Spoilers ahead.

‘டோரதி’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. மதுரையில், தியேட்டரில் படம் முடிந்து இயக்குநர் பெயர் திரையில் ஒளிர்ந்தபோது பலரும் கைதட்டினர். ரசித்த காட்சி அது. இதற்கு முன், இதுபோல் கலவையான ரசிகர்கள் நிறைந்திருந்த தியேட்டரில் காட்சி முடிந்த பின்னர் கைதட்டல் வாங்கியதாக எந்தப் படமும் நினைவில் இல்லை. பிசினஸை பற்றிய தயக்கம் இன்றி இப்படி ஒரு plot-ல் உழைக்க முடிவெடுத்த படக்குழுவின் அக்கறைக்கும் தைரியத்துக்கும் பாராட்டுகள்!

ஆனால்…

’டோரதி’ படத்தில் உள்ள குறைகளைப் பேசத் தேவையில்லை, Progressive சினிமாவில் அவற்றை விட்டுவிடலாம் என்பது, cinema-வின் standards-ஐ உயர்த்தும் நோக்கில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிரானது. அவற்றை பேசித்தான் ஆக வேண்டும்.

1. முதல் பாதி, செறிவான மேக்கிங். இரண்டு நண்பர்கள், அந்தக் குடும்பம், ஓர் ஊர் என அவர்கள் உலகத்தை பார்வையாளர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என ஸ்கிரிப்ட்டில் எழுதினார்களோ, அதை அப்படியே திரையில் கொண்டுவந்ததில் இயக்குநருக்கு வெற்றி. சாதி, ஆணாதிக்கம் என முதல் பாதி பேசும் அரசியல் தெறிக்கிறது. குறிப்பாக, பட்டியலின அவமானம், துன்புறுத்தல் இன்றியும் (ஒரு காட்சி தவிர) ஆதிக்க சாதிவெறியைக் காட்டியிருப்பது sensible, evolving.

ஆனால், இரண்டாம் பாதியில் காட்சிகள் நகர்வதன் வழி கதை வெறுமனே நகர்கிறதே தவிர, அதில் compassionate, empathetic உணர்வுகள் எதுவும் கடத்தப்படவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றிய படங்களில் அவை மிக முக்கியம். திருநங்கைகளின் பாடுகள் குறித்து பொதுச்சமூகம் குறுக்குவெட்டில் புரிந்துகொள்ளும்படியான திரைக்கதை முக்கியம். மாறாக, புறக்கணிப்பு, பசி, யாசகம், பாலியல் தொல்லை என இதில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாமே, எல்லோரும் அறிந்தவைதான்.

கார்த்திக்கு டோரதி மீது ஒரு மாதத்துக்குள் காதல் வருகிறது என்ற காட்சியைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே, இதை திருநங்கைகளின் காதல் வாழ்க்கைக்கு எதிரான மனநிலையாகச் சித்திரிக்கக் கூடாது. இங்கே பேசிக்கொண்டிருப்பது, அதை கன்வின்ஸிங்காக சொல்லாத திரைக்கதை பற்றி. ’உடனே லவ்வா..?’ என்று பார்வையாளர்களுக்குள் கேள்வி வரும்போது, மகுடியென ஆரம்பிக்கும் இளையராஜாவின் இசை அந்தக் கேள்வியை, ஏற்பின்மையை கேன்சல் செய்கிறது. அதனுடன் இணையும் காட்சித் தொகுப்புகள் பார்வையாளர்களையும் அதற்குள் இழுத்துப்போடுகிறது. ஒரு வகை மதி மயக்கமாக, படம் முடிகிறது. Lazy writing-ஐ இசையால் காப்பாற்றிவிட்டார் ராஜா சார்.

