அம்பேத்கர் மற்றும் சங்க பரிவார்

( டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகள் சரிகட்ட செய்த தொடர் முயற்சிகளின் முரண்பாடுகளும் மழுப்பல்களும் )

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1927 டிசம்பர் 25 அன்று மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்?

மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட நாள் :

88 (இப்போது 89) ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 25, 1927 அன்று, தலித்துகளின் சுய மரியாதை இயக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான கொங்கனில் உள்ள ஒரு சிறிய நகரம் / கிராமம், மஹாத் வரலாறு படைத்தது.

“மனு ஸ்மிருதி தஹான் தின்”. டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க நடத்தப்பட்ட இறுதிச்சடங்கில் சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தையும், தலித்துகள் மற்றும் மிலேச்சர்களுக்கு (பெண்களை உள்ளடக்கியது) எதிரான வெறுப்பு மற்றும் கொடுமை ஆகியவற்றின் எழுத்து மூலங்கள் (மனு ஸ்மிருதி) பகிரங்கமாக கொளுத்தப்பட்டது.

மகாத் (சாவதர்) பொதுக்குளத்தில் தலித்துகள் (தீண்டத்தகாதவர்கள்) நீர் அருந்தும் உரிமைக்காக மகாத் சத்தியாக்கிரகம் (அமைதியான கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் பொது குளத்தின் நீரை பயன்படுத்துவதை முந்தைய ஆட்சியரது ஆணை அங்கீகரித்தது. இருப்பினும், இந்த வசதியை ஒடுக்கப்பட்டவர்கள் அடைவதற்கான நிலைமைகளை சாதி மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் தடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்திலிருந்து தண்ணீரை எடுப்பதை எதிர்த்து சாதி பார்ப்பனர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தடையாணையைப் பெற்றிருந்தனர்!

Mahad Satyagraha – Times When Untouchables Revolted - Velivada - Educate, Agitate, Organize

எதிர்ப்பை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக சாதி இந்துக்களால் கற்பனைக்கெட்டாத ஒரு வகையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. திட்டமிட்ட அந்த கூட்டத்தை நடத்த ஒரு பொது இடத்தை பெறுவதை தடுப்பதும் இதில் அடங்கும். இறுதியாக, ஒரு நல்லுள்ளம் படைத்த உள்ளூர் முஸ்லீம் திரு. ஃபத்தேகன் இடத்தை வழங்கி போராட்டத்தை நடத்த உதவி செய்தார். கிராமத்தில் சாதி இந்துக்களின் எதிர்ப்பு இருப்பதால் உணவு, தண்ணீர் மற்றும் பிற பொருட்களுக்கான ஏற்பாடுகள் அமைப்பாளர்களால் மிக கவனத்துடன் செய்ய வேண்டியிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களால் எடுக்கப்பட்ட ஒரு உறுதிமொழி பின்வருவனவற்றை உறுதிப்படுத்தியது:

1. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை நான் நம்பவில்லை.
2. சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.
3. தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.
4. உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் குறைந்த அளவு எல்லா இந்துக்களிடையேயும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.
5. கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளை பெறுவதற்கு தீண்டத்தகாதவர்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து அனைத்து வகையான நாசவேலைகளையும் ஆர்ப்பாட்டம் நடந்த வந்த இடத்தில் டாக்டர் அம்பேத்கர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் பம்பாயிலிருந்து சாலை பயணத்திற்கு பதிலாக “பத்மாவதி” படகில் (நீண்ட தூரம் இருந்தபோதிலும்) தஸ்கான் துறைமுகம் வழியாக வந்தார். இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு உத்தி. ஏனென்றால், பேருந்து உரிமையாளர்கள் ஒருவேளை புறக்கணித்தால் மகாத்திற்கு வெறுமனே ஐந்து மைல் தூரம் தலைவர்கள் நடந்து செல்ல முடியும்.

டாக்டர் அம்பேத்கர், ஆன்மாவை உலுக்கக்கூடிய உரை நிகழ்த்திய பந்தலின் முன்னால் மனு ஸ்மிருதியை எரிப்பதற்காக வேள்வி (pyre) ஒன்று உருவாக்கப்பட்டது. அதை ஆறு பேர் இரண்டு நாட்களாக உருவாக்கினர். ஆறு அங்குல ஆழமும் ஒன்றரை அடி சதுரமும் குழி தோண்டப்பட்டு சந்தன மரக்கட்டை துண்டுகளால் நிரப்பப்பட்டது.

