+2 படித்துக் கொண்டிருந்தேன். (விருத்தாசலம்) சுரேஷ் தியேட்டர் எதிரில் காவலர் கவாத்து மைதானம் இருந்தது. அது காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடம். அந்த இடத்தை ஒருவித அச்சம் சூழ்ந்த மனநிலையோடே கடப்பேன். இப்போது சுரேஷ் தியேட்டரை இடித்துவிட்டார்கள். காவலர் கவாத்து மைதானம் இருந்த இடத்தில் புதிதாக மகளிர் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு கட்டிவிட்டார்கள்.
நேற்றிரவு டாணாக்காரன் பார்த்தபோது, இப்படி, பழைய ஞாபகங்கள் வந்து போயின. எங்களூரில் பெரியவர்கள் இளைய தலைமுறைக்கு அறிவுறை சொல்லும்போது தவறாக ஒரு வாசகம் இடம்பெறும். ‘போலீஸ் ஸ்டேஷன்லயும் கோர்ட்லயும் உன் காலடி படக்கூடாது!’ என்பதுதான் அவ்வாசகம். கேட்டு, கேட்டு மனசில் ஆழப் பதிந்துவிட்ட வாசகம்.
சிவப்பு வண்ணம் பூசப்பட்ட போலீஸ் ஸ்டேஷனையும், காக்கி அணிந்த போலீஸ்காரர்களையும் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு நடுக்கம். இலக்கியம், மனித உரிமைகள் என இயங்கத் தொடங்கியபிறகு கூட்டம், போராட்டம் நடத்த அனுமதி பெறவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும், காவல் நிலையம் செல்ல, அவர்களை எதிர்கொள்ள படிப்படியாக தைரியம் வளர்த்துக் கொண்டேன்.
இப்படி, எனக்கு மட்டும்தான் என்றில்லை. சிவில் சமூகம் மொத்தத்துக்குமே போலீஸ் அச்சம் இருக்கவே செய்கிறது. போலீஸ் எனபது ஏதோ தனியான ஒரு இனம் அல்ல. அவர்களும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களை அதிகாரம் தங்கள் வேட்டை நாய்களாக வெறியேற்றி வைத்திருக்கிறது.
போலீஸ் என்கிற வார்த்தை ‘குடியுரிமை, நிர்வாகம், சிவில் அரசியல்’ எனும் பொருள்படுகிற ‘பொலிடியா’ எனும் கிரேக்க சொல்லில் இருந்து பிறந்தது .
போலீஸ் வன்முறையை, அரசுக்கு இசைவான குடிமைப் பண்பை உருவாக்குவது என நியாயப்படுத்துகிறது அதிகாரம்.
போலீஸ் என்றாலே நமக்கு சமீபமாக ஞாபகத்துக்கு வருகிற முதல் ஆள்
டெரண் ஜோவின். இந்த அமெரிக்க போலீஸ்காரன்தான் ஜார்ஜ் எனும் அப்பாவி கருப்பினத்தவரின் கழுத்தை ஷூகாலால் நெறித்துக் கொன்றவன்.
உள்ளூர் அளவில் போலீஸ் என்றால் சாத்தான்குளம் அப்பா பிள்ளைகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஞாபகம் வருவார்கள். இவர்களை விடிய விடிய அடித்துக் கொலை செய்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன் ஞாபகம் வருவார்கள்.
சிதம்பரம் பத்மினியை பாலியல் பலாத்காரம் செய்த மெஹபூப் பாட்சா, பார்த்தசாரதி, ஞாபகம் வருவார்கள். அந்தியூர் விஜயா ஞாபகம் வருவார். கூடவே யுவராஜ், சுந்தர், ராஜாராம் போன்ற போலீஸ்காரர்களின்
நினைவும் எழும்.
போலீஸ் என்றாலே, என்கவுண்டர், லாக்கப் மர்டர், பாலியல் வன்புணர்வு, லஞ்சம் இப்படிதான் சிவில் சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கிறது.
காலம் மாறுகிறபோது வதைமுகாம்கள், சிறைக்கூடங்கள், காவல் நிலையங்களும் மாறுகின்றன. இந்திராவின் அவசரநிலைப் பிரகடனத்துக்குப் பிறகு காவல்துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தன. ரிபெய்ரோ குழு, பத்மநாபய்யா குழு, சொலி சொராப்ஜி குழு போன்ற
குழுக்கள் அமைக்கப்பட்டன.
காவல்நிலையங்களின் வண்ணம் மாறியது. காவலர்களின் தொப்பி, அரைக்கால் சட்டை மாறியது. காவல்துறையின் மனநிலையில் ஓரளவு மாற்றங்கள் ஏற்றப்பட்டன.
பேருந்துகளில் போலீஸ்காரர்கள் இயல்பாக நின்றபடி பயணிக்கிறார்கள்.