2. ’டோரதி’யை பீரியட் படமாக எடுக்க இயக்குநர் முடிவெடுத்தது ஏன்? இப்போதும் உள்ள ஒரு சமூகப் பிரச்னையை, பீரியட் படமாக ஏன் எடுக்க வேண்டும்? இயக்குநர் இதை comtemporary படமாக எடுத்து, ’டோரதி’ பேசியிருக்கும் வழக்கமான திருநங்கைகளின் பிரச்னைகள் தாண்டி, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு (Horizontal Reservation), சுயமரியாதை, ரிலேஷன்ஷிப் எனப் பேசும் வாய்ப்பை திரைக்கதை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவற்றை பொதுச்சமூகத்திடம் கொண்டுசேர்த்திருக்க வேண்டும். அதுதான் சமூகமாற்றத்துக்கான படம். ’டோரதி’யோ, திருநங்கைகளின் தேவைகளை காதல் வாழ்க்கை என்பதாக மட்டுமே சுருக்கியுள்ளது.

’இவற்றை எல்லாம் பேசினால் பிரச்சார படமாகிவிடும்’ என்பது, இயலாமையின் பதில். ’கருத்தம்மா’ படத்தில், கொல்லப்படவிருந்த ஒரு பெண் சிசுவுக்கு உயிரும், கல்வியும் கிடைத்ததால் மருத்துவராகி, தன்னைக் கொல்லக்கொடுத்த தகப்பனுக்கே வைத்தியம் பார்க்கும் narrative arc, வலிமையானது. அப்படி, சமகாலச் சூழலில் திருநங்கைகளின் வலிகள், இவற்றை எல்லாம் தாண்டி வாழ்வில் வென்ற ஒரு திருநங்கை கதாபாத்திரம் என்று இப்படத்தை உருவாக்கியிருந்தால், அதுதான் முழுமையான Progressive cinema ஆக இருந்திருக்கும்.

‘படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது இயக்குநரின் உரிமை, படைப்பு சுதந்திரம்’ என்பது தனி மனித கதைகளுக்கு சரி. ’டோரதி’க்கு அதை ஏற்க முடியாது. சமூகப் பிரச்னைகளைப் பேசும் படங்களுக்கு இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். ’Gender Identity Cinema’வுக்கான பாராட்டுகளைப் பெறுபவர்களுக்கு, அதில் தவறவிடப்பட்டவையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

3. இக்கதைக்கு, சாதிய, ஆணாதிக்கக் குரூர குடும்பத்தை தேர்வு செய்தது, இயக்குநர் ஆசைதீர வன்முறைக் காட்சிகளை எடுக்கக் கைகொடுத்திருக்கிறதே தவிர, அது

சரியான தேர்வு அல்ல. மகளைக் கொன்ற, மனைவியை சாகவைத்த, குற்றங்களில் ஊறிய, அப்பா… அவர் வழியே வாழும் மகன்கள். இவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை திருநங்கை என்பதை ஏற்றுக்கொள்ளாததிலும், ஆணவக்கொலை செய்ய முடிவெடுப்பதிலும் அதிர்ச்சி இல்லையே? உணர்வால் தர இயலாமல்போன அந்த அதிர்ச்சியைத்தான், குரூர வன்முறைக் காட்சிகளின் வழி பார்வையாளர்களுக்குத் திணித்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, கிடாவை முட்டவைத்தே ஒருவரை கொன்ற அநாவசிய அதீத வன்முறைக் காட்சியெல்லாம், இயக்குநர் பயன்படுத்திய shock value-க்கான tool.

முதிர்ச்சியான பெண்ணான டோரதி, சுப்புவின் அண்ணனை எப்படி திருமணம் முடித்தார்? பதில் இல்லை. ’டோரதியை ஏன் கொன்றார்கள்?’ என்பது பார்வையாளர்கள் சுமக்கும் பதிலற்ற கேள்வி. டோரதி மாமனாரால் பாலியல் வன்முறை நோக்கில் கொலை செய்யப்பட்டார் என்பதை பெரும்பாலான பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கொலைக்கு முந்தைய காட்சிகளில், மாமனார்… டோரத்தியை பார்க்கும் சீன்களில் எல்லாம் bgm-ல் playful music ஒலிக்கிறது. ஒருவேளை, அதில் intense tone play செய்திருந்தால், பார்வையாளர்களுக்கு அந்த clue கிடைத்திருக்கும். இந்தக் கொலையில் இயக்குநர் ஏன் clarity-ஐ வைக்கவில்லை என்பதற்கு, எந்தக் குறியீடுகளும் பிடிபடவில்லை.

