சிங்கள மொழியில் வந்த ஓர் அருமையான பதிவு…… பொருத்தம் கருதி தமிழில் தருகின்றேன்
சோவியத் நாட்டில் கல்வி கற்று விட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் எனக்கு இங்கு சொல்லப்படும் எதுவும் புதிதானது அல்ல.
இங்கு சொல்லப்படும் ஒவ்வொன்றும் பிழையானது என நான் பார்க்கக் கற்றுக் கொண்டிருப்பதாலும், இவற்றை விடவும் பாரதூரமான விடயங்களை எதிர்த்துப் பேசியதால் நாட்டைவிட்டே பாய்ந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதால் எனக்கோ எனது குடும்பத்திற்கு இங்கு உள்ள விடயங்கள் பொருந்துவதில்லை என்பதாலும், இங்கு சொல்லப்படும் தவறான விடயங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சமாகவோ அதிகமாகவோ சம்பந்தப்படுவதனால் உங்களுக்கு இதனை சொல்லலாம் என்று இருக்கின்றேன்.
நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம் கண்டு திருந்திக் கொண்டால் நாடும் தானாக திருந்தும் என நான் நம்புகின்றேன்.
‘கோடா கோ ஹோம்‘ என கோஷம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் கோட்டாவும் அவரது 225ம் தான் என்று.
என்றாலும் அவர்களோடு சேர்த்து இதற்கு வகை கூறவேண்டிய இன்னும் சில தரத்தவரும் இருக்கின்றனர்.
அவர்கள்…..
◼️இவ்வளவு காலமும் தனது வயிற்றுப் பசியை மாத்திரம் கருத்திற்கொண்டு தேர்தல் காலங்களில் வழங்கும் சாராய போத்தலுக்கும் உணவுப் பொதிக்கும் ஏமார்ந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய வாக்காளர்கள்……
◼️ பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொறுப்பு உணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் அரச ஊழியர்கள்…..
◼️ப்ராடோ, டிஃபண்டர்களுக்கு ஒரு சட்டமும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டத்தையும் அமல்படுத்தும் போலீசார்…,.
◼️அரச வாகனத்தை, அதன் சாரதியை தனது மனைவிக்கு சொப்பிங் செல்ல பயன்படுத்தும் ஆயுதப் படை வீரர்கள்……
◼️பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசி களை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டுக்கட்டாக தனது வீட்டுக்கு கடத்தும் பரீட்சை மண்டப பொறுப்பாளர்கள்….
படிக்க:
♦ கிரீஸ் முதல் இலங்கை வரை: மறுகாலனியாக்கம் கொண்டு வரும் – மரணப் பொருளாதாரம்!
♦ இலங்கையின் பட்டினி நிலைக்கான காரணம் என்ன?
◼️தொழில் பதவிகளைப் பெற தனது திறமையை, பட்டத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் முன் முழந்தாளிடும இளைஞர்கள்…..
◼️சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி விமானத்தில் First Class ல் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும், மத்திய கிழக்கில் வேர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் Economic Class ல் பயணிக்கும் உழைப்பாளிளோடு எரிந்து விழும் விமான பணியாளர்கள்….
◼️தமக்கு போதிய வருமானம் இருந்தும் களவில் சமூர்தி எடுக்கவும் கிராமசேவகர் ஐ பயன்படுத்தி கள்ள சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு ஸ்கொலஷிப், மஹாபொல எடுக்கவும் முனையும் பெற்றோர்கள்……
◼️ஒவ்வொரு வீட்டிலும் Solar Panel பயன்படுத்தினால் மின்சார பிரச்சனை பெருமளவு தீரும் என அறிந்திருந்தும், தமது வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் அத்திட்டத்தை மண்ணாக்கும் மின்சார சபை எஞ்சினியர்கள்…..
◼️மிளகாய் தூளில் செங்கல்லையும் மஞ்சள் தூளில் மாவையும் மிளகு விதையோடு பாப்பாளி விதையையும் கலந்தும், பழங்களுக்கு காபைட் அடித்து, பலாக்காயை ஹாப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயிகளிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி மரக்கறி பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற் கொள்ளை அடிக்கும், கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள்……
◼️சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது புறத்தில் அரச இலட்சினை பொருத்திய நிலையிலும், தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி மொரட்டுவைக்கு களவில் அனுப்புகின்ற வன ஜீவி பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்…..
◼️குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல் மருந்து கம்பெனிகளின் கமிஷனுக்காக அதிக விலையுள்ள மருந்தை சிபாரிசு செய்யும், தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் வைத்தியர்கள்…..
◼️குப்பை கூளங்களை ஏற்றிச் செல்ல வரும் போது கையில் கொஞ்சம் துட்டை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் போட்டு விட்டுச் செல்லும் நகரசபை ஊழியர்கள்….,
◼️வீடுகளில் முடங்கிக் கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டு இருக்காமல் குறைந்தது ஒரு கொச்சிக்காய் கன்றையாவது நடத் திராணியற்ற முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்……..
இவர்கள் மட்டுமா…..?
அறையில் இருந்து வெளியேறும் போது மின் சுவிட்சை அணைக்காத……
ஒழுங்காக தண்ணீர் பைப்பை மூடாத…….
கையிலிருக்கும் டொபி பேப்பரை நிலத்தில் கண்டபடி போடுகின்ற…..
உட்காரும் கதிரைக்குக் கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற…….
கண்ட கண்ட இடங்களில் எச்சில் உமிழுகின்ற…..
தனது குழந்தையின் பம்பஸ் ஐ நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற…..
மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வீதி சட்டங்களை மீறுகின்ற…….
பஸ் – புகைவண்டி சன நெரிசலில் பெண்களை தொல்லை படுத்துகின்ற……
அடுத்த பிள்ளையின் இடத்தை பறித்து தனது பிள்ளையை வரிசையில் முன் நிறுத்துகின்ற,…..
மின்சார மீட்டரில் வயரை மாற்றி பாவித்த மின்சாரத்தை விட குறைந்த கட்டணத்தை களவில் செலுத்துகின்ற….
வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்குத் திருப்பி விடுகின்ற……
பொலித்தீன் பிளாஸ்டிக் என்பவற்றை தீ வைத்து எரித்து சூழலை மாசு ஆக்குகின்ற…….
இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து
கோ ஹோம்……
நீங்கள் சின்ன திருடர்கள் அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்க வேண்டாம்…._
மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே….
- கலையரசன்