அறம் இணைய இதழின் ஆசிரியர் சாவித்திரி கண்ணனின் கைது! வன்மையாக கண்டிக்கிறது மக்கள் அதிகாரம் ஊடகம்!

ன்று காலை அறம் இணைய இதழின் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி  ஸ்ரீமதி மரணம் தொடர்பான மர்மம் இதுவரை விலகாத நிலையில் சிறையில் இருந்த சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில் நீதிபதி மாணவியின் மரணம் தற்கொலை என தீர்ப்பு வழங்குகிறார். இப்படி நீதித்துறை, காவல்துறை என அனைவரும்  ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட பள்ளி நிர்வாகத்திற்கு  ஆதரவாக செயல்படுகிறார்கள். இது சமூகவலைதளங்களிலும் மெயின் ஸ்டிரீம் மீடியாக்களிலும் அம்பலமானது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக யூடியூப் சேனல்களில் மூலம் செய்தி வெளியிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதுவும் கடும் கண்டனத்திற்க்கு உள்ளானது.

இந்நிலையில் தான் ஸ்ரீமதி மரணம்  தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகள் மூலம் அறம் இணைய இதழில் வெளியிட்டு வந்த அறம் இணைய இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09 ஆம் தேதி “போர்ஜரி கடிதம் பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்” என கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் மாணவி தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம் என பரப்பப்பட்ட கடிதம் பொய்யானது எனவும், இதை வைத்து தான் நீதிபதி தீர்ப்பு வாசித்து விட்டார் எனவும் பல்வேறு தகவல்களுடன் திமுக அரசை கண்டித்து எழுதியிருந்தார்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக் கூடாது, திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என எழுதியவர்களில் சாவித்திரி கண்ணனும் ஒருவர். ஆனால் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல்துறை தான் சாவித்திரி கண்ணனை கைது செய்துள்ளது. இதற்கு பல பத்திரிக்கையாளர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

எமது மக்கள் அதிகாரம் ஊடகமும் சாவித்திரி கண்ணனின் கைதிற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்வதோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோருகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு துணை போகாமல் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பொய்யான வழக்குகளின் மூலம் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம்.

மக்கள் அதிகாரம் ஊடகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here