அதன் நான்கு மூலைகளிலும், மூன்று பக்கங்களிலும் கீழ்கண்ட சொற்களை கொண்ட பதாகைகளைத் தாங்கி கம்பங்கள் அமைக்கப்பட்டன.

1. “மனு ஸ்மிருதி சி தஹான் பூமி”, அதாவது மனு ஸ்மிருதிக்கான தகனம்.
2. தீண்டாமையை அழியுங்கள்.
3. பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.

டிசம்பர் 25, 1927 அன்று மாலை, மாநாட்டில் அம்பேத்கரின் பார்ப்பன நண்பரான கங்காதர் நீல்காந்த் சஹஸ்த்ரபுதே முதலாவதாகவும், பின்னர் தீண்டத்தகாதவர்களின் தலைவரான பி.என்.ராஜபோஜ் இரண்டாவதாகவும் மனு ஸ்மிருதியை எரிப்பதற்கான தீர்மானத்தை முன்னெடுத்தனர். அதன்பிறகு, மனு ஸ்மிருதி என்ற நூல் வேள்வியில் எரிக்கப்பட்டது. கங்காதர் மற்றும் ஐந்து- ஆறு தலித் சாதுக்கள் இதை செய்து முடித்தனர். பந்தலில் வைக்கப்பட்ட ஒரே புகைப்படம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடையது மட்டுமே. அதாவது டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு காந்தி மீதான மாயை இன்னும் தெளியவில்லை என்பதை இது காட்டுகிறது.

குடிநீர் அல்லது கோயில் நுழைவுக்கான உரிமையை பெறுவதோ அல்லது சம பந்திக்கான தடைகளை அகற்றுவதோ மட்டுமல்ல சமூகத்தில் சமத்துவமின்மையை ஆதரிக்கும் வர்ணாசிரம முறையை நொறுக்குவதே இயக்கத்தின் நோக்கம் என்று அம்பேத்கர் தன்னுடைய தலைமை உரையில் கூறினார். பின்னர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும்; பிரெஞ்சு புரட்சிகர கவுன்சில் விவரித்த மனித உரிமைகள் சாசனத்தின் முதன்மையான அம்சங்களையும் கூட்டத்தாரிடம் அம்பேத்கர் விளக்கினார். ரோம் ஆளும் வர்க்கமான பாட்ரீசியன்களுக்கு எதிராக ரோம் குடிமக்களான பிளேபியர்களின் கிளர்ச்சி எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை குறிப்பிட்டு தற்காலிக மற்றும் அரைகுறையான தீர்வுகளைத் தேடுவதிலுள்ள ஆபத்தை அவர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தை ஆளும் (பாட்ரீசியன்) மற்றும் ஆளப்படும் (பிளேபியன்) வர்க்கங்களாக பிரிக்கும் முறையை ஒழிப்பதற்கு பதிலாக தங்களது விருப்பப்படி ஒரு அதிகாரியை பெற மட்டுமே பிளேபியர்கள் முயன்றனர் என்பது தான் அவர்களில் தோல்விக்கு காரணம் என்று அம்பேத்கர் விளக்கினார்.

சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட மனு ஸ்மிருதி ஆதரிக்கவில்லை என்பதை அதை படித்ததன் மூலம் உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928, பஹிஷ்கிருத் பாரதத்தின் (அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் அவர் விளக்கினார்.

சாதிகளுக்கு (வருணங்களுக்கு) இடையிலான திருமணங்களைத் தடை செய்வதில் தான் தீண்டாமையின் வேர் உள்ளது எனவே அதை நாம் முறிக்க வேண்டும் என்று அந்த வரலாற்று உரையில் அம்பேத்கர் கூறினார். இந்த “சமூகப் புரட்சி” அமைதியாக நடைபெறவும், சாஸ்திரங்களை நிராகரிக்கவும், நீதிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவும் உயர் வருணப் பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவரது தரப்பிலிருந்து சிக்கல் எதுவும் வராது என்றும் உறுதியளித்தார். நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சமத்துவ பிரகடனம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மனு ஸ்மிருதியின் நகல் எரிக்கப்பட்டது.

