மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

தமிழகத்தின் வரலாற்றிலேயே தனித்தனியாக போராடிக் கொண்டிருந்த சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி சுமார் 170 க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து போராடியுள்ளது புதிய திருப்புமுனையாகும்.

தமிழகத்தில் மொத்தம் சுமார் 2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிற்சாலைகளும் இன்று மூடப்பட்டன.

இந்திய, தமிழக பொருளாதாரத்தில் சிறு குறு தொழில்களின் பங்களிப்பு.

“பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் நிகரான மேம்பாட்டிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். குறைந்த மூலதனத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதே இப்பிரிவின் மேன்மையாகும். பெருந்தொழில் நிறுவனங்களைவிட இந்நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் தொழில் முனைவோரின் தனித்திறன் மற்றும் ஆக்கப்பூர்வத்திறனின் வளர்ப்பிடமாக திகழ்கின்றன.

நம் நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியிலும், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன. 2.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 6 கோடி நபர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன.

சமீப காலங்களில் மொத்த தொழில் பிரிவில் இந்நிறுவனங்கள் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. இப்பிரிவானது காலத்திற்கு ஏற்றவாறு விரைவில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையின் மூலமும், முன்னோடித் திறன் மூலமும் சமீபத்தில் பொருளாதார நெருக்கடியில் சமாளித்து நிலைநிறுத்தி கொள்ள முடிந்தது. தேசிய நோக்கமான ஒருங்கிணைந்த சம வளர்ச்சியடைவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும்.

நம் நாட்டிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி எண்ணிக்கை அதிக அளவில் 15.07 சதவிதம் அதாவது 6.89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இவை ரூ.32,008 கோடிக்கும் மேலாக மொத்த முதலீட்டில் 8,000 வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன.

வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. சிறப்பு உற்பத்தி தொழில் பிரிவுகளை ஊக்குவிப்பதன் பொருட்டு கீழ்க்கண்ட 13 தொழில்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்று சிறு தொழில் பற்றி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையம் அறிவிக்கின்றது.

இதனால் தான் நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள்  அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன..அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் குறைவு.) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர்

இத்தகைய சாதனைகளை ஈட்டுவதற்கு தொழிலாளி வர்க்கம் தனது ரத்த வியர்வையை சிந்தி பாடுபட்டு உழைத்துக் கொடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிச பாஜக அரசாங்கம் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள போதே அதனை தட்டிக் கழிப்பது மட்டுமின்றி சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி நடத்துபவர்களையும் அதிலிருந்து விரட்டி அடிக்கின்ற வகையில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

ஆலைகள் இயங்க அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தனியார் மயமாக்கி கொள்ளையடிப்பது யார்?

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தவரை மக்களின் தேவைக்கு குறைந்த கட்டணத்திலும் சிறு குறு தொழில்கள் நடத்துவதற்கு அவசியமான மின்சாரத்தை குறிப்பிட்ட அளவிற்கு குறைந்த கட்டணத்திலும் வழங்கி வந்தது.

மின்சார உற்பத்தியை லாபம் கொழிக்கும் துறையாக கண்டுகொண்ட அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் கொள்ளை கூட்டம் மின் உற்பத்தியை படிப்படியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றது மட்டுமின்றி அதன் விநியோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உதவுகின்ற வகையில் இந்திய ஒன்றிய அரசு மின்சார சட்ட திருத்தம் 2022 மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தது.

இதன் விளைவாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மின்விநியோகம் கொல்லைப்புற வழியில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை நடத்தும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் கொடிய விளைவினால் சிறு குறு தொழில் முனைவர்கள் மின்சார கட்டண உயர்வு என்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:

தனியார் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபடுவதை புதிய சட்டத் திருத்த மசோதா வெகுவாக ஊக்குவிக்கிறது. ஆனால், லாபம் தரக்கூடிய பகுதிகளில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபடும். அந்த லாபம் முழுக்க அவர்களையே சென்று சேரும். கிராமங்கள், விவசாயப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அரசே மேற்கொள்ள வேண்டியிருக்கும். லாபம் தரக்கூடிய பகுதிகள் தனியாருக்குச் சென்றுவிட்டால், Cross subsidy மூலம் பிற பிரிவினருக்கு சலுகைகளைத் தர முடியாது என்று அப்போதே தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பாசிச பாஜக அரசு மின்சாரத்தை தனியார் மயமாக்கியதையும், விநியோகத்தை அவர்கள் கையில் ஒப்படைக்கவும் நிறுத்தவே இல்லை. அதன் விளைவாக தமிழகத்தில் சிறு ஒரு தொழில் முனைவோர் கூட்டமைப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியது.

“சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற கட்டணங்களை வசூலித்தால் தொழில்கள் வாழ முடியாது. அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக மின் கட்டணத்துடன் தொழில்துறைக்கு உகந்த சூழலை நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் MSMEகள் உள்ளன, அவை லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை மற்றும் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. உயர்த்தப்பட்ட மின் கட்டணம், ஃபிக்ஸட் சார்ஜ்கள், பீக் ஹவர் சார்ஜ்கள் போன்றவை மிக அதிகமாக இருப்பதால் எமது தொழிற்சாலைகளை மூடி தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு உருவாகி உள்ளது” என்று 2023 ஏப்ரல் மாதத்திலேயே சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அதனை தமிழக அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கையாளாமல் விட்டதன் விளைவாக மீண்டும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழகம் முழுவதும் தமது தொழிற்சாலைகளை மூடி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

  1. குறு-சிறு, நடுத்தர மின் நுகர்வோருக்கு 12 கிலோவாட்டுக்குள் மின் இணைப்பு பெரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு மின்சார வாரியத்தின் டாரிப்பில் 3A (1) மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், 3க்ஷ மின் இணைப்பு வழங்குகின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோருக்கு கிடைக்க வேண்டிய சலுகை பறிக்கப்படுவதுடன்,  கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, குறு-சிறு, நடுத்தர மின் நுகர்வோருக்கும், எலெக்ட்ரானிக் வெல்டிங் மிஷின் கொண்டு வேலை செய்யும் தொழில் முனைவோருக்கும் (12KW Load) Tariff 3 A (1) மின் இணைப்பு அளிக்க வேண்டும்.
  2. உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணத்தை  திரும்பப்பெற்று, ஏற்கனவே இருந்த பழைய நிலைக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.
  3. சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இதுவரையில் இல்லாத பீக் ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
  4. தொழில் துறையினர் தங்களது நிறுவனத்திலேயே சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு மானியத்தோடு ஊக்குவிப்பதும், தேவையான வங்கி கடன்களை குறைந்த வட்டியில் கிடைக்கச் செய்யவும், உற்பத்திக்கு மின் வாரியம் விதித்து வரும் யூனிட்டுக்கு ரூ 1.53 பைசா என்பதை கைவிட வேண்டும்.

நூல்விலையை கட்டுப்படுத்தக் கோரி:

5. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “தமிழ்நாடு பருத்தி கழகத்தை” வரவேற்கிறோம். இந்த கழகத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவும், இந்த கழகத்தின் மூலம் தேவையான பருத்தியை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

6. பருத்தியை மூலப்பொருளாக கொண்டு செயல்பட்டு வரும் பனியன், பவர்லூம், கைத்தறி, பஞ்சாலைகளில் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 25 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூல்விலையேற்றம், பஞ்சு தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் இத்தொழில் நசிவடைந்து வருகிறது. இத்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், நிலையற்ற நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போன்ற முக்கியமான ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராடியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களின் பத்திரிக்கை செய்தி தொகுப்பு!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் கிரைண்டர், மிக்ஸி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தம் காரணமாக மூடபப்ட்டன. குறிச்சி, சிட்கோ, கணபதி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கிடந்தன.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2-வது பெரிய தொழிற்பேட்டையான கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 600-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன. இந்தக் கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கதவடைப்பு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் ஈடுபட்டுள்ளது. இதனால் தொழில்கள் முடங்கியது..

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கான்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், 100-க்கும் மேற்பட்ட ஆயில் மில்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் அரிசி ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது.

போராட்டத்தை ஆதரித்துள்ள கம்யூனிச அமைப்புகள்.

தமிழ்நாட்டில் சுமார் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருவதும் இத்தகைய தொழில் நிறுவனங்களேயாகும். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா பேரிடர் போன்றவைகளால் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பையும், இழப்பையும் சந்தித்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது மின் நிலைக்கட்டணம் உயர்வும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், எல்.டி 111 – பி என்ற மின் இணைப்பை பெற்றவர்கள். மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர்கள் இடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் இல்லை. 100 சதவிகிதம் மின்வாரியத்தை சார்ந்தே தொழில் செய்து வருகிறார்கள்.

டிமாண்ட் சார்ஜ், புதிதாக விதிக்கப்பட்ட பீக் ஹவர் கட்டணத்தினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவர் லூம் தொழில் உள்ளிட்டு ஜவுளித் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து தொழில் செய்ய முடியாமல் மூடும் ஆபத்தில் உள்ளது. இதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். என்று சிபிஎம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் முன் வைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைத்துவிட்டு சிறு ஒரு தொழில்களை ஒழித்துக் கட்டுவதற்கு பாசிச பாஜக வேகமாக வேலை செய்து வருகிறது. பாசிச பாஜகவின்  பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதாக கூறுகின்ற திமுகவோ லட்சக்கணக்கான சிறு தொழில் பாதிக்கப்படுவதை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், ஏற்கனவே அவர்கள் எச்சரித்ததையும் அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்று தொழிற்சாலைகளை கதவடைப்பாக வெளிப்பட்டுள்ளது.

இன்று ஒரு நாள் மூடியதற்கு 1500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று முதலாளித்துவ ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வையும் சிறு குறு தொழில் முனைவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் மின்சார தனியார் மயத்தை எதிர்த்து அவை முற்றிலுமாக திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் ஓயாது.

  • சீராளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here