ந்தத் தாய்  — ஜெர்மனி நாட்டின் ‘கோட்டினேஜெனே”நகரத்தைச் சேர்ந்தவர். அவர் தன் மகளுக்கு அலெக்ஸா என்று பெயரிட்டிருந்தார்.அப்போது அவர்களுக்கு அந்தப்பெயர் பிடித்தது, தற்செயலாகப் பிடித்தது, வைத்துவிட்டார்கள்.

சின்னப்பெண்ணுக்கு இப்போது வயது ஆறு. பள்ளிக்கூடத்தில் எப்போதும் அவளை வைத்து கேலிசெய்தார்கள். அது அமேசான், அலெக்ஸா கருவிகளை சந்தையில் அறிமுகம் செய்த  காலம். ” அலெக்ஸா ”  என்று குரல் கொடுத்துக்  கட்டளை தந்தால் உடனே வேலைசெய்யும். கட்டளைப் பயன்பாடான அலெக்ஸாவுக்கு அமோக வரவேற்பு ;  ஆனால் சின்னப்பெண் அலெக்ஸாவுக்கோ போதாத காலம் !

அலெக்ஸாவை சகமாணவர்கள் கிண்டல் செய்தார்கள். பள்ளித் திடலில் விளையாடப் போனால் ” அலெக்ஸா பந்தைப்போடு “, ” அலெக்ஸா, இப்படி பாஸ் பண்ணு ” என்று எல்லாத் திசைகளிலிருந்தும் கட்டளைகள். திடலில் மட்டுமல்ல, நீச்சலுக்குப் போனால்  அங்கேயும் சீண்டல்கள் தான் : ” ஏய் அலெக்ஸா, ஓட்டாஞ்சில்லு விழுந்திடுச்சி, டைவ் அடிச்சி கீழ போயி எடுத்துட்டு வா .”

இப்படித்தான் ஒருநாள் முன்பின் தெரியாத ஒரு வேற்று ஆள் ஒருத்தர், அந்தச் சின்னப் பெண்ணின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுமே கேட்டாராம் : ” அலெக்ஸா, எங்கே எனக்காக ஒரு டான்ஸ் ஆடு பார்க்கலாம்.”

அலெக்ஸாவின் பெற்றோர்களுக்கு வேறுவழி தெரியாமல் கடைசியாக,  நகரத்தின் அதிகாரிகளிடம்  புகார் கொடுக்கப் போய்நின்றார்கள். கெஞ்சினார்கள்.  ” எங்கள் குழந்தையின் பெயரை தயவுசெய்து மாற்றிவிடுங்கள். ” ஜெர்மனி, முதலாளித்துவ ஏகாதிபத்திய  நாடு என்கிறார்கள், அவர்கள் கருத்துப்படி முன்னேறியிருக்கவேண்டாமா ? அதுதானில்லை,  மக்கள் பிரச்சினைக்கு அந்த நிர்வாகம் செவிகொடுக்க  மறுத்துவிட்டது. அவர்கள் பந்தை உருட்டிக்கொண்டு நகரநிர்வாக நீதிமன்றத்துக்கு ஓடினார்கள். ‘ கிட் ஸ்பாட் ‘ என்ற ஆஸ்திரேலிய பிராண்டைவிற்கும் நிறுவனம் இந்த வழக்கு விசாரணையை விரிவாக வெளியிட்டிருக்கிறது.


இதையும் படியுங்கள் : அமேசான் மீது ஆர்.எஸ்.எஸ் பாய வேண்டிய காரணம் என்ன..?


கடைசியில் அலெக்ஸா மற்றும் அவள் பெற்றோரின் மன உளைச்சலைக் கணக்கில்கொண்டு சாதகமான தீர்ப்பு கொடுத்தார்கள். அலெக்ஸா என்ற பெயர் வெறும் சித்திரப்பேச்சு, சிலேடை வழக்கு மட்டுமல்ல ;  மோசமான, அவதூறான, அவமானகரமான கட்டளைகளையும் சேர்த்துக் கொடுத்துவிட்டது என்று தீர்ப்பு விளக்கியது; சின்னப் பெண்ணுக்கு அவளது பெற்றோர் புதியபெயர் சூட்டலாம் என்று பச்சைவிளக்கும் காட்டியது.  அடுத்த பெயர் எந்தப் பிரச்சினையையும் கொண்டுவந்திருக்காது என்று அந்த எல்லாம்வல்ல அலெக்ஸாவை வேண்டுவோம் !

