செப் 17: பெரியார் பிறந்த நாளில்
மனுதர்ம, வேத- ஆகம எரிப்புப் போராட்டம் !
திருச்சிக்கு அணிதிரண்டு வாரீர்!


அனைத்துச் சாதியினரும்  அர்ச்சகர் உரிமையை தடுக்கும் ,
உழைக்கும் மக்களை பிறப்பால் இழிவுபடுத்தும்
மனுதர்ம, வேத-ஆகமங்களைத் தடைசெய்!

அன்பார்ந்த பெரியோர்களே!

ந்த பார்ப்பானும் தலையில் கல்சுமந்து, மண் சுமந்து, சித்தாள் வேலை செய்து எந்த கோவிலையும் கட்டவில்லை. சூத்திரர், பஞ்சமர் என்று இழிவு படுத்தப்படும் நம் முன்னோர்கள் தான் ரத்தம் சிந்தி கோவிலை கட்டினார்கள்.

ஆனால் சாமி சிலையை நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்று ஆகமத்தை வைத்துக் கொண்டு 2022- லும் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு எழுதி அனைத்து சாதி அர்ச்சகர் உரிமையைத் தடுக்கிறார்கள்.

அனைத்து சாதியினரும் பிரதமர், ஜனாதிபதி, நீதிபதி, விஞ்ஞானி என எந்த உயர் பதவிக்கும் வரலாம். ஆனால் கருவறையில் பார்ப்பானைத் தவிர பிற சாதியினர் யாரும் அர்ச்சகராக முடியாது என்று பிறப்பை வைத்து சட்டப்படியே தீண்டாமையை அமல்படுத்துவதை  அனுமதிக்க முடியுமா?

தீண்டாமை சமூகத்தில் எந்த வடிவத்தில் இருந்தாலும், அது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் கருவறைத் தீண்டாமை மட்டும் ஆகமத்தின் பெயரால் புனிதம் என்கிறது உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு நமது சுயமரியாதைக்கு விடப் பட்டுள்ள சவால்! இதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 1969 லும் அதன்பிறகு 2006 லும், சட்டமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் போட்ட பிறகும், அதை பார்ப்பனர்களுக்கு ஆதரவாக குறுக்கு வழியில் தடுக்க நீதிமன்றத்திற்கு என்ன உரிமை இருக்கிறது.? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட நீதிமன்றம் சர்வ அதிகாரங்களையும் படைத்ததா?

கருவறை தீண்டாமைக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர வேண்டும். இல்லையென்றால் இந்த தீண்டாமை சமூகத்திற்கும் சட்டப்படியே பரவ ஆரம்பித்து விடும்.

சாதி தீண்டாமை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்ற சட்டம் அமலில் இருந்தாலும் சாதிமாறி, மதம் மாறி காதல் திருமணம் செய்தால், சொந்த பெற்றோர்களே கூலிப்படை வைத்து கொலை செய்யும் கொடுமை நடக்கிறது.

ஒரு தலித் இளைஞன் உயர்சாதி பெண்ணை காதலித்தால், தலித் குடியிருப்புகள் கொளுத்தப்படுகிறது.

இவ்வாறு அனைவருக்கும் சமமாக வாழும் சமூக சுதந்திரம், மறுக்கப்படுவதற்கு இந்திய மக்களின் சிந்தனையில், பொது புத்தியில் பழக்கப்படுத்தப்பட்ட சனாதன மனு தர்ம சட்டம்தான் காரணம் என்பதை இன்றைய தலைமுறையினர் பொறுமையாக சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு பொறுமையுடன் உணர்த்த வேண்டும்.

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் மனு தர்ம சட்டத்தை எரித்து போராடினார்கள். மனுதர்ம சட்டத்திற்கு எதிராக தமிழகம் பல போராட்டங்களை கண்டது. சாதி தீண்டாமை கொடுமைகளை நியாயப்படுத்தும் மனிதர்மத்தை தீ வைத்து எரித்தார்கள்.

அந்த கொடூரமான மனுதர்மத்தை தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க சங்பரிவார கூட்டம் பல தேசிய இனங்கள் வாழும் பல்வேறு மொழிகளை பேசும் இந்தியாவில் ஒற்றை இந்து ராஷ்டிரமாக அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டமாக்க துடிக்கிறது.

இனியும் பொறுக்கலாமா?.

ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து சமத்துவமாக வாழ்வதற்கு பெரியார், அம்பேத்கர் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராளிகள் அனைவரும் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், பொது குளத்தில் குடி நீர் எடுக்கும் போராட்டம், பொது பாதையில் நடந்து போகும் உரிமைக்கான போராட்டம், தேவதாசி முறை ஒழிப்பு போராட்டம், குழந்தை திருமணம், பலதாரமண ஒழிப்பு போராட்டம், உடன்கட்டை ஏறுதல், அனைவரும் கல்வி கற்கும் உரிமைக்கான போராட்டம், பெண்களுக்கு சொத்துரிமைக்கான போராட்டம் அனைத்தும் சனாதன, மனுசாஸ்திரங்களுக்கு எதிரான போராட்டங்களே, ஆகும்.

வேத, ஆகமத்தை காரணம் காட்டி நம்மை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். பல்வேறு கோவில் நுழைவு போராட்டங்கள் நடத்திதான் இன்று அனைவரும் சமமாக சாமி தரிசனம் செய்கிறோம். ஆனாலும் இன்றும்,கருவறைத் தீண்டாமையை நிலைநிறுத்த அதே வேத, ஆகமங்களின் பெயரால் நம்மை தடுக்கிறார்கள்.

