ஜெய்பீம் சினிமா மீதான பார்வை


படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது.

இன்று மாலை குடும்பத்துடன் பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். நான் எனது துணைவி, குழந்தைகள், என குடும்ப சகிதமாக அமர்ந்தோம்.

படம் தொடங்கியதிலிருந்தே படம் எது குறித்து பேசப் போகிறது என்று தெளிவாகியது. இருளர் இன மக்களை அதாவது பழங்குடியினரை குறித்து தான்.

பொதுவாக நான் சிறுவயதிலிருந்தே இன்று வரை செய்திகளில் பார்ப்பதுண்டு பழங்குடியின மக்கள் ரேசன் கார்டு கேட்டு. சாலை வசதிக் கேட்டு, பள்ளிக்கூடம் கேட்டு, மின்சார வசதிக்கேட்டு என இன்று வரை ’கேட்டு’ என்பது தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளது.

தேர்தல் சமயங்களில் அள்ளி விடும் வாக்குறுதிகள், அடுத்தடுத்த தேர்தலிலும் வாக்குறுதிகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இது தான் இன்று பூர்வக்குடிகளின் நிலை. தமிழகத்திலே இந்த நிலை என்றால் வட மாநிலங்களில்? இதை பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் (மராத்தி மொழியில் வந்த fandry படம் பார்த்தீர்களானால் உண்மை விளங்கும்).

படம் லாக்கப் மரணத்திற்கு(கொலைக்கு) நீதி கிடைத்ததா என்பதே? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. இன்று அனைத்துமே மறுக்கப்படும் நீதி தான். நீதி உடனே கிடைத்தது என்றால் அது மீடியாக்களால் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.

இந்த படம் பார்த்து கண்ணீர் விட்ட பலருக்கும் வாச்சாத்தி கொடூரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பழங்குடியின மக்களை இந்த அரசும் அதிகார வர்க்கமும் நடத்தும் விதம் மனித தன்மையற்ற செயல். இதை நான் தெரிந்துக்கொண்டது. பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ நாவலில் தான்.

எலி பிடிப்பதற்கும், பாம்பு பிடிப்பதற்கும் கழனியில் மாடு போல் உழைப்பது மட்டும் தான் இவர்கள் வேலை. இதை தாண்டி இவர்கள் படிக்கக் கூடாது எழுதக் கூடாது. வந்த வேலையை மட்டும் பாருங்கடா என கூறும் சாதி ஆதிக்கவாதிகளை பல இடங்களில் அம்பலபடுத்தியுள்ளார் இயக்குனர்.

எல்லா சாதியிலேயும் திருடனுங்க இருக்காங்க சார்! போன்ற வசனங்கள் சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

இந்த படத்தில் நடித்திருந்த பலரும் தனது கதாபாத்திரங்களாக வாழ்ந்திருப்பதனால் தான் போலிஸ் கதாபாத்திரத்தை பார்த்தால் கோபமும், பழங்குடியின கதாபாத்திரத்தை பார்த்தால் பரிதாபமும் வருகிறது.

படத்தின் ஒரு காட்சியில் ராஜாக்கண்ணு மனைவியிடம், காவல்துறை அதிகாரி பேரம் பேசுவார். அதற்கு ராஜாக்கண்ணு மனைவியின் பதில் நிவாராணம் தேவையில்லை நீதி வேண்டும் என்பது தான். அந்த மன உறுதி இன்று அனைவருக்கும் தேவை.

படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்தே இறுதி காட்சி வரை கம்யூனிஸ்ட்களின் போராட்டம் நடந்துக் கொண்டே இருக்கும். இந்த சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகளே. அதனால் தான் பல இடங்களில் மார்க்ஸ், லெனின் படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

எல்லா படங்களை போல் ஹீரோ, ஹீரோயின் காதல், ரொமான்ஸ் பாடல், கவர்ச்சி, ஹீரோயிசம் என எதுவும் இல்லாமல் சமூக பிரச்சினையை பேசுவது, இது போன்ற படங்கள் தமிழில் வருவது நல்ல முன்னேற்றம். மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்கும்.

சூர்யா ஒரு இடத்தில் கூறுவார்; சட்டம் எனக்கு ஒரு ஆயுதம் அவ்வளவு தான், நீதி கிடைக்கலனா ரோட்டில் இறங்கி போராடுவேன் என்பார்.

நேர்மையான வழக்கறிஞர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் இப்போதுள்ள நீதித்துறை கட்டமைப்பில் நீண்டகாலமாக அநியாயமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட பலநூறு இஸ்லாமியர்களை, சிறுபான்மையினரை, சமூக செயற்பாட்டாளர்களை விடுவிப்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. நேர்மையான காவல்துறை அதிகாரி, நேர்மையாக வாதாடும் வழக்கறிஞர், சரியான தீர்வைத் தரும் நீதிபதிகள் என தேடிப் பார்த்தாலும் ஆயிரத்தில் ஒருவர்தான் கிடைப்பர். எனவே சந்துருக்கள் (சூrயாக்கள்) விதிவிலக்கானவர்கள் மட்டுமே.

எனவே மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த போலீசு, கோர்ட்டு, சிறை உள்ளிட்ட கட்டமைப்பை தகர்ப்பதுதான் சரி! புதிதாக உழைக்கும் மக்களுக்கான சட்டத்தையும், அதை அமுல்படுத்த வேண்டிய காவல்துறையின் செயல்முறையையும், மீறுபவர்களை உண்மையில் தண்டிக்கும் வகையிலானதாக நீதித்துறையையும் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்டதாக – மக்களின் கண்காணிப்பையும் கொண்டதாக புதிதாக மறுகட்டமைப்பு செய்யவேண்டியது அவசியம். அதற்கு மக்கள் திரள் போராட்டங்களே ஒரே மாற்று.

அப்படி ஒரு படம் எடுப்பது இன்றைய கார்ப்பரேட் காவி பாசிச மோடியின் ஆட்சியில் சாத்தியமில்லை. இதற்கு அவர் சமீபத்தில் கொண்டுவந்துள்ள தணிக்கைத் துறை தொடர்பான திருத்தமே சான்று. ஜெய்பீமை வரவேற்போம்! அதன் தொடர்ச்சியை திரையில் தேடாமல் போராட்ட களத்தில் தேடுவோம்.

  • நந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here