பகுதி 1

யற்கையை புறக்கணிக்கும் வளர்ச்சிப்பாதையை பின்பற்றிய, தீவிர நிலநடுக்கம் தாக்கும் புவித்தட்டின் விளிம்பில் உள்ள துருக்கிக்கு, 2023ஆனது துக்க ஆண்டாக மாறியுள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி, அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதேநாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 2.3 கோடி பேரின் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளது. இதை துருக்கியின் வரலாறு காணாத பேரிடர் என அந்த நாடு அறிவித்திருக்கிறது.

நிலநடுக்கம் என்பது நிலம் நடுங்குவதுதான். ஏதாவது ஒரு இடத்தில் பூமி அசையும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆற்றலை வெளியிடுவதன் விளைவாக இது நிகழ்கிறது, இது அலைகளை எல்லா திசைகளிலும் நகர்த்துகிறது. ஒரு பூகம்பம் ஏற்படும் போது, பூமி அதிர்வுறும், இந்த அதிர்வு அலைகளை உருவாக்குகிறது, அவை நில அதிர்வு வரைபடங்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. இது இயற்கை என்றாலும் இதில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மடிய முதலாளித்துவம் உருவாக்கும் மாற்றம்தான் முக்கிய காரணியாகும்.

முதலாளித்துவம் நடத்தியுள்ள நரபலி!

1939ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது. இம்முறை ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு மக்கள் நெருக்கமும், முதலாளித்துவம் கொண்டுவந்துள்ள தொழிலுற்பத்தியும் – நகரமயமாதலும் முக்கிய காரணம். நிலநடுக்க அபாயமுள்ள மாவட்டங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் சாத்தியமான நவீன கட்டுமான வழிமுறைகளில் ஜப்பானைப்போல் உறுதியானதாக கட்டப்படவில்லை. அல்லது அப்படி கட்ட விழிப்புணர்வு ஊட்டப்படவில்லை. உழைத்து வாழும் மக்கள் நில அதிர்வைத்தாங்கும் உறுதியான வீடுகளை சொந்தமாக கட்ட தேவையான கூலியையும் முதலாளித்துவம் வழங்கவில்லை. இதன் கோர விளைவைத்தான் மக்கள் மீண்டும் எதிர்கொள்கின்றனர்.

“நாங்கள் 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். சிறிய மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன. சரியான தருணத்தில் மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு அளித்து, அவர்களது மனங்களில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்பட்டது”. என்கிறார் ராணுவ மருத்துவமனையின் இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் சர்மா.

”தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு ஆறு மாத பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவளது பெற்றோர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னும் நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் இறந்திருக்கக்கூடும் அல்லது நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் சிக்கி கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடும்.துருக்கியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அவர்களது குடும்பங்களை சிதைத்தது மட்டுமல்லாமல் தற்போது அவர்களது அடையாளங்களையும் பறித்துக் கொண்டது.” என்கிறார் பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேன்.

பெரும்பாலான மருத்துவமனைகள் இடிந்துவிட்ட நிலையில் எஞ்சிய மருத்துவமனையில் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக குவிந்துள்ளனர். இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடிந்த கட்டிடங்களின் இடர்பாடுகளுக்கு நடுவே மீட்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டவர்கள்.

பயங்கரமான நிலநடுக்கத்தை எதிர்க்கொண்ட அதிர்ச்சியின் காரணமாக இங்கே பல குழந்தைகள் பேச முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அவர்களது பெயர்கள் தெரியும். ஒருவேளை ஒரு சில நாட்கள் கழித்து அவர்கள் சீரான மனநிலைக்கு திரும்பிய பின் அவர்கள் பேசுவதற்கு முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல குழந்தைகள் அடையாளங்களை இழந்து, தாங்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கின்றனர் என்பதுதான் இன்றைய துருக்கியின் உண்மை நிலை! பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். உலகம் முழுவதுமிருந்து துருக்கிக்கு உதவிகள் குவியும்போதே அங்கே சூறையாடல்கள் நடக்கின்றன.

கொல்லப்படும் அறம்!

“தெற்கு துருக்கியில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்று அன்டாக்யா நகரம். அங்கு கடை உரிமையாளர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தங்கள் பொருட்கள் திருடப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் கடைகளைக் காலி செய்தனர்.

