சென்னையின் பழமையான, நன்கு அறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி. சென்னை மட்டுமின்றி சுற்றிலுமுள்ள பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் தினசரி வந்தும், விடுதியில் தங்கியும் படிக்கின்றனர். கல்லூரியில் நடக்கும் பிரச்சனைகள் மட்டுமின்றி ஈழப்போராட்டம் உள்ளிட்டு அரசியல் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து போராடிய பாரம்பரியம் பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு.
இப்படிப்பட்ட கல்லூரியில் தான் இன்று மானவர்கள் போராட்டம் நடத்தியதையே குற்றமாக்கி கல்லூரியை விட்டே நீக்கியும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நீக்கம், பேராசிரியர்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புகின்றன.
பச்சையப்பன் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த் துறையில் முதுகலை முதலாமாண்டு படிக்கும் சாம் கேப்ரியல் என்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், கல்விச் செயல்பாட்டில் தலையிட்டு உத்தரவுகளைப் போடும் பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலர் துரைக்கண்ணுவை மாணவர்களுடன் ஒன்றிணைந்து கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தியுள்ளார். ஜனவரி 23 இல் நடந்த இப்போரட்ட்த்தை ஒட்டி அடுத்த நாளே இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
மாணவர்களை அச்சுறுத்தும் நிர்வாகம்!
கேள்வி கேட்டால், போராடினால் என்ன நடக்கும் என மாணவர்களை அச்சுறுத்தவே நிர்வாகம் திட்டமிட்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவரை இடைநீக்கம் செய்ததோடு பெற்றோருடன் வந்து பார்க்கும்படி உத்தரவிட்டது.
தந்தையுடன் நேரில் வந்த மாணவரிடம் கல்லூரி முதல்வர் பேபி குல்னஸ் ஒரு பண்னையாரைப்போல நடந்துகொண்டுள்ளார். மாணவர் சாம் கேப்ரியல் அரசின் கல்வி உதவித்தொகையை வாங்கி படிப்பதை சுட்டிக்காட்டித் திட்டியுள்ளார். சக மாணவர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக பழிபோட்டுள்ளார். எந்த விளக்கமும் இன்றி மாணவரை நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளார். இப்படி கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் கல்வி உரிமையை ஒரு அதிகார வெறிபிடித்த பண்ணையார்போல சகட்டுமேனிக்கு பறிப்பது இது முதல்முறை அல்ல.
ஏற்கனவே கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் போராடிய போதும், கல்லூரி நிர்வாகம் திமிரெடுத்த பண்ணையார்த்தனத்துடன்தான் அணுகியுள்ளது. போராட்டத்தில் முன்நின்ற மாணவர்களை கல்லூரியை விட்டே நீக்கியும் உள்ளது. அதில் நீக்கப்பட்ட சாமுவேல் என்ற மாணவருக்கு 03.10.2024 இல் வழங்கிய மாற்று சான்றிதழில் மாணவரின் நடத்தையை “Not satisfactory” என்று எழுதியதன் மூலம் அம்மாணவனின் எதிர்காலத்தை கெடுக்கவும் முயற்சித்துள்ளது.
பயோமெட்ரிக் பதிவு, நுழைவாயில் கதவை கல்லூரி தொடங்கும்பொதே பூட்டிவைப்பது, அறிவியல் மாணவர்களையும், கலைத்துறை மாணவர்களையும் பிரித்து வைத்துள்ளது, விளையாட்டு மைதானத்தை மாணவர்களிடமிருந்து பறித்து வாடகைக்கு விடுவது, விடுதி கட்டணம் உயர்த்தியது என அனைத்தும் அறக்கட்டளை செயலரின் முன்னெடுப்புகள்தான். அவரின் தலையீடு இல்லாமல் எதுவும் இல்லை என்கின்றனர் மாணவர்கள்.
பேராசிரியர்கள் மீதும் அடக்குமுறை!
பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தை ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்தி வந்துள்ளார் உதவி பேராசிரியர் ரேவதி. கடந்த ஜனவரி 7இல் நடந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை அழைத்து பேச வைத்துள்ளார். இதை கல்லூரி முதல்வரின் அனுமதி பெறாமல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி ஜனவரி 10 இல் இடைநீக்கம் செய்துள்ளார் அறக்கட்டளை செயலர் துரைக்கண்ணு. நீதிமன்றம் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னும் பேராசிரியர் சாந்தி, குங்குமப்ரியா பலர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம்.