பரம்பரையாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் என்பதை நிலைநாட்டி தமிழக கோவில்களை அபகரிக்க பார்க்கிறார்கள்.

ஜக்கி வாசுதேவ், கோவில் அடிமை நிறுத்து என தமிழகத்தில் போராட்டம் நடத்தியதும், வடஇந்தியாவை சேர்ந்த சாமியார்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, தமிழக கோவி்ல்களில் அனைத்துசாதி அர்ச்சகர் பணி நியமனம் தமிழக அரசு, செய்யக்கூடாது எனவும், ஆகம கோவில்களை கண்டறிய கமிட்டி போட வைத்ததும் எவ்வளவு பெரிய அபாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிற ஆர்எஸ்எஸ் கும்பல், இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்றும், இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும் என்றும், வெறிக்கூச்சலிடுவதுடன், மனுதர்ம அடிப்படையிலான புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகின்றனர். இத்தகைய பார்ப்பனீய கொடுங்கோன்மையின் சித்தாந்த அடித்தளமாகவும், சட்டப்படியும், சமூக நடைமுறையிலும் சாதி- தீண்டாமை கொடுமை நிலை பெற்று நிற்பதற்கு காரணமாக இருக்கும் வேதங்கள், ஆகமங்கள், மனு தர்மம் இவற்றை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 அன்று பல தரப்பினர் பங்கேற்புடன் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம். இந்த எரிப்பு போராட்டத்தில் தன்மான உணர்வும், சுயமரியாதையும், ஜனநாயக பண்பும் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தின் செய்தியாக இந்த போராட்டம் அமைய வேண்டும்.

இன்றைக்கு யார் சாதி பார்க்கிறார்கள்? மனுதர்ம சாஸ்திரம் ஆகமம் இன்று எங்கே இருக்கிறது? என கேட்பவர்களுக்கு  சில விளக்கங்கள் …

  1. மனித மலத்தை மனிதனே எடுக்கும் இழிவு. ஒரு குறிப்பிட்ட தீண்டப்படாத சாதியின் தொழிலாகவே இன்றும் நீடிக்கிறது என்றால், அதுபோல் கருவறையில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நீடிக்க முடியும் என்பது, இன்றும் மனு தர்மம் வேத ஆகமங்கள் நடைமுறையில் இருக்கிறது என்பதுதானே அர்த்தம்!
  2. பிராமணர்களைத் தவிர, மற்றவர்களை பெண்கள் உட்பட, கொல்வது பாவம் இல்லை. (அத்.11 சுலோ.65)
  3. மனுநீதிப்படி, சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரன் தாழ்த்தப்பட்டவன், படிக்கக்கூடாது. படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். படிப்பதை காதால் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும். பிராமணர் படிக்கும் வேதத்தை சூத்திரன் படித்து தேர்ச்சி பெற்றால் உடம்பு துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்பட வேண்டும்.(அத்.12 சுலோ. 4)
  4. சூத்திரன் பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணன் பெயர், சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், அவன் வாயில் 10 அங்குல நீளம் உள்ள இரும்பு கம்பியை காய்ச்சி எரிய வைக்க வேண்டும். .(அத்.8 சுலோ.271)
  5. சூத்திரன் உயிரும் ,பார்ப்பனின் மயிரும் சமம். .(அத்.8 சுலோ.379)
  6. பெண் அடிமைத்தனத்தின் கொடுமையான உச்சமே மனுதர்மம்; படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தனை, இவற்றினை,பெண்களின் அடையாளங்களாக சித்தரித்து, மாதர்களை இழிவு படுத்தும்பொருட்டே, மனு ,தர்மத்தை!! கற்பித்தார். கணவன் கெட்ட பழக்கங்கள் உள்ளவன் ஆனாலும் பிற பெண்களுடன் தொடர்பு உள்ளவன் ஆனாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், மனைவியானவள் அவனை தெய்வத்தை போல பூசிக்க வேண்டும். இளமையில் தகப்பன் பாதுகாப்பிலும், பருவமடைந்ததும் கணவன் பாதுகாப்பிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் பாதுகாப்பிலும், இருக்க வேண்டியது அல்லாமல் பெண்கள் சுதந்திரமாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
  7. இவ்வாறு பெரும்பான்மையான மக்களின் மனித மாண்புகளை இழிவுபடுத்தும் மனுதர்ம, வேத ஆகமங்களை ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து ஆதரிப்பதும் அதை இன்றைய சட்டமாக புதுப்பிக்க முயல்வதும் இந்து ராஷ்டிரத்திற்கான தயாரிப்பு ஆகும். மக்களை பிறப்பின் அடிப்படையில் நால்வர்ணமாக பிளந்து தொழிலுக்கேற்ற பல சாதிப்பிரிவினைகளை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகளாக மக்களை அடக்கி ஒடுக்கும் பார்ப்பனீய கொடுங்கோன்மைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அம்பேத்கர், பெரியார் தங்களின் இறுதிகாலம் வரை நம்மீதான சாதி இழிவை துடைக்க எதிர்த்து போராடி வந்தார்கள்.

நாமும் போராடுவோம். மனு தர்ம வேத ஆகமங்களை எரிப்போம்! வாருங்கள்!!

மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here