மற்ற நகரங்களில் இருந்து வந்த மக்களும் உதவிப் பணியாளர்களும் கடைகளும் இடிந்து விழுந்த வீடுகளும் கொள்ளையடிக்கப்படுவதைக் குறிப்பிட்டு மோசமான பாதுகாப்பு நிலைமை நிலவுவதாகக் கூறினார்கள்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

மீட்புபணிக்கு போன ராணுவம் கூடுதலாக கொள்ளையை தடுக்க ரோந்துப் பணியிலும் ஈடுபடவேண்டி வந்தது என இந்தியா சார்பில் சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சாராரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அரசாங்கம் மெதுவாகச் செயல்படுவதாகவும் நிவாரண முயற்சிகளை ஆரம்பத்திலேயே குறைத்துச் செய்ததாகவும் விமர்சிக்கின்றனர். மேலும், 1999 நிலநடுக்கத்தின்போது மீட்பில் முக்கியப் பங்கு வகித்த ராணுவம் ஏன் விரைந்து கொண்டுவரப்படவில்லை என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உதவிகளை வழங்குவதில் இருந்த பிரச்சனைகளை ஒப்புக்கொண்ட அதிபர் எர்டோகன், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறினார். ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை அவர் எதிர்கொள்ள இருக்கும் வேளையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பேரழிவுக்கு முன்பே, பணவீக்கம் சரிந்து வரும் துருக்கிய பண மதிப்பின் காரணமாக அவரது புகழ் சரிவைக் கண்டுகொண்டிருந்தது.

இதையெல்லாம் கணக்கில் எடுத்து சுமார் 25 பில்லியன் டாலர் (2 லட்சம் கோடி ரூபாய்கள்) செலவில் ஓராண்டுக்குள் 1,05,794 புதிய கட்டுமானங்களை கட்டி மக்களை குடியமர்த்த எர்டேகன் திட்டமிட்டுள்ளார். இதற்காக புதிய வரிவிதிப்பின் மூலம் 38 பில்லியன் டாலர் வரை திரட்டும் முயற்சியில் இறங்க உள்ளது துருக்கி அரசு. துருக்கியுடன் ஒப்பிடுகையில் சிரிய மக்களோ மேலும் அதிக துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

உள்நாட்டு போருடன் கைகோர்த்த இயற்கை!

சிரியாவில், ஜனாதிபதியான பஷர் அல் அசாத்தின் தலைமையிலான அரசு உள்ளது. இவரின் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சி, 1970 இல் ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை பிடித்தது. வடக்கு சிரியாவில் இந்த அரசை எதிர்த்து நடந்துவரும் உள்நாட்டுப் போரின் காரணமாக அங்கு நிவாரண பணிகள் செய்வது இடையூறாக உள்ளது. அங்கு SDF எனப்படும் சிரிய ஜனநாயகப்படைகளின் ஆதிக்கம் உள்ளது. பல போராளிக்குழுக்களின் கூட்டமைப்பான இது குர்திஷ் இனத்தவரின் செல்வாக்கில் உள்ளது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து எதிர்ப்புக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசத்திற்கு நிலநடுக்க உதவிகளை அனுப்புவது சிக்கலாகியுள்ளது. அப்பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் இஸ்லாமிய குழுவான ஹயாத் தஜ்ரிர் அல்-ஷாம் உடனான ஒப்புதல் சிக்கல்களால், நிவாரண உதவிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உதவிகளை கொண்டு சேர்ப்பதற்காக துருக்கி, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா இடையே கூடுதலாக இரண்டு எல்லைப் புள்ளிகளைத் திறப்பதன் மூலம் எல்லை தாண்டிய நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க முடியும் என்று ஐ.நா நம்புவதாக செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் கூறினார்.

சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்குப் பகுதியில் இந்தப் பேரழிவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே இடம்பெயர்ந்த பலரும் மீண்டும் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்தப் பகுதிக்கு மிகச் சிறிய உதவிகளே கிடைத்துள்ளன.

“நாங்கள் இதுவரை வடமேற்கு சிரியாவில் உள்ள மக்களுக்கு உதவுவதில் தோல்வியடைந்துள்ளோம்” என்கிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதநேய உதவி மற்றும் அவசரகால நிவாரண பிரிவின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்.

உலகை சூறையாடும் கார்ப்பரேட்டுகளின் நலனை முன்வைத்தே அனைத்து நாட்டு அரசுகளும் செயல்படுகின்றன. நிலநடுக்க பிராந்தியத்தில் சீட்டுக்கட்டுபோல கட்டப்படும் உறுதியற்ற கட்டிடங்கள், பின்தங்கியுள்ள, வறுமை பீடித்துள்ள நாட்டு நிலைமையை உணராதபடி இளைஞர்கள் மத – இன வெறியேற்றப்பட்டு, தமக்குள் அடித்துக்கொள்ளும் மத அடிப்படைவாத குழுக்களின் மோதல் என நாசத்தை கொண்டுவரும் அனைத்தையும் வளர்த்தெடுப்பதே ஏகாதிபத்தியங்கள்தான் என்பது கசப்பான உண்மை.

(தொடரும்…)

புதிய ஜனநாயகம், மார்ச் 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here