பாடம் நடத்தாத பேராசிரியர்களை ஒழுங்குபடுத்துகிறேன் என்று பேராசிரியர்களை Geo-tagging உடன் செல்ஃபி போட சொல்வது, பாடம் நடத்துவதை தாண்டி பேராசிரியர்களின் பிற கலை, இலக்கிய செயல்பாடுகளை தடுப்பது என ஒரு சர்வாதிகார மனநிலையில் கல்லூரி நிர்வாகம் நடக்கிறது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் பேராசிரியர்கள் மீது பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறது கல்லூரி நிர்வாகம்.
பதறும் ”கல்வியாளர்கள்”!
தற்போது மாணவர்களை ஒடுக்கும் நிர்வாகத்தை கண்டித்துப் போராடும் மாணவர்களுடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் மணியரசன் களத்தில் உள்ளார். இப்பிரச்சினையை கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஆலோசனை தந்து, பிப்ரவரி 7 இல் கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் மனுதரவும் உடன் சென்றுள்ளார். இது சிலரை பதற வைக்கிறது.
படிக்க:
🔰 மாணவர் இளைஞர்களின் போராட்ட மரபுக்கு முன்னுதாரணமாக வினேஷ் போகத்!
🔰 மாணவர்கள் போராட்டத்தால் பற்றி எரியும் வங்காள தேசம் !
இதைத் தொடர்ந்து ”பொறுப்பான” சில கல்வியாளர்கள் பு.மா.இ.மு. மணியரசனுக்கு போன் செய்து ’இலவச ஆலோசனை’ தந்து வருகின்றனர். ”அறக்கட்டளை செயலர் துரைக்கண்ணுவை விமர்சிக்க வேண்டாம் ; அவர் ஒரு தலித் என்பதாலேயே அவரை இழிவுபடுத்த திட்டமிட்டே சிலர் பழிபோடுகின்ரனர்; மேலும் அவரை மதிக்கும் பலரின் அதிருப்திக்கும் உங்கள் அமைப்பு ஆளாகும்” என்று நயந்தும் பேசுகின்றனர். ”நீங்களே ஒரு தலித் எதிர்ப்பு அமைப்பு; உங்களை அம்பலப்படுத்தி ஒரு புத்தகமே போடுவேன்” என மிரட்டியும்கூட பார்க்கின்றனர்.
“கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையிலான பிரச்சினையில் அறக்கட்டளை செயலர் துரைக்கண்ணு விமர்சனத்துக்குள்ளாக காரணம். அவரே அறிவித்துள்ளபடி கல்லூரியில் நடந்துள்ள மாற்றங்களுக்கும், எட்டியிருக்கும் முன்னேற்றத்திற்கும் முழுப்பொறுப்பாகிறார். அதில் விமர்சனங்கள் என்றவுடன் அவரின் பங்கை மூடி மறைக்கலாமா?” என்று பு.மா.இ.மு. கேள்வி எழுப்பியுள்ளது.
துரைக்கண்ணுவை விமர்சிக்க வேண்டாம் என்பவர்களிடம் ”நீங்களே துரைக்கண்ணுவை நேரில் சந்திக்க நேரம் கேட்டு ஏற்பாடு செய்யுங்கள்; உண்மையை கண்டறிய, துரைக்கண்ணு தரப்பு வாதத்தை கேட்கலாம், அதையும் கேட்டு பரிசீலித்துக் கொள்வோம்” என முன்வைத்தும் இதுவரை பதில் இல்லை என்கிறார் தோழர் மணியரசன்.
நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மாணவரும் சமூக ரீதியில் தாழ்த்தப்பட்டவர்தான். இவரின் குடும்பம் கிறிஸ்தவத்துக்கு மாறியதால் அட்டவணையில் BC என மாறியுள்ளது. வாசகர் வட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக வ்ந்த ஆ.ராசாவும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்தான். இவரை அழைத்ததால் தான் உதவி பேராசிரியர் ரேவதியை இடைநீக்கம் செய்துள்ளார் துரைக்கண்ணு.
சென்னை IIT யில் பார்ப்பனக்கூட்டம் தலைமையில் இருந்துகொண்டு தலித் மாணவர்கள், பேராசிரியர்களை இழிவுபடுத்தி விரட்டி வருவதை புமாஇமு கண்டிக்கவே செய்துள்ளது. இப்பொழுது பச்சையப்பன் அறக்கட்டளையிலும் மேலிருந்து அடக்குமுறை ஏவப்படும் நிலையில், பொறுப்பில் உள்ளவர் ஒரு தலித் என்பதாலேயே மவுனம் காக்க வேண்டும் என்பது பச்சையான சந்தர்ப்பவாதமல்லவா?
