
இந்தியாவில் நிலவுகின்ற கொடூரமான சாதிய அமைப்பு முறைக்கும் சாதிய அமைப்பு முறையை கட்டிக் காக்கின்ற பார்ப்பன (இந்து) மதத்திற்கும் நெருக்கமான உறவு உள்ளது.
பிறப்பால் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இழிவுபடுத்தப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் தான் வர்க்க ரீதியாக உழைப்பாளிகளாக, அதாவது விவசாயிகளாக, விவசாயக் கூலிகளாக, ஒப்பந்த தொழிலாளர்களாக, தொழிலாளர்களாக ஆக பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
பார்ப்பன மதத்தின் அடிப்படையான சாதி தீண்டாமை கொடுமை மற்றும் வர்ணாசிரம கொள்கைகளை எதிர்த்து முறியடிக்காமல் பார்ப்பன மதத்தை அது முன்வைக்கின்ற பார்ப்பன பாசிசத்தை ஒருபோதும் எதிர்த்து முறியடிக்க முடியாது.
அந்த வகையில் வடலூர் ராமலிங்க அடிகளாரின் பங்கு முக்கியமானது என்றே கருதுகிறோம்.
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி தனது திரு அருட்பாக்களில், ஆறாம் திருமுறை மூலம் ’பொறித்த மதம், சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுத்தாதீர்’ என்றும், ’மதம் என்னும் பேய் பிடித்தாடுகின்றார் எல்லாம்’ என்றும் பார்ப்பன சனாதன இந்து மதத்தை புறக்கணித்த வள்ளலார்
இந்திய நாட்டின் மிகப் பெரும் சாபக்கேடான, இந்து மதத்தின் இழிவான சாதியமைப்பை மறுத்தும், பகவத் கீதை முன் வைக்கும் நால் வருண சமூக அமைப்பையும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பரப்பும் ஆசாரம், குலம், கோத்திரம், சாதிய அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட இந்துமத சமூக வாழ்வியல் நெறிகளையும், பிற்போக்கு பழக்க வழக்கங்களையும் மறுத்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இணையற்ற சீர்திருத்தவாதியான வடலூர் வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
நிலப்பிரபுத்துவ கொடுங்கோண்மையும், பார்ப்பன சாதி ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில், கி.பி 1823 முதல் 1874 வரை வாழ்ந்த வள்ளலார் 1874 -ல் மறைந்தார். அவர் மறைவையொட்டி அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின், தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியர் A.H. ஹார்கின்ஸ், ICS என்பவரால் வெளியிடப்பட்ட அரசாணையிலும், 1878 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தென் ஆற்காடு மாவட்ட அரசு இதழிலும் (கேசட்), அதன் பிறகு 1906 தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரான்சிஸ் என்பவரால் இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளியிடப்பட்ட அரசாணையின் பக்கம் 316, 317 ஆகிய இரண்டிலும், வள்ளலாரின் வழிபாட்டு முறை என்பது பார்ப்பன இந்து மதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு தனி வழிபாட்டு முறை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
அதாவது “இது ஒரு சாதாரண கோவில் அல்ல! ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு முறைக்கு அப்பாற்பட்டது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை உரைநடை பகுதியில் “ஜீவ ஒழுக்கமாவது ஆண்மக்கள், பெண்மக்கள் முதலியவர்கள் இடத்திலும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி எல்லாரும் நம்மவர்களாக சமத்தில் கொள்ளுவது” என்பது வள்ளலாரின் நெறியாக வகுத்து தரப்பட்டுள்ளது.
பிரிட்டனின் காலனியாதிக்கம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு ஆறு மதங்களாக பிரிந்து கிடந்த பார்ப்பன (இந்து) மதம் இன்று அனைவரும் நினைப்பதைப் போல ஒரே மதமாக இல்லை. செத்துப்போன சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற ’உபதேசத்தில்’ கூறியுள்ளபடி “நல்லவேளையாக பிரிட்டிஷ்காரர்கள் வந்ததால் நமது இந்து மதம் ஒருங்கிணைக்கப்பட்டது” என்று கூறியுள்ளதே உண்மையாகும்.
