டந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் கைத்தறி நெசவாளர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சில இடங்களில் அரசிடம் மனு கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். ஏன் இந்த போராட்டங்கள்? தமிழகத்தில் கைத்தறி தொழிலில் என்ன சிக்கல் என்பதை பார்ப்போம்.

கைத்தறி புடவை உற்பத்தியில் அதன் மூலப்பொருளை விட புடவை நெசவுக்கான கூலி அதிகம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கூட சேலைகளுக்கான சந்தை பரந்து விரிந்துள்ளது. அதில் பாரம்பரிய கைத்தறி உற்பத்தி என்பது  அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு சில  ரகத்தில் மட்டுமே உள்ளது. இதர ரகங்கள் அனைத்தும் அதிநவீன விசைத்தறிகளில் உற்பத்தியாகி மலிவான விலைக்கு சந்தைக்கு வருகிறது.

கைத்தறியை கழுவேற்றும் அரசு!

தமிழகத்தின் காஞ்சிபுரம், ஆரணி, சிறுமுகை, நெகமம் போன்ற ஊர்கள் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி சேலைகளுக்கு புகழ் பெற்றவை.

பாரம்பரியமிக்க இவர்களின் ரகங்களை அதே தரத்தில் மிகவும் மலிவான உற்பத்தி செலவில் மிகப்பெரும் அளவில் உற்பத்தி செய்து குவிக்க கூடிய அதிநவீன ஜவுளி ஆலைகள் மோடியின் குஜராத்தில் உருவெடுத்துள்ளன.

அனைத்து துறைகளிலும் தனது கொடுங்கரங்களைப் பரப்பி மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டு வரும் கார்ப்பரேட் கும்பல்கள் ஜவுளி துறையில் மட்டும் கைத்தறிக்கான ஒதுக்கீட்டை விட்டு வைப்பார்களா? மத்திய மாநில அரசுகள் கைத்தறிக்காக  தந்து வரும் மானியங்களையும், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளையும் இனியும் தர அனுமதிப்பார்களா?

அழிவின் விளிம்பில் கைத்தறி தொழில்! அவலத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை!
கைத்தறி

தற்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரகங்களையும் அதன் சந்தையையும் கைப்பற்ற துடிக்கிறனர் நவீன ஜவுளித்துறை கார்ப்பரேட்டுகள். தமிழகத்திலேயே இத்தகைய  அதிநவீன தறிகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் வந்து விட்டன. ஒரே தறியில் ஒரே நேரத்தில் மூன்று சேலைகளை நெசவு செய்ய முடிகிறது. ஒரு தொழிலாளி ஒரே நேரத்தில்  நான்கு தறிகளை இயக்கவும் முடிகிறது. அங்கு பணிபுரியும் ஒரு தொழிலாளி 8 மணி நேரத்தில் 40 சேலைகளை உற்பத்தி செய்து விட முடிகிறது. கைத்தறியில் ஒரு பட்டு சேலைக்கு மூன்று நாட்கள் வரை உழைப்பு தேவைப்படுகிறது.

உற்பத்தி வேகம் அதிகரிப்பதால் ஒரு சீலையின் அடக்க விலையில் கணிசமான அளவு இருந்து வந்த உழைப்பு கூலி என்பது மிகவும் குறைவானதாக மாற்றப்படுகிறது. சூரத்தில் அதிநவீன ஆலைகளில் உள்ள தறிகளால் ஒப்பீட்டளவில் மிக குறைந்த விலைக்கு  சீலைகளை உற்பத்தி செய்து பெரும் எண்ணிக்கைகளில் கடைகளுக்கு அனுப்ப முடிகிறது. முன்னணி ஜவுளிக்கடைகளும் இத்தகைய அதிநவீன தறியில் உற்பத்தியாகும் சேலைகளை கைத்தறி ரகம் என்று நுகர்வோர் தலையில் கட்டுவதும் நடக்கிறது.

விசைத்தறிக்கு வைக்கப்படும் விஷம் !

இந்தியாவில் செயற்கை இழையான பாலியஸ்டர் உற்பத்தியில் ரிலையன்சின் அம்பானிதான் மோனோபோலியாக –  ஏகபோகமாக கோலோச்சுகிறார்.

அழிவின் விளிம்பில் கைத்தறி தொழில்! அவலத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை!
விசைத்தறி

தற்போது மேக்கின் இந்தியா என நடித்து வரும் மோடி அரசால் ஆகஸ்ட் 15 போலி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மூவர்ணக் கொடியை வாங்குவதற்கு கூட அம்பானியின் தயவு தேவை. அரசு அலுவலகங்களில் பட்டொளி வீசி பறக்கும்படி கொடிக்கம்பங்களில் ஏற்றுவதற்கு  பருத்தி துணியிலான மூவர்ண கொடிக்கு பதிலாக, செயற்கை இழையிலான மூவர்ண கொடியை ஏற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

செயற்கை இழை என்றழைக்கப்படும் பாலியஸ்டர் நிலத்தில் இருந்து விளைவதில்லை. பெட்ரோலியத்திலிருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது. அதேபோல் செயற்கைப்பட்டும் ஆலைகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

பரலோகத்திற்கு அனுப்பப்படும் பாரம்பரியங்கள் !

