மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ‘Blue Screen of Death (BSOD)’ எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது” என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதென்ன CrowdStrike சிக்கல்?: – Crowdstrike என்பது சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆகும். கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் இந்த Crowdstrike, விண்டோஸ் சாப்ட்வேரில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி, ரியல் டைமில் பாதுகாப்பு சிக்கல்களை கிளவுட் அடிப்படையிலான ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இந்த நிறுவனம் விண்டோஸில் தீர்வுகளை வழங்குகிறது.

இந்நிலையில், இந்த Crowdstrike-ன் சமீபத்திய அப்டேட்டில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் எனப்படும் Blue Screen of Death எரர் இணைக்கப்பட, அது உலகம் முழுவதும் விண்டோஸ் சேவை பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்ந்தது. Crowdstrike-ன் கடைசி அப்டேட் வியாழக்கிழமை இரவு வந்துள்ளது. இதன் எரர், Falcon சென்சாரில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மிகப்பெரிய தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனம் ஆகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ் உலக பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளார் என்பதும், அவரது நிறுவனங்களின் பங்குகள் உலக அளவில் லாபம் தரக்கூடிய பங்குகளாக உள்ளது என்பதும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் சந்தை நிபுணர்கள் மார்தட்டி கொள்கின்றனர்.

நீங்கள் சுதந்திரமாக இருப்பதைப் போல கருதிக் கொள்ளலாம்; உங்கள் தகவல்களை வாட்ஸ் அப் மூலம் என்கிரிப்சன் செய்து அனுப்பி வைக்கலாம்; ஆனால் முகநூல் பக்கங்களிலும் whatsapp களிலும் இன்ஸ்டாகிராம்களிலும் நீங்கள் பகிர்கின்ற செய்திகள் மெட்டா, ஆல்பாபெட் போன்ற தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு மிகப்பெரிய தரவுகளை இலவசமாக திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

எந்திரன் என்ற தமிழ் திரைப்படத்தில் சிட்டி என்ற ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானி அதாவது திரைப்படத்தில் ரஜினிகாந்த், நல்ல நோக்கத்திற்காகவே அந்த ரோபோவை தயாரிப்பார். ஆனால் அந்த ரோபோவை வைத்து உலகை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்ற வில்லன் ரோபோவை இயக்குகின்ற சிப்புகளில் சில ப்ரோக்ராம்களை மாற்றி கொடூரமான ரோபோவாக மாற்றி விடுவார்.

இது தமிழ் திரைப்பட உலகின் ஸ்பீல் பெர்க் என்று புகழப்படும் திருவாளர் ஷங்கரின் கற்பனை என்ற எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் இதுபோன்ற அனைத்தையும் சாத்தியம் என்று நிரூபிக்கிறது.

உலகில் 74 சதவீத கணினி இயங்குதளத்தை விண்டோஸ் கட்டுப்படுத்துகிறது. இதற்கு  இணையாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மேக் மற்றும் லினக்ஸ் ஆகிய ஹோஸ்ட்கள் பாதிப்பு அடையவில்லை என்பதால் இது சைபர் தாக்குதல் இல்லை என்று மைக்ரோசாப்ட் மகிழ்ச்சி கொள்கிறது.

ஆனால் இந்த ப்ளூ ஸ்க்ரீன் எரர் ‘Blue Screen of Death (BSOD) மூலம் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா துவங்கி பெங்களூர் வரை அனைத்து விமான நிலையங்களிலும் மேட்டுக்குடி விமான பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். சுமார் 1390 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவை மட்டுமல்ல, நிதி மூலதனத்தின் உயிர் நாடியான பங்கு சந்தை, அரசு அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் முறையில் வர்த்தகம் செய்கின்ற அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஊடக நிறுவனங்கள் சுருக்கமாகச் சொன்னால் விண்டோஸ்-10 செயல்பாட்டின் கீழ் உள்ள அனைவரின் மீதும் இந்த நெருக்கடி மிகக் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இந்த சிக்கலை தாங்கள் தீர்த்து வருவதாகவும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சரி செய்து விடுவதாகவும் மைக்ரோசாப்ட் தரப்பில் கூறப்பட்டு கொண்டிருந்தாலும் மைக்ரோசாப்ட் 365, மைக்ரோசாப்ட் ஆசிர், மைக்ரோசாப்ட் டீம், மைக்ரோசாப்ட் கிளவுட் போன்றவை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் ஜாயிண்ட் நிறுவனங்களின் கையில் தான் உலகின் பாதுகாப்பு மற்றும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் உள்ளது என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

நீங்கள் சுதந்திரமாக இருப்பதைப் போல கருதிக் கொள்ளலாம்; உங்கள் தகவல்களை வாட்ஸ் அப் மூலம் என்கிரிப்சன் செய்து அனுப்பி வைக்கலாம்; ஆனால் முகநூல் பக்கங்களிலும் whatsapp களிலும் இன்ஸ்டாகிராம்களிலும் நீங்கள் பகிர்கின்ற செய்திகள் மெட்டா, ஆல்பாபெட் போன்ற தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு மிகப்பெரிய தரவுகளை இலவசமாக திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பல ஆயிரம் பேரை பயன்படுத்தி உங்கள் தரவுகளை அவர்கள் சேகரிப்பதற்கு பதிலாக, நீங்களே உங்களது தரவுகளை, அதாவது உங்களது விருப்பங்கள், ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், காதல், வீரம், பாசம், அன்பு, நன்னடத்தை, கடவுள் நம்பிக்கை போன்ற அனைத்தையும் இதுபோன்ற இணையதளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலமாக நீங்கள் பகிர்ந்தாலும் அதனை ’தகவல் தொழில்நுட்ப பரம்பொருள்’ கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

  • ஆல்பர்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here