படிக்க:
🔰 வள்ளலாருக்கு காவி சாயம் பூசும் ஆர்.எஸ்.எஸ் ரவி!
🔰 சகமனிதனைக் கொல்லும் பார்ப்பன (இந்து) மதவெறி! மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி!! மீள்பதிவு
பார்ப்பன மதத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு என்பது வரலாற்றிலும் சரி நடைமுறையிலும் சரி தொடர்கிறது. பார்ப்பனியம், பார்ப்பன பாசிசம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பார்ப்பன எதிர்ப்பு மரபை தேடுவதும், பார்ப்பனியத்திற்கு எதிராக கலகம் புரிந்த ராமலிங்க அடிகளார் உட்பட அனைவரின் மரபையும் உயர்த்தி பிடித்து மக்களை சமத்துவத்தை ஏற்கின்ற மனநிலைக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் வள்ளுவர் முதல் வள்ளலார், அய்யா வைகுந்தர் வரை பார்ப்பன மயமாக்குவது, தனது பார்ப்பன மதத்திற்குள் இழுப்பது, பணியாவிட்டால் வீழ்த்துவது, கேரளாவில் நாராயண குருவை போற்றுவது அதன் மூலம் தனக்குள் விழுங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பார்ப்பனியத்தையும், சாதியையும் எதிர்த்து நின்ற முன்னோடிகள் அனைவரையும் தின்று செரிப்பதன் மூலம் பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை விழுங்கி விட எத்தணிக்கிறது பார்ப்பன கும்பல். அதுமட்டுமின்றி ஜக்கி, ஸ்ரீஸ்ரீ, பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் மூலம் “இந்துக் கோவில்களை” கைப்பற்றவும், பார்ப்பன எதிர்ப்பு பண்பாடுகளை செரிக்கவும் கிளம்பியுள்ளனர். இதையெல்லாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.
வள்ளலாரின் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விட்டு வைத்திருப்பது அவரது சாதி, சமய மறுப்பு கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல! அறம் கொன்ற செயலாகும்.
வடலூரில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை பரப்புவதற்கு சர்வதேச மையம் உருவாக்கியுள்ள திமுக அரசு பார்ப்பன (இந்து) மதத்தின் பிரிவாக வள்ளலாரின் வழிபாட்டு முறையை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பார்ப்பன இந்து மதத்தின் கொடுமைகளை எதிர்த்து சுத்த சன்மார்க்க நெறி கண்ட வள்ளலாரின் வழியை உயர்த்திப் பிடிப்போம்.
இயக்கவியல் பொருள் முதல் வாத மரபு தான் கம்யூனிஸ்டுகளின் மரபு அந்த மரபுரிமையின் அடிப்படையில் பார்ப்பன எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள், போராளிகள் அனைவரின் கருத்துக்களையும் நாடு முழுவதும் கொண்டு செல்வோம்.
பார்ப்பன பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்பதை வடலூரில் பிப்ரவரி 11, 12, 13 ஆகிய தினங்களில் முன் வைக்கப்படுகின்ற வள்ளலாரின் வழிபாட்டு முறை மற்றும் பிரச்சாரங்களுடன் ஒருங்கிணைப்போம்.
- தமிழ்ச்செல்வன்.
அருமை! தக்க தருணத்தில் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா மதவெறி கோட்பாடுகளுக்கு எதிராக வள்ளலாரின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், மத வெறியர்கள் இந்துத்துவ வேலியில் வள்ளலாரை அமுக்கிப் போட எத்தனிக்கும் சதியை முறியடிக்க புரட்சிகர மற்றும் ஜனநாயகக் சக்திகள் ஒன்றிணைந்து சமர் புரிய வேண்டும்! கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல ‘திராவிட மாடல் அரசு’ எனப் பம்மாத்துக் காட்டும் திமுக அரசு இந்துத்துவாவில் வள்ளலாரையும் இணைத்துவிட எத்தனிக்கும் அசிங்கத்தை அம்பலப் படுத்தியிருப்பது சிறப்பு. கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!