புராணங்களின் குறிக்கோள்
புராணங்களின் குறிக்கோள் கதை சொல்வது அல்ல. கதையின் ஊடே, பார்ப்பனீய கருத்துக்களை மக்களிடையே விதைப்பது. சிறு வயதிலேயே குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது.
ஒரு பெண்ணை அவளின் விருப்பத்துக்கு மாறாக இன்னொருவன் கடத்தி சென்றாலும், அந்த பெண் தான் தூய்மையானவள் என்று தீயில் இறங்கி நிரூபிக்க வேண்டும் என்ற கருத்தை இராமாயணம் மக்கள் மனதில் விதைக்கிறது. பல நூற்றாண்டுகளாக பெண் அடிமைப்பட்டு கிடந்ததற்கு இது போன்ற புராணங்களே முதல் காரணம்.
சூத்திரர்கள் தவம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையை பரப்ப வேண்டுமே என்று யோசித்த பார்ப்பனர்கள், அதை இராமாயணத்தில் ஒரு சம்பவமாக சேர்த்தார்கள். இராமன் அரசாண்ட போது, ஒரு பார்ப்பன சிறுவன் இறந்து விட்டானாம். உடனே நாரதர் அங்கு வந்து ராமனிடம், உனது ராஜ்ஜியத்தில் ஒரு சூத்திரன் தவம் செய்கிறான், சூத்திரன் தவம் செய்தல் கூடாது, அதனால்தான் பார்ப்பன சிறுவன் இறந்து விட்டான் என்று கூறினாராம். ராமன் அந்த சூத்திரனை தேடி அலைந்து இறுதியில் அவன் தவம் செய்கிற இடத்துக்கு வந்து சேர்கிறான். அவனிடம் “நீ யார்? எந்த வர்ணத்தை சேர்ந்தவன்” என்று கேட்கிறான். அதற்க்கு அவன் “என் பெயர் சம்புகன். நான் ஒரு சூத்திரன். நான் இந்த உடலோடு சொர்க்கத்தை அடைய தவம் செய்கிறேன்” என்றான். உடனே ராமன் தன வாளை உருவி அவன் சம்புகன் தலையை துண்டாக்குகிறான்.
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே இருக்கிறது https://archive.org/details/TheRamayanaUttaraKandam/page/n249/mode/1up. 1787ஆம் பக்கத்தில் பார்க்கவும். மொழி பெயர்த்தவர் மன்மதநாத் தத்.
இந்த கதை பாஜகவின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இருக்கும் புத்தகத்திலும் இருக்கிறது.
இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் எந்த நம்பிக்கையை பரப்ப முயல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அடுத்து மகாபாரதம்
சூத்திரர்கள் வேதத்தை கேட்க கூடாது என்று பிரம்ம பாஷ்யத்தில் இருப்பதை பார்த்தோம். அதே கருத்தை மக்களுக்கு புராணங்கள் மூலம் பார்ப்பனீயம் எப்படி விதைக்கிறது என்று பாருங்கள்
மகாபாரதம் சபா பர்வம் அத்தியாயம் 44
“வேதத்தை கேட்க முயன்று தோற்றுப் போன சூத்திரனை போல், அவளை அடைய முயன்று தோற்றான்”

உவமையை பார்த்தீர்களா! தொடர்பே இல்லாவிட்டாலும் தாங்கள் திணிக்க நினைக்கும் கருத்தை லாவகமாக எப்படி வலிந்து திணிக்கிறார்கள் பாருங்கள்.
மகாபாரதம் ஆதி பர்வம் அத்தியாயம் 157
“வேதத்தை கேட்க விரும்பும் சூத்திரர்களைப் போல், தகுதியற்றவர்கள் இந்த பெண்ணை கேட்பார்கள்”

இதுலும் அதேதான். அவர்கள் நோக்கம் கதை சொல்வது அல்ல. கதை வழியாக பார்ப்பனீய ஆதிக்கத்தை நிறுவுவதே நோக்கம்
மகாபாரதத்தில் விதுரன் சூத்திரனாக பிறக்கிறான். அது ஏன் என்பதை ஆதி பர்வம் 63ஆம் அத்தியாயத்தில் விளக்குகிறார்கள். சென்ற பிறவியில் ஒரு பிராமணனை கொன்றதால், சாபம் பெற்று, பிராமணனை கொன்ற பாவத்தை தீர்க்க அடுத்த பிறவியில் சூத்திரனாக பிறந்தான் என்று மகாபாரதம் கூறுகிறது.

இதன் மூலம் இரண்டு நம்பிக்கைகளை விதைக்கிறார்கள்.
- பிராமணனை கொல்வது பாவம்
- சூத்திரனாக பிறப்பது சாபம்
மகாபாரதத்தின் உத்தியோக பர்வம் 29ஆம் அத்தியாயத்தில், சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் என்ன விளக்கப்படுகிறது. அவை:
- பார்ப்பனர்களுக்கு சேவை செய்ய வேண்டும்
- கல்வி கற்க கூடாது

இதே கருத்துக்கள் மகாபாரதத்தில் கிட்டத்தட்ட 50 இடங்களில் வருகிறது. மக்கள் மனதில் ஆழமாக விதைத்தாக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்!
மகாபாரதத்தின் சாந்தி பர்வம் 60ஆம் அத்தியாயத்தில், மற்ற மூன்று வர்ணத்தாருக்கு ஊழியம் செய்யவே இறைவன் சூத்திரர்களை படைத்தான் என்று வருகிறது. சூத்திரன் செல்வம் சேர்க்க கூடாது என்றும், அப்படி சேர்த்தால் உயர்சாதியினர் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டி வரும், அதனால் சூத்திரனுக்கு பாவம் சேரும் என்றும் அச்சுறுத்தப்படுகிறது.

(தொடரும்…)
- பூதம்
முந்தைய பதிவுகள்:
இந்து மதம் – பார்ப்பனீயம் | பகுதி 1