அறக்கட்டளை செயலாளர் பதவி ஆயுட்கால பதவியா?
செயலர் துரைக்கண்ணுவின் பதவிக்காலம் 2024 ஏப்ரலில் முடிந்தும் பொறுப்பில் நீடிப்பது தவறு. புதிய அறங்காவலர் குழுவையும், செயலரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் நியமிக்கப்பட்டார். ”ஆனால் துரைக்கண்ணு திட்டமிட்டே தேர்தலை தள்ளிபோடுகிறார். புதிய நியமனத்தின்மூலம் தனது கையாட்களை பெருக்கிக்கொண்டு ”அரியணையில்” நீடிக்கவே அனைத்தையும் செய்கிறார்” என்றே தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) விமர்சித்துள்ளது.

252 உதவி / துணை பேராசிரியர்கள் துரைக்கண்ணுவின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற விசாரணையில், துரைக்கண்ணு மீதான விமர்சனத்தை முன்னாள் நீதிபதி பார்த்திபன் மீதானதாக திசைதிருப்பி, நீதிபதியையே விமர்சிக்கிறார்கள் என சுருக்கி தப்பிக்க பார்க்கிறார் என்ற விமர்சனமும் உள்ளது.
தன் மீதான விமர்சனத்துக்கு செயலரிடமிருந்து உரிய மறுப்பு இதுவரை வந்ததாக தெரியவில்லை. செயலர் துரைக்கண்ணுவின் கடந்தகால நேர்மறையான நடவடிக்கைகளை காட்டி இதை கடந்து போவதும் தவறு.
அரசுடைமையாக்குவதே தீர்வு!
பச்சையப்பன் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். பு.மா.இ.மு. வோ கூடுதலாக பச்சையப்பன் அறக்கட்டளையையே அரசுடமையாக்குங்கள் என்கிறது. மன்னர்களும் சமஸ்தானங்களும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கற்பிக்கிறோம்.
ஆனால் இன்றளவிலும் அறக்கட்டளை வடிவில் நவீன சமஸ்தானங்களாகவே அவை தொடர்கிறது. கார்ப்பரேட்டுகள் தமது சாம்ராஜ்யங்களை ஃபோர்டு பவுண்டேசன், மெலிந்தா கேட்ஸ் பவுண்டேசன், மஸ்க் பவுண்டேசன், ராக்பெல்லர் பவுண்டேசன் என அறக்கட்டளைகளாகத்தான் கட்டி எழுப்பியுள்ளனர்.
காவிரி டெல்டாவில் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு பல்லாயிரம் ஏக்கர் விளை நிலம் எதற்கு? அதை பயிர்வைக்கும் விவசாயிகளுக்கே தருவதுதான் சரி. கல்வி தருவது அரசின் கடமை. செயலர் துரைக்கண்ணுவே சொல்லியபடி ஆசியாவிலேயே (50,000 கோடிக்கும் மேல்) அதிக சொத்து மதிப்பை கொண்ட அறக்கட்டளை ஏன் இவ்வளவு முறைகேடுகள், விமர்சனங்களுக்குப் பிறகும் ஏன் அரசுடைமையாக்கக் கூடாது.
ஜனநாயக நாடு, குடியரசு நாடு என்று சொன்னால் போதாது; நவீன சமஸ்தானங்களுக்கு முடிவுகட்டி அனைத்தைம் அரசே ஏற்று நடத்த வேண்டும். உழைக்கும் மக்களின் அனைத்து உரிமைகளையும் நிலைநாட்டவும் வேண்டும். அதற்கு போலி ஜனநாயகத்தை விட உயர்வான அமைப்புக்கு போராட வேண்டும்.
நிர்வாகத்தை கையில் எடுக்கும் அரசானது, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்குமான பிரச்சினைகளை நட்புடன் ஜனநாயக முறையில் அணுகி தீர்க்க வேண்டும். மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் முதற்கட்டமாக, நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதற்காக மாணாவர்களுடன் பு.மா.இ.மு. தொடர்ந்து போராடும் என்றார் தோழர் மணியரசன். நாமும் துணைநிற்போம்.
- இளமாறன்