மிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் கடந்த பல வருடங்களாக நடந்து வந்தாலும் ஆளும் அரசுகள் மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை கொண்டதாக இல்லை. பிரச்சினை பெரிதாகும் பொழுது அதை நமத்து போகச் செய்ய சில உப்பு சப்பில்லாத நடவடிக்கைகளை எடுப்பது அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வாடிக்கையாக  போய்விட்டது.

கள்ளச்சாராய பலி அதிகரித்து அரசின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியை சரி செய்ய 500 கடைகள் மூடப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. அதிகம் வருமானம் வரக்கூடிய கடைகள் பாதிக்காதவாறு 500 கடைகள் மூடப்பட்டன. காலை நேரங்களில் பிளாக்கில் விற்பனையும் ஓரளவு குறைந்தது. இது நிரந்தரமல்ல,

மக்கள் அமைதியான பின்னர் மீண்டும் பழைய நடவடிக்கைகள் தொடங்கலாம் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

ஆனால் செந்தில்பாலாஜி கைதிற்கு பின்னர் புதிதாக பதவியேற்ற அமைச்சர் வேறு விதமாக சிந்தித்து அனைவரையும்  ‘ஆச்சரியத்தில்’ ஆழ்த்தியுள்ளார். தமிழகத்தில் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மேம்படுத்த (அவர்களையும் மேம்படுத்திக் கொள்ள) வேலைகள் செய்வார்கள். அதுபோல் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையையும் மேம்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் அமைச்சர் முத்துசாமி.

‘டெட்ரா பாக்கெட்’ மினி சாராயம்

அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில் அவருக்கு பதிலாக முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் டாஸ்மாக் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி 90மிலி அளவு டெட்ரா பாக்கெட்டுகளில் மதுவை கொண்டுவரப்போவதாக தெரிவித்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட். 140 ரூபாய் குறைவாக பணம் வைத்திருப்பவர்கள் மதுக்கடை வாசலிலேயே குடிகாரர்கள் காத்து கிடக்கிறார்களாம். இதனை தவிர்க்க தான் 90 மி.லி டெட்ரா பாக்கெட் சாராயம் கொண்டு வரப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் இது பொதுமக்களின் கோரிக்கையாம்.

குடிகாரர்கள் கால்கடுக்க டாஸ்மாக் வாசலில் காத்துக் கிடப்பதை பார்த்து அமைச்சர் முத்துசாமி மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். மக்கள் மீது கரிசணம் கொண்ட அமைச்சர்கள் இருந்துமா கோரிக்கைகளுடன் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு கால் தேய நடக்கிறார்கள்?

50, 60 ரூபாய்க்கு சாராயம் கிடைத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் எளிதாய் வாங்க முடியும் என்றும் அமைச்சர் முத்துசாமி சேர்த்து கூறியிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

காலையிலேயே  சாராயத்தை குடி!

அடுத்து, காலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள் சிரமப்படுகிறார்களாம். அதனால் காலை 9 மணிக்கே டாஸ்மாக் திறப்பது குறித்து ‘மக்களிடம்’ இருந்து  கோரிக்கை வந்துள்ளதாம். இது குறித்தும் ஆலோசித்து வருகிறார்களாம். கடுமையான வேலையில் ஈடுபடுபவர்கள் காலையில் சாரயம் கிடைக்காததால் வேறு எங்கும் தவறாக சென்றுவிடக் கூடாது என்று அமைச்சர் கூறுகிறார். அதனால் காலை 8 மணிக்கே டாஸ்மாக் திறந்தாலும் ஆச்சரியம் இல்லை. அமைச்சருக்கு ‘மக்கள் நலன்’ தானே முக்கியம்.

காலையிலே அரசு ஊத்திக் கொடுக்கும் சாராயத்தை குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ரோட்டில் விழுந்துக் கிடந்தாலோ, எங்காவது அடிப்பட்டு செத்தாலோ அரசுக்கு என்ன கவலை இருக்கப்போகிறது. அவர்களுக்கு டாஸ்மாக் வருமானம் அதிகரிக்க வேண்டும் அவ்வளவு தான்.

‘மதுவிலக்கு’ துறை என்பது தமிழகத்தில் சாராயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான துறை. ஆனால் அமைச்சர் முத்துசாமி அவரது துறையின் பெயருக்கான காரணத்தை மறந்து விட்டார் போலும். அவர் மட்டும் புதிதாக செய்யவில்லை. இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களும் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தவே அயராது உழைத்தார்கள். அவர்கள் அனைவரும் டாஸ்மாக் அமைச்சர்களாகவே இருந்தார்கள். அதில் அவர்களுக்கும் நல்ல வருமானம் இருந்தது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்நாட்டில் இன்னும் பல கிராமங்களுக்கு சாலை வசதிகள், பள்ளிக் கூடங்கள், அடிப்படை வசதிகள் இவையனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று வருடக்கணக்கில் காத்திருந்து கலெக்டர் அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் கொடுத்த கோடிக்கணக்கான கோரிக்கைகள் ஏராளம். இது எதுவும் மக்களின் கோரிக்கைகளாக அரசுக்கு தெரியவில்லை. குடிகாரர்கள் கோரிக்கை வைத்தார்கள் என்று டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க போராடுகிறார் ‘மதுவிலக்கு’ அமைச்சர் முத்துசாமி.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு டாஸ்மாக் வருமானத்தை பற்றி யோசிக்காமல் அதனால் ஏற்படும் பாதிப்பை பற்றி தான் யோசிக்கும். ஆனால் ஆளும் திமுக அரசோ மக்களை எப்படி குடிக்க வைப்பது, குடிகாரர்கள் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று யோசிப்பதாகவே உள்ளது அவர்களது நடவடிக்கைகள்.

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களே இந்த நிலையை மாற்றும். டாஸ்மாக்கை‌ மூடும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here