அலெக்ஸா ஒரு கெட்ட பெயரா ?

‘ அலெக்ஸா ‘என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘ மனிதகுலக் காப்பாளன் ‘ என்று பொருள். அலெக்ஸாண்ட்ராஸ் என்பது ஆண்பால் பெயர் ; அலெக்ஸா என்பது பெண்பால் பெயர். இரண்டுக்குமே ஒரே வேர்ப்பொருள், மேலே சொன்னதே.  சிறந்த சொல், சிறந்த பொருள்.

Os melhores dispositivos com Alexa para ter em casa - Canaltechடைமுறையில்தான் அப்படி கேலிக்குள்ளாக்கப் பட்டுவிட்டது.  இட்ட வேலையைச் செய்யக்கூடிய ஆள் என்று நல்ல ஜீனி போல  ( “அலாவுதீனும் அற்புத விளக்கும்” நாட்டுப்புறக் கதையில் ஒரு நல்ல அடிமை ஜீனி வரும். உலகில் உள்ள எந்தப் பொருளை அலாவுதீன் கேட்டாலும்  கொண்டுவந்து தரும். எந்த நாட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். ) பணிவிடைசெய்யும் என்பதாக  ஜனரஞ்சகமாக்கப்பட்டது . இது அமேசானின் ஆளும்வர்க்க தந்திரம். அதாவது, ஏவிவிட்ட கட்டளையைத் தப்பாமல் செய்துமுடிக்கக் கூடிய நல்ல ‘விசுவாசமான அடிமை ‘ என்று ஏற்ற வடிவத்தைத் தயாரித்தது அமேசான் தொழில்நுட்பம். விசுவாசி, ஆனால் சுதந்திரமான ஆள் அல்ல. அடிமை!.

அலெக்ஸா மனிதகுல விசுவாசி. இதுவே எதிர்மறைச் சொல்லாகும்போது  மனிதகுல விடுதலைக்கான சமத்துவ விசுவாசியல்ல,  முதலாளித்துவக் கட்டமைப்பில்   உருவாக்கப்பட்டு , அமேசானால்  தளைப்படுத்தப்பட்ட ஓர் அடிமை விசுவாசி. அந்த சின்னப் பொண்ணு  பிறந்த அதே நாட்டின் கம்யூனிஸ்ட் சிந்தனையாளன், புரட்சிப்போராளி  கார்ல் மார்க்ஸ் சொன்னான் : ” ஆளும் வர்க்கங்கள் ( ஒவ்வொரு சமுகக் கட்டமைப்பிலும் ) தங்களுக்கேற்ற அடிமைகளை உருவாக்கிக் கொள்கின்றன. ” (  நூல் : “தத்துவத்தின் வறுமை” ).

இப்படி,   மக்கள் நலன் விரும்பியான,அலெக்ஸா!  அடிமை அலெக்ஸாவான  விபரீத மேல்நாட்டுச்  சம்பவத்தை மேலே பார்த்தோம்.

கீழ்நாட்டுச் சம்பவம் இன்னமும் மோசமாக இருக்கும் போலத் தோன்றுதே !  எனக்கு ஏற்பட்ட கல்லூரி அனுபவம்  ஒன்றை சொல்கிறேன்.

என் நண்பன் மண்ணு. இருவரும் ஒன்றாகச் சுற்றுவோம். மண்ணு கூட இருப்பது புழுதி, அந்தப் புழுதிதான் நான். அப்படி மாணவர்கள் கேலி செய்யும் அளவுக்கு படிப்பது, நூலகம், கேன்டீன்  எல்லாமே ஒன்றாகத்தான். கல்லூரி மர டெஸ்க்கில் மண்ணு – வேல்  என்றுகூடச் செதுக்கியிருந்தோம்.


இதையும் படியுங்கள் : ஜெர்மன் ஹிட்லருக்கு யூதர்கள்! இந்தியா மோடிக்கு இசுலாமியர்கள்!


அவனுக்கு ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது ?. பெற்றோருக்கு இயற்கைமீது காதல் என்பதால் அப்படி வைக்கவில்லை.  மூன்று குழந்தைகள், பிறந்த சில நாட்களில் மரித்துப் போனதால் நான்காவது குழந்தை  உயிர் தங்கி வாழவேண்டுமானால்  குழந்தையை மண்ணுக்கு நேர்ந்துவிடவேண்டுமென்று சொன்னார்கள் ஊர் ஆயாக்கள். பெயர் வந்தது,   மண்ணு பிழைத்து வளர்ந்துவிட்டான். நேர்ந்துவிட்டதால் பிழைத்தானா?  அதெல்லாம் இல்லை. அது ஒரு மூடநம்பிக்கை, அவ்வளவே!. மண்ணு சொல்லிச் சிரிப்பான்.