இயக்க குறிக்கோளின் திட்டவட்டமான விரிவாக்கத்தை இங்கே ஒருவர் காண்கிறார். சமத்துவத்தின் இறுதி குறிக்கோள் மற்றும் வருண அமைப்பை ஒழித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், மகாத் குளத்திலிருந்து உடனடி குடிநீர் வழங்கும் திட்டம் ஒரு அடையாள போராட்டமாகவும், சுயமரியாதைக்கான தொடர்ச்சியான போராட்டத்தின் தொடக்கத்தையும் முன்னிலைப்படுத்தியது.

டாக்டர் அம்பேத்கருடைய உரையின் மற்ற முதன்மையான அம்சங்கள்:

“… வருண அமைப்பு இருக்கும் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது… ஜப்பானின் சாமுராய்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருந்த அதே பற்று பிராமணர்களுக்கு இல்லை. எனவே சமூக சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் நலனுக்காக ஜப்பானின் சாமுராய்கள் செய்ததைப் போல அவர்கள் தங்கள் சிறப்பு சமூக சலுகைகளை விட்டுக்கொடுப்பார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது.

பிராமணரல்லாத வர்க்கத்தினரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. பிராமணரல்லாத மராட்டியர்கள் மற்றும் பிற வகுப்பினர் அதிகார பீடத்திலிருப்பவர்களுக்கும் அதிகாரமற்றவர்களுக்கும் இடையில் உள்ளனர். அதிகாரத்திலுள்ளவர்கள் எப்போதாவது தாராள மற்றும் தியாக சிந்தனை கொண்டவர்களாக இருக்கக்கூடும். அதே சமயத்தில் இலட்சியவாதமாகவும் கொள்கை ரீதியானவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் தங்கள் சொந்த நலனுக்காவது அவர்கள் ஒரு சமூகப் புரட்சியை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இடையில் உள்ள வர்க்கம் எந்த கொள்கைகளுக்கும் தாராளமாகவோ அல்லது உறுதியாகவோ இருக்க முடியாது.


இதையும் படியுங்கள்: செப் 17: பெரியார் பிறந்த நாளில் மனுதர்ம, வேத- ஆகம எரிப்புப் போராட்டம் ! திருச்சிக்கு அணிதிரண்டு வாரீர்!


எனவே அவர்கள் பார்ப்பனர்களுடன் சமத்துவத்தை அடைவதற்குப் பதிலாக தீண்டத்தகாதவர்களிடமிருந்து தங்களை விலக்கி கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வர்க்கம் ஒரு சமூகப் புரட்சிக்கான அதன் விருப்பத்தில் பலவீனமாக உள்ளது… .. இந்த பெரிய சமூக நோக்கத்தை அடைய நாம் பிறந்தவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும். அதற்கான மதத்தகுதியைப் (religious merit) பெற முயற்சிப்போம். தவிர, இந்த வேலை (ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டுவருவது) நமது நலனுக்கானது எனவே நமது பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது நமது கடமையாகும்.

உயர் சாதி நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஊடகத்தின் ஒரு பிரிவில் கடுமையான எதிர்வினை இருந்தது. டாக்டர் அம்பேத்கரை ஒரு செய்தித்தாள் “பீமாசுரா” என்று அழைத்தது. சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் மனு ஸ்மிருதியை எரித்ததற்கான நியாயத்தை எடுத்துரைத்தார். மனு ஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928 பஹிஷ்கிருத் பாரதத்தின் (Bahishkrit Bharat – அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் விளக்கினார்.

ஒன்றை எரிப்பது அது குறிப்பிடுகின்ற கருத்தை எதிர்த்து பதிவு செய்வதாகும். இதன் மூலம், தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாத நபர் வெட்கப்படுவார் என்று ஒருவர் எதிர்பார்ப்பார். மனு ஸ்மிருதியை மதிக்கும் எவரும் தீண்டத்தகாதவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்ட முடியும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது என்று அவர் மேலும் கூறினார். மனு ஸ்மிருதியை எரிப்பதை காந்தி முன்மொழிந்த அந்நிய நாட்டு துணியை எரிப்பதுடன் ஒப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டங்கள் ஒரு கட்டுரையை எரித்தே ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை உணர்த்தின. மனு ஸ்மிருதி தகன் என்பதும் இதுதான்.