டீ குடித்துவிட்டு , சிகரெட் வாங்கிக் கொண்டு காசு கொடுக்கிறார்கள். காவலுக்கு நிற்கும் இடங்களில் இளையராஜா பாட்டு கேட்கிறார்கள்.
போலீஸ்காரர்களில் யாராவது ஒருவர் நமக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . அவர்களுக்கும் ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள் இருக்கிறது. நள்ளிரவாகியும் வீடு திரும்பாத போலீஸ் கணவருக்காக , அப்பாவுக்காக உறவுகள் கண்விழித்திருக்கிறார்கள்.
பின் எது அவர்களை மனித இயல்பிலிருந்து வேட்டை விலங்காக மாற்றியது?
கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவின் சுதந்திரக் கிளர்ச்சியை எதிர்கொள்ள முடியாதபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் நேரடியாக இந்தியாவை நிர்வகிக்கத் தொடங்கியது.
இந்தியர்களை அடக்க இந்திய இளைஞர்களை கட்டாய போலீஸ்களாக்கியது. பயிற்சி என்கிற பெயரில் அவர்கள் உடலை கசக்கிப் பிழிந்தது. அவர்கள் உடலில் இருந்த மலர்கள் உதிர்ந்து முட்கள் அரும்பத் தொடங்கின. சுதந்திர உணர்வை அடங்காமையாகப் பார்க்க வைத்தது ஆங்கிலேயர் வழங்கிய பயிற்சி. சுயமரியாதையை திமிராக கருதவைத்தது கவாத்து மைதானம். கண்ணீரை ரசிக்கவும், வலியைப் பார்த்து திருப்தியடையவும் செய்தது போலீஸ் பயிற்சி.
ஆங்கிலேயர்களின் உடல்கள், நம் பாராளுமன்றத்திலிருந்து, நீதிமன்றத்திலிருந்து, காவல்நிலையத்திலிருந்து அகன்றுவிட்டன.
அவர்களின் ஆன்மா?
இபிகோவில் விழித்துக்கிடக்கிறது. காவலர் கவாத்து மைதானத்தில்
‘லெஃப்ட் ரைட்’ சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த நீண்ட வரலாற்றை கலையழகு குறையாமல் திரைப்படுத்தியிருக்கிற படமே டாணாக்காரன்.
போலீஸ் வன்முறைக்கு பலியான தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு போலீஸாக விரும்புகிறான் அறிவு (விக்ரம் பிரபு) .
போலீசுக்கு தேர்வாகி (1998) PRSக்கு (காவல்துறை ஆட்சேர்ப்பு பள்ளி) வருகிறான் . 1982 ஆம் ஆண்டு நேர்காணலில் தேர்ச்சி பெற்ற பழைய காவலர்கள் சிலரும் அவனோடு பயிற்சிக்காக வருகிறார்கள். (அரசியல் காரணங்களால் 15 ஆண்டுகள் கழித்து, இளமை விடைபெறும் காலத்தில், பயிற்சிக்கு வருபவர்கள்)
இவர்களுக்கு கொடூரமனம் படைத்த லால் பயிற்சி அதிகாரி. லாலை பாதுகாப்பவர் ஊழல் அதிகாரியான முத்துப்பாண்டி. முத்துப்பாண்டியால் பாதிக்கப்பட்ட நேர்மையான போலீஸாக எம்.எஸ்.பாஸ்கர். ஈஸ்வரமூர்த்திக்கு பணியாமல் நேர்மையான வகையில் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறான் அறிவு. இந்தப் பணியாமை முத்துப்பாண்டியின் ஈகோவையும் தூண்டுகிறது.
முத்துப்பாண்டியும் ஈசுவரமூர்த்தியும் அறிவு குழுவினரை போலீஸ் பயிற்சியிலிருந்து அகற்றும் பொருட்டு கடுமையான பயிற்சியை (ED) தருகிறார்கள்.
லஞ்சம், சாதிவெறி, ஆணவம், அதிகார மமதை, பயிற்சி எனும் உடல் வாதை, போன்ற அக்கினிப் பயிற்சியைத் தாக்குப்பிடித்து அறிவு குழு போலீஸானார்களா? என்பதுதான் டாணாக்காரன்.
போலீஸ் ஏன் மிருகமாகிறது? என்பதை உக்கிரமாகப் படம் பிடித்திருக்கிறார் தமிழ்.
இசுலாமியருக்கெதிரான வன்முறைகள், விவசாயிகளுக்கெதிரான, மாணவர்களுக்கெதிரான வன்முறைகள், குடியுரிமைப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகள் , ஊதிய உயர்வு, காவிரி , ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைகள், ஸ்டெர்லைட் போராட்ட உயிரிழப்புகள், இப்படி அனைத்துக்கும் பின்னாலிருக்கிற மூர்க்க குணத்துக்கான அரசியலை, உளவியலை, பரிவோடு அணுகியிருக்கிறார் இயக்குனர் தமிழ் .
அவருக்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் அளிக்க வேண்டியது சினிமா ஆர்வலர்களின் கடமை .
கரிகாலன்.