பூமியை பாயாக சுருட்டி
அதை கடலுக்குள் ஒளித்த
நரகாசுரனை வதம்
செய்தானாம் கிருஷ்ணன்.

தீபாவளிக்கு 3.5 லட்சம் கோடி
வர்த்தகமாம்
தமிழ் இந்து தலைப்புக் கணக்கு
டாஸ்மாக் வருமானம் தனிக் கணக்கு

இனிப்போடும், வெடியோடும்,
கறியோடும், விருந்தோடும்
கரைந்தோடிய தீபாவளிக்கு பின்
இயல்பு வாழ்வுக்கு
விரைந்தோடியது கொண்டாட்ட சமூகம்.

“குழந்தைகள் ஏங்குகிறார்கள்”
“பட்டாசு தயாரிப்பு தொழிலாளர் பாவமில்லையா?”
“வருஷத்துக்கு ஒரு நாள் தானே”!

இஷ்டத்துக்கு பட்டாசு வெடிக்க
கச்சிதமாய் கதைகள் உண்டு!
கதைத்தவர் வாசல்களை
கணக்கிட்டால் மாளாது..
தலைநகரின் தலையில் மட்டும்
200 டன் பட்டாசு குப்பைகள்.

மலம் அல்ல, பிணம் எரிக்க,
மாடு அறுக்க, செருப்பு தைக்க
இழிதொழில்களுக்கு ஒதுக்கிட்ட
சாதிகளுக்கு,
பட்டாசு குப்பை அள்ளும்
புதுப் ‘பொறுப்பு’

சாதி மத இதிகாச புராண
குப்பைகளை சேர்த்து
அள்ளிக் கொளுத்தி
சமூகத்தை தூய்மைப்படுத்துவோம்!

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here