திட்டமிட்ட பின்வாங்கல் :

இதற்கிடையில், பொதுக்குளத்திலிருந்து குடிநீர் பெறுவதற்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் கண்டிக்க, ஒருபுறம் அரசாங்கம் / பிரிட்டிஷ் கலெக்டர் மறுபுறம் உயர் சாதி நலன்களை எதிர்கொள்ளும் சங்கடத்தை டாக்டர் அம்பேத்கர் விளக்கினார்.


இதையும் படியுங்கள் : மனு சாஸ்திரம் எரிக்கப்பட வேண்டியது அவசியம். – பேராசிரியர். அருணன்


சத்தியாக்கிரகம் பாதியில் ’ஏன் நின்றது’ என்ற தலைப்பில் 1928 பிப்ரவரி 3 ஆம் தேதி பஹிஷ்கிருத் பாரத் இதழில் அம்பேத்கர் எழுதினார்:

“சாதி இந்துக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தீண்டத்தகாதவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இரண்டில் ஒருவரை மட்டுமே அவர்கள் தாக்க முடியும். இருவரையும் ஒரே நேரத்தில் தாக்கும் வலிமை இன்று அவர்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தீண்டத்தகாதவர்கள் மனிதர்கள் என்ற நியாயமான உரிமைகளை ஒப்புக்கொள்ள சாதி இந்துக்கள் மறுத்தபோது, தங்கள் சொந்த முயற்சியால், அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவது புத்திசாலித்தனம் என்று நாங்கள் நினைத்தோம்.

…… சாதி இந்துக்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் தீண்டத்தகாதவர்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் உலக அளவு வேறுபாடு இருக்கிறது. சாதி இந்துக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அவர்களுக்கு சமூக ஆதரவு [சாதி இந்துக்களது] இருக்கிறது… தீண்டத்தகாதவர்கள் ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அனைத்து சாதி இந்துக்களும் எங்களுக்கு எதிராக அணிவகுக்கப்படுகிறார்கள். ”

தீண்டத்தகாத மக்களின் கிளர்ச்சி மகாத் பொது குளத்தின் உரிமை தொடர்பானது மட்டும் இல்லை என்பதை அம்பேத்கர் மேலும் அவதானித்தார். தீண்டத்தகாதவர்கள் தங்களுக்கான பெரிய இலக்குகளை அடைவதற்காகவே இது தொடங்கப்பட்டது. இது நீடித்திருக்க முடியுமா என்பதற்கான பதில், சத்தியாகிரகத்தினால் ஏற்பட்ட இழப்பு மர்றும் காயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளது. மஹாத்தில் ஒரு சத்தியாக்கிரகத்தால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள முடியாது என்பதை மக்கள் நினைத்திருந்தால் மீண்டும் ஒருபோதும் அவர்கள் மற்றொரு சத்தியாக்கிரகத்தில் சேர மாட்டார்கள். இந்த கேள்வியை எடைபோட வேண்டியிருந்தது.

இதில் தனித்து நிற்பது என்னவென்றால், வெளிப்படையான பகுத்தறிவு, போராட்டத்தின் திட்டமிட்ட துல்லியமான அணுகுமுறை மற்றும் அதை நடத்திக் காட்டுவதற்கான விருப்பம். அதை மழுங்கடிக்கவோ அல்லது குழப்பவோ யாராலும் முடியாது. சத்தியாக்கிரகத்தை திரும்ப பெறுவது தீண்டத்தகாத தலைவர்களை கேலி செய்வதற்கான வாய்ப்பை சாதி-இந்துக்களுக்கு அளித்து விடுமோ என்ற அச்சத்திற்கு வெறுமனே அவர்களின் பராட்டுக்களை பெறுவதற்காக சத்தியாக்கிரகத்தை தொடங்கவில்லை என்று அம்பேத்கர் பதிலளித்தார்,.

குறிப்புகள்:
The Social Context of an Ideology, Ambedkar’s Social and Political Thought, MS Gore, Sage Publications

முதன்முதலில் ஜனவரி 26, 2016 அன்று இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. (சமத்துவத்தை நோக்கி: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை டிசம்பர் 25, 1927 அன்று பகிரங்கமாக எரித்தது ஏன்?) அதை மீண்டும் டிசம்பர் 24, 2017 அன்று சப்ரங் இந்தியா தளம் வெளியிட்ட கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம்.

https://sabrangindia.in/sabrangthemes/ambedkar-and-the-sangh-parivar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here