மக்கள்திரள் பாதையில் தஞ்சை மண்ணில் மணம் பரப்பும் நக்சல்பாரி வித்துக்கள்

தோழர் பழனிவேல், தியாகு போன்ற தோழர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் இன்றி தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கம் மக்கள் திரள் பாதையில் வளர்ந்திருக்க முடியாது.

மக்கள்திரள் பாதையில் தஞ்சை மண்ணில் மணம் பரப்பும் நக்சல்பாரி வித்துக்கள்


ன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

காவிரி டெல்டாவில் உழைக்கும் மக்களின் விடுதலையை உயர்த்திப்பிடித்த கம்யூனிச போராளிகள் ஏராளமானோர் உருவாகி, வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
அத்தகைய தோழர்களில் ஒருவராக தஞ்சை மண்ணில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்ற பட்டதாரி தோழர் பிரமன்பேட்டை கா.பா (என்கிற) கா.பழனிவேல் கம்யூனிச போராளியாய் வாழ்ந்து மறைந்தார். பூதலூர் திருவையாறு வட்டாரத்தில் நக்சல்பரி புரட்சியாளராய் மணம் பரப்பி அரசியலை விதைத்தார்.

அவர் விதைத்த விதைகளில் முளைத்தெழுந்தவர்களில் ஒருவர்தான் பூதலூர் தியாகு என்கிற தோழர் தியாகராசன். தோழர் பழனிவேலுவை அடியொற்றி துவக்ககால விவசாயிகள் விடுதலை முன்னணியிலும், தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்திலும் தனது பங்களிப்பை செலுத்தியவர் தோழர் தியாகு.

தொலைத்தொடர்பு ஊழியரான தோழர் தியாகராசன் NFTE சங்கத்தின் போர்குணமிக்க போராளிகளில் ஒருவர். தொலைத்தொடர்பு துறையில் மஸ்தூர்களை நிரந்தப்படுத்தும் போராட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களிலும் அச்சமின்றி பங்கேற்றவர். தொலைத்தொடர்பு துறையில் பிழைப்புவாத தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் புரட்சிகர தொழிற்சங்கத்தை கட்டியமைக்க ஊன்றிநின்ற தோழர்களில் தியாகுவும் ஒருவர். BSNL, BHEL போன்ற பொதுத்துறைகளிலும், மத்திய அரசு துறைகளிலும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் மறுகாலனியாக்க எதிர்ப்பு கருத்தரங்கங்கள் நடத்தி கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிரான போராட்டங்களை கட்டியமைத்த போது களப்பணியாற்றி போராட்டத்திற்கு அணிசேர்த்தவர். சுயநலன் – பிரதிபலன் – எதிர்பார்ப்பு இன்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவியதோடு அவர்களின் நலனுக்காக சுயமாக முன்நின்று போராடியவர். அவர் மட்டுமின்றி அவரது இளவல்களும், குடும்பத்தினரும் புரட்சிகர அரசியலை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

தோழர் பழனிவேல், தியாகு போன்ற தோழர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் இன்றி தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கம் மக்கள் திரள் பாதையில் வளர்ந்திருக்க முடியாது.

இதற்கு நேர் மாறாக ஒரு சில ஆண்டுகள் அமைப்பில் வேலை செய்த உடனேயே நக்சல்பாரி அமைப்பின் மரபுகள், விழுமியங்கள் அனைத்திற்கும் நானே சொந்தக்காரன், நானே மாபெரும் சித்தாந்த தலைவன் என்பதைப் போல சிலர் கிணற்றுத் தவளைகளாக துள்ளிக் குதிக்கின்றனர் “கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு கிணற்றின் விட்டமே வானமாக தெரியும்” என்ற முதுமொழியை நிரூபிக்கின்ற வகையில் அலைந்து திரிபவர்கள். ஒன்று, இரண்டு வேலைகளை செய்து விட்டாலே சுயதம்பட்டம் அடித்துக் கொள்வது, தற்பெருமை பேசித்திரிவது, பிறரை காட்டிலும் தன்னை மிகப்பெரியவனாக கருதிக் கொண்டு மிதப்பது என்று உலவும் போலிகள் மத்தியில் குறிப்பிட்ட பகுதியில் ஊன்றி நின்று, அமைப்பு முறைக்கு கட்டுப்பட்டு புரட்சிகர அரசியலை கொண்டு சென்றதில் தியாகு போன்ற தோழர்களின் பங்கு அளப்பரியது.

இறுதிக் காலத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரத்தம் சுத்திகரிப்பதை தனது வீட்டிலேயே சுய முயற்சியில் செய்து வந்தார் என்பது அவரது மனஉறுதிக்கு அசாத்தியமானதொரு சான்றாகும். கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் தோழர் தியாகுவின் நினைவேந்தல் பட திறப்புவிழா முக்கியத்துவம் வாய்ந்தது.

பூதலூர் தியாகு (என்கிற) தோழர் தியாகராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி 10-02-2024 காலை 11.00 மணி, பூதலூர் அண்ணா நகர் தியாகு இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில இணைச்செயலர் தோழர் இராவணன் தலைமையில் நினைவேந்தல் நடைபெற்றது.

பதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் தோழர் பழனி தோழர் தியாகு அவர்களின் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் உடல்நிலை ஒத்துழக்காததால் படத்திறப்பில் பங்கேற்க இயலவில்லை. அவர் அனுப்பிய நினைவேந்தல் ஒலிப்பதிவு செய்தி ஒலிபரப்பப்பட்டது.

NFTE – BSNL தமிழ்நாடு மாநிலசெயலர்தோழர் கே. நடராஜன், NFTE – BSNL மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் கண்ணன், தோழர் பத்மநாபன், தோழர் சந்திரசேகர்,

மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்டசெயலர் தோழர் தேவா,

மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் தஞ்சை சாம்பான்

சிபிஐ(எம்) திருவையாறு ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் ஜெயசீலன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி தஞ்சாவூர் மாவட்டத்தலைவர் தோழர் தே. கலையமுதன்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் முனைவர் சி. வீரமணி ஆகியோர் தோழர் தியாகுவிற்கு புகழஞ்சலி செலுத்தினர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தஞ்சை பொருளாளர் தோழர் லெட்சுமணன் நன்றியுரை ஆற்றினார்

தகவல்:
மகஇக – புஜதொமு,
தஞ்சை மாவட்டம்.
9443157641

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here