் இல்லாமல் கார்ப்பரேட் கொள்ளைக்கு தமிழகத்தை திறந்து விடக்கூடிய ஒரு கும்பல் தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் அந்நிய முதலீடு மற்றும் தொழில் முதலீடு ஆகியவற்றை இருகரம் கூப்பி வரவேற்பதாக முதலாளிகளை அழைத்து வைத்துக் கொண்டு விஜய் அவர்களுடன் பேட்டி அளிக்கின்றார்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, அதில் தஞ்சாவூர் நான்சி மஹாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு நிர்வாகிகளிடம் அழைப்பிதழ் கொடுத்து தொண்டர்களை வரவேற்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,

“முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழிலைப் பார்க்க வேண்டும். அதில் வரும் வருமானத்திலிருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது” என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன் என்று புளுகினார். ஆனால், ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தாங்காது’ என்பது போல ஒரு சில மாதங்களுக்குள் புளுகு மூட்டைகள் அம்பலமாகி வருகிறது.

“ஆட்சியைப் பிடித்து ஒரு வாரம் ஆகிறது, ஏன் இன்னும் எல்லாம் மாறவில்லை” என்று விஜய் ரசிகர்கள் போல நாமும் தற்குறித்தனமாக கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியை காட்டிலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஏதோ சொர்க்கபுரியை போல தமிழகத்தை மாற்றப் போவதாக கதை அளந்துக் கொண்டும், அதனை தனது ரூட் மாஃபியா கும்பல் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளரின் கையில் உள்ள செல்பேசிக்கும் தொடர்ந்து டிஜிட்டல் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் தற்போது அதே பாணியில் தான் தனது ஆட்சியை தொடர்கிறது.

ஆனால் ரூட் மாஃபியா கும்பலின் அலப்பறைகள் இதனையும் பிரச்சாரமாக்குகிறது. எடுத்துக்காட்டாக எம்எல்ஏக்கள் தெருவில் நடந்தால் அதை எடுத்து ரீல்ஸ் போடுவது; வழக்கமாக அவர்கள் செய்யக்கூடிய வேலைகளை செய்தால் அதனையும் ரீல்ஸ் ஆக்குவது; இதன் உச்சகட்டமாக முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் நடத்துகின்ற பேச்சு வார்த்தையே ரீல்ஸ் எடுத்துப் போடுகின்ற அளவிற்கு இந்த டிஜிட்டல் மாஃபியா தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்ற கட்சிகளைப் போல ஆறு மாத காலம் பார்ப்போம். அதன் பிறகு வாயை திறப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது கதைக்கு உதவாது. கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேர்தல் அரசியலுக்கு அப்பால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒரு படையாக திரள வேண்டும் என்பதும், அவற்றின் மூலம் கீழிருந்து ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குவதன் மூலம் தான் புதிய ஒரு சமூக அமைப்பை கட்டமைப்பை உருவாக்க முடியும். அது ஜனநாயக் கூட்டரசு என்ற வடிவத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வோம்.

அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியிலாக மாற்று ஒன்று இல்லாமல் வெறும் வாய்ச்சவடால் மற்றும் டிஜிட்டல் மாஃபியா கும்பல் மூலமாக நடத்தப்படுகின்ற பிரச்சாரங்கள் எதுவும் மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகளை தீர்க்காது. அன்றாடம் ஏறுகின்ற விலைவாசி உயர்வு, இந்தியாவின் பொருளாதார நெருக்கடி, கடன் சுமை அதன் மூலம் இந்தியா படிப்படியாக திவாலாகின்ற நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பது ஆகியவற்றை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. ஆம். தோழர் மருது பாண்டியன் குறிப்பிட்டு உள்ளது போல ரூப் மாஃபியா
    டிஜிட்டல் விருச்சுவல் வாரியர்ஸ் மூலம் வாக்கு வங்கி அரசியலை அறுவடை செய்து ஆட்சி கட்டிலில் ஏறி இருக்கும் கூத்தாடிகள் மூலம் மக்களுக்கு விடியல் பிறக்கும் என்று எவரும் கருதுவார்களே யானால் அதைப் போன்ற பேமாளித்தனம்
    வேறு எதுவும் இருக்க முடியாது.

    தோழர் குறிப்பிட்ட தேர்தல் அரசியலுக்கு வெளியே புரட்சிகர சமூக மாற்றத்திற்கான புரட்சிகர அரசியல் செயல்பாடுகள் மற்றும் மற்றத்திற்கான போராட்டங்கள் மூலமே மக்களுக்கு நிரந்தர விடுதலையே உண்டு பண்ண முடியும் என்பது உணரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here