நீதிக்கான சீக்கியர்கள் (Sikhs for Justice) என்ற காலிஸ்தான் பிரிவினை ஆதரவு அமைப்பைச்சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற செயல்பாட்டாளர் ஜூன் 18 தேதியன்று சுட்டுக்கொல்லப்பட்டார். கனடா நாட்டின் குடியுரிமைபெற்ற நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னணியில் இந்திய ஏஜெண்டுகள் உள்ளனர் என்று அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ருடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேரடியாகக் குற்றம் சுமத்தினார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவைத் தரும் இக்குற்றச்சாட்டைப்பற்றி அறிந்துகொள்ள முடியாத சாணிமூளை சங்கிகள் “காலிஸ்தான் பிரிவினைவாதிகளை எப்படி கனடா போய் தூக்கினோம் பார்த்தியா! மோடிடா கெத்துடா!” என்று அலப்பறை விட்டுக்கொண்டிருந்தனர்.

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குர்பட்வன்த்சிங் பண்ணும் என்ற அமெரிக்கா குடியுரிமைபெற்ற “நீதிக்கான சீக்கியர்கள்” அமைப்பின் செயல்பாட்டாளரையும் இதேபோல கொல்லமுயன்றதை அமெரிக்க உளவுத்துறை முறியடித்துள்ளது. இக்கொலைமுயற்சிக்கு பின்னணியிலும் இந்திய உளவுத்துறையின் தலையீடு இருப்பதைக் கண்டுபிடித்து இந்திய உளவுத்துறைக்கு இடைத்தரகராக இருந்த நிகில் குப்தா என்ற சர்வதேச கிரிமினலை கைது செய்துள்ளது. குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நிகில் குப்தாவின் மேல் குஜராத்திலும் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. போதை மருந்து/ஆயுதக்கடத்தல் கிரிமினலான நிகில் குப்தாவைத் தொடர்புகொண்ட இந்திய உளவுத்துறை அதிகாரி குர்பட்வன்த்சிங் கொலையை கச்சிதமாக செய்துமுடித்தால் அவன்மேல் குஜராத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளைக் கைவிட உறுதியளித்துள்ளார். அந்த அதிகாரிக்கும் நிகில் குப்தாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், வீடியோகால்கள், நிகில் குப்தாவிற்கும் கொலையாளியாக நடித்த அமெரிக்க உளவாளிக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்கள், கூலியாக முடிவான ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பேரம், அதில் 15,000 டாலர்கள் முன்தொகை கொடுக்கப்பட்டது, இந்திய அரசு அதிகாரியின் IP முகவரி ஆகிய விவரங்கள் அனைத்தையும் அமெரிக்க உளவுத்துறை சேகரித்துக்கொண்டது. கொலைமுயற்சி தோல்வியுற்றதால் அமெரிக்காவிலிருந்து தப்பிய நிகில் குப்தாவை ஜூன் 30 அன்று செக் குடியரசில் வைத்து கைதுசெய்து அமெரிக்க கோர்ட்டில் வழக்கும் தொடுத்திருக்கிறது. இந்நிகழ்வுகளில் தற்போதைய நிலவரப்படி கனடாவும் தனது வசமிருந்த ஆதாரங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

இந்தியாவின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை கனடா அம்பலப்படுத்தியவுடன் அந்நாட்டு பிரதமரை கண்டித்து தூதரக அதிகாரிகளை வெளியே அனுப்பி சீன் போட்ட இந்திய அரசு தற்போது அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு வாலைச் சுருட்டிக்கொண்டு பம்மிக்கொண்டுள்ளது. கனடா விவகாரத்தில் அலப்பறை செய்துவந்த உள்ளூர் சங்கிகளும் அமெரிக்காவில் இப்படி ஏடாகூடமாக மாட்டியதும் மோடி மஸ்தானுக்காக மௌன விரதமிருக்கிறார்கள்.

ஒரு நாட்டில் குற்றம் செய்துவிட்டு வேறொரு நாட்டிற்குத் தப்பிசென்றுவிட்டாலோ அல்லது ஒரு நாட்டில் இருந்துகொண்டு வேறொரு நாட்டில் பிரிவினைவாதம் அல்லது தீவிரவாதத்தை தூண்டினாலோ அந்நபரைக் கைதுசெய்து தனது நாட்டிற்கு நாடுகடத்தக் கூறுவதே உலக நடைமுறையாகும். ஆனால் இந்த நடைமுறைகளை புறக்கணித்துவிட்டு அந்நிய நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட நபர்களை ஏஜெண்டுகளை வைத்துக்கொள்வது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இந்தியாவின் இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட அமெரிக்கா, கனடா நாடுகள் இதை சர்வதேச அளவுக்கு கொண்டுபோகமாட்டார்கள் என்பது நமது கணிப்பு. சீனாவை சீண்டுவதற்கு தம் விசுவாசமான அடியாளாகத் தேர்ந்தெடுத்துள்ள இந்தியாவை தங்களது பழைய இற்றுப்போன சாமான்களை (ஆயுதங்களை ) இறக்குமதி செய்துகொள்ளவும், தங்களது கார்ப்பரேட்டுகள் சூறையாட இயற்கைவளங்களைத் திறந்துவிட நிர்பந்திக்கவும் (நிர்பந்தம்வேறு வேண்டுமா?) இந்நாடுகள் இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இதனால் பாதிப்படையப்போவது நம்நாட்டு உழைக்கும் மக்களே.

இதையும் படியுங்கள்: 

உள்நாட்டு, வெளிநாட்டு சங்கிகளிடம் எந்த நாட்டுக்குள்ளும் நுழைந்து யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் வலிமை மோடிக்கு உள்ளது என்று உதார்விட்டு புஜபல பராக்கிரமத்தை காட்டப்போய் தற்போது தேள்கொட்டிய திருடன் போல முழிக்கும் சங்கிகள் தன் தலைதப்பிக்க நாட்டையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பட்டினிக்குறியீட்டில் பின்னடைவு, பத்திரிக்கை சுதந்திரத்தில் பின்னடைவு, அதிகரித்துவரும் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்முறை, மணிப்பூர் பெண்களின் நிர்வாண ஊர்வலம், ஒடுக்கப்பட்ட/ பழங்குடியினர் மீது நாளும் நடக்கும் தாக்குதல், குடிசைகளை துணிபோர்த்தி மறைத்தது, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மதவெறி என்று சர்வதேச அளவில் இந்தியாவின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கும் நிலையில் சங்கிகளின் இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதமும் இந்தியாவிற்கு தலைகுனிவையே தந்திருக்கிறது. நாட்டை ஆளும் இந்தக் குற்றக்கும்பலின் செயல்களால் நாமும் குற்றவாளியாக தலைகுனியவேண்டுமா?

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here