ஒரு துறையில் ஏகபோகமாக கோலோச்ச விரும்புபவர்கள் ஒரு தொகுதியை மட்டும் விழுங்காமல் விட்டு வைத்து வேடிக்கையா பார்ப்பார்கள்?ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் விழுங்கும் வெறிகொண்டு தானே கார்ப்பரேட்டுகள் அலைவார்கள்.

தற்போது கைத்தறிகள் தீவிர சிகிச்சை பிரிவில் கிடக்கிறது. புற நோயாளியாக விசைத்தறிக்கூடங்கள் தள்ளாடுகின்றன. கார்ப்பரேட்டுகள் மருத்துவ சிகிச்சையே முடக்குகிறார்கள்.

தொழில் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்க விசைத்தறிகள் வாழ்வா சாவா போராட்டத்தை நடத்தி வருகின்றன. தமிழக அரசும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கும் பொங்கல் பரிசு தொகையில் உள்ள வேட்டி சேலைகளை கூட விசைத்தறி மூலமே உற்பத்தி செய்து விநியோகிக்கிறது.

பொங்கலுக்கு விநியோகிக்கப்படும் வேட்டி சேலை

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை ஜவுளி மில்களில் தயாரிப்பது சட்ட விரோதமாக இருப்பதால், அந்த சட்டத்தையே ரத்து செய்ய தமிழக விசைத்தறி உற்பத்தியாளர்களே கோரிக்கை வைத்துள்ளனர்.

விசைத்தறிகளையும் சேர்த்து முழுங்கவே நவீன ஜவுளித்துறை கார்ப்பரேட்டுகள் களமிறங்கியுள்ளனர்.  கைத்தறிக்கான ஒதுக்கீட்டு ரகங்களையே விசைத்தறி உரிமையாளர்களில் சிலர் சட்டவிரோதமாக உற்பத்தி செய்தும் வருகின்றனர். ஆனால் தற்போது அதி நவீன ஜவுளி ஆலைகளில் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட சேலைகளை மொத்தமாக தயாரிப்பது என்பது தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளையும் சேர்த்தேதான் துடைத்தெரியப் போகிறது.

தற்போது குஜராத்தின் சூரத்தில் உள்ள நவீன ஜவுளி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சீலைகள் கண்ணில் படுவதில்லை. ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஒரு சில விசைத்தறிக்கூடங்களில் நடக்கும் குறைந்த அளவிலான சட்ட விரோத உற்பத்தி மட்டுமே பூதாகரமாக பெருக்கிக் காட்டப்படுகிறது. அவர்கள் மீது தமிழக அரசின் நடவடிக்கையும் பாய்கிறது.

தமிழகத்தில் தாக்குப் பிடித்து வரும் கைத்தறி நெசவாளர்களையும் தொழிலிருந்து விரட்டி விட்டால் ஜவுளித்துறை கார்ப்பரேட்டுகள் தங்கள் விருப்பம் போல் மொத்த இந்திய சந்தையையும் ஆக்கிரமித்து விடலாம். ஏற்றுமதியையும் அதிகரித்துக் கொள்ளலாம் என வெறிகொண்டு அலைகின்றனர்.

நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட பாரம்பரியங்கள்!

நமது பாட்டிமார்கள் புழங்கிய மண்பாண்டங்கள் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டன. அது மேட்டுக்குடிகளுக்கு உரிய ஒன்றாகிவிட்டது.

நம் முன்னோர்கள் உண்ட பாரம்பரிய நெல் ரகங்களும், கைக்குத்தல் அரிசியும் கூட இன்று ஆடம்பரமானதாக மாற்றப்பட்டு விட்டது. சாமானியர்கள் அதை தொட்டும் பார்ப்பதில்லை.

இதையும் படியுங்கள்: தொழில் நகரம் திருப்பூர் திவாலாகும் கொடூரம்! அனுமதிக்காதே!

அதே வரிசையில் தான் பருத்தி நூலால் ஆன சேலைகளும் இனி சாமானிய மக்களால் உடுத்தப்பட போவதில்லை. ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட்டுகளின் மலிவு விலை செயற்கை இலை சீலைகளையே உடுத்தி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு விட்டனர்.

இனி பருத்தி ஆடை என்பது பணக்காரர்களின் பகட்டுக்கானதாகவே பார்க்கப்படும். அதேபோல் உண்மையான இயற்கை பட்டு சேலைகளும் ஒரு சில மேட்டுக்குடியினருக்கானதாக மட்டுமே மாற்றம் கொள்ளும்.

உண்ணாவிரதம் இருக்கும் நெசவாளர்களுக்கு அவர்களின் தொழிலை நெரிக்கும் கார்ப்பரேட்டுகளை யார் அடையாளம் காட்டுவது? மோடி அரசின் கார்ப்பரேட் வர்க்க பாசத்தை அம்பலப்படுத்துவது எப்படி?

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here