மக்கள் கல்விக் கூட்டியக்கம்
அறிக்கை!
ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறுக!
செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்களைப் பள்ளிக் கல்வித்துறை பணி இடை நீக்கம் செய்த்துள்ளது. அவர் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் அரசின் கல்வித் திட்டங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசுப் பணியாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி அவர்களை அரசுப் பணியை மேற்கொள்ள முடியாமல் தடுக்கின்றது என்பதைக் காரணம் காட்டி தமிழக அரசு அவரைப் பணி இடை நீக்கம் செய்திருக்கின்றது.
பணி நீக்கம் செய்வற்கான ஆணையை கொடுப்பதற்கு முதல் நாள் ஆசிரியர் உமா மகேஸ்வரியிடம் கல்வி அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற வகையில் ஒரு விசாரணையை மேற்கொண்டு, அவரை அச்சுறுத்தி முகநூல் பதிவுகளை நீக்க வைத்துள்ளனர். மேலும் அவரது செல் போனை, வஞ்சகமான முறையில் பறிமுதல் செய்துள்ளனர். (பிறகு போன் திருப்பி தரப் பட்டுவிட்டது) அரசு அதிகாரிகள் எதோ காவல் துறையினர் திருட்டு குற்றவாளியைக் கையாள்வது போல நடந்து கொண்டுள்ளனர். அவரை அச்சுறுத்தி கடிதம் ஒன்றையும் பெற்றுக் கொண்டு போனவர்கள், மறுநாள் முன் தேதியிட்டு ஒரு பணி இடைநீக்க உத்திரவை கொடுத்துள்ளனர். அவர் கல்விக் கொள்கைகள் குறித்தும் நடைமுறைகள் பற்றியும் விமர்சனம் செய்வதை அரசாலும், அதிகாரிகளாலும் பொறுக்க முடியவில்லை என்பதின் விளைவே இந்த பணி இடை நீக்கம்.
கல்வி குறித்து ஆசிரியர்கள் பேசவில்லை எனில் யார் பேசுவார்கள்? உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து பள்ளியின் நலனுக்காக பல இலட்ச ரூபாய் செலவில் பல சேவைகளை செய்துள்ளார். கல்வி குறித்து அக்கறை கொண்டவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை அரசு ஆரய்ந்து பார்ப்பதை விட்டு விட்டு, அவர்கள் வாயை மூடும் யுக்திகளைப் பயன்படுத்துவது ஜனாநாயகத்திற்கு எதிரான விஷயம் ஆகும்.
பணி இடை நீக்க உத்திரவில் அவர் ஊரை விட்டு எங்கும் நகரக்கூடாது என்று வேறு கட்டளையிடப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. கருத்துச் சுதந்திரம் என்பதை சட்டவிதிகளுக்கும் உட்பட்டே ஆசிரியர் உமா மகேஸ்வரி பயன்படுத்தியுள்ளது அவர் பதிவுகளைக் கண்டாலே தெரியும். பணியில் உள்ள ஆசிரியர்கள் இனி எந்தக் கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என்று அச்சுறுத்துவதே இந்த உத்திரவின் நோக்கமாக ம.க.கூட்டியக்கம் பார்க்கின்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசுப்பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கருத்துக்களை, விமர்சனங்களைப் பொது வெளியில் தெரிவிக்கும் உரிமை உண்டு என்று வலியுறுத்தியுள்ளதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டுகின்றோம்.
• ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு கொடுக்கப்பட்ட பணியிடை நீக்க உத்திரவை உடனடியாக அரசு திரும்பப்பெறவேண்டும் எனக் கோருகின்றோம்.
• இம்மாதிரி ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பதை கைவிடவும் கோருகின்றோம்.
• பள்ளி கல்வி குறித்த உரையாடல்களை வெளிப்படையாக ஆசிரியர் மாணவர்களிடம் அரசு பரந்த அளவில் நடத்த வேண்டுகின்றோம்.
பேரா.இரா.முரளி
பேரா. வீ. அரசு
பேரா ப. சிவகுமார்
கல்வியாளர் கண. குறிஞ்சி
ஒருங்கிணைப்பாளர்கள்
மக்கள் கல்விக் கூட்டியக்கம்