மாரிக்காலம் இல்லாத
ஓர் மழை இரவு.

மழை குடித்து கிடக்கும்
சாலையின் வயிற்றை
கிழிக்கும் சக்கரங்கள்.

தெறிக்கும் நீரின் சத்தத்தில்
அமைதியின் அழுகுரல்கள்.

ஸ்டியரிங் பிடித்து
முறுக்கேறிய கரங்களில்,
சாலையோர தேநீரகங்களின்
நவீன இரட்டை குவளை
பேப்பர் கப்புகள்…

தேசிய நெடுஞ்சாலையில்
வழிப்பறி செய்யும்
டோல்கேட் வக்கிரங்கள்…

மக்கள் அதிகாரம்
மாநாடு முடிந்து
NH -45- இல், 80 கி.மீ வேகத்தில்
இசை ஞானியின் துணையுடன்,
இசையை ரசித்து டிரைவரும்
மழையை எதிர்த்து வைப்பரும்,  (wiper)
இயங்கிக் கொண்டிருக்க,

திங்களின் அலுவலக
அவசரங்கள்
நிழலாட,
பயணக் களைப்பில்
படுத்த தோழர்கள்,
உறங்கிக் கொண்டிருந்தனர்.

மாநாட்டு மேடையிலிருந்து
தலைவர்கள் என் மனதோடு
பேசிக் கொண்டிருந்தனர்…

குறிப்பிட்ட காலத்தில்
தேர்தல் புறக்கணிப்போ,
பங்களிப்போ, ஒரு அமைப்பின்
வாழ்வை / சாவை
தீர்மானிக்கிறது.

புறக்கணிப்பு மட்டுமே
புரட்சிகரமானதாக இருந்த காலத்தை
கடந்து வந்திருக்கிறோம்
என்பதை உணர தவறினால்,
நாம் புறக்கணிக்க
இனி எப்போதும் தேர்தல்
வரப் போவதில்லை..

தமிழ்நாட்டின்
தவிர்க்க முடியாத சக்தியாய்,
அரசியல் திசைவழியை
தீர்மானிக்கும்
இயக்கமாய் இயங்கும்
மக்கள் அதிகாரத்தின்
நிலைப்பாடு,
தமிழக, இந்திய அரசியலில்
பெரு மாற்றத்தை உருவாக்க
வல்லவை என்பதால்
காரியாலயங்களை கலங்கச்
செய்திருக்க கூடும்.

காலத்தினாற் செய்த முடிவு
சிறிதெனினும்,
களத்திற்கு மிகவும் பெரியது
என்றுணர்ந்து தலைவர்கள்
வாழ்த்தி சென்றார்கள்…

திருச்சி மேடையில்
இடித்தது இடி,
சென்னை வரை பெய்து
கொண்டே இருந்தது மழை…

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here