பிரச்சினை அங்கே இல்லை.  அவன் காதலில் விழுந்து  திருமணம் வரை நகர்ந்தது.  பெண்ணுக்கு மூத்த மாமன் சொன்னாரென்று பெண் ஒரு பிரச்சினையைக் கொண்டுவந்து வைத்தார்.

” அன்பே, ஆருயிரே, உங்களுக்காகவே சுருக்கமா  அழகா ஒரு பேர் வெச்சிருக்கேன். மண்ணு கிண்ணுல்லாம் வேணாம்.சூப்பர் பெயர்  வெச்சிருக்கேன்.  என்ன சொல் பார்க்கலாம் ? ….  யோகேஷ்.” அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மண்ணுவின் அம்மா ஒருநாள் பூரா சாப்பிடவில்லை,  தெய்வ குத்தம் வருமென்று அழுதார் ; பெண் ‘மண்ணை’த் தூக்கி வீசிவிட்டு மாமனின் குரு ஒரு அய்யிரு சொன்னான்னு  ‘யோகேஷ்’ என்று ஒரு பெயரை அணைத்துக்கொண்டுவிட்டார் . கெஜட்டில் பேர் மாற்றி விட்டார்கள்.  காதலி மண்ணுவைக் காதலித்தது உண்மை, ‘யோகேஷை’க் கட்டிக் கொண்டது அதைவிடக் கோடி மடங்கு அதி உண்மை.

பிறகு மண்ணுவின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் கல்பட்டில் பூங்காவனத்தம்மாளுக்கு பொங்கல் வைத்துவிட்டு வந்தார் அம்மா. அது பரிகாரமாம். கல்பட்டு பெரிய வேப்பமரத்தடியில்   பாம்புப் புத்தும் கல்லும்தான் பூங்காவனத்தம்மாள். பேத்தி பிறந்தாள், அந்தப் ‘பூங்காவனமே’வீட்டுக்கு வந்துவிட்டதாக அம்மா சொல்லிக்கொண்டார். ஆனால் மருமகள்  எங்கிருந்தோ தூக்கிக்கொண்டுவந்து சூட்டிய பேரோ ‘ ஐஸ்வர்யா ‘. யாருமில்லாத நேரத்தில் ” அடியே பூங்காவனம் வந்துட்டியாடி வா வா ” என்று தாலாட்டுப் பாடுவார் மண்ணுவின் அம்மா. மருமகள் ‘ஐஸ்வர்யா’ என்று  கொஞ்சும்போதெல்லாம் அம்மா எங்கேயோ வெறித்தபடி இருந்துவிடுவார். அவருக்குத் தன்  பையன் என்னைக்குமே மண்ணுதான். பேத்தியும் என்னைக்குமே பூங்காவனம் தான் ! சாகிறவரை அவர் அப்படித்தான் மண்ணுவை நேசித்தார்.  எனக்கு அவன் என்னைக்குமே அன்புக்குயிரான நண்பன் மண்ணுதான். இன்னைக்கு அவன் பேர்கொண்ட என்ஜினீயர். அதாவது, என்ஜினீயர் மண்ணு.

மேற்கோ கிழக்கோ,  பெயரில் என்ன இருக்கிறது ?  இருக்கிறதுதான். வெறும்  புகழ் , பணம் சம்பாதிச்சவர்கள் என்பதால் தனுஷ் , சிம்பு , விஜய் ,  அஜித் , சூர்யா,விக்ரம் , கமல் , ரஜினி என்று வைப்பதை விட  அலெக்சா, மண்ணு ஒசத்திதான். இயற்கையைப் பேசும்  பல ஆயிரம் பேர்களில் ஒன்றையோ , வரலாற்றுக் கடமை புரிந்த வீரர், புரட்சியாளர் ஒருவர் பெயரையோ நிச்சயம் சூட்டலாம். சோதிடம்,  எண் சோதிடம்  என்று ஏமாந்து ராஜேஷ், கமலேஷ் என்று பேர் வைக்கச் சொல்லும்  பார்ப்பனீயப் புரட்டுக்களை நம்பவேண்டாம் !

‘அலெக்ஸா’செய்தி ஆதாரம் : என்டி.டிவி ( NDTV ), 1.9.22.

கட்டுரை ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here