படிக்க:

♦ நாங்குநேரி வன்முறைக்கு சினிமா தான் காரணமா?

♦ ஆண் பாவம் பொல்லாதது | சினிமா விமர்சனம் | முகநூல் பதிவு

Back to the point… இப்படியாக ’சரித்திர பதிவேடு தகுதிக்குரிய’ இந்தக் கொலைகாரக் குடும்பத்திற்கு பதிலாக, ஒரு சராசரியான, அன்பான, சிறிது முற்போக்கு சிந்தனைகள் உள்ளதாக தன்னை நம்பிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்திருந்தால், அக்குடும்பம் தன் திருநங்கை பிள்ளையைப் புறக்கணிக்கும், கொன்றுவிடலாமா என்று நினைக்கும் காட்சிகளில் உணர்வுரீதியான அதிர்ச்சிகளைக் கொண்டுவந்திருக்க முடியும். அவ்வளவு காலம் இருந்த பாசமும் திடீரென வெறுப்பாக மடைமாறுவதை கேள்விக்கு உட்படுத்தியிருக்க முடியும். மனசாட்சியைத் தொட்டுப் பேசியிருக்க முடியும். பெரும்பாலான திருநங்கைகளும் இதுபோன்ற, தங்களை கண்ணுக்குள் வைத்து வளர்த்த ஒரு பிரியமான கூட்டில் இருந்துதான் விரட்டப்படுகிறார்கள்.

4. மனித சமூகத்தின் சிக்கல் என்று பேசும் ஒரு படத்தில், பெண்களே இல்லாமல் ஆண்களை மட்டுமே திரையில் காட்டி கதை சொல்லல் சரியா? ஆணும், பெண்ணும் கலந்ததுதானே மானுடம்? அதுபோல, திருநர்கள் (Transgenders) என்பவர்கள் திருநங்கைகள் (Transwomen) மற்றும் திருநம்பிகள் (Transmen). ஆனால், திருநம்பிகள் பற்றி சம்பிரதாய பிரதிநிதித்துவக் காட்சி கூட படத்தில் இல்லை. Inclusivity இல்லை. இதுவும் புறக்கணிப்புதான்.

5. சமூக மாற்றத்துக்கான படங்களை வரவேற்க வேண்டியது, கொண்டாட வேண்டியது நம் கடமை. ‘டோரதி’யை கொண்டாடுவோம். ஆனால், அதன் குறைகளை விமர்சிக்க வேண்டியதும், திரைக்கதையின் போதாமையைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் அவசியம்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் சென்னைக்கு வெளியே, பல கிராமங்களில் இருந்தெல்லாம் வந்து, பாடுபட்டு சினிமாவைக் கற்றுக்கொண்ட இயக்குநர்கள் க்ளாஸிக் படங்களைத் தந்தார்கள். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுத்து முதல் ஆக்கம் வரை சினிமாவைக் கற்பதற்கான அணுகல் முன்னைவிட எளிமையாகியுள்ளது. கூடவே, political correctness in cinema-வை கற்றுக்கொள்ளும் கதவுகளும் திறந்தே உள்ளன. எனில், படங்களின் தர மதிப்பீடுகள் உயர்த்தப்பட வேண்டுமே தவிர, அதில் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை.

இறுதியாக… ’டோரத்தி’ OST jukebox-ஐ மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். 42 நிமிடங்கள். ராஜா சாரின் திசை நோக்கிக் கும்பிட்டு எப்போதும் நினைத்துக்கொள்வது இரண்டே வார்த்தைகள்தான்… ‘நன்றி சார்!’

